நிலப்போர்வையும் பந்தலும்!

கொடிவகைக் காய்கறிகளின் சீரான வளர்ச்சிக்கு, அவற்றின் வேர்ப் பகுதிகளில் மட்கும் கழிவுகளான, இலைகள், வைக்கோல், வாழை மட்டை ஆகியவற்றை, நிலத்தில் பரப்புவது நிலப்பேர்வை எனப்படுகிறது. நெகிழித் தாள் மூலமும் அமைக்கலாம்.

அங்கக நிலப்பேர்வை: அங்ககப் பொருள்களான, புல், வைக்கோல், விவசாயக் கழிவுகளை நிலத்தில் பரப்புதல் அங்கக நிலப்போர்வை எனப்படும். இவை, நிலத்தில் ஈரப்பதத்தைக் காப்பதுடன், பயிருக்குத் தேவையான தழைச் சத்தையும் வழங்கும்.

நெகிழி நிலப்போர்வை: இம்முறையில், எளிதில் மட்காத நெகிழித்தாள் நிலத்தில் பரப்பப்படும். ஒரு மீட்டர் அகலமுள்ள நெகிழித் தாளை ஒரு ஏக்கர் நிலத்தில் மூட, ஆறு சுருள்கள் தேவைப்படும். இதை டிராக்டரில் இணைந்த நிலப்போர்வை இயந்திரம் அல்லது ஆட்கள் மூலம் போர்த்தலாம்.

நெகிழி நிலப்போர்வை அமைத்தல்

இது, பயிர்களின் இடைவெளியைப் பொறுத்து அமையும். பொதுவாக, 1-1.5 மீட்டர் அகலமுள்ள நெகிழித் தாள் பயனில் உள்ளது. மேலும், அதிகக் கனமுள்ள தாளைச் சூடாக்கி விரிவுப்படுத்திக் கொள்ளலாம். மலைத் தோட்டப் பயிர்களுக்கு, கனமான தாளைப் பயன்படுத்த வேண்டும். தாள்கள் சுருக்கம் இல்லாமல் நிலத்தில் ஒட்டியிருக்க வேண்டும்.

அதிகக் காற்றில்லாத மற்றும் அதிக வெப்பமுள்ள நேரத்தில், நிலத்தில் பரப்ப வேண்டும். தாளின் ஓரம் 45 டிகிரி கோணத்தில், 10 செ.மீ. ஆழத்தில் இடப்பட்ட சிறு சால்களில் நன்கு பதிக்கப்பட வேண்டும்.

நடவுக்கு முன் மண் போர்வையை அமைத்து, பயிர் இடைவெளிக்கு ஏற்பத் துளையிட்டு விதைகளை ஊன்ற வேண்டும். பிறகு, தாளின் ஓரத்தை 10 செ.மீ. ஆழத்தில் புதைத்துவிட வேண்டும்.

நன்மைகள்

மானாவாரி நிலங்களில் நீர் நேரடியாக ஆவியாவதைத் தடுத்து, நிலத்தின் ஈரப்பதத்தைக் காக்கும். ஒளி ஊடுருவாது என்பதால், நாள்பட்ட களைகளைக் கட்டுப்படுத்தும். நீராவிப் போக்குக் கட்டுப்படுவதால், நிலத்திலுள்ள உப்பு, மேல் நோக்கி வருவது தடுக்கப்படும்.

குளிர் காலத்தில் நிலத்தின் வெப்பத்தைச் சீராக வைத்து, விதைகள் நன்கு முளைக்கவும் வளரவும் உதவும். மண்ணரிப்பைத் தடுக்கும். நிலத்தைச் சூடாக்குவதால் மண் மூலம் பரவும் நோய்கள் கட்டுப்படும். மகசூலின் அளவும் தரமும் கூடும்.

பந்தல் அமைத்தல்

கொடிவகைக் காய்கறிப் பயிர்களான, பாகல், பீர்க்கன், புடல், சுரை, வெள்ளரி, சீமை வெள்ளரி, சௌசௌ மற்றும் கோவைக் கொடிகள் படர, பந்தல் அமைக்க வேண்டும்.

விதைகளை ஊன்றி இரண்டு வாரத்தில் 6-7 அடி உயர மூங்கில் அல்லது சவுக்குக் குச்சிகளால் தற்காலிகப் பந்தல் அல்லது சிமெண்ட் தூண்கள் மற்றும் கம்பிகளால் நிலையான பந்தலை அமைக்க வேண்டும். கொடிகள் பந்தலில் ஏற ஏதுவாகக் குச்சிகளையும் நட வேண்டும்.

அதிகப் பரப்பில் ஒரே பந்தலாக இல்லாமல், இடைவெளி விட்டு அமைத்தால், நோய் மற்றும் பூச்சிகள் பரவாமல் தடுக்கலாம். நிலத்தில் வேலைகளைச் செய்யவும் எளிதாக இருக்கும். காய்கள் குறிப்பிட்ட உயரத்தில் இருப்பதால் அவற்றின் தரமும் காக்கப்படும்.


முனைவர் செ.ஸ்ரீதரன், முனைவர் பா.ச.சண்முகம், முனைவர் ம.சங்கீதா, வேளாண்மை அறிவியல் நிலையம், பாப்பாரப்பட்டி, தருமபுரி – 636 809.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!