திராட்சையைத் தாக்கும் அடிச்சாம்பல் நோய்!

திராட்சை திராட்சை

செய்தி வெளியான இதழ்: ஏப்ரல் 2017.

லகின் பெரும்பாலான நாடுகளில் பயிராகும் பழ வகைகளில் ஒன்று திராட்சை. இதில், வைட்டமின் சி அதிகமாக உள்ளது. திராட்சையானது, பழமாக, பழச்சாறாக, உலர் பழமாக, ஜாமாக, பழரசமாக எனப் பலவகைப் பொருள்களாக மாற்றி உண்ணப்படுகிறது. இவ்வகைச் சிறப்புகளைப் பெற்ற திராட்சையைப் பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. அவற்றில் ஒன்று அடிச்சாம்பல் நோய். இந்நோய் அனைத்து நாடுகளிலும் இருப்பதுடன், திராட்சையின் மகசூலையும் பாதிக்கிறது.

அடிச்சாம்பல் நோய்

அமெரிக்காவில் 1870 ஆம் ஆண்டிலிருந்தே ஆண்டு முழுவதும் காணப்படும் என்டெமிக் வகை நோயாக இந்நோய் இருந்து வருகிறது. பிறகு, பிரான்ஸில் 1875 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்நோய் திடீர் திடீரென்று தோன்றி, அதிகளவில் சேதத்தை விளைவிக்கும் நோயாக மாறிக் காணப்பட்டது. இப்போது இந்நோய், திராட்சை விளையும் அனைத்து நாடுகளிலும் பரவலாகத் தோன்றி, அதிகளவில் சேதத்தை உண்டாக்கி வருகிறது.

நோய் அறிகுறிகள்

நிலத்தின் மேலுள்ள அனைத்துப் பாகங்களும் இந்நோயால் தாக்கப்படுகின்றன. குறிப்பாக, இலைகள், இளந்தண்டுகள், கொடிகள், முற்றாத காய்கள் போன்றவற்றை அதிகமாகத் தாக்குகிறது. இலைகளின் மேற்பரப்பில் ஒழுங்கற்ற வடிவிலான, இளம் மஞ்சள் நிறத்தில் புள்ளிகள் முதலில் தோன்றும். புள்ளிகள் தோன்றிய பகுதிகளின் நேரெதிர் அடிப்பகுதியில், மென்மையான பூசண வளர்ச்சி காணப்படும். நாளடைவில், தாக்கப்பட்ட இடத்திலுள்ள திசுக்கள் அழிக்கப் படுவதால், புள்ளிகள் கரும்பழுப்பாக மாறிவிடும்.

நோய் தீவிரமாகும் நிலையில், புள்ளிகள் அளவில் பெரிதாகி, ஒன்றோடொன்று இணைந்து முழு இலையும் காய்ந்து விடும். தாக்கப்படும் தண்டுப்பகுதி, வளர்ச்சிக் குன்றி, வீக்கங்களுடன் காணப்படும். தாக்குதலுக்கு உள்ளாகும் இலைகள், குருத்துகள், கொடிகள் போன்ற பாகங்களிலும் வெண்ணிறப் பூசணம் வளரும். ஒரே குலையிலுள்ள சில அல்லது எல்லாக் காய்களும் தாக்கப்பட்டு, வெளிர் பச்சை அல்லது பழுப்பு நிறமாக மாறியும், சுருங்கியும், அழுகியும் காணப்படும்.

திராட்சைக் கொடிகள் ஆண்டு முழுவதும், பசுமையான இலைகளுடன் இருக்கக் கூடியவை. ஆகவே, அடிச்சாம்பல் நோயும் திராட்சைத் தோட்டங்களில் நிரந்தரமாகக் காணப்படும். ஆனாலும், காலநிலை சாதகமாக உள்ளபோது மட்டுமே நோயின் தாக்குதலும் தீவிரமாகும். இந்நோய் புதிதாகத் தோன்றக் காரணம், ஊஸ்போர் என்னும் உறங்கும் வித்துகளாகும்.

இந்த விதைகள் நிலத்தில் விழுந்து கிடக்கும். சாதகமான காலநிலை அமையும் போது, ஏராளமான அளவில் இயங்கும் வித்துகளைத் தோற்றுவிக்கும். அவை, செடிகளின் அடிப்பகுதியில், நிலத்துக்கு அருகிலுள்ள இலைகளைத் தாக்கி முதலில் நோயை உருவாக்கும். பிறகு, காற்றின் மூலம் பரவும் இந்த வித்துகள், அனைத்துப் பாகங்களிலும் நோயைத் தோற்றுவிக்கும்.

கட்டுப்படுத்துதல்: உழவியல் முறைகள்

நோய் தாக்கி நிலத்தில் விழுந்து கிடக்கும் இலைகள், கொடிகள், காய்கள் போன்றவற்றைச் சேகரித்து எரிக்க வேண்டும். சரியான இடைவெளியில் செடிகளை நட வேண்டும். செடிகளிலுள்ள இலைகள் நிலத்தை விட்டு உயரத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நிலத்தில் போதிய காற்றோட்டத்தை நிலவச் செய்து, காற்றின் ஈரப்பதம் கூடி விடாமல் கவனமாக இருக்க வேண்டும்.

மருத்துவ முறைகள்

போர்டோ கலவை 0.6 சதம் அல்லது தாமிர ஆக்ஸி குளோரைடு, ஒரு லிட்டர் நீருக்கு 2.5 கிராம் அல்லது டைதயோகார்பமேட் வகையைச் சேர்ந்த சினப், மானப், மாங்கோசெப் போன்ற மருந்துகளில் ஏதேனும் ஒன்றை, ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் அல்லது காப்டான் பூசணக்கொல்லி, ஒரு லிட்டர் நீருக்கு 1.25 கிராம் வீதம் கலந்து, செடிகள் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும்.

நோயை நன்கு கட்டுப்படுத்த, ஓராண்டில் 5-6 முறை மருந்தைத் தெளிக்க வேண்டும். முதன் முறையாக, கவாத்துச் செய்தவுடனும், இரண்டாம் முறையாக, கவாத்துச் செய்து 3-4 வாரத்திலும், மூன்றாவது முறையாக, பூக்கும் முன்பும், நான்காவது முறையாக, பிஞ்சு காய்கள் உருவாகும் போதும், ஐந்தாவது முறையாக, செடிகள் தழைத்து வரும் போதும் தெளிக்க வேண்டும்.


முனைவர் வி.ம.சீனிவாசன், சு.சுகுணா, மு.டேனியல் ஜெபராஜ், முனைவர் ப.கார்த்திக், தந்தை ரோவர் வேளாண்மைக் கல்லூரி, பெரம்பலூர் – 621 115.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!