My page - topic 1, topic 2, topic 3

ஆடுகளைத் தாக்கும் அம்மை நோய்!

ட்டம்மை என்பது, ஆடுகளைத் தாக்கும் ஒருவகை நச்சுயிரி நோயாகும். செம்மறி ஆடுகளைத் தாக்கும் அம்மையை, செம்மறி ஆட்டம்மை என்றும், வெள்ளாடுகளைத் தாக்கும் அம்மையை, வெள்ளாட்டு அம்மை என்றும் கூறுவர். ஆனால், செம்மறி ஆட்டம்மை வெள்ளாடுகளையும், வெள்ளாட்டு அம்மை செம்மறி ஆடுகளையும் தாக்கும்.

நோய்க் காரணிகள்

செம்மறி ஆட்டம்மையை, ஸீப்பாக்ஸ் வைரசும், வெள்ளாட்டு அம்மையை, கோட்பாக்ஸ் வைரசும் தாக்கும்.

நோய்ப் பரவல்

காற்றின் மூலம் பரவும். நோயுற்ற ஆடுகளில் இருந்து நோயற்ற ஆடுகளுக்குப் பரவும். நோயுள்ள இடத்திலிருந்து எடுத்துச் செல்லப்படும் உபகரணங்கள், வாகனங்கள் மூலம் இந்த நோய்க் கிருமிகள் மற்ற இடங்களுக்குப் பரவும். மேலும், பூச்சிகள் மற்றும் கொசுக்களும், மாற்றமில்லா நோய் நுண்மப் பரப்பிகளாகச் செயல்படும்.

நோயின் அறிகுறிகள்

ஆடுகளுக்குக் காய்ச்சல் ஏற்படும். ஆடுகள் தீவனத்தை உண்ணாமல் இருக்கும். உடல் முழுவதும் அல்லது வாய், ஆசனவாய், இமைப்பகுதி, பெண்ணுறுப்பின் வெளியிதழ்ப் பகுதியில் அம்மைக் கொப்புளங்கள் இருக்கும். பிறகு, இந்தக் கொப்புளங்கள் உடைந்து புண்ணாகும். நுண்ணுயிர்த் தொற்று ஏற்பட்டு நுரையீரல் அழற்சி ஏற்படும். நிணநீர் முடிச்சுகளில் வீக்கமும், நுரையீரலில் கழலைகளும் உண்டாகும்.

ஆய்வுக்கு அனுப்ப வேண்டிய பொருள்கள்

உயிருள்ள ஆடுகளின் தோல், தோல் சுரண்டல், அம்மைக் கொப்புளம், புண், இரத்தம், அதாவது, இரத்தம் உறையாச் சேர்மத்துடன் அனுப்ப வேண்டும். இறந்த ஆடுகளின் தோல், நுரையீரல், நிணநீர் முடிச்சு ஆகியவற்றை, பனிக்கட்டி மற்றும் 10 சத பார்மலின் கரைசலில் அனுப்ப வேண்டும்.

சிகிச்சை

ஆடுகளுக்குச் சுத்தமான குடிநீர் மற்றும் தீவனத்தைத் தர வேண்டும். வலி நிவாரணி மருந்தைத் தர வேண்டும். எதிர் உயிரி மருந்தைத் தர வேண்டும். அம்மைக் கொப்புளங்களைக் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்து, வேப்பெண்ணெய் மற்றும் மஞ்சளைத் தடவி, ஈக்கள் மொய்க்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நோய்த் தடுப்பு

ஆண்டுக்கு ஒருமுறை தோலுக்கு அடியில் தடுப்பூசியைப் போட வேண்டும். நோயுற்ற ஆடுகளைத் தனிமைப்படுத்த வேண்டும். நோயுள்ள இடங்களில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் வேலையாட்களைக் கட்டுப்படுத்த வேண்டும். பண்ணை முழுவதும் கிருமிநாசினியைத் தெளிக்க வேண்டும்.


கால்நடை நோய்ப் புலனாய்வுப் பிரிவு, கால்நடைப் பராமரிப்புத்துறை, சேலம் மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks