செய்தி வெளியான இதழ்: 2019 நவம்பர்.
கழிச்சல் நோய், கன்றுகளைத் தாக்கிப் பொருளாதார இழப்பை ஏற்படுத்தக் கூடியது. இது, கன்று பிறந்து 28 நாள் வரையில் தாக்கும் வாய்ப்பு அதிகம். கன்றுக் குட்டிகளை ஒரே இடத்தில் அடைத்து வைத்து வளர்க்கும் போது, இந்நோயின் பரவல் தீவிரமாக இருக்கும்.
நோய்க்காரணி, கன்றின் குடல் பகுதியைத் தாக்கிப் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் ஏற்படும் கழிச்சலால், உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகளை உடல் எடுத்துக் கொள்ளும் அளவு குறைந்து விடும். மேலும், கன்றின் உடல் எடை குறைவதால், அதன் உடலிலுள்ள நீரின் அளவும் குறைந்து விடும்.
கன்றுக் கழிச்சல் நோய்க்கு மிக முக்கியக் காரணம், உரிய நேரத்தில் கன்றுக்குச் சீம்பாலை அளிக்காமல் இருப்பது தான். இதனால், நோயெதிர்ப்பு சக்தி கிடைக்காமல் போகும் கன்று, எழுதில் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்பட்டு, மிகவும் மோசமான நிலையை அடைந்து விடுகிறது.
மேலும், இந்நிலைக்கு, சுத்தமில்லாத சுற்றுப்புறச் சூழ்நிலையும் காரணமாக அமைகிறது. இதனால், பொருளாதார இழப்பும், பண்ணையின் வளர்ச்சியும் தடைபடும்.
மரு.ச.பாவா பக்ருதீன், முதுநிலை ஆய்வு மாணவர், சிகிச்சைத் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி, லூதியானா, பஞ்சாப் – 141 001. சி.அலிமுதீன், நான்காமாண்டு மாணவர், கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை – 600 007.