My page - topic 1, topic 2, topic 3

முயல் வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: 2018 அக்டோபர்.

குறைந்த முதலீட்டில், குறைந்த நாட்களில் நிறைந்த இலாபம் தரும் தொழில்களில் முயல் வளர்ப்பும் ஒன்றாகும். முயலின் சினைக் காலம் ஒரே மாதம் தான். ஆனால், பல குட்டிகளை ஈனும். காய்கறிக் கழிவை உணவாகக் கொடுக்கலாம். முயல் வளர்ப்பைத் தொடங்கிய ஆறு மாதத்தில் இருந்தே வருமானத்தை ஈட்டலாம். ஓராண்டில் 4-6 முறை ஈனும். பத்துப் பெண் முயல்களுக்கு ஒரு ஆண் முயல் போதும். குட்டிகள் நான்கு மாதத்தில் இரண்டு கிலோ எடையை அடைந்து விடும்.

முயல் இறைச்சி, குறைவான கொழுப்பு, நிறைந்த புரதம் கொண்டது. குடல் புண்ணையும், மலச்சிக்கலையும் நீக்கும். சோடியம் குறைந்தும், பொட்டாசியம் மிகுந்தும் இருப்பதால், இதய நோயாளிகளுக்கும், முதியோர்க்கும் ஏற்றது.

இனங்கள்

நியூசிலாந்து வெள்ளை முயலின் கண்கள் சிவப்பாக இருக்கும். எடை 3-4 கிலோ இருக்கும். வெள்ளை ஜெயின்ட் முயல் நியூசிலாந்து வெள்ளையைப் போலவே இருக்கும். தோலும் கண்களும் சிவப்பாக இருக்கும். உடல் சற்று நீளமாக இருக்கும். எடை 4.5-5.0 கிலோ இருக்கும்.

சோவியத் சின்சில்லா முயலின் கண்கள் கருஞ் சிவப்பாக, காதுகள் நேராக இருக்கும். எடை 5-6 கிலோ இருக்கும். சாம்பல் நிற ஜெயின்ட் முயல் இறைச்சி மற்றும் உரோமத்துக்காக வளர்க்கப்படுகிறது. எடை 5-6 கிலோ இருக்கும்.

அங்கோரா முயல் சிறிய இனமாகும். உரோமத்துக்காக வளர்க்கப்படுகிறது. எடை 3-4 கிலோ இருக்கும். ஆண்டில் 3-4 முறை உரோமம் எடுக்கப்படும். ஓராண்டில் ஒரு கிலோ எடைக்கு 200 கிராம் உரோமம் கிடைக்கும்.

இனவிருத்தி

நலமான முயல்களில் இருந்து தான் வளமான குட்டிகளைப் பெற முடியும். இனச் சேர்க்கைக்குச் சிறந்த இனத்தில் இருந்து நல்ல குட்டிகளைத் தேர்வு செய்ய வேண்டும். பெண் முயல் 4-6 மாதத்தில் பருவமடையும். ஆண் முயலின் பருவ வயது 6-8 மாதங்கள்.

எட்டு மாத ஆண் முயலை வாரம் இரு முறையும், ஒரு வயதான பிறகு, அன்றாடம் ஒரு முறையும் இனச்சேர்க்கைக்கு விடலாம். அப்போது பெண் முயலை ஆண் முயலின் கூண்டில் விட்டு, 3-4 முறை இனச்சேர்க்கைக்கு உட்படுத்த வேண்டும். 25 நாள் கர்ப்பமுள்ள முயலை, அதற்கான கூண்டில் வைத்து வளர்க்க வேண்டும். இப்படி, இவற்றை மூன்று வயது வரை இனச் சேர்க்கைக்குப் பயன்படுத்தலாம்.

முயல்களில் இனச் சேர்க்கைக்குப் பிறகு கருமுட்டை வெளிவரும். சரியான பருவத்தில் உள்ள பெண் முயல் வாலைத் தூக்கி ஆண் முயலின் இனச் சேர்க்கையை ஏற்கும். அதிகாலை மற்றும் அந்திமாலையில் இனச் சேர்க்கைக்கு உட்படுத்த வேண்டும். இனச்சேர்க்கை நேரத்தைத் தவிர மற்ற நேரத்தில், ஆண் முயலையும், பெண் முயல்களையும், தனித் தனியாக வளர்க்க வேண்டும்.

பெண் முயலின் பருவ அறிகுறிகள்

கூண்டின் மூலையில் வளையைத் தோண்டுவதைப் போல, கால்களால் பறிக்கும். அமைதியின்றி, நடுக்கமாக இருக்கும். பெண்ணுறுப்பு தடித்தும், கருஞ்சிவப்பு நிறத்தில் ஈரமாகவும் இருக்கும்.

சினைக்காலம்

இணை சேர்ந்ததில் இருந்து 28-30 நாட்களில் குட்டிகளை ஈனும். ஈனுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே புற்கள் மற்றும் மரத்தூளால் படுக்கையை அமைக்க வேண்டும். ஈனுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன், தன் உரோமங்களை உதிர்த்துக் குட்டிகளுக்குத் தேவையான படுக்கையை ஏற்படுத்தும்.

இந்த அறிகுறியை வைத்து, ஈனும் நாள் நெருங்கி விட்டதை அறியலாம். 7-30 நிமிடத்தில் ஈனுதல் முடிந்து விடும். ஒரு ஈற்றில் 6-12 குட்டிகளை ஈனும். 6-8 காம்புகள் இருக்கும். சினை முயலுடன் ஆண் முயலைச் சேர்க்கக் கூடாது.

குட்டிகள் பராமரிப்பு

பிறந்த குட்டிகள் 10-12 நாட்களில் கண்களைத் திறக்கும். இவற்றால் கடும் குளிரைத் தாங்க முடியாது. அப்போது அவற்றுக்குத் தேவையான வெப்பத்தைக் கொடுக்க வேண்டும். முதல் 21 நாட்களுக்கு மட்டுமே தாய்ப்பால் அவசியம். மூன்றாம் வாரத்தில் இருந்தே மற்ற உணவை உண்ணத் தொடங்கும். 4-6 ஆம் வாரத்தில் தாயிடமிருந்து குட்டிகளைப் பிரித்து விடலாம்.

தீவன மேலாண்மை

ஒரு கிலோ எடையுள்ள முயலுக்கு 50 கிராம் அடர் தீவனம், 100 கிராம் பசும்புல் தேவை. வளர்ந்த முயலுக்கு 140 கிராம் அடர் தீவனம், 200-250 கிராம் பசும்புல் தேவை. 6-12 வார முயலுக்கு 60 கிராம் அடர் தீவனம், 100 கிராம் பசும்புல் தேவை. 13-24 வார முயலுக்கு 90 கிராம் அடர் தீவனம், 100-150 கிராம் பசும்புல் தேவை.

இனப்பெருக்க முயலுக்கு 250 கிராம் அடர் தீவனம், 300-400 கிராம் பசும்புல் தேவை. கீரைகள், காய்கறிகள் மற்றும் பழ வகைகளை, தேவையான அளவில் கொடுக்கலாம். அடர் தீவனத்தை இரண்டு முறையாகப் பிரித்து அளிக்கலாம். எந்த நேரமும் சுத்தமான நீர் இருக்க வேண்டும். அன்றாடம் ஒரு முயலுக்கு 250-300 மில்லி குடிநீர் தேவைப்படும்.

முயல்களுக்கான அடர் தீவனக் கலவை

இளம் முயல்: மக்காச்சோளம் 15 கிலோ, இராகி/ சோளம்/ கம்பு 15 கிலோ, நெல், கோதுமைத் தவிடு 33.5 கிலோ, கடலைப் புண்ணாக்கு 8 கிலோ, சூரியகாந்தி புண்ணாக்கு 7 கிலோ, வேலிமசால் 20 கிலோ, தாதுப்புக் கலவை 1 கிலோ, உப்பு 0.5 கிலோ.

வளர்ந்த முயல்: மக்காச்சோளம் 15 கிலோ, இராகி/ சோளம்/ கம்பு 15 கிலோ, நெல், கோதுமைத் தவிடு 38.5 கிலோ, கடலைப் புண்ணாக்கு 6 கிலோ, சூரியகாந்தி புண்ணாக்கு 8 கிலோ, வேலிமசால் 16 கிலோ, தாதுப்புக் கலவை 1 கிலோ, உப்பு 0.5 கிலோ.

பாலூட்டும் முயல்: மக்காச்சோளம் 20 கிலோ, இராகி/ சோளம்/ கம்பு 15 கிலோ, நெல், கோதுமைத் தவிடு 24.5 கிலோ, கடலைப் புண்ணாக்கு 8 கிலோ, சோயாப் புண்ணாக்கு 10 கிலோ, வேலிமசால் 20 கிலோ, தாதுப்புக் கலவை 1 கிலோ, உப்பு 0.5 கிலோ.

கொட்டகை மேலாண்மை

மலை சார்ந்த பகுதி, முயல் வளர்ப்புக்கு ஏற்றது. வெப்பம் குறைந்த பகுதியில் முயல்கள் நன்றாக வளரும். கொட்டகை காற்றோட்டமாக இருக்க வேண்டும். முயல்களுக்கு வளையைத் தோண்டும் பழக்கம் உள்ளதால் கூண்டில் வளர்ப்பதே சிறந்தது. ஒரு முயலுக்கு 2 அடி நீளம், 1.5 அடி அகலம், 1.5 அடி உயரமுள்ள கூண்டு தேவை.

இனப்பெருக்க முயலுக்கு 2 அடி நீளம், 2 அடி அகலம், 1.5 அடி உயரமுள்ள கூண்டு தேவை. மூன்று முயல் குட்டிகளுக்கான கூண்டு, 3 அடி நீளம், 1.5 அடி அகலம், 1.5 அடி உயரம் இருக்க வேண்டும்.

முக்கிய நோய்கள்

பாசுரெல்லா என்னும் மூச்சுத் திணறல், இரத்தக் கழிச்சல், தோல் சொறி, காது குறும்பை ஆகிய நோய்கள் முயல்களைத் தாக்கும். இவற்றைத் தகுந்த சிகிச்சை மற்றும் மேலாண்மை மூலம் தடுக்கலாம்.


இரா.இளவரசி, த.பாலசுப்ரமணியம், கு.மஞ்சு, கரு.பசுபதி, ஹ.கோபி, பன்றி இனவிருத்திப் பிரிவு, கால்நடை முதுகலை அறிவியல் ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் – 603 203.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks