வெள்ளாடு வளர்ப்புக்கான சிறந்த உத்திகள்!

வெள்ளாடு vellaadu valarpu

ருபதாவது கால்நடைக் கணக்கின்படி, இந்தியாவிலுள்ள வெள்ளாடுகளின் எண்ணிக்கை 148.88 மில்லியன் ஆகும். இது, 19 ஆம் கால்நடைக் கணக்கெடுப்பைக் காட்டிலும் 10.14 சதம் உயர்வாகும். தமிழ்நாட்டில் உள்ள வெள்ளாடுகளின் எண்ணிக்கை 9.89 மில்லியன் ஆகும். இது, 19 ஆம் கால்நடைக் கணக்கெடுப்பைக் காட்டிலும் 18.10 சதம் உயர்வாகும்.

மேலும், இதுவரை 37 வெள்ளாட்டு இனங்கள் தேசிய மரபியல் வள முகமையால் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் மூன்று இனங்கள் தமிழ்நாட்டைச் சார்ந்தவை. அவையாவன: கன்னியாடு, கொடியாடு, சேலம் கறுப்பாடு.

தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் வெள்ளாடு வளர்ப்பு என்பது, நிலமற்ற மற்றும் குறுநில ஏழை விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரத் தொழிலாக விளங்குகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, பல்வேறு வகையான தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அவற்றின் பொருளாதாரப் பண்புகளை மேன்மையடையச் செய்யலாம்.

அவற்றில் முக்கியமானவை, தரமான இனப்பெருக்கக் கிடாக்களைத் தேர்வு செய்தல் மற்றும் இனப்பெருக்கம், தீவனம், நோய்த்தடுப்பு ஆகிய மேலாண்மை முறைகளாகும். இத்தகைய முறைகள், எளிய விவசாயிகளும் அறியும் வகையில் இங்கே விளக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் உள்ள முக்கிய வெள்ளாட்டு இனங்கள்

தமிழ்நாடு: கன்னியாடு, கொடியாடு, சேலம் கறுப்பாடு.

குஜராத்: கோகில்வாடி, மேசானா, கட்சி, சுருதி, ஜாலாவாடி.

மராட்டியம்: ஓஸ்மனாபாடி, சங்கமேனேரி, பெராரி.

இராஜஸ்தான்: சிரோகி, மார்வாரி, ஜக்ரானா.

உத்திரப்பிரதேசம்: ஜமுனாபாரி, பார்பாரி.

கேரளம்: மலபாரி, அட்டபாடி கறுப்பு.

இமாச்சலம்: காடி.

ஜம்மு காஷ்மீர்: செந்தாங்கி, செகு.

பஞ்சாப்: பீட்டல்.

ஒடிசா: கஞ்சம்.

மேற்கு வங்கம்: பெங்கால் கறுப்பு.

அந்தமான் நிக்கோபார் தீவுகள்: டெராசா.

உத்ரகாண்ட்: பண்ட்ஜா.

நாகாலாந்து: சுமிநீ.

கோவா: கொன்கன் கனியால்.

கிடாக்கள் தேர்வு

வரையறுக்கப்பட்ட வெள்ளாட்டு இனங்களின் குணங்களைக் கொண்ட கிடாக்களைத் தேர்வு செய்ய வேண்டும். கிடாக்கள் நல்ல உடல் அமைப்பும் வலுவும் பெற்றிருக்க வேண்டும். இனப்பெருக்க உறுப்புகள் சரியான அமைப்பில், நல்ல இனப்பெருக்கத் திறனுடன் இருக்க வேண்டும்.

கிடாக்களின் தாய் ஆடுகள் அதிக பால் உற்பத்தி உள்ளவையாக இருக்க வேண்டும். மேலும், தாய் ஆடு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிடாக்களில் எந்த ஒரு மரபியல் கோளாறும் இருக்கக் கூடாது. அறுபது நாட்கள் மற்றும் ஆறு மாதங்களில் அதிக உடல் எடையை எட்டும் கிடாக்களை இனப்பெருக்கத்தில் பயன்படுத்தலாம்.

இரட்டைக் குட்டிகளில் இருக்கும் கிடாக்குட்டிகளை வளர்த்து இனப்பெருக்கத்தில் பயன்படுத்துவதன் மூலம், இரட்டைக் குட்டிகளை ஈனும் மரபியல் பண்புகளை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லலாம்.

பெட்டை ஆடுகள் தேர்வு

ஓராண்டு வயதுள்ள பெட்டை ஆடுகளை இனப்பெருக்கத்தில் பயன்படுத்தலாம். வரையறுக்கப்பட்ட இனங்களின் குணங்களைக் கொண்ட ஆடுகளைத் தேர்வு செய்ய வேண்டும். பக்கவாட்டில் பார்த்தால், உடல், நீள முக்கோண வடிவமாக, கால்கள் வளையாமல் நேராக, தோள் கூர்மையாக இருக்க வேண்டும்.

சாதுவாக, உடல் வளர் தோற்றத்தில், மடியானது சதைப் பற்றின்றி மென்மையாக, நன்கு வளைந்து கொடுக்கும் தன்மையில் இருக்க வேண்டும். இளம் பெட்டை ஆடுகள் அல்லது ஓராண்டு நிறைவுறாத பெட்டை ஆடுகளை இனப்பெருக்கத்தில் உட்படுத்தினால், பிறக்கும் குட்டிகளில் இறப்பு ஏற்படும். குறைவான பால் உற்பத்தி மற்றும் மரபியல் கோளாறுகள் உள்ள பெட்டை ஆடுகளை மந்தையிலிருந்து வெளியேற்ற வேண்டும்.

இனப்பெருக்க மேலாண்மை

ஆட்டு மந்தைகளில் 2-3 ஆண்டுக்கு ஒருமுறை கிடாவை மாற்ற வேண்டும். அதே பண்ணையில் பிறந்த கிடாவை இனப்பெருக்கத்தில் பயன்படுத்தாமல், மற்ற பண்ணைகளில் இருந்து கிடாவை வாங்கி இனப்பெருக்கத்தில் ஈடுபடுத்தினால் அதிக உற்பத்தியைப் பெறலாம்.

பெட்டை ஆடுகளை ஏப்ரல் – மே மற்றும் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் இனச்சேர்க்கை செய்தல் நல்லது. இனச்சேர்க்கைக் காலத்தில் பெட்டை ஆடுகளுக்குத் தினமும் 100-200 கிராம் அடர் தீவனம் அளித்தால், பிறக்கும் குட்டிகளின் எண்ணிக்கை அதிகமாகும்.

பெட்டை ஆடுகளை 100-150 நாட்களில் தனிமைப்படுத்தி, இணைத் தீவனம் அளிப்பதன் மூலம், பிறக்கும் குட்டிகளின் எடையை அதிகரிக்க முடியும். பெட்டை ஆடுகளைப் போலவே கிடாக்களுக்கும் இனச்சேர்க்கைக் காலத்தில் தினமும் 200-300 கிராம் அடர் தீவனம் அளிக்க வேண்டும்.

பிறந்த குட்டிகள் பராமரிப்பு

குட்டி பிறந்ததும் பஞ்சு அல்லது பழைய துணியால் குட்டியின் வாயையும் மூக்கையும் நன்கு துடைக்க வேண்டும். அது எளிதாக மூச்சு விட ஏதுவாக, வாயைச் சுற்றியுள்ள திரவத்தை அகற்ற வேண்டும். பின்னங் கால்களைப் பிடித்து, குட்டியைத் தலைகீழாகச் சில நொடிகள் பிடிக்கலாம்.

இது, மூச்சுக் குழல் பாதையைச் சுத்தம் செய்ய வகை செய்யும். பிறந்த குட்டி, அரைமணி நேரத்தில் தானாகவே எழுந்து தாயிடம் பால் குடிக்க வேண்டும். இல்லாவிடில், அது எழுந்து நடக்க உதவி செய்தல் வேண்டும்.

தாய் ஆடு, தனது குட்டியை நாக்கினால் நீவி விட அனுமதிக்க வேண்டும். இதனால், உடலின் மேலுள்ள உறை போன்ற திரவத்தை நீக்கலாம். தொப்புள் கொடியின் மறு நுனியை டின்ச்சர் அல்லது அயோடினில் நனைக்க வேண்டும். இதை, 12 மணி நேரம் கழித்து மீண்டும் ஒருமுறை செய்ய வேண்டும்.

முதல் அரைமணி நேரத்தில் குட்டியைச் சீம்பால் குடிக்க வைக்க வேண்டும். பிறந்த குட்டியைத் தாய் ஆட்டுடன் தனியே வைத்துப் பராமரிக்க வேண்டும். முதல் இரண்டு மாதங்கள் குளிர், மழை போன்ற எந்த பாதிப்பும் இல்லாமல், குட்டியைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.

தாய் ஆட்டில் பால் உற்பத்தி அதிகமாக இருந்தால், அது முழுவதையும் குடிக்கும் குட்டிக்கு கழிச்சல் ஏற்படும். எனவே, பாலை அதிகமாகக் குடிக்க விடாமல் குட்டியைப் பார்த்துக் கொள்ள வேண்டும். பிறந்து பத்து நாட்களான குட்டி, இரவு நேரத்தில் மட்டும் தாயுடன் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

இளங்குட்டிகளை முதல் 2-3 மாதங்களுக்கு மேய்ச்சலுக்கு விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இளங்குட்டிகளுக்கு இளம் தழைகளைக் கொடுக்கலாம். கிடாக்குட்டிகளில் 2-3 மாதங்களில் ஆண்மை நீக்கம் செய்வதன் மூலம் அதிக உடல் எடையைப் பெறலாம்.

தீவன மேலாண்மை

தினமும் ஆடுகளை 6 முதல் 8 மணி நேரம் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும். மேலும், அளவான அடர் தீவனம், சிறிதளவு உப்பு கலந்து ஊற வைத்துத் தர வேண்டும். பால் கொடுக்கும் பெட்டை ஆடுகளுக்குத் தினமும் 400 கிராம் வீதம் அடர் தீவனம் அளிக்க வேண்டும்.

கிடா மற்றும் பெட்டை ஆடுகளுக்குத் தினமும் 300-400 கிராம் உலர் தீவனமும், 200 கிராம் அடர் தீவனமும் (தானியக் கலவை) அளிக்க வேண்டும். மேய்ச்சல் ஆடுகளுக்கான அடர்தீவனக் கலவையில், தானியங்கள் 70-80 சதம், கோதுமைத் தவிடு 10-15 சதம், புண்ணாக்கு 5 சதம், உப்பு 1 சதம் இருக்க வேண்டும்.

கொட்டகை மேலாண்மை

வெள்ளாடுகளுக்கு எளிய முறையில் கொட்டிலை அமைத்தாலே போதும். குறிப்பாக, மழை மற்றும் வெய்யில் காலத்தில் பாதுகாப்பு அளிக்கும் வகையில் கொட்டிலை அமைக்க வேண்டும். வெள்ளாடுகளின் வயதுக்கு ஏற்ற வகையில் இடவசதி அளிக்க வேண்டும்.

மூன்று மாதம் வரை ஒரு குட்டிக்கு, கொட்டிலில் 0.2-0.25 ச.மீ., திறந்த வெளியில் 0.4-0.5 ச.மீ. இடவசதி வேண்டும்.

அடுத்து 6 மாதம் வரை கொட்டிலில் 0.5-0.75 ச.மீ., திறந்த வெளியில் 1.0-1.5 ச.மீ. இடவசதி வேண்டும்.

அடுத்து 12 மாதம் வரை கொட்டிலில் 0.5-1.0 ச.மீ., திறந்த வெளியில் 1.5-2.0 ச.மீ. இடவசதி வேண்டும்.

அடுத்து 12 மாதங்களுக்கு மேல் கொட்டிலில் 1 ச.மீ., திறந்த வெளியில் 2 ச.மீ. இடவசதி வேண்டும்.

பெட்டை ஆட்டுக்கு, கொட்டிலில் 1.5 ச.மீ., திறந்த வெளியில் 3.0 ச.மீ. இடவசதி வேண்டும். கிடாய்க்குக் கொட்டிலில் 1.5-2.0 ச.மீ., திறந்த வெளியில் 3-4 ச.மீ. இடவசதி வேண்டும்.

சினையாடு, தாய் ஆட்டுக்குக் கொட்டிலில் 1.5-2.0 ச.மீ., திறந்த வெளியில் 3-4 ச.மீ. இடவசதி வேண்டும்.

நோய்த்தடுப்பு

கொட்டகையில் 15 நாட்களுக்கு ஒருமுறை, சுண்ணாம்புப் பொடியைத் தெளிக்க வேண்டும். ஆடுகளின் குளம்புகளைச் சரியான நேரங்களில் முறையாக வெட்டி விட வேண்டும். ஆடுகளின் குளம்பு, மடிப்பகுதி மற்றும் வாய்ப் பகுதியில் புண்கள் இருந்தால், பொட்டாசியம் பெர்மாங்கனேட் மூலம் கழுவ வேண்டும். குளிர் காலத்துக்கு முன்பும் பின்பும், ஆடுகளுக்கு மருந்துக் குளியல் செய்வதன் மூலம், வெளிப்புற ஒட்டுண்ணிகளின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.

தடுப்பூசிகள்

கோமாரி நோய்த் தடுப்பூசியை, குட்டி பிறந்து 3 மாதத்திலும், அடுத்து 3-4 வாரம் கழித்தும், அடுத்து 6 மாதங்களுக்கு ஒருமுறையும் தொடர்ந்து போட வேண்டும்.

ஆட்டுக்கொல்லி நோய்த் தடுப்பூசியை, ஆட்டின் நான்காம் வயதில் போட வேண்டும்.

ஆட்டம்மைத் தடுப்பூசியை, குட்டி பிறந்து 3 மாதத்திலும், அடுத்து 3-4 வாரம் கழித்தும், அடுத்து ஆண்டுக்கு ஒருமுறையும் தொடர்ந்து போட வேண்டும்.

துள்ளுமாரி நோய்த் தடுப்பூசியை, குட்டி பிறந்து 3 மாதத்திலும், அடுத்து 3-4 வாரம் கழித்தும், அடுத்து ஆண்டுக்கு ஒருமுறையும் தொடர்ந்து போட வேண்டும்.

சந்தைப்படுத்துதல்

வெள்ளாட்டுப் பண்ணையில் அதிக இலாபம் பெற வேண்டுமானால், இடைத்தரகர்களைத் தவிர்த்து நேரடியாக விற்க வேண்டும். வெள்ளாட்டுக் குட்டிகளை 6-9 மாதங்களில் விற்பனை செய்தால் சரியான இலாபம் பெறலாம். வளர்ந்த வெள்ளாடுகளை உயிர் எடையின் அடிப்படையில் விற்க வேண்டும்.

பண்டிகைக் காலங்களில் வெள்ளாடுகள் அதிக விலைக்குப் போகும். எனவே, அதிகப்படியான ஆடுகளைப் பண்டிகைக் காலங்களில் விற்கும் வகையில், இனப்பெருக்க அட்டவணையில் மாற்றம் கொண்டு வரலாம். வயதான இனப்பெருக்க ஆடுகளை விற்பனை செய்து விட வேண்டும். மொத்த ஆடுகளில் 40-50 சத வெள்ளாடுகளை விற்பதன் மூலம் ஆண்டுக்கு ஒருமுறை இலாபம் பெறலாம்.


செ.வினோத்ராஜ், அ.கோபிநாதன், ப.குமாரவேல், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உடுமலைப்பேட்டை, திருப்பூர் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading