என் பேரு இராமர். இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்துல இருக்கும் கோரைப்பள்ளம் தான் எங்க ஊரு. பாரம்பரியமான விவசாயக் குடும்பம். எனக்குப் பதினஞ்சு ஏக்கரா நெலமிருக்கு. நல்ல செவல் மண் நெலம். எல்லாமே பாசன நெலம் தான். இதுல நெல்லு, வாழை, மிளகாய், தக்காளி, வெண்டை, கத்தரின்னு பல பயிர்கள சாகுபடி செஞ்சுக்கிட்டு வர்றேன் என்றவரிடம், உங்க மிளகாய் சாகுபடி அனுபவத்தைச் சொல்லுங்கள் என்றோம். அப்போது அவர் கூறியதாவது:
“வீட்டுப் பாட்டுக்காக ஒரு ரெண்டு ஏக்கராவுல நெல்லு நடுவோம். மத்த நெலம் முழுசும் வாழை, தக்காளி, மிளகாய், வெண்டை, கத்தரி, வெங்காயம்ன்னு, காய்கறிப் பயிர்கள தான் சாகுபடி செய்வோம். இந்தக் காய்கறிப் பயிர்கள வாழையில ஊடுபயிராவும் செய்வோம், தனிப் பயிராவும் செய்வோம். இப்போ அஞ்சு ஏக்கரா வாழையில ஊடுபயிரா மிளகாய் சாகுபடி இருக்கு.
கோவில்பட்டி இலட்சுமின்னு சொல்லுவாக. இந்த இரகத்த தான் வாழையில ஊடுபயிரா சாகுபடி செஞ்சிருக்கோம். இது சம்பா இரகம். அதாவது, வத்தல் நீளமா இருக்கும். இதுக்கு முதல்ல நாத்தங்கால் போட்டு நாத்துகள வளர்க்கணும். ஏக்கராவுக்கு ஒரு கிலோ விதை தேவைப்படும். நாத்தங்கால் போடப்போற எடத்துல தண்ணிய பாய்ச்சி நெலத்தை நல்லா ஆறப் போடுவோம். பிறகு, கட்டியில்லாம நல்லா நொறுங்க மண்ணைக் கொத்தி, புழுதியா ஆக்கி மேட்டுப்பாத்தி அமைச்சு அதுல விதைகள விதைப்போம்.
அந்த விதைக மேல மக்குன எருவைத் தூவி விதைகள மூடி விட்டு, அதுக்கு மேல கம்மந்தட்டைய மூடாக்கா போட்டு, தண்ணி தெளிப்போம். இந்த மூடாக்கு மண்ணுல ஈரப்பதத்த காத்துக் குடுத்து, விதைக நல்லா முளைக்கிறதுக்கு உதவும். இந்த நாத்துக நாற்பது அம்பது நாள் வளர்ந்ததும் பிடுங்கி நடுவோம்.
நம்ம நெலம் முழுசும் இயற்கை விவசாயம் தான். அதனால நெலத்துக்கு அடியுரமா தொழுவுரத்த தான் போடுவோம். அதோட ஆட்டுக்கிடையை அமத்தி நெலத்துக்கு ஊட்டம் குடுப்போம். செயற்கை இரசாயன உரமோ, பூச்சிக்கொல்லி மருந்தோ பயன்படுத்தவே மாட்டோம். ரெண்டரைக்கு ரெண்டடி இடைவெளியில நாத்துகள நட்டு நடவுத் தண்ணியும், உயிர்த் தண்ணியும் குடுப்போம்.
அப்புறம் ஒரு ரெண்டு மாசத்துக்குத் தண்ணியே குடுக்காம நெலத்த நல்லா சுண்ட விடுவோம். ஐப்பசி மாத நடவுங்கிறதுனால மழையும், பனி ஈரமும் இருக்கும். இதுலயே நாத்துக நல்லா தெரண்டு செடிகளா வளர்ந்துரும். தை மாசம் பொறந்ததும் பாசனம் குடுப்போம். அந்த நேரத்துல கடலைப் புண்ணாக்க வாங்கிட்டு வந்து மூட்டையோட மோட்டாரு தண்ணி ஊத்துற தொட்டியில ஊற வச்சிருவோம். அது நல்லா ஊறுனதும் மோட்டார போட்டு விட்டுருவோம்.
அப்போ அந்தத் தண்ணி வழியா இந்தப் புண்ணாக்கு கரஞ்சு போயி, நெலம் முழுசும் பரவி, செடிகளுக்கு உரமா கிடைக்கும். இது தான் மிளகா செடிகளுக்கு நாங்க குடுக்குற மேலுரம். ஒன்னு ரெண்டு மாசம் கழிச்சு மறுபடியும் இதே புண்ணாக்க மேலுரமா குடுப்போம். மண்ணுல உர மப்பு இருக்குறதுனால செடிக கலகலன்னு வளரும்.
பூ எறங்கி பிஞ்சு விடுற காலத்துல ஒரு தடவை பஞ்சகவ்யாவ தெளிப்போம். இது, பயிர் வளர்ச்சி ஊக்கியாவும், பூச்சி விரட்டியாவும் இருந்து பயிர்கள நல்லா வளர்க்கும். இதையும் மீறி அசுவினி, வெள்ளை ஈ மாதிரியான சாறு உறிஞ்சும் பூச்சிக தாக்குனா இலைக சுருண்டு சுருண்டு நிக்கும். இதைத் தடுக்குறதுக்கு, பரவலா மஞ்சள் ஒட்டும் பொறிய வச்சு விட்டுருவோம்.
நட்டு மூனு மாசத்துல செடிக காய்க்க ஆரம்பிச்சிரும். அப்புறம் அதுக பழமா மாற மாற, பறிச்சு பறிச்சுக் காய வச்சு சேமிச்சு வைப்போம். ஐப்பசியில நட்டா வைகாசியில தான் அழியும். அது வரைக்கும் காய்ப்பு இருந்துக்கிட்டே இருக்கும். ஏக்கருக்குக் குறஞ்சது பதினஞ்சு குவிண்டால் வத்தல் கிடைக்கும். குவிண்டால் 20 ஆயிரம்ன்னு வச்சாலும் ஒரு மூனு இலட்ச ரூபா வருமானமா கிடைக்கும்.
இதுல ஒரு எண்பதாயிரம் ரூவா மிளகா சாகுபடி செலவுக் கணக்குல போயிரும். மிச்சமா இருக்குற ரூவா, நம்ம உழைப்புக்குக் கெடச்ச கூலி. இதுதான் நமக்கான இலாபம். இந்தப் பணம் வாழை சாகுபடி செலவுக்கு, குடும்பச் செலவுக்குக் கை குடுத்துரும். ஊடுபயிர் மிளகா, குடும்பச் செலவு, சாகுபடிச் செலவு, சமுதாயத்துல நடக்குற நல்ல செலவு, கெட்ட செலவுன்னு எல்லாத்தையும் தாங்கிரும்.
அதனால முக்கியப் பயிரா இருக்குற வாழையில வரக்கூடிய வருமானம் முழுசும் நமக்கு இலாபமா நிக்கும். ஒரு வாழைத்தாரு முந்நூறு ரூவான்னா, அஞ்சு ஏக்கராவுல விளையிற ஐயாயிரம் வாழைத்தாருக மூலம் பதினஞ்சு இலட்சம் ரூபாயும் நமக்கு இலாபம் தான்.
இந்த மிளகா வத்தல முன்னால சாத்தூர், விருதுநகர் சந்தையில தான் வித்துக்கிட்டு இருந்தோம். ஆனா, நானு இயற்கை விவசாயத்துக்கு மாறி, இயற்கை விவசாயி சர்ட்டிபிகேட் வாங்கிட்ட பிறகு, கடந்த எட்டு வருசமா, அமெரிக்காவுக்கும் இலண்டனுக்கும் ஏற்றுமதி செய்யிறோம். இதனால, எங்க வத்தலுக்கு நல்ல விலை கிடைக்குது.
எங்க மிளகா வத்தல மட்டுமில்லாம, ஒரு 100-150 விவசாயிகள, இயற்கை விவசாயிகளா மாத்தி, நம்மூரு சந்தையை விட குவிண்டாலுக்கு ரெண்டாயிரம் ரூபா கூடுதலா குடுத்து, அவங்க மிளகா வத்தலயும் என் பொறுப்புல வாங்கி, எங்க வத்தலோட சேர்த்து ஏற்றுமதி செய்யிறோம்’’ என்று சிரித்துக்கொண்டே கூறினார்.
ஊடுபயிர் வருமானம் எல்லாச் செலவுகளையும் சரிக்கட்டுகிறது. முக்கியப் பயிர் வருமானம் சேமிப்பாக நிற்கிறது. இயற்கை விவசாயத்தால் உற்பத்திச் செலவு குறைந்து தரமான விளைபொருள் கிடைக்கிறது. அதை ஏற்றுமதி செய்வதால் நல்ல விலை கிடைக்கிறது. மற்ற விவசாயிகளையும் இணைத்துச் செயல்படுவதால், மேலும் வருமானம் கூடுகிறது.
இப்படி, ஒரு கல்லை வைத்துப் பல மாங்காய்களை அடிக்கும் கோரைப்பள்ளம் இராமரின் சிந்தனை, இடையறா உழைப்பைப் பாராட்டி விடை பெற்றோம்.
பசுமை
சந்தேகமா? கேளுங்கள்!