கடலை மகசூலைப் பெருக்கும் கந்தகமும் சுண்ணாம்பும்!

கடலை Strategies for good yield in groundnut cultivation

நிலக்கடலை மகசூலைப் பெருக்குவதில், கந்தகச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

கந்தகத்தின் சிறப்புகள்

பயிரின் வளர்சிதை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அமினோ அமிலம் மற்றும் புரத உற்பத்திக்கு மிகவும் அவசியம். பச்சையம் உருவாகத் துணை செய்கிறது. நிலக்கடலையில் எண்ணெய்ச் சத்து அதிகமாக, கந்தகம் மிக மிக அவசியம். தழைச்சத்துப் பயன்படு திறனையும் அதிகமாக்கும்.

சுண்ணாம்பின் சிறப்புகள்

கடலை விதை உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கடலை விழுதுகள் மண்ணில் இறங்கியதும், இளம் காய்களால் நேரடியாகச் சுண்ணாம்புச் சத்து எடுத்துக் கொள்ளப்படும். இலை, தண்டு, விழுது மற்றும் வேரின் உறுதித் தன்மைக்கு, சுண்ணாம்புச் சத்து அவசியம். காய்களில் விதைப் பருப்புகள் உருவாக, கால்சியம் துணை புரிகிறது.

சுண்ணாம்புச் சத்துக் குறைந்தால், பொக்குக் கடலைகள் உருவாகும். 75 சதவீதக் கந்தகம் மற்றும் சுண்ணாம்புச் சத்து, விழுதுகள் மற்றும் கடலைக் காய்களால் நேரடியாக எடுத்துக் கொள்ளப்படும்.

ஜிப்சத்தின் சிறப்புகள்

நிலக்கடலைக்கு, கந்தகம் மற்றும் சுண்ணாம்புச் சத்து நிறைந்த ஜிப்சத்தைப் பிரித்து இடுவது நல்லது. ஜிப்சத்தை இடும் போது, மண்ணில் ஈரம் இருக்க வேண்டும். பாசனநீர் அல்லது மழைநீர் கிடைத்ததும், பயிருக்குக் கிடைக்கும் வகையில் கரைந்து விடும். அதே நேரத்தில், அதிகளவில் நீர்க் கிடைத்தால் கரைந்து வீணாகி விடும்.

கந்தகச் சத்து சரியான நேரத்தில் பயிருக்குக் கிடைக்க, எக்டருக்கு 400 கிலோ ஜிப்சத்தை இட வேண்டும். காலகஸ்தி நோய், காய் அழுகல் நூற்புழு உள்ள பகுதியில், 200 கிலோ ஜிப்சத்தை அடியுரமாக இட வேண்டும். மீதமுள்ள 200 கிலோ ஜிப்சத்தை, விதைத்து 30-45 நாட்களில், அதாவது, பூக்கத் தொடங்கும் போது இட்டு மண் அணைக்க வேண்டும்.

இப்படிப் பிரித்து இடும் போது, அடியுரமாக இட்டது, விதை எளிதாக முளைத்து வர உதவும். மேலும், ஆரம்பக் காலச் செடி வளர்ச்சிக்குத் தேவையான, கந்தகம் மற்றும் சுண்ணாம்புச் சத்தையும் அளிக்கும். மேலுரமாக இடுவது, விழுதுகள் இறங்க, திரட்சியான பருப்புகள் உருவாக மற்றும் எண்ணெய்ச் சத்து அதிகமாக வகை செய்யும்.


இயக்குநர், மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம், குடுமியான்மலை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!