கோடைக் காலத்தில் எருமைகள் பராமரிப்பு!

எருமை

செய்தி வெளியான இதழ்: 2019 ஜூன்.

ருமை மாடுகள் வெப்பத்தால் மிகவும் பாதிக்கப்படும். குறிப்பாகக் கோடையில் எருமை மாடுகளின் சினைப் பிடிப்பு, கன்று ஈனும் திறன் மற்றும் பால் உற்பத்தி மிகவும் பாதிக்கும். இதனால், பெரும்பாலான விவசாயிகள் எருமை மாடுகளை வளர்க்க விரும்புவதில்லை.

எனவே, இந்தியாவில் எருமை மாடுகளும் குறைந்து வருகின்றன. கோடைக்காலப் பராமரிப்பும் தீவனமும் சரியாக இருந்தால், எருமைகள் எளிதில் சினைப் பிடிக்கும்.

எப்போதும் எருமைகளை இயற்கையான மர நிழல் அல்லது கொட்டிலில் வளர்க்கலாம். கொட்டிலில் கூரை வெப்பம் தாக்கக் கூடாது. இதற்கு, கூரையின் மேல் தென்னங் கீற்றுகளைப் பரப்பி நீரைத் தெளிக்கலாம்.

விரிந்து பரந்த மரங்களின் நிழலில் கொட்டகையை அமைப்பது நல்லது. எருமைகளுக்கு நல்ல இட வசதியும், காற்றோட்டமும் இருக்க வேண்டும். கூரை ஆஸ்பெஸ்டாஸ் அட்டைகளாக இருந்தால், மேற்புறத்தில் வெள்ளைச் சாயத்தைப் பூச வேண்டும். உள்சுவரில் கறுப்பு பூச வேண்டும்.

இப்படிச் செய்தால் வெப்பம் ஊடுருவாது. கொட்டிலைச் சுற்றிச் சூபாபுல், கோ.3 வேலிமசால் போன்ற தீவனப் பயிர்களை வளர்த்து, பசுந்தீவனத் தட்டுப்பாட்டைத் தவிர்க்கலாம்.

எருமைகள் மீது குளிர்ந்த நீரைத் தெளிப்பது அல்லது நீரில் நனைத்த சணல் சாக்குகளைப் போடுவது அல்லது சிறிய குட்டையில் நீந்தச் செய்தால் அவற்றின் உடல் வெப்பத்தைக் குறைத்து, பாலுற்பத்தி மற்றும் இனப்பெருக்கத் திறனைக் கூட்டலாம்.

வழக்கத்தை விட மிகுதியாகக் குடிநீரை வழங்கலாம். தேவைப்படும் போது மாடுகள் நீரைக் குடிக்க ஏதுவாக, தொட்டியை அமைத்து, அதில் சுண்ணாம்பை அடித்து வைத்தால் எப்போதும் நீர் குளிர்ச்சியாக இருக்கும்.

போதுமான கலப்புத் தீவனம், பசுந்தீவனத் தழை, ஊறுகாய்ப் புல், சத்துமாவுக் கலவை போன்றவற்றை அளித்தால் பால் உற்பத்திக் கூடும். கால்நடைகள் நீரோடையின் சத்தம் கேட்டால் நிறைய நீரைக் குடிக்கும்.

எனவே, தானியங்கி நீர்க் குழாய்கள் மூலம் குடிநீரை வழங்கலாம். சினை எருமைகளைக் கவனமாகப் பராமரித்தால், கோடைக்காலத்தில் கன்று வீச்சு மற்றும் கருச்சிதைவு ஏற்படாமல் தடுக்கலாம்.


முனைவர் ஜி.கலைச்செல்வி, முனைவர் க.விஜயராணி, கால்நடை மருத்துவக் கல்லூரி, வேப்பேரி, சென்னை – 600 007.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!