மண்ணில் இருக்கும் குறைகளைக் களைந்து பயிர் செய்தால், நல்ல மகசூலைப் பெறலாம். நிலத்தில் இருக்கும் சத்துகளின் அளவைப் பொறுத்தே, பயிர்களின் வளர்ச்சி அமையும். எனவே, ஒரு பயிரை சாகுபடி செய்யும் போது, அந்த நிலத்தில், அந்தப் பயிரின் வளர்ச்சிக்கான சத்துகள் இருக்க வேண்டும்.
குறையுள்ள நிலங்கள்
மேல் மண், கீழ் மண் கடினமாக இருத்தல், நீரை வேகமாக உள் வாங்கும் மண், மெதுவாக உள் வாங்கும் மண், கனமான மேல் மண் மற்றும் பிளப்பி மண் ஆகியன, இயற்பியல் குறையுள்ள நிலத்திலும்; அமில மண், உவர் மண், களர் மண், மண்ணரிப்புக்கு உட்பட்ட நிலம் ஆகியன, வேதியியல் குறையுள்ள நிலத்திலும் அடங்கும்.
பரிசோதனை முடிவு
பொதுவாக, எல்லா மண்ணிலும் அனைத்துச் சத்துகளும், சரியான அளவில் இருப்பதில்லை. ஒரு நிலத்தில் எந்தச் சத்துக் குறைவாக இருக்கிறது என்பதை, மண்ணாய்வின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த முடிவுகள் மூலம், ஒரு நிலத்தில் எதைப் பயிரிடலாம் என்பதையும் முடிவு செய்யலாம். மேலும், சரியான உத்திகளைக் கடைப்பிடித்து நிலத்தில் இருக்கும் குறைகளைக் களையலாம்.
பொதுவாக, நிலத்தில் காணப்படும் மேல்மண் இறுக்கம், ஆழமற்ற மண், உவர்மண், களிமண் ஆகிய குறைகள், சாகுபடியில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தக் குறைகளைச் சரி செய்தால், அதிக மகசூலைப் பெறலாம்.
மண் இறுக்கம்
நிலத்தில் மழைத் துளிகள் விழும் போது ஏற்படும் மோதல் அதிர்வு, கனரக எந்திரங்களை நிலத்தில் பயன்படுத்தல், இரும்பு ஆக்ஸைடு போன்ற இரசாயன மாற்றங்கள் ஏற்படுதல் ஆகியவற்றால் மண் இறுக்கம் ஏற்படும்.
இதனால், மண்ணில் நீர்ப் பட்டதும் மண் கட்டிகள் உடைந்து சிறு துகள்களாகப் பிரியும். அப்போது, களியானது இரும்பு ஆக்ஸைடுடன் சேர்ந்து தகை போல் மாறிவிடும்.
இந்தப் பாதிப்பைக் குறைக்க, தொழுவுரம், நார்க்கழிவு மற்றும் ஜிப்சத்தை இட்டு மண்ணைச் சீராக்க வேண்டும். இதனால் மண்ணில், நீரோட்டம், காற்றோட்டம், பௌதிகத் தன்மை மேம்பட்டு மண் வளமாகும். மண்ணில் உள்ள இந்தக் குறைகள் இயற்கையாய் அமைவன. இத்தகைய மண்ணில் மேலாக வேர்ப் பரவல் உள்ள பயிர்களே நன்கு வளரும்.
வளமான நிலம்
மண்ணில் குளோரைடு மற்றும் சல்பேட் உப்புகள் இருந்தால், நிலம் உவராக மாறும். இத்தகைய நிலங்களில் விதைகள் முளைக்காது. நீரில் கரைந்துள்ள உப்புகள் அதிக அடர்த்தியாக இருப்பதால், பயிர்களின் வேர்களால் நீரை ஈர்க்க முடியாது.
அதனால், இவ்வகை மண்ணில் பயிரிடப்படும் பயிர்கள் வாடி விடும். முதலில் வயலைச் சமப்படுத்தி வரப்புகளை அமைத்து, நீரைப் பாய்ச்சித் தேக்கி வைத்து, பின்பு உழுதால் நீரில் உப்புகள் கரைந்து விடும்.
இந்த நீரை, வடிகால் மூலம் வெளியேற்ற வேண்டும். இதைப் போல், பல முறை செய்தால், உவர் நிலம் சாகுபடிக்கு ஏற்ற நிலமாக மாறும்.
மண்ணிலுள்ள சோடிய உப்புகளின் அளவு மிகுந்தால், களர் நிலம் உருவாகும். இவ்வகை மண்ணில் காரத்தன்மை அதிகமாக இருக்கும். இதில், கால்சியம் சல்பேட் என்னும் ஜிப்சத்தை இட்டால் சோடியம் கரைந்து வெளியேறும். இதைப் போல், பலமுறை நீரை விட்டுக் கலக்கி, இருத்தி வடிப்பதால் இந்தக் குறை நீங்கும்.
பசுந்தாள் உரம்
மண் வளத்தைப் பெருக்க, பயிருக்கான தழைச்சத்தைப் பெற, பசுந்தாள் உரம் மிக அவசியம். பயறுவகைச் செடிகளான சீமையகத்தி, சணப்பு, தக்கைப்பூண்டு, நரிப்பயறு, தட்டைப்பயறு போன்றவை, மரப்பயிர்களான அகத்தி, சூபாபுல் ஆகியன, பசுந்தாள் உரப் பயிர்களாகும்.
இவற்றைத் தவிர, தானாக வளரும் கொளுஞ்சி, ஆவாரை, எருக்கு, ஆதாளை ஆகிய செடிகளும் பசுந்தாள் உரமாகும். நிலத்தில் இடப்படும் பசுந்தாள் உரங்கள், கோடிக்கணக்கான நுண்ணுயிர்களால் தாக்குண்டு, சிதைந்து மட்கும்.
அப்போது இந்தச் செடிகளில் இருக்கும் பேருட்டம் மற்றும் நுண் உரங்கள் வெளியாகி, பயிர்கள் செழித்து வளர உதவும். நுண்ணுயிர்கள் பெருகினால், அவற்றிலிருந்து அங்கக அமிலங்கள், பயிர் வளர்ச்சி ஊக்கிகள், நொதிகள் மற்றும் சர்க்கரைப் பொருள்கள் வெளிப்படும்.
இவை, மண்ணில் கரையாத நிலையில் உள்ள இரசாயன உரங்களைக் கரைத்து, பயிர்கள் எடுத்துக் கொள்ள ஏதுவான படிவங்களாக மாற்றும். இது, பயிர் வளர்ச்சிக்கு உதவும்.
சத்தைக் கிரகிக்கும் தன்மை
பசுந்தாள் உரப்பயிர்கள் நீண்ட ஆணி வேர்களை உடையவை. அதனால், மண்ணில் ஆழமாகச் சென்று சத்துகளைக் கிரகிப்பதுடன், மண்ணில் நீர் ஊடுருவும் தன்மையையும் அதிகரிக்கச் செய்யும்.
கோடையில் இந்தப் பயிர்களை சாகுபடி செய்தால், மண் போர்வை போல் செயல்பட்டு, நீர் ஆவியாவதைத் தடுக்கும்; மண் ஈரத்தில் தேவையில்லாத உப்புகள் கரைந்து, பயிர்களின் வேர்களைத் தாக்காதபடி வெளியேற்றும்.
எனவே, கோடையில் அல்லது பயிரிடுவதற்கு முன், மழைநீரைக் கொண்டு பசுந்தாள் பயிர்களை வளர்த்து, பூக்கும் போது மடக்கி உழுதால், மண்ணுக்கு அதிகளவில் அங்ககச் சத்துகள் கிடைத்து மண்வளம் பெருகும். இதனால், உரச்செலவு குறையும். இப்படி மண்ணை வளமாக்கினால், நல்ல மகசூலைப் பெறலாம்.
முனைவர் எஸ்.செல்வராஜ், ஆர்.வி.எஸ்.வேளாண்மைக் கல்லூரி, தஞ்சாவூர். த.சிவசக்தி தேவி, பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண்மைக் கல்லூரி, காரைக்கால். த.சிவசங்கரி தேவி, வேளாண்மைக் கல்லூரி, மதுரை.