பல்லடுக்கு உயிர் வேலிக்கு உகந்த தாவரங்கள்!  

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2021

திகப் பரப்பில் உள்ள விவசாயப் பண்ணைகளுக்குப் பல்லடுக்கு இயற்கை வேலியை அமைப்பது நல்லது. இத்தகைய இயற்கை வேலியை எப்படி, எந்தெந்தத் தாவரங்களைக் கொண்டு அமைக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.

முதல் வரிசை

இந்த வரிசையில், முட்கள் நிறைந்த தாவரங்களான, இலந்தை, களாக்காய், சூரை முள், வில்வம், சப்பாத்திக் கள்ளி, முள் கிளுவை, சூடான் முள், கற்றாழை ஆகியவற்றை வளர்க்கலாம்.

இரண்டாம் வரிசை

இது, பறவைகளின் உணவு மற்றும் அவற்றின் வசிப்பிடமாக அமையும். எனவே, இந்த வரிசையில், அத்தி மரம், நாவல், இலுப்பை, வேம்பு, கொய்யா, மாதுளை, மா, பலா, சீத்தா, நெல்லி, புளிய மரம், சப்போட்டா, விளாம் பழம், பனைமரம் ஆகியவற்றை வளர்க்கலாம்.

மூன்றாம் வரிசை

இது, விவசாயிகளின் வருங்கால வைப்பு நிதியாக அமையும் மரங்கள் அடங்கியதாக இருக்க வேண்டும். எனவே, இந்த வரிசையில், சவுக்கு, மூங்கில், சில்வர் ஓக், மலைவேம்பு, குமிழ், வேங்கை, புன்னை மரம், சந்தனம், செஞ்சந்தனம், மருதம், கருங்காலி, மஞ்சணத்தி, பூவரசு, வன்னி ஆகிய மரங்களை வளர்க்கலாம்.

நான்காம் வரிசை

இது, கால்நடைத் தீவனத்தைத் தரும் மரங்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும். எனவே, இந்த வரிசையில், அகத்தி, சூபா புல், கிளைரிசிடியா, மல்பெரி, செடி முருங்கை, கல்யாண முருங்கை போன்ற மரங்களை வளர்க்கலாம்.

ஐந்தாம் வரிசை

இது, மூலிகை மற்றும் பூச்சி விரட்டித் தயாரிப்புக்கு உதவும் மரங்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும். எனவே, இந்த வரிசையில், அன்னாசி, பிரண்டை, தூதுவளை, முடக்கற்றான், கறிவேப்பிலை, கோவைக்கொடி, வெற்றிலை, செம்பருத்தி, வெட்டி வேர், எலுமிச்சைப்புல், கற்பூரவள்ளி, மருதாணி, சோற்றுக் கற்றாழை, நிலவேம்பு, சிறியா நங்கை, பெரியா நங்கை, முசுமுசுக்கை,

திருநீற்றுப் பச்சிலை, துளசி, துத்தி, தும்பை, குப்பைமேனி, கீழாநெல்லி, அம்மான் பச்சரிசி, ஆடாதோடை, ஆடு தின்னாப்பாளை, நொச்சி, ஆவாரை, ஊமத்தை, நெய்வேலிக் காட்டாமணக்கு, ஆமணக்கு, எருக்கு, நீர்முள்ளி, சிறுகண்பீளை, சிறுநெருஞ்சி, வேலிப்பருத்தி ஆகிய தாவரங்களை வளர்க்கலாம்.

இப்படி அமையும் உயிர்வேலியில் பல்லுயிர்கள் வாழும் சூழல் உருவாகும். இதில் வாழும் குருவிகள், ஓணான்கள், தவளைகள் ஆகியன, பயிர்களைச் சேதப்படுத்தும் பல்வகைப் பூச்சிகளை அழிக்கும். பாம்புகள், ஆந்தைகள் போன்றவை, எலிகளின் அளவைக் குறைக்கும். பறவைகள் பெருகுவதைப் பாம்புகளும், வல்லூறுகளும் கட்டுப்படுத்தும். பாம்புகள் பெருகுவதை மயில்கள் கட்டுப்படுத்தும். மயில்களைப் பெருக விடாமல், நரிகளும், காட்டுப் பூனைகளும் கட்டுப்படுத்தும்.

எனவே, விவசாயிகள் அவரவர் வசதிக்கு ஏற்ப, தேவையான அடுக்குகளில் உயிர் வேலியை அமைத்துக் கொள்ளலாம்.


லோ.ஜெயக்குமார்,

நீர் மேலாண்மை மற்றும் பண்ணை மேம்பாட்டுக் குழு,

மறைமலை நகர், செங்கல்பட்டு.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!