My page - topic 1, topic 2, topic 3

வெள்ளாடுகளில் தீவன மேலாண்மை!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019

னிதனுக்கான புரதத் தேவையை நிறைவு செய்வதில் கால்நடைகளின் பங்கு மிக முக்கியமானது. விலங்கினப் புரதத்தில் 35 நாட்களிலேயே 2 கிலோ எடையை அடையும் இறைச்சிக் கோழிகள் இருந்தாலும், வெள்ளாட்டு இறைச்சிக்குத் தனி மதிப்புண்டு.

இந்த வெள்ளாடுகள் இன்றளவும் சிறு விவசாயிகளால் மிகச் சிறிய அளவிலேயே வளர்க்கப்படுகின்றன. மேய்ச்சல் நிலங்களில் ஆண்டு முழுவதும் தேவையான அளவில் புற்கள் கிடைக்காமல் போவதால், தீவனத்தில் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

தற்போது, மித தீவிர மற்றும் அதிதீவிர வளர்ப்பு முறையில், கொட்டிலிலும் பரண் மேலும் வெள்ளாடுகள் வளர்க்கப்படுகின்றன. மேய்ச்சலுக்கு அனுப்பாமல் கொட்டிலிலேயே பராமரிக்கும் போது, அவற்றுக்குத் தேவையான அனைத்துச் சத்துகளையும் தீவனத்தில் அளிக்க வேண்டும்.

இவ்வகையில், சரிவிகித உணவு சரியான உணவு என்னும் தீவன மேலாண்மைக்கு, உற்பத்திச் செலவில் 60-70% ஆகிவிடும்.

தேவையான சத்துகள்

மற்ற கால்நடைகளைப் போலவே வெள்ளாடுகளுக்கும், குடிநீர்; எரிசக்தி, கார்போஹைட்ரேட் அடங்கிய மாவுச்சத்து; புரதச்சத்து; கொழுப்புச்சத்து; உயிர்ச்சத்து; தாதுப்புகள் ஆகிய இந்த ஆறு சத்துகளும் அவசியம்.

குடிநீர்

உடல் வெப்பத்தைச் சமநிலையில் பராமரிக்கக் குடிநீர் அவசியம். மேலும், குடலில் உறிஞ்சப்படும் சத்துகளை உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் எடுத்துச் செல்லவும், கழிவுகளை வெளியேற்றவும் குடிநீர் தேவை. எரிசக்தியின் மூலப்பொருளாக இருக்கும் மாவுச்சத்து அன்றாடச் செயல்களுக்கு அவசியம்.

புரதம்

தசைகள் புரதத்தால் ஆனவை. எனவே, உடல் வளர்ச்சிக்கும், பராமரிப்புக்கும் புரதம் பெரிதும் தேவை. மேலும், உடலில் சுரக்கும் என்சைம் என்னும் நொதிகள், ஹார்மோன் என்னும் கனநீர் மற்றும் நோயெதிர்ப்புச் சக்திக்கான இம்முனோகுளோபுலின் ஆகியன புரதத்தால் ஆனவையே.

கொழுப்பு

முக்கியமான கொழுப்பு அமிலங்களின் தேவையை நிறைவு செய்யவும், கொழுப்பில் கரையும் உயிர்ச் சத்துகளான ஏ, டி, ஈ, கே ஆகியவற்றை உடலில் எடுத்துச் செல்லவும் கொழுப்புத் தேவைப்படுகிறது.

உயிர்ச் சத்துகள்

உயிர்ச் சத்துகள், உடலின் வேதிவினை நிகழ்ச்சிகளில் கிரியா ஊக்கியாகச் செயல்பட்டு, சீரான முறையில் வளர்சிதை மாற்றம் நடைபெற உதவுகின்றன.

தாதுப்புகள்

உடல் வளர்ச்சி, எலும்பு மற்றும் பற்களின் உறுதித்தன்மை, இரத்தம் உறைதல், அமில காரத்தன்மை, வளர்சிதை மாற்றம் என அனைத்துச் செயல்களுக்கும் தாதுப்புகள் மிகவும் அவசியம்.

இந்தச் சத்துகள் அனைத்தும் உணவில் இருக்க வேண்டும். பொதுவாக, ஒரு வயிற்றுக் கால்நடைகள் மற்றும் கோழிகள் தங்களின் எரிசக்தித் தேவைக்காக உணவை உண்ணும். ஆனால், வயிற்றில் நான்கு அறைகளைக் கொண்ட அசையூண் கால்நடைகள், தங்களின் உலர்பொருள் தேவைக்காக உண்ணும்.

இவ்வகையில் சராசரியாக 2.5-4.0% உணவை உட்கொள்ளும்.

எடுத்துக்காட்டாக, 20 கிலோ எடையுள்ள ஆட்டுக்கு ஒரு கிலோ உலர் பொருள் தேவைப்படும். இதை 33% கலப்புத் தீவனம் மூலமும், 67% பசுந்தீவனம் மூலமும் அளிக்கிறோம் எனக் கொண்டால், 330 கிராம் கலப்புத்தீவனத் தேவையை நிறைவு செய்ய 10% ஈரப்பதத் தீவனம் 366 கிராம் தேவை.

மீதமுள்ள 670 கிராம் பசுந்தீவனம் 15% நீர்ச் சத்துள்ளதாகக் கணக்கில் கொண்டால் 4.5 கிலோ பசுந்தீவனம் தேவை.

வெள்ளாடுகள் எந்த இலை தழையைச் சாப்பிட்டாலும் எளிதில் செரித்து விடும். பசுந்தீவனம் அதிகச் சுவையுள்ளது, எளிதில் செரிப்பது. இது, உலர்ந்த நார்ச்சத்துத் தீவனத்தைச் செரிக்கும் போது விரயமாகும் எரிசக்தி அளவைக் குறைக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக உயிர்ச்சத்து ஏ-க்கான மூலப்பொருளாக விளங்குகிறது.

இந்தப் பசுந்தீவனத்தை ஐந்து வழிகளில் அளிக்கலாம். தானியவகைப் பசுந்தீவனம்- தீவனச் சோளம், தீவன மக்காச்சோளம். புல்வகைப் பசுந்தீவனம்- பாசனப் பகுதிக்குக் கோ-4 & கோ-5, மானாவாரிக்கு- கொழுக்கட்டைப்புல் & கினியாப்புல்.

பயறுவகைப் பசுந்தீவனம்- பாசனப் பகுதிக்கு வேலிமசால், மானாவாரிக்கு முயல் மசால். மர இலைகள்- அகத்தி, சீமையகத்தி, ஒதியன், உசிலை, கொடுக்காப்புளி.

ஹைட்ரோபோனிக் பசுந்தீவனம்

வெள்ளாடுகள், வெவ்வேறு வகையான பசுந்தீவனத்தை விரும்பி உண்ணும். ஒரே மாதிரியான தீவனத்தைக் கொடுத்தால், அவற்றின் உண்ணுமளவு குறையும். அதனால் வளர்ந்த ஆட்டுக்கு, 2-3 கிலோ தானிய வகை அல்லது புல்வகைத் தீவனம் (50%), 1-2 கிலோ பயறுவகைத் தீவனம் (30%) மற்றும் 1-2 கிலோ மரத்தழைத் தீவனம் (20%) அளிக்க வேண்டும்.

அடர் தீவனம்

மக்கச்சோளம், கம்பு, சோளம், அரிசி, கேழ்வரகு; புண்ணாக்கு வகைகள்; கருவாட்டுத்தூள்; தவிடு, எரிசக்தி மற்றும் புரத மூலப்பொருள்களை, ஆடுகளின் வளர் நிலைக்கேற்ப வெவ்வேறு விகிதங்களில் எடுத்து, 2% தாதுப்புக் கலவை, 1% சாதாரண உப்பையும் கலந்து அடர் தீவனம் தயாரிக்கப்படுகிறது.

இதை, 2 வாரம் முதல் 3 மாதங்கள் வரை 50 கிராமும், 4-12 மாதம் வரை 100 கிராமும், ஓராண்டைக் கடந்த ஆட்டுக்கு 200 கிராமும், சினை மற்றும் பாலூட்டும் ஆட்டுக்கு 250-400 கிராமும் அளிக்க வேண்டும்.

இப்படி, அறிவியல் சார்ந்த உணவியல் மேலாண்மையைப் பண்ணையாளர்கள் கடைப்பிடித்தால், உற்பத்தியைக் கூட்டி, அதிக இலாபத்தை அடையலாம்.


முனைவர் கரு.பசுபதி,

முனைவர் லி.இராதாகிருஷ்ணன், மையத் தீவனத் தொழில் நுட்பப் பிரிவு,

கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம்,

காட்டுப்பாக்கம்-603203, காஞ்சிபுரம் மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks