ஆட்டுப் புழுக்கை என்னும் அங்கக உரம்!

ஆட்டுப் புழுக்கை

ட்டெரு அவ்வருசம், மாட்டெரு மறுவருசம் என்பது பழமொழி. ஏனெனில், ஆட்டுப் புழுக்கையை உடனடியாகப் பயிருக்கு உரமாக இடலாம். ஆனால், மாட்டுச் சாணத்தை, அடுத்த ஆண்டில் தான் பயன்படுத்த முடியும்.

அங்கக வேளாண்மைக்கு முன்னுரிமை தரும் இந்தக் காலத்தில், ஆட்டெருவின் சிறப்புகளைத் தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.

ஆட்டெருவில் உள்ள தழைச்சத்து, மண்ணின் நயத்தை உயர்த்துவதால், பயிர்கள் நன்கு வேர்ப் பிடித்து வளரும் சூழலும், நீரைத் தக்கவைத்துக் கொள்ளும் சூழலும் உருவாகும்.

ஆட்டெரு புழுக்கையாக இருப்பதால், இதைச் சேகரிப்பதும், பயன்படுத்துவதும் எளிதாகும். மேலும், எளிதில் மட்கி விடும்.

ஆட்டெருவில் ஈரத்தன்மை குறைவாக இருப்பதாலும், துர்நாற்றம் இல்லாமல் இருப்பதாலும், கையாளுதல் எளிதாகும்.

ஆட்டெருவை, பூச்செடிகள், மூலிகைச் செடிகள், காய்கறிச் செடிகள் மற்றும் பழ மரங்களுக்கு உரமாக இடலாம். வீட்டுத் தோட்டம் அல்லது மாடித் தோட்டம் அமைப்போருக்கு, ஆட்டெரு வரப்பிரசாதம் ஆகும்.

ஆட்டெருவில் உள்ள சத்துகளின் அளவு, ஆட்டினம் மற்றும் உண்ணும் தீவனத்தைப் பொறுத்தே அமையும்.

எனவே, ஆடுகளுக்குப் புரதம் மிகுந்த வேலிமசால், தீவனத் தட்டைப்பயறு, சூபாபுல் போன்றவற்றை அளித்தால், ஆட்டெருவில் தழைச்சத்து மற்றும் நுண் சத்துகள் கூடும்.

ஆட்டெருவை நேரடியாக இடுதல்

ஆட்டெருவை நேரடியாக இடுவதாக இருந்தால், 2-3 நாட்களுக்கு வெய்யிலில் உலர வைத்து இடுவது நல்லது. இதனால், நோய்களைப் பரப்பும் கிருமிகள் இருப்பின், அவை வெய்யிலில் அழிந்து விடும். இப்படிக் காய வைத்த எருவை, பிற்காலத் தேவைக்கு என, சேமித்தும் வைக்கலாம்.

ஆட்டெருவை மட்க வைத்தல்

மாட்டுச் சாணத்தைப் போல ஆட்டெருவை, 4-6 மாதங்களுக்கு மட்க வைத்தும் உரமாக இடலாம். இதை மட்க வைப்பது மிகவும் எளிதாகும்.

புழுக்கை வடிவில் இருப்பதாலும், அதிகளவில் உள் காற்றோட்டம் ஏற்படுவதாலும், மட்கும் காலம் குறையும். 3-4 மாதங்களில் மட்கி விடும்.

ஆட்டுப் புழுக்கையுடன், தீவனக்கழிவு, புல், காய்ந்த தழைகள் போன்றவற்றை, ஓரிடத்தில் சேர்த்து வைக்க வேண்டும். இதற்கெனச் சிறிய தொட்டிகளையும் பயன்படுத்தலாம்.

எருவில் ஈரப்பதம் இருக்க வேண்டும். ஆட்டெருவை அடிக்கடி கிளறி விட்டு, காற்றோட்டத்தை அதிகரித்து எளிதில் மட்கச் செய்யலாம்.

ஆட்டுப் புழுக்கையில், 1.34 சதம் தழைச்சத்து, 0.54 சதம் மணிச்சத்து, 1.56 சதம் சாம்பல் சத்து இருக்கும்.

ஆட்டுச் சிறுநீரில், 1.13 சதம் தழைச்சத்து, 0.05 சதம் மணிச்சத்து, 7.9 சதம் சாம்பல் சத்து இருக்கும்.

மட்கிய ஆட்டெருவில், 2.23 சதம் தழைச்சத்து, 1.24 சதம் மணிச்சத்து, 3.69 சதம் சாம்பல் சத்து இருக்கும்.


செய்தி: இயக்குநர், மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம், குடுமியான்மலை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!