ஆடுகளைத் தாக்கும் உருளைப் புழுக்கள்!

ஆடு sheep

கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் ஆடு வளர்ப்புத் தொழில் பெரும்பங்கை வகிக்கிறது. ஆடுகள் நடமாடும் வங்கி என்று அழைக்கப்படும் அளவில், குறைந்த முதலீட்டில் அதிக இலாபத்தை ஈட்டும் தொழிலாக ஆடு வளர்ப்பு உள்ளது. ஆனால், பல்வேறு நோய்த் தொற்றுகளால் ஆடுகள் பாதிக்கப்படுவதால், பண்ணையாளருக்கு இழப்பு ஏற்படுகிறது.

உணவு மண்டலத்தைப் பாதிக்கும் பல்வேறு நோய்த் தொற்றுகளில் உருளைப் புழுக்களின் தாக்கம், ஆடு வளர்ப்பில் பெரும் பொருளாதார இழப்பை உண்டாக்குகிறது. இவற்றுள், ஹெமாங்கஸ் கன்டார்டஸ் என்னும் உருளைப்புழு, ஆடுகளைத் தாக்கி இரத்தச் சோகையை ஏற்படுத்தி, அவற்றை உயிரிழக்கச் செய்கிறது. எனவே, குடற்புழுத் தாக்கத்தின் விளைவுகள் மற்றும் குடற்புழு நீக்கத்தின் அவசியத்தைப் பற்றி இங்கே காண்போம்.

உருளைப்புழுத் தாக்கக் காரணிகள்

ஹெமாங்கஸ் உருளைப் புழுவானது, மாடுகள், செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இவற்றில், செம்மறியாடுகளே அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன. இது, அனைத்து வயது கால்நடைகளையும் தாக்குகிறது.

குடற்புழுத் தொற்று ஏற்பட்ட ஆடுகளின் உணவுக்கழிவு மூலம், உருளைப்புழு முட்டைகள், மேய்ச்சல் நிலங்களை அடைகின்றன. இந்த முட்டைகளில் இருந்து வெளிவரும் இளம் புழுக்களை, மேய்ச்சலின் போது கால்நடைகள் உண்பதால் குடற்புழுத் தொற்றுப் பரவுகிறது.

இப்படி, ஆடுகளின் இரைப்பையில் ஒட்டிக் கொள்ளும் இளம் புழுக்கள் மற்றும் முதிர்ந்த உருளைப் புழுக்கள், தினமும் முறையே 0.05 மி.லி. இரத்தம் வீதம் உறிஞ்சி, இரத்தச் சோகையை ஏற்படுத்தி, ஆடுகள் இறப்பதற்குக் காரணமாக அமைகின்றன.

வெய்யில் மற்றும் ஈரப்பதமான கால நிலைகளில், உருளைப் புழுக்கள் மேய்ச்சல் நிலங்களில் பெருமளவில் தொற்றை ஏற்படுத்துகின்றன. மேலும், ஆடுகளில் சத்துக் குறைபாடு, சினைப் பருவம் மற்றும் பால் சுரப்பின் போது ஏற்படும் நோயெதிர்ப்புத் திறன் குறைபாடு போன்றவை, குடற்புழுத் தாக்கத்தின் தீவிரத்தை அதிகரிக்கின்றன.

நோய் அறிகுறிகள்

உருளைப்புழுத் தொற்று என்பது, ஆடுகளில் இறப்பை ஏற்படுத்தும் மறைமுக உயிர்க்கொல்லி நோயாகும். ஏனெனில், இந்நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது மிகவும் கடினமாகும். மிகக் கடுமையான குடற்புழுத் தொற்றில் அறிகுறிகள் தென்படுவதற்கு முன்பே ஆடுகள் திடீரென்று இறக்க நேரிடுகிறது.

ஓரளவு கடுமையான நிலையில், தீவிரமான இரத்தச்சோகை மற்றும் நீர்க்கட்டு ஏற்பட்டு, தாடை வீக்கம் உண்டாகிறது. நோய் முற்றிய நிலையில் இரத்தச் சோகை மற்றும் உடல் எடையிழப்பு ஏற்பட்டு, ஆடுகளின் உற்பத்தித் திறன் பாதிக்கப்படுகிறது.

விழிப்படலச் சவ்வு வெளிரிய நிலையிலிருப்பது, இரத்தத்தை உறிஞ்சும் உருளைப் புழுக்களின் தாக்கத்தால் ஏற்படும் இரத்தச் சோகையின் மிக முக்கிய அறிகுறியாகும். நீர்ச்சத்து இழப்பு, சொரசொரப்பான உரோமம், சோர்வு, தடுமாற்றம் போன்ற பிற அறிகுறிகளும் இருக்கும். ஹெமாங்கஸ் உருளைப்புழுத் தொற்றினால் கழிச்சல் ஏற்படுவதில்லை.

நோயைக் கண்டறிதல்

ஆடுகளில் உருளைப்புழுத் தாக்கத்தின் அறிகுறிகள், பிற நோய்களின் அறிகுறிகளைப் போலவே உள்ளன. எனவே, காலநிலை, பருவமழை மற்றும் மேய்ச்சல் தொடர்பான விவரங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஃபாமாச்சா (FAMACHA) என்னும் விழிப்படலச் சவ்வின் நிறக் குறியீட்டைப் பயன்படுத்தி, ஆடுகளில் இரத்தச் சோகையைக் கண்டறியலாம். பட்டியில் இருந்து சில ஆடுகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் சாண மாதிரிகளை ஆய்வு செய்வதன், மூலம் குடற்புழுத் தொற்றைக் கண்டறியலாம்.

அறிகுறி ஏதுமின்றித் திடீரென இறக்கும் ஆட்டினைப் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தும் போது, அதன் இரைப்பையில் உருளைப் புழுக்கள் இருப்பதைக் காண முடியும்.

சிகிச்சை

ஆடுகளில் குறிப்பிட்ட கால இடைவெளியிலும், பருவமழைக் காலத்துக்கு முன்பும், குடற்புழு நீக்கம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். குடற்புழு நீக்க மருந்துகள் மூலம் மட்டுமே உருளைப் புழுக்களின் தாக்கத்தை முழுமையாகத் தடுக்க முடியாது. கூடுதலாக, மேய்ச்சல் நில மேலாண்மையும் முக்கியமாகும்.

பல்முனை செயலாற்றல் கொண்ட பென்சிமிடசோல் வகைக் குடற்புழு நீக்க மருந்துகள், அனைத்து வகைக் குடற் புழுக்களையும் அழிப்பதற்குப் பயன்படுகின்றன.

குறுகிய செயலாற்றல் கொண்ட குளோசென்டல், ரஃபாக்சனைடு, லிவாமிசோல், ஐவெர்மெக்டின் போன்றவை, ஹெமாங்கஸ் உருளைப் புழுக்களின் இளம் புழுக்களையும், முதிர்ந்த புழுக்களையும் அழிப்பதில் சிறந்த பலனளிக்கின்றன.

ஃபென்பென்டசோல் என்னும் திரவ மருந்தை, ஆட்டின் எடையில் ஒரு கிலோவுக்கு 7.5 மி.கி. வீதம் எடுத்து, வாய் வழியாக அளிக்க வேண்டும்.

தையபென்டசோல் என்னும் திரவ மருந்தை, ஆட்டின் உடல் எடையில், கிலோவுக்கு 44 மி.கி. வீதம் எடுத்து, வாய் வழியாக அளிக்க வேண்டும்.

அல்பென்டசோல் என்னும் திரவ மருந்தை, ஆட்டின் உடல் எடையில், கிலோவுக்கு 5 மி.கி. வீதம் வாய் வழியாக அளிக்க வேண்டும்.

ஐவெர்மெக்டின் என்னும் ஊசி மருந்தை, ஆட்டின் உடல் எடையில், கிலோவுக்கு 200 மை.கி. வீதம் எடுத்து, தோலுக்கடியில் போட வேண்டும்.

குடற்புழு நீக்க மருந்துகளைப் பயன்படுத்தும் போது, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். சரியான அளவில், சரியான கால இடைவெளியில் மருந்துகளை அளிக்க வேண்டும். உருளைப் புழுக்களில் குடற்புழு நீக்க மருந்துகளுக்கு எதிரான திறன் உருவாகி விடாமல் தடுக்க வேண்டுமெனில், தேவையில்லாமலோ அல்லது தேவைக்கு அதிகமாகவோ மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது.

சுழற்சி முறையில் குடற்புழு நீக்க மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். சிகிச்சைக்குப் பிறகு, தகுந்த கால இடைவெளி விட்டு, ஆடுகளை இறைச்சிக்காகப் பயன்படுத்த வேண்டும்.

பட்டியில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட ஆடுகளைக் கண்டறிந்து, சிகிச்சை செய்யும் போது, தேவையற்ற மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது. சினைக் காலத்தில் ஆடுகளுக்குக் குடற்புழு நீக்கம் செய்வதன் மூலம், பிறக்கும் இளம் குட்டிகளுக்குத் தொற்றுப் பரவாமலும், மேய்ச்சல் நிலத்தில் நோய்த் தொற்றுப் பரவாமலும் தடுக்கலாம்.

குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆடுகளின் சாண மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தி, குடற்புழுத் தொற்று உள்ளதா என்றும், அப்படி இருப்பின், சிகிச்சைக்கு முன்னும் பின்னும் ஏற்படும் மாற்றங்களையும் கண்காணிக்க வேண்டும்.

தடுப்பு முறைகள்

ஆடுகளில் உற்பத்திப் பாதிப்பு அல்லது உயிரிழப்பு ஏற்படாத வகையில், குடற்புழுத் தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். பாதிக்கப்பட்ட ஆடுகளைக் கண்டறிந்து, தகுந்த சிகிச்சையை அளிப்பதன் மூலம், மற்ற ஆடுகளுக்குத் தொற்றுப் பரவுவதைக் குறைக்கலாம்.

சுழற்சி முறையில் மேய்ச்சல் நிலங்களை மாற்றி மாற்றிப் பயன்படுத்த வேண்டும். குறுகியகாலத் தீவனப் பயிர்களான வேலிமசால், குதிரைமசால் போன்றவற்றை வளர்ப்பதன் மூலம், உருளைப் புழுக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.

ஆடுகளின் நோயெதிர்ப்புத் திறனை மேம்படுத்த, சிறந்த சத்து மற்றும் நோய்த் தடுப்பு மேலாண்மையைப் பின்பற்ற வேண்டும்.

அதிகளவில் ஆடுகள் உள்ள பட்டிகளில், அவ்வப்போது தோராயமாகச் சில ஆடுகளைத் தேர்ந்தெடுத்து, விழிப்படலச் சவ்வு ஆய்வைச் செய்வதன் மூலம், உருளைப்புழுத் தொற்றை முன்னதாகவே கண்டறிந்து சிகிச்சை அளிக்கலாம்.

மழைக்காலத்துக்கு முன்பும், சினைப் பருவத்தின் போதும், குறைந்த கால இடைவெளியில் ஆடுகளுக்குக் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். தேவைப்படின் 2-3 வாரங்களுக்கு ஒரு முறையும், மற்ற காலங்களில் 1-2 மாதத்துக்கு ஒரு முறையும் குடற்புழு நீக்கம் செய்தல் அவசியம்.

வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகளைத் தாக்கும், நுண்ணுயிரி மற்றும் நச்சுயிரிகளைக் கட்டுப்படுத்த, தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகளைப் பண்ணையாளர்கள் கையாளுகின்றனர். ஆனால், குடற்புழுத் தாக்கம் மற்றும் அதனால் ஏற்படும் உற்பத்திப் பாதிப்பைப் பற்றிப் பெரும்பாலானோர் கருத்தில் கொள்ளத் தவறுகின்றனர்.

குறிப்பாக, ஆடுகளில் இரத்தத்தை உறிஞ்சும் ஹெமாங்கஸ் வகை உருளைப் புழுக்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தினாலும், அவற்றைக் கண்டறிவது சவாலாக உள்ளது. அறிகுறிகளின்றி ஆடுகள் இறக்க நேரிடும் போது தான், குடற்புழு நீக்கம் பற்றிய கவனம் உண்டாகிறது.

எனவே, சரியான காலங்களில் ஆடுகளுக்குக் குடற்புழு நீக்கம் செய்வதுடன், தகுந்த மேய்ச்சல் மேலாண்மை மற்றும் தடுப்பு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், ஆடு வளர்ப்பில் உருளைப் புழுக்களால் ஏற்படும் பொருளாதார இழப்பைத் தவிர்த்து அதிக இலாபம் ஈட்டலாம்.


ஆடு DR.M.SIVAKUMAR

.சிவக்குமார், இரா.ரிஷிகேசவன், இரா.மகேஸ்வரி, கால்நடைப் பொது சுகாதாரம் மற்றும் நோய் நிகழ்வாய்வியல் துறை,

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தேனி – 625 534.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading