செம்மறியாடு வளர்ப்பு!

செம்மறி Sheep in india

செம்மறிக் கிடாக்கள், பெட்டையாடுகள் மற்றும் ஆட்டுச் சாணத்தை விற்பதன் மூலம் ஆண்டு முழுவதும் தொடர்ந்து வருமானம் கிடைக்கும்.

ஆகவே, பொருளாதார வளத்தைத் தரும் செம்மறியாடுகளில் சரியான இனத்தைத் தேர்ந்தெடுத்து, நோய்த்தடுப்பு முறைகளைக் கையாண்டால் அதிக உடல் எடையுள்ள ஆடுகளைப் பெற்று நல்ல இலாபத்தை அடையலாம்.

இந்தியாவிலுள்ள செம்மறி ஆடுகளில் 7.36% ஆடுகள் தமிழகத்தில் உள்ளன. அதாவது, 4.8 மில்லியன் ஆடுகள், சென்னையைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பரவலாக உள்ளன. செம்மறி வளர்ப்பில் தமிழகம் நான்காம் இடத்தில் உள்ளது.

தமிழகத்திலுள்ள செம்மறியினங்கள்

சென்னைச் சிவப்பு: காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர்.

மேச்சேரி: தருமபுரி, சேலம் ஈரோடு.

கோயம்புத்தூர் ஆடு: கோயம்புத்தூர், திருப்பூர்.

நீலகிரி ஆடு: நீலகிரி.

திருச்சிக் கறுப்பு: தருமபுரி, கிருஷ்ணகிரி.

இராமநாதபுரம் வெள்ளை: இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நெல்லை.

வெம்பூர் ஆடு: தூத்துக்குடி.

கீழக்கரிசல் ஆடு: இராமநாதபுரம், மதுரை.

இவற்றைத் தவிர, மதுரை வாடிப்பட்டிப் பகுதியில் கச்சைக்கட்டி என்னும் இனமும், நெல்லையில் செவ்வாடு என்னும் இனமும் இருக்கின்றன. இதில் திருச்சிக் கறுப்பு, நீலகிரி, கோயமுத்தூர் ஆகிய 3 இனங்கள், பொதுவாக உரோம உற்பத்திக்கு உகந்தவை. மற்றவை இறைச்சிக்கு ஏற்ற இனங்கள்.

அதிக எடையை அடையும் குட்டிகள்

குட்டிகள் இரண்டு மாதம் தாயிடம் பாலைக் குடிக்கும். எனவே, பிறந்து இரண்டு மாதமான, திடமான குட்டிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அவற்றின் பார்வை, நடை, தீனியை உண்ணும் விதம் போன்றவற்றைக் கவனித்து வாங்க வேண்டும்.

செம்மறிகளின் உற்பத்தித் திறன் பெரும்பாலும் இனவிருத்திக் கிடாக்களின் தன்மையைப் பொறுத்தே அமையும். எனவே, இறைச்சிக்குத் தகுந்த இனம் மற்றும் மரபியல் விதிகளை அறிந்து நல்ல உடலமைப்பைக் கொண்ட ஆடுகளை வாங்க வேண்டும்.

பதிவேடுகள் இருப்பின், பிறப்பு எடை, மூன்று மாத, ஆறு மாத, ஓராண்டு எடையைக் கருத்தில் கொண்டு தேர்வு செய்யலாம்.

பெட்டைக் குட்டிகள் வேண்டுமெனில், மூன்று மாத எடை அடிப்படையில், நன்றாக வளர்ந்த, சராசரி எடைக்கும் அதிகமாக உள்ள குட்டிகளை வாங்க வேண்டும்.

இந்தக் குட்டிகளில் 50% குட்டிகளை இனவிருத்திக்கு வைத்துக் கொள்ள வேண்டும். குறைவான வளர்ச்சி மற்றும் குறைந்த எடையுள்ள குட்டிகளைக் கழிப்பதன் மூலம், நல்ல வளர்ச்சித் திறனுள்ள மந்தையை உருவாக்கலாம்.

நல்ல பண்ணைக்கான ஆடுகள்

7 முதல் 12 மாதத்தில் இனவிருத்திக்கு வரும் செம்மறி ஆடுகள், 6 வயது வரை நன்கு ஈனும். எனவே, மிகவும் இளங் குட்டிகளையும் முதிர்ந்த ஆடுகளையும் வாங்கக் கூடாது.

நூறு ஆடுகள் இருக்கும் பண்ணையில், பால் பற்களைக் கொண்ட குட்டிகள் 20, 1.5 வயதுக்கு உட்பட்ட ஆடுகள் 30, 2.5 வயதுக்கு உட்பட்ட ஆடுகள் 20, 3.5 வயதுக்கு உட்பட்ட ஆடுகள் 10, 3.5-4.5 வயதுக்கு உட்பட்ட ஆடுகள் 20 இருந்தால் உற்பத்திச் சீராக இருக்கும்.

வயதுக்கேற்ற உடல் எடை ஆடுகளுக்கு இருத்தல் அவசியம். ஒவ்வொரு இனத்துக்கும் உள்ள சிறப்புகளைப் புரிந்து கொண்டு ஆடுகளை வாங்க வேண்டும்.

அந்த ஆடுகள் நல்ல எடுப்பான நாசி, அகன்ற விலாப்பகுதி, சீரான வயிறு, திடமான கால் மற்றும் சீரான தாடையுடன் இருக்க வேண்டும்.

இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை ஈனும் திறன், நல்ல பால்வளம், குட்டிகளைக் கவனிக்கும் பண்பு மற்றும் நல்ல மேய்ச்சல் தன்மையைப் பெட்டையாடுகள் கொண்டிருக்க வேண்டும்.

மேலும், இவற்றின் தலை குறுகியும், கழுத்து நீண்டு மெலிந்தும், இடுப்புப்பகுதி அகன்றும் இருக்க வேண்டும்.

மடி, பஞ்சைப் போல, நன்கு வளர்ந்து உடலோடு ஒட்டி, இரண்டு நீண்ட காம்புகளுடன் இருக்க வேண்டும். இனவிருத்தி மிகுந்த தாய்க்குப் பிறந்த கிடாக்கள் மற்றும் பெட்டை ஆடுகளை இனவிருத்திக்குப் பயன்படுத்த வேண்டும்.

கிடாக்கள் தேர்வு

உடல் எடையை மற்றும் உயரத்தை வைத்துக் கிடாக்களைத் தேர்வு செய்ய வேண்டும். அவை, சுறுசுறுப்பாக, உயரமாக, மார்பு விரிந்து, அதிக எடையுடன் இருக்க வேண்டும். கிடாக்களில் உரோமம் அடர்த்தியாக வளர்ந்திருக்கக் கூடாது.

இன விருத்திக்குப் பயன்படும் கிடா 1.5-2.5 வயதுக்குள் இருக்க வேண்டும், கிடாக்களுக்கு நன்கு வளர்ந்த இரண்டு விதைகள் விதைப்பையில் இருக்க வேண்டும்.

விதைப்பையின் சுற்றளவு 25 செ.மீ.க்கு அதிகமாக இருக்க வேண்டும். 20 பெட்டை ஆடுகளுக்கு ஒரு கிடா போதுமானது.

ஆண்டுக்கு ஒருமுறை கிடாயை மாற்ற வேண்டும். இதன் மூலம், பண்ணையில் உள் சேர்க்கையைத் தவிர்க்கலாம்.

நூறு ஆடுகளுக்கும் குறைவாக உள்ள பண்ணையில், நெருங்கிய இரத்த உறவுள்ள இனச் சேர்க்கையைத் தவிர்க்க, நல்ல இனவிருத்திப் பண்புள்ள கிடாக்களை வேறு மந்தையிலிருந்து கொண்டு வந்து இனவிருத்திக்கு விடலாம்.

ஒரே ஊரிலுள்ள பண்ணையாளர்கள் ஒன்றாகச் சேர்ந்து, திறந்தநிலை கரு மைய இனப்பெருக்க முறையைச் செயல் படுத்தினால், ஆடுகளின் உடல் எடை 2-3% அதிகரிக்கும்.

இதற்குக் கூட்டுறவு முறையில் சிறந்த கிடாக்கள் மற்றும் பெட்டை ஆடுகளை, பல பண்ணைகளில் இருந்து வாங்கி, மையக் கரு மந்தையை உருவாக்க வேண்டும்.

ஆண்டுதோறும் கரு மையம் மூலம் நல்ல கிடாக்களை உற்பத்தி செய்து, ஆடுகளை வளர்ப்போருக்குக் கொடுக்க வேண்டும்.

அதேசமயம் ஆடு வளர்ப்போர் தங்களின் மந்தையிலுள்ள சிறந்த பெட்டை ஆடுகளைக் கரு மையப் பண்ணையில் சேர்க்க வேண்டும்.

இதனால், மரபுவழி முன்னேற்றம் விரைவாக ஏற்பட்டு, ஒவ்வொரு தலைமுறையிலும் ஆடுகளின் உடல் எடை 2-3% கூடும். இம்முறையைக் கையாளும் பண்ணைகளில் பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டும்.

இனவிருத்தி முறைகள்

தரம் உயர்த்துதல் மற்றும் கலப்பினச் சேர்க்கை மூலம் செம்மறிகளின் உடல் எடையைக் கூட்டலாம்.

எந்த இனத்திலும் சேராத, குறைந்த எடையுள்ள செம்மறி ஆடுகளை, மேச்சேரி, சென்னைச் சிவப்பு, கீழக்கரிசல், வெம்பூர் இனக் கிடாக்களைக் கொண்டு தரம் உயர்த்தலாம்.

அல்லது அந்தந்தப் பகுதிக்கு அருகிலுள்ள இனங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது சிறந்தது.

எடுத்துக்காட்டாக, கர்நாடக மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதியில் ஆடு வளர்ப்போர், அந்த மாநிலத்தைச் சேர்ந்த மாண்டியா இனக் கிடாக்களையும்,

ஆந்திரத்தை ஒட்டியுள்ளோர் நெல்லூர்க் கிடாக்களையும் வாங்கி, மந்தையின் தரத்தை உயர்த்தலாம். இதனால், குட்டிகளின் உடல் எடை அதிகரிக்கும்.

மேலும், அதிக எடையைக் கொண்ட அயலின ஆடுகளான டார்செட் செபோலாக் போன்ற இறைச்சி இனத்துடன் நமது ஆடுகளை இனச் சேர்க்கை செய்து, நமது ஆட்டினக் குட்டிகளின் எடையைக் கூட்டலாம். இதில், அயல்நாட்டு இனத்தின் பாரம்பரியம் 50%க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இரட்டைக்குட்டி ஆடுகள்

இரட்டைக் குட்டிகளைப் போடும் செம்மறிகளைப் பண்ணையில் கூட்ட, இரட்டைக் குட்டிகளைப் போடும் ஆடுகளையும், இரட்டையாகப் பிறந்த பெட்டைக் குட்டிகளையும் அதிகக் காலம் வைத்து வளர்க்க வேண்டும். மேலும், இரட்டையாகப் பிறந்த கிடாக்குட்டியைப் பொதுக் கிடாயாகப் பயன்படுத்தலாம்.

இரட்டைக் குட்டிகளை ஈனுவதற்குக் காரணமான, பெப்பி அல்லது பொருல்லா என்னும் மரபணு, மேற்கு வங்கத்தில் கரோல் எனப்படும் செம்மறி யினத்தில் இருப்பதாக அறியப் பட்டுள்ளது.

இந்த மரபணு, கரு முட்டைகளைக் கூடுதலாக உற்பத்தி செய்யத் தூண்டி, இரட்டைக் குட்டிகளை ஈனும் தன்மையை தாய் ஆடுகளில் அதிகரிக்கச் செய்கிறது. எனவே, நமது ஆடுகளுடன் கரோல் இன ஆடுகளை இனக்கலப்புச் செய்யலாம்.

மேலும், இனச் சேர்க்கைக்கு உட்படுத்தாத கிடாக் குட்டிகளின் ஆண்மையை அகற்றினால், அவற்றின் உடல் எடை விரைவாகக் கூடும்.

தாயிடமிருந்து பிரித்ததும் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி, 2-3.5 மாதத்தில் முதல் குடற்புழு நீக்கத்தையும், பிறகு ஆறு மாதத்தில் உரிய தடுப்பூசியையும்,

தொடர்ந்து சரியான நேரத்தில் அடுத்தடுத்துக் குடற் புழுக்களையும் அகற்றி, முறையாகப் பராமரித்தால், செம்மறி ஆடுகளின் உடல் எடையை அதிகரித்து நிறைய இலாபம் ஈட்டலாம்.


செம்மறி Malarmathy

மருத்துவர் மு,மலர்மதி, உதவிப் பேராசிரியை, கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading