நெல்லுக்குப் பயன்படும் உயிர் உரங்கள்!

அசோலா

சோலா, நீலப்பச்சைப்பாசி, அசோஸ் பயிரில்லம், பாஸ்போ பேக்டீரியம் ஆகிய உயிர் உரங்கள் நெல்லுக்குப் பயன்படுகின்றன. இவற்றை இட்ட நெல் வயல்களில் செலவு குறைகிறது,

நிலவளம் காக்கப்படுகிறது, களை கட்டுப்படுகிறது, விரைவில் மட்குகிறது, பயிரின் வளர்ச்சிக்குத் தேவையான தழைச்சத்துச் சீராகக் கிடைக்கிறது, அதிக மகசூல் கிடைக்கிறது.

விதை மற்றும் நாற்றுகளை உயிர் உரங்களில் நேர்த்தி செய்வது மற்றும் நிலத்தில் இடுவதன் மூலம் மகசூல் கூடுகிறது. அசட்டோ பேக்ட்டர் மற்றும் அசோஸ் பைரில்லத்தை நெல்லுக்கு இடும் போது, பரிந்துரை செய்த தழைச்சத்து உரத்தில் 25 சதத்தைக் குறைத்தே இடலாம். மேலும், 15.4 சதம் வரை கூடுதல் மகசூலும் கிடைக்கிறது.

நீர்த் தேங்கியுள்ள நெல் வயல், நீலப்பச்சைப் பாசி பெருக ஏற்ற இடமாகும். இதனால், எக்டருக்கு 20-25 கிலோ தழைச்சத்துக் கிடைக்கும். நீலப்பச்சைப் பாசியை இட்டால், பரிந்துரை செய்த தழைச்சத்தில் மூன்றில் ஒரு பங்கைக் குறைத்து இட்டு நல்ல மகசூலைப் பெறலாம். நட்ட பத்தாம் நாளில் ஏக்கருக்கு 10 கிலோ வீதம் நீலப்பச்சைப் பாசியை இட்டால், 14 சத மகசூல் மிகுதியாகக் கிடைக்கும்.

அசட்டோ பாக்ட்டர் உயிர் உரத்தையும் நீலப்பச்சைப் பாசியையும் சேர்த்து இட்டால், பரிந்துரை செய்த தழைச்சத்தில் 37.5 சதத்தைக் குறைத்து இட்டு, நல்ல மகசூலைப் பெறலாம். பாஸ்போ பாக்டீரியாவை எக்டருக்கு 10 கிலோ வீதம் இட்டால், மணிச்சத்தின் பலன் முழுமையாகக் கிடைக்கும்.

இந்த பாக்டீரியா, மண்ணில் பயிருக்குக் கிட்டா நிலையிலுள்ள மணிச் சத்தைக் கரைத்துப் பயிருக்குக் கொடுக்கிறது. இப்படி, மணிச்சத்துச் சீராகக் கிடைப்பதால் உரச் செலவும் குறைகிறது.

குறிப்பாக, மண்ணாய்வின் மூலம் நிலத்தில் மணிச்சத்து அதிகமாக இருப்பது தெரிய வந்தால், பாஸ்போ பாக்டீரியாவை மட்டும் இட்டால் போதும். இதனால் மகசூல் குறைவதில்லை.

இந்த பேக்டீரியம் நிலத்திலுள்ள மணிச்சத்தைப் பயிருக்குப் போதியளவில் கிடைக்கச் செய்வதால், மணிச்சத்து உரத்தை இடத் தேவையில்லை. பாஸ்போ பாக்டீரியாவை விதையில் கலந்தும், நடவு வயலிலும் இட்டும் பயன் பெறலாம்.


PB_Anuradha

முனைவர் அ.அனுராதா, முனைவர் மு.இராமசுப்ரமணியன், வேளாண்மை அறிவியல் நிலையம், நீடாமங்கலம், திருவாரூர் – 614 404.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!