பசுந்தீவனம் எவ்வளவு முக்கியம் தெரியுமா?

பசுந்தீவன

செய்தி வெளியான இதழ்: 2019 பிப்ரவரி.

றவை மாடுகளுக்கும், வளரும் கால்நடைகளுக்கும் கொடுக்கும் தீவனத்தில் வைட்டமின் ஏ அவசியம் இருக்க வேண்டும். இந்தச் சத்துப் போதியளவில் கிடைக்கா விட்டால், கால்நடைகளில் நோய் அறிகுறிகளாக வெளிப்படும்.

எடுத்துக் காட்டாக, கால்நடைகளின் உள்வாயில் இளஞ்சிவப்பு நிறத்தில் மெல்லிய சவ்வுப் படலம் இருக்கும். இதற்கு மியூகஸ் சவ்வு என்று பெயர். இந்தச் சவ்வுப் படலம், வாய், இரைப்பை, வயிறு, குடல், சுவாச உறுப்புகள், சிறுநீர்ப் புறவழி, பெண்குறி ஆகியவற்றில் ஒரே தொடர்ச்சியாக மூடியிருக்கும்.

இதில் எங்காவது சிறு கிழிசல் அல்லது விரிசல் ஏற்பட்டால், நோய்க் கிருமிகள் எளிதாகக் கால்நடைகளின் உடலுக்குள் புகுந்து விடும். வாயிலுள்ள சவ்வில் விரிசல் ஏற்படுவதைத் தான் வாய்ப்புண் என்கிறோம்.

இந்தச் சவ்வுப் படலம் திடமாகவும், கிழிந்து விடாமலும் இருப்பதற்கு வைட்டமின் ஏ மிகமிகத் தேவை. வைட்டமின் ஏ குறைந்தால் மனிதர்களைப் போல, கால்நடைகளுக்கும் மாலைக்கண் நோய் வந்து விடும்.

இதனால், இருட்டில் நடப்பதற்குக் கால்நடைகள் தடுமாறும். கண்ணில் நீர் சுரக்கும். இரவில் ஒளியைக் கண்டால் கண்கள் கூசும். நாளடைவில் பார்வையை இழக்கவும் நேரிடும்.

இதற்கு என்ன காரணம்? கண்ணில் இருக்கும் ரெட்டினா என்னும் கறுப்புத் திரை, இருட்டில் பார்வை தெரிவதற்குச் சுருங்கி விரிந்து உதவும். ஒளி அதிகமாக இருந்தால் சுருங்கியும், ஒளி குறைவாக இருந்தால் விரிந்தும் ஒளியைக் கண்ணுக்குள் அனுப்பும். இப்படி முறையாக ரெட்டினா செயல்பட, வைட்டமின் ஏ அவசியம்.

காளை மாடுகளை வைத்திருப்போர் இந்த ஆலோசனைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில், இரவு நேரத்திலும் இந்த மாடுகள் வண்டி போன்றவற்றை இழுக்கத் தேவைப்படும்.

வைட்டமின் ஏ போதியளவில் கிடைக்க, சூபாபுல், குதிரை மசால், கோ.3, கோ.4. புல் வகைகள், அகத்திக்கீரை போன்றவற்றில் ஒன்றைத் தினமும் தீவனத்தில் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

கோ.3, கோ.4 போன்ற தீவனப்புல் வகைகளை வளர்க்க, அரசு மானியம் வழங்குகிறது. இதைப் பெறுவதற்கு, அருகிலுள்ள கால்நடை மருத்துவ நிலையங்களை அணுகி விவசாயிகள் பயனடையலாம்.

எனவே, பச்சைத் தீவனத்தின் சிறப்பை உணர்ந்து, நிலத்தில் சிறு பகுதியில் பசுந்தீவனத்தை வளர்த்து, கால்நடைகளுக்கு அளித்துப் பயனடைய வேண்டும்.


மரு.வி.இராஜேந்திரன், மேனாள் இணை இயக்குநர், கால்நடைப் பராமரிப்புத் துறை, நத்தம், திண்டுக்கல் – 624 401.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!