My page - topic 1, topic 2, topic 3

பரண் மேல் வெள்ளாடு வளர்ப்பு!

மது நாட்டில் பண்ணையாளர்கள் வெள்ளாடுகளை பெரும்பாலும் பாரம்பரிய முறையில் வளர்த்து வருகின்றனர். வெள்ளாடுகளை விவசாய நிலங்களில் பட்டியிட்டு அல்லது மர நிழலில் அல்லது வீட்டை ஒட்டிய சிறு தடுப்புகளில் வைத்துப் பராமரித்து வருகின்றனர்.

தற்போது மேய்ச்சல் நிலம் குறைந்து வருகிறது. மேலும், வனப்பகுதியில் ஆடுகளை மேய்ப்பதற்கு அனுமதி கிடைக்காமல் இருப்பது போன்ற சூழ்நிலையில் வெள்ளாடுகளை, கொட்டகை அமைத்துப் பரண் மேல் வளர்ப்பதே சிறந்தது. இம்முறையில் ஆடுகளை வளர்ப்பதால், கனமழை, அதிக வெய்யில், குளிர்க்காற்று, பனி, கொடிய விலங்குகள் மற்றும் திருட்டு ஆகியவற்றில் இருந்து வெள்ளாடுகளைப் பாதுகாக்க முடியும்.

வெள்ளாட்டுக் கொட்டகை அமைத்தல்

மேட்டுப்பாங்கான, சுத்தமான, காற்றோட்டமான மற்றும் வெளிச்சமான இடத்தில் கொட்டகையை அமைக்க வேண்டும். கொட்டகைக் கூரையைப் பனை அல்லது தென்னை ஓலை அல்லது அஸ்பெஸ்டாஸ் மூலம் அமைக்கலாம். கொட்டகையின் நீளப்பகுதி கிழக்கு, மேற்காகவும், அகலப்பகுதி வடக்கு, தெற்காகவும் இருக்க வேண்டும்.

பரண் மேல் வெள்ளாடு வளர்ப்பு

போதிய இடவசதி இல்லாதவர்கள் கூட, சிறிய இடத்தில் ஆடுகளை வளர்க்கும் வகையில், பரண் மேல் ஆடு வளர்ப்பு முறை இப்போது பிரபலமாக உள்ளது. வெள்ளாடுகளைத் தரையில் வளர்க்காமல், தரையிலிருந்து நான்கடி உயரத்தில் கிடை மட்டமாக 2×1.5 அங்குல அளவுள்ள மரச்சட்டங்களை, ஒரு விரல் இடைவெளியில் வரிசையாக அடுக்கி அமைப்பது தான் பரண் அமைப்பு ஆகும்.

கொட்டகை அமைப்பு

கொட்டகையின் கூரையை அஸ்பெஸ்டாஸ் மூலம் அமைத்தால், கூரையின் உயரம் 10-12 அடி இருக்க வேண்டும். பிற பொருள்களைக் கொண்டு அமைத்தால், 8-10 அடி உயரத்தில் அமைக்க வேண்டும். கொட்டகையைச் சுற்றி ஓரடி உயரத்தில் சுவர் அமைத்து, அதன் மீது 5 அடி உயரத்தில் கம்பி வலை அல்லது மூங்கில் தட்டிகள் அல்லது மரச்சட்டத் தட்டிகளை அமைக்கலாம். நன்கு வளர்ந்த ஒரு வெள்ளாட்டுக்கு 12-15 சதுரடி இடவசதி தேவை. எனவே, 50 ஆடுகளுக்குக் கொட்டகை அமைப்பதாக இருந்தால் 600 சதுரடி இடவசதி அவசியம்.

ஆடுகளை இரவில் கொட்டகையில் அடைத்து, பகலில் மேய்ச்சலுக்கு அனுப்புவதாக இருந்தால், இந்த 600 சதுரடி இடவசதி போதுமானது. ஆனால், ஆடுகளை நாள் முழுவதும் கொட்டகையில் வைத்து வளர்க்கும் கொட்டில் முறையாக இருந்தால், அதே அளவு இடவசதி, கொட்டகையை ஒட்டிய திறந்த வெளியில் இருக்க வேண்டும். இது, ஆடுகள் சுதந்திரமாக நடமாடவும், கொட்டகையில் சாணம் மற்றும் சிறுநீர் அதிகமாகச் சேராமலிருக்கவும் தேவை.

கொட்டகையின் நீளத்தை, ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகரித்துக் கொள்ளலாம். ஒரு கொட்டகையில் அதிகபட்சம் நூறு ஆடுகளை அடைக்கலாம். மேலும், இதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் மரமும் முக்கியம். நூறு ஆடுகளை வளர்க்க 50 அடி நீளம், 45 அடி அகலமுள்ள கொட்டகை அவசியமாகும். இந்தக் கொட்டகையில் ஆடுகள் ஈனும் இளங்குட்டிகளை அடைத்து வைப்பதற்கு எனத் தனிப்பகுதி இருக்க வேண்டும்.

மூன்று மாதங்கள் வரை, குட்டிகள் தாய்ப்பால் குடிப்பதால், அவை தாயின் பார்வைக்கு அப்பால் இருக்க வேண்டும். இதற்குக் கொட்டில் முழுவதும் அடைத்திருத்தல் வேண்டும். அதிலும், குட்டிகள் மற்றும் கிடாக்களுக்குத் தனித்தனியே தடுப்பு இருப்பது சிறந்தது.

கொட்டகையின் அகலம் நம் நாட்டுத் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, 20 அடிக்குக் குறைவாக இருப்பதே நல்லது. அதற்கு மேல் அதிகமானால், காற்றோட்டம் பாதிக்கப்பட்டு, கொட்டகையில் அம்மோனியா வாயுவின் தாக்கம் காணப்படும். இதைப் போலவே கொட்டகையின் உயரமும் முக்கியமானது. கொட்டகைக் கூரையை அஸ்பெஸ்டாஸ், மங்களூர் ஓடு அல்லது கீற்றுகளைக் கொண்டு அமைக்கலாம்.

கீற்றுக் கொட்டகை அமைத்தல் செலவைக் குறைத்தாலும் தீப்பிடிக்கும் ஆபத்து உண்டு. மேலும், பூச்சிகளின் தொல்லை, அடிக்கடி மாற்ற வேண்டிய சிரமம் போன்ற சில பாதகமான விளைவுகளைத் தரும். அஸ்பெஸ்டாஸ் கூரை அமைப்பது கொஞ்சம் செலவு அதிகமானாலும் நிலையானது. துத்தநாகத் தகடு என்னும் தகரம் கொண்டும் கூரையை அமைக்கலாம்.

இடவசதி

குட்டிகளுக்கு 4 சதுரடி, பெட்டை ஆடுகளுக்கு 10-15 சதுரடி மற்றும் கிடாக்களுக்கு 15-20 சதுரடி இடவசதி கொடுக்க வேண்டும். அதிகளவில் ஆடுகளை ஒரே கொட்டகையில் அடைத்தால் ஒன்றோடொன்று சண்டையிட்டு, காயங்களையும், கருச்சிதைவையும் உண்டாக்கும். மேலும், நோய்த்தாக்கமும் அதிகமாகும். கொட்டகையில் கிடாக்கள், சினை ஆடுகள், குட்டிகள், தாய் ஆடுகளைத் தனித் தனியாகப் பிரித்து அடைக்க வேண்டும். எனவே, கொட்டகையில் கம்பி வலை அல்லது மூங்கில் தட்டிகள் மூலம் சிறு சிறு அறைகளாகப் பிரித்து அவற்றில் ஆடுகளை வைத்து வளர்த்தல் நல்லது.

பரண் மேல் ஆடு வளர்ப்பு

இம்முறையில் ஆடுகளை வளர்க்க, அதிக முதலீடு தேவைப்படும். இம்முறையில், தரையிலிருந்து நான்கடி உயரத்தில் மரப்பலகைகளைக் கொண்டு தரையை அமைத்து ஆடுகளை வளர்க்கலாம். இம்முறையில் குறைவான ஆட்களே போதுமெனினும், பசுந்தீவன உற்பத்திக்குப் பாசன நிலம் அதிகமாகத் தேவைப்படும். இம்முறையில், ஆடுகளின் சாணமும் சிறுநீரும் தரையில் விழுந்து விடுவதால், கொட்டகை சுத்தமாக இருக்கும். ஆடுகளின் கழிவை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அகற்றிச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பரண் மேல் ஆடு வளர்ப்பில், குட்டிகள் மண்ணை நக்குவது தவிர்க்கப்படுவதால், கழிச்சலால் ஏற்படும் இறப்பைத் தடுக்கலாம். மரப்பலகையின் அகலம் 7.5-10 செ.மீ. இருக்க வேண்டும். பலகையின் கனம் 2.5-4 செ.மீ. இருக்க வேண்டும். பலகைகளுக்கு இடையிலான இடைவெளி 1-1.5 செ.மீ. இருந்தால், ஆடுகளின் கால்கள் பலகைகளுக்கு இடையில் சிக்காமல் இருக்கும். சாணமும் எளிதில் கீழே விழுந்து விடும்.

குடிநீர்த்தொட்டி மற்றும் தீவனத் தொட்டியின் அமைப்பு

ஆடுகள் நீரைப் பருகுவதற்கு வட்டமான அல்லது நீள் செவ்வக வடிவிலான சிமெண்ட் தொட்டிகள் இருப்பது சிறந்தது. இவற்றைத் தினமும் சுத்தம் செய்ய வேண்டும். வாரம் ஒருமுறை உள்பக்கம் சுண்ணாம்பை அடிக்க வேண்டும். இருபது ஆடுகளுக்கு ஒரு தொட்டி வீதம் தேவைப்படும். தீவனத் தொட்டிகளை, இரும்புத்தகடு அல்லது மரத்தினால் அரை வட்ட வடிவில் அமைக்க வேண்டும்.

இதன் நீளம் 5-6 அடி இருக்கலாம். 10-12 ஆடுகளுக்கு ஒரு தீவனத் தொட்டி தேவை. தீவனத் தொட்டியை ஆடுகள் அசுத்தம் செய்வதைத் தடுக்க, தலையை மட்டும் நுழைக்கும் அளவில் கம்பித் தடுப்புகளை அமைக்கலாம். இவற்றை, அடர் தீவனம் மற்றும் நறுக்கிய பசுந்தீவனத்தை அளிப்பதற்குப் பயன்படுத்தலாம்.

தீவனப் பராமரிப்பு

பரண் மேல் வெள்ளாடு வளர்ப்பு வெற்றிகரமாக இருக்க, பசுந்தீவனம் மிக முக்கியம். தீவனப் பற்றாக்குறை இருந்தால், வெள்ளாடு வளர்ப்பைச் சிறந்த முறையில் செய்ய இயலாது. எனவே, நூறு ஆடுகளை இந்த முறையில் வளர்க்க, குறைந்தது நான்கு ஏக்கர் நிலத்தைப் பசுந்தீவன உற்பத்திக்கு ஒதுக்க வேண்டும். வாரம் இரண்டு முறை பாசனம் பெறும் விவசாய நிலமாக இருக்க வேண்டும். தென்னையில் ஊடுபயிராக பசுந்தீவனம் வளர்க்க, அதன் இடைவெளிக்கு ஏற்ப 6-8 ஏக்கர் நிலம் அவசியம்.

பசுந்தீவன வகைகள்

கோ-3, கோ-4, வேலிமசால், குதிரை மசால், தீவனச் சோளப்புல், அகத்தி, சித்தகத்தி, சவுண்டல் இரகங்களை வளர்க்கலாம். இவற்றைத் தலா 50 சென்ட் நிலத்தில் பயிரிடலாம். பண்ணையைத் தொடங்குமுன் பசுந்தீவனங்களைப் பயிரிட்டு விட வேண்டும். ஏனெனில், முதல் அறுவடைக்குக் குறைந்தது 60-70 நாட்களும், அதிகபட்சம் 80-90 நாட்களும் தேவைப்படும். இந்த இடைவெளியில் கொட்டகையை அமைக்க வேண்டும். இதற்குப் பின்பே ஆடுகளை வாங்கி வர வேண்டும்.

அடர் தீவனம்

வெள்ளாடுகளின் வயதுக்கு ஏற்ப, தினமும் அடர்தீவனம் அளிக்க வேண்டும். 3 முதல் 6 ஆறு மாத வயதுள்ள குட்டிகளுக்கு 25-35 கிராம் தீவனமும், 7 மாதம் முதல் 12 மாத வயதுள்ள குட்டிகளுக்கு 50-100 கிராம் தீவனமும், சினைப் பருவத்தில் 175 கிராம் தீவனமும், ஈன்ற ஆடுகளுக்கு 200-250 கிராம் தீவனமும், கிடாக்களுக்கு 300 கிராம் தீவனமும் அளிக்க வேண்டும்.

நூறு கிலோ அடர் தீவனக் கலவையில், மக்காச்சோளம் மற்றும் கம்பு 35 முதல் 40 கிலோ, இராகி மற்றும் இதர தானியங்கள் 10 கிலோ, கடலைப் புண்ணாக்கு 20 கிலோ, கோதுமைத் தவிடு மற்றும் அரிசித் தவிடு 10 கிலோ, துவரம் பொட்டு மற்றும் பாசிப் பொட்டு 17 கிலோ, தாதுப்பு 2 கிலோ, சாதாரண உப்பு 1 கிலோ வீதம் சேர்க்க வேண்டும்.

நோய்த் தடுப்பு

கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி, ஆடுகளுக்கு ஆண்டுக்கு நான்கு முறை தடுப்பூசிகளை அளிக்க வேண்டும். குறிப்பாக, மார்ச் ஏப்ரலில் கால், வாய் நோய்க்கான தடுப்பூசி, ஜுன் மற்றும் ஜுலையில் பி.பி.ஆர் தடுப்பூசி, ஆகஸ்ட் மாதத்தில் கால், வாய் நோய்த் தடுப்பூசி, அக்டோபர் மாதத்தில் துள்ளுமாரி தடுப்பூசி ஆகியவற்றைப் போட வேண்டும். குடற்புழு மருந்துகளை, குட்டி பிறந்த 30 ஆம் நாள் மற்றும் 2, 3, 4, 6, 9 ஆகிய மாதங்களில் போட வேண்டும்.

கொட்டில் முறை வெள்ளாடு வளர்ப்பின் பயன்கள்

வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வதால் அவற்றின் சக்தி வீணாவதுடன், உடல் எடையும் குறையும். ஆடுகளுக்குத் தேவையான பசுந்தீவனங்களை உற்பத்தி செய்து கொட்டகையிலேயே ஆடுகளை வளர்க்கும் போது, அவற்றின் உடல் எடை வெகு விரைவில் கூடுவதால், அதிக இலாபத்தில் ஆடுகளை விற்கலாம். ஆடுகளை, 12 மாதங்கள் வரை காத்திருக்காமல் 6-8 மாதங்களிலேயே விற்பனை செய்யலாம். அதிக எடையுள்ள குட்டிகளைப் பெறலாம்.

நோய்ப் பாதிப்பு அதிகம் இருக்காது. குட்டிகளின் இறப்பைக் குறைக்கலாம். பராமரிப்பது எளிது. அறிவியல் முறையில் பராமரிக்கவும், தீவனம் அளிக்கவும், நோய்த் தடுப்பு முறைகளை மேற்கொள்ளவும் முடியும். குறைந்த இடத்தில் அதிகளவில் ஆடுகளை வளர்க்க முடியும். எருவைச் சேமித்து நிலத்துக்கு உரமாக இடலாம். நூறு ஆடுகளை வளர்த்தால், ஒவ்வொரு ஆடு மூலமும் ஆண்டுக்கு 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு.


முனைவர் க.பிரேமவல்லி, பேராசிரியர் மற்றும் தலைவர், உழவர் பயிற்சி மையம், ஏனாத்தூர், காஞ்சிபுரம் – 631 561.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks