வெள்ளாடு வளர்ப்பானது நம் நாட்டில் தொன்று தொட்டு நடைபெற்று வரும் தொழிலாகும், மனிதன் முதன் முதலில் வீட்டு விலங்காக்கிய மிருகமே ஆடுகள் தான். நமது நாட்டுத் தட்பவெப்ப நிலையில் உள்ள ஆடுகள் இனப்பெருக்கத்தில் சிறந்து விளங்கினாலும், சிறிய அளவிலும், குறைந்த பால் உற்பத்தியையும் கொண்டுள்ளன. கால்நடை வளர்ப்பில், பசு மற்றும் எருமை மாடுகளுக்குச் செயற்கை முறையில் கருவூட்டல் செய்து, பால் உற்பத்தியைப் பெருக்கி வருகிறோம்.
அதைப் போல, வெள்ளாடு மற்றும் செம்மறி ஆட்டு இறைச்சி உற்பத்தியில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால், ஆடுகளிலும் செயற்கை முறை இனப்பெருக்கம் மிகவும் அவசியமாகும். மேலும், பெருகி வரும் மக்கள் தொகையின் புரதத் தேவையைச் சரி செய்யவும், நமது நாட்டின வெள்ளாடுகளை, அயல் நாட்டின ஆடுகளுடன் சேர்த்து, கலப்பின ஆடுகளை உருவாக்கி, உற்பத்தியைப் பெருக்கவும் ஏற்ற வழி, வெள்ளாடுகளில் செயற்கை முறையில் கருவூட்டல் செய்வதே ஆகும்.
செயற்கை முறையில் கருவூட்டல் செய்வது என்பது, தரமான உயரினப் பொலிக் கிடாக்களில் இருந்து பெறப்பட்ட ஆண் உயிரணுக்களை, செயற்கை முறையில் பெண் ஆடுகளின் இனப்பெருக்கக் குழாயில் செலுத்துவதாகும். 1985 ஆம் ஆண்டில் இந்தியாவிலும், 1990 ஆம் ஆண்டில் சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரியிலும் இம்முறையைக் கையாளத் தொடங்கினர்.
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் 2009 சனவரியில், கலப்பின வெள்ளாடுகளின் உறைவிந்து மூலம், வெள்ளாடுகளுக்குச் செயற்கை முறையில் கருவூட்டல் செய்தல் தொடக்கி வைக்கப்பட்டது.
செயற்கை முறை கருவூட்டலின் பயன்கள்
தரமான உயரின ஆடுகளின் குணங்கள், அதாவது, அதிகப் பால் உற்பத்தி மற்றும் விரைவான உடல் எடை வளர்ச்சியை, குறைந்த காலத்தில் நமது நாட்டின ஆடுகளில் புகுத்த முடியும். இதன் மூலம், நமது நாட்டின ஆடுகளில் இருந்து கிடைக்கும் குட்டிகளில் மரபுவழி முன்னேற்றங்களை ஆய்வு செய்யவும் உதவியாக இருக்கும்.
காயமடைந்த ஆடுகள் மற்றும் பெட்டை ஆடுகளின் மீது ஏறி இனப்பெருக்கத்தில் ஈடுபட முடியாத உயரினப் பொலிக் கிடாக்களில் இருந்து உயிரணுக்களைச் சேகரித்துச் சினையூசியாகப் போடுவதால், பொலிக் கிடாக்களின் இனப்பெருக்கத் திறன் சரியாகப் பயன்படுத்தப்படும்.
வெள்ளாட்டுப் பண்ணையாளர்கள் இனப்பெருக்கப் பொலிக்கிடாக்களை, வளர்க்க வேண்டியதில்லை. எனவே, அவற்றை வளர்ப்பதற்கு ஆகும் தீவனச் செலவு, பராமரிப்புச் செலவு குறைந்து, பண்ணை வருமானம் கூடும். பொலிக் கிடாக்களின் இனப்பெருக்க உறுப்பு மூலம் பரவும் பாலியல் நோய்கள் முற்றிலும் தவிர்க்கப்படும். அரிய ஆட்டினங்களைப் பாதுகாக்க முடியும்.
ஒரு பொலிக்கிடா தன் வாழ்நாளில் சினைப்படுத்தும் பெட்டை ஆடுகள் நூற்றுக்கணக்கில் இருக்கலாம். ஆனால், அதே பொலிக்கிடாயின் உயிரணுக்களைச் சேகரித்துச் செயற்கை முறையில் கருவூட்டல் செய்தால், ஆயிரக்கணக்கான ஆடுகளைச் சினைப்படுத்த முடியும். ஆடுகளுக்குச் செயற்கை முறையில் கருவூட்டல் செய்தால், பண்ணைப் பதிவேடுகளைப் பராமரிக்க ஏதுவாக இருக்கும்.
செயற்கை முறை கருவூட்டலுக்கு மாறி விட்டால், பொலிக்கிடாக்களை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை. உறை விந்துக் குச்சிகளை எடுத்துச் சென்றாலே போதும். இதனால், தேவையற்ற போக்குவரத்துச் செலவினம் குறையும்.
செயற்கை முறை கருவூட்டல் மூலம், வெள்ளாட்டுக் குட்டிகளை, மரபியல் அடிப்படையில் தரம் உயர்த்த முடியும். ஈற்றுகளைச் சரியாகக் கணக்கிட முடியும். குறுகிய காலத்தில் அதிகக் குட்டிகளை உற்பத்தி செய்ய முடிவதால் வருமானமும் கூடும்.
சினைப்பருவச் சுழற்சி
இனப்பெருக்க நிலைக்கு வளர்ந்து விட்ட பெட்டை ஆடுகள், 21 நாட்களுக்கு ஒருமுறை சினப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்தும். சினைப்பருவம் 2-3 நாட்கள் இருக்கும். ஒருசில ஆடுகளில் மூன்று நாட்களுக்கு மேலும் சினை அறிகுறிகள் இருக்கும். இவ்வகை ஆடுகளின் சூல் பையில் கட்டிகள் இருக்க வாய்ப்புகள் உள்ளன.
சினை அறிகுறிகள்
பெட்டை ஆடுகளில் செயற்கை முறை கருவூட்டலைச் செய்வதற்கு முன்பு, அவை சரியான சினைப் பருவத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சினைப் பருவத்தில் உள்ள ஆடுகள் அடிக்கடி வாலை ஆட்டிக்கொண்டே இருக்கும். அமைதியின்றிப் பரபரப்பாகக் காணப்படும். அங்குமிங்கும் அலைந்து கொண்டேயிருக்கும். தீவனம் எடுப்பதில் நாட்டமின்றி, கத்திக் கொண்டே இருக்கும். மடியில் பால் சுரப்புக் குறைவாக இருக்கும். பிறப்பு உறுப்பானது வீங்கிச் சிவந்திருக்கும்.
சாதாரணமாக ஆடுகளின் பிறப்பு உறுப்பில் இருக்கும் சுருக்கங்கள், சினைப் பருவத்தில் உள்ள ஆடுகளில் மறைந்து இருக்கும். பிறப்பு உறுப்பிலிருந்து கண்ணாடியைப் போன்ற பிசுபிசுப்பான திரவ ஒழுக்குக் காணப்படும். பிறப்பு உறுப்பு மற்றும் வாலைச் சுற்றியுள்ள முடிகள் ஈரமாகத் தென்படும். மற்ற ஆடுகள் மீது தாவிக் கொண்டும், மற்ற ஆடுகள் தன் மீது தாவுவதை அனுமதித்துக் கொண்டும் இருக்கும்.
எல்லா ஆடுகளும் இத்தகைய சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்துவது இல்லை, சினைப் பருவத்தில் இருக்கும் சில ஆடுகள் சினை அறிகுறிகளை வெளிப்படுத்தாது. இத்தகைய பெட்டை ஆடுகளை, கிடாக்களின் மூலம் அல்லது பொய்க் கிடாக்களின் உதவியுடன் கண்டு பிடிக்கலாம்.
கருவூட்டல் செய்யும் நேரம்
சினைப்பருவம் வெளிப்பட்ட இரண்டாம் மற்றும் மூன்றாம் நாளில், பெட்டை ஆடுகளைச் சினைக்குச் சேர்க்க வேண்டும். ஏனெனில், சினைப்பருவம் தொடங்கி 24-30 மணி நேரத்துக்குப் பிறகே, ஆடுகளின் சூல் பையிலிருந்து சினை முட்டைகள் வெளிப்படும். செயற்கை முறை கருவூட்டல் மூலம் 65-70 சத வெள்ளாடுகள் சினைப் பிடிக்க வாய்ப்புண்டு.
ம.பழனிசாமி, ச.மனோகரன், மா.செல்வராஜூ, கி.செந்தில்குமார், கா.இரவிக்குமார், து.கோபிகிருஷ்ணன், ம.பெரியண்ணன்,
கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஈனியல் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல் – 637 002.
சந்தேகமா? கேளுங்கள்!