My page - topic 1, topic 2, topic 3

Advertisement:

அய்யா அப்துல்கலாம் அடித்த எச்சரிக்கை மணி!

dumpyard

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம்.

‘‘மக்கள் பூமியை மிகவும் அசுத்தப் படுத்துகிறார்கள். இந்த நிலை இப்படியே தொடர்ந்தால், இன்னுமொரு முப்பது ஆண்டுகளில், மனித சமூகம் இந்த மண்ணில் இருந்து அகல வேண்டிய நிலை வரும்! ’’

2015 ஜூலை 27 ஆம் தேதி, மேகாலயத் தலைநகர் ஷில்லாங்கில் அமைந்துள்ள, இந்திய மேலாண்மைப் பயிற்சி நிலைய மாணவர்களிடம் பேசுவதற்காக, தன் வாழ்நாளின் கடைசிப் பயணம் இதுதான் என்பதை அறியாமல், காரில் பயணித்துக் கொண்டிருந்த, நமது முன்னாள் குடியரசு தலைவர் அய்யா அப்துல்கலாம் அவர்கள், தன் உதவியாளர் ஜன்பால் சிங்கிடம், வேதனையுடன் கூறியதைத் தான், நாம் மேலே சொல்லி இருக்கிறோம்.

இந்த மண்ணின் இயல்புகளை மாற்றுவதில், இயற்கை வளங்களைச் சிதைப்பதில், அறிவியல் துறைக்குப் பெரும் பங்குண்டு. இங்கே நீரை இறைக்கும் இயந்திரங்கள் வந்த பின்னால் தான் நிலத்தடிநீர் அதல பாதாளத்துக்குப் போனது.

சுகாதாரத்தின் பெயரைச் சொல்லி, மண்ணுக்குள் மழைநீர் புக முடியாதபடி, மக்கள் புழக்கம் இருக்கும் இடமெல்லாம் சிமெண்ட் தரையாகிப் போனதால் தான், மழைநீர்ச் சேமிப்பு இயல்பாக நிகழ்வது அற்றுப் போனது.

மழைநீரில் விளைந்து, மக்களின் சத்துணவுகளாக விளங்கிய, சிறுதானிய சாகுபடி குறையக் காரணம், இந்த இயந்திரங்களின் வரவுதான். இவற்றின் வரவினால், மானாவாரி நிலங்கள் எல்லாம் பாசன நிலங்களாக மாறி, நெல்லையும் கரும்பையும் விளைவித்துத் தந்தன. சிறுதானியங்களை மக்கள் மறந்து போனார்கள். இன்னொன்று, அவற்றின் மீது விருப்பம் இல்லாமல் போனார்கள்.

நீண்டு கிடக்கும் சாலைகளில் ஓங்கி வளர்ந்திருந்த மரங்கள் எல்லாம், வாகனங்கள் தங்கு தடையின்றிச் செல்வதற்காக வெட்டி எறியப்படுகின்றன. கானகங்களில் மரங்கள் வெட்டப்படுவதும் குறையவில்லை. இதனால், மழைவளம் குறைகிறது. ஆலைகளும், வாகனங்களும், குளிரூட்டிப் பெட்டிகளும் கக்கும் புகையாலும் நஞ்சாலும், காற்று மண்டலம் கெடுகிறது.

ஓய்வில்லா விளைச்சல், இரசாயன உரங்கள் மற்றும் நெகிழிக் குப்பைகளால் மண் வளமிழந்து வருகிறது. இவற்றுக்கெல்லாம் தீர்வு, மரங்களை வளர்த்தல், மழைநீரைச் சேமித்தல், நெகிழிப் பொருள்களைத் தவிர்த்தல், இயற்கை விவசாயத்தை மேற்கொள்தல்.

இவற்றை இந்த மண்ணில் விதைப்பதற்கு என்றே, தன் வாழ்நாட்கள் முழுவதையும் அர்ப்பணித்துப் போன இயற்கை வேளாண் விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார் அவர்களையும், இவற்றின் மீது தீராப் பற்றுக் கொண்டு ஊக்கம் கொடுத்து வந்த அணு விஞ்ஞானி அய்யா அப்துல்கலாம் அவர்களையும்,

நெஞ்சில் நிறுத்தி, மரக்கன்றுகளை நடுவோம்; மழைநீரைச் சேமிப்போம்; நெகிழிப் பைகளைத் தவிர்ப்போம்; இயற்கை வேளாண்மையில் கவனம் செலுத்துவோம்!


2015 ஆகஸ்ட் இதழில் வெளியான ஆசிரியர் பக்கம்.

Share:

Advertisement:

  சந்தேகமா? கேளுங்கள்!  

Advertisement:

இன்னும் படியுங்கள்!