பால் உற்பத்தியைப் பெருக்கும் பயறுவகைத் தீவனங்கள்!

கறவை மாடு

செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி.

யறுவகைப் பயிர்கள், வேர் முடிச்சுகளில் தழைச்சத்தைச் சேமித்து வைத்து, மண்வளத்தைப் பெருக்குவதுடன், கால்நடைகளுக்குப் பசுந்தீவனத்தையும் தருகின்றன. புரதச்சத்து நிறைந்த இந்தப் பயிர்கள், எளிதில் கிடைக்கும் பசுந்தீவனமாக உள்ளன.

பயறுவகைத் தீவனப் பயிர்களை, பச்சை மற்றும் உலர் தீவனமாகவும், சரிவிகித உணவாக, உலர் மற்றும் அடர் தீவனத்துடன் கலந்தும் கொடுக்கலாம். ஏனெனில், கால்நடை உற்பத்தியில் சரிவிகித உணவு என்பது மிக முக்கியக் காரணியாக விளங்குகிறது. மேலும், பால் உற்பத்தியைப் பெருக்குவதில் மற்றும் கொழுப்பில்லாத் திடப்பொருள்களின் அளவைக் கூட்டுவதில், பயறுவகைப் பசுந்தீவனங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.

பயறுவகைத் தீவனங்களில் உள்ள புரதம், அமினோ அமிலங்கள், நைட்ரஜன் ஆகிய சத்துகள், கால்நடைகளின் வயிற்றிலுள்ள நுண்ணுயிரிகளின் செயல் திறனை மேம்படுத்தும்.

தீவனத் தட்டைப்பயறு (60-70 நாட்கள்)

கால்நடைகளுக்கு மிகுந்த சுவையைத் தரும் இந்தத் தீவனப்பயிர். குறுகிய காலத்தில், வளரும் கொடிவகைப் பயிரான இதை, அதிக இடைவெளியில் பயிர் செய்யப்படும் பயிர்களில் ஊடுபயிராக வளர்க்கலாம். பருத்தி, செஞ்சோளம், ஆமணக்குப் போன்ற பயிர்களில் 2-3 வரிசை ஊடுபயிராக விதைக்கலாம்.

தீவனத்துக்காக விதைக்கும் போது, விதைத்த 55 நாளில் அறுவடை செய்யலாம். இந்தத் தீவனப் பயிரில், 20 சதம் புரதம், 2-3 சதம் கொழுப்பு, 1-5 சதம் கால்சியம், 1.4 சதம் பாஸ்பரஸ் ஆகிய சத்துகள் உள்ளன.

தீவனத் தட்டைப்பயிரில், கோ.(எப்சி)8 என்னும் புதிய இரகம் அதிக விளைச்சலைத் தரும். இறவையில் 8-9 டன், மானாவாரியில் 5-6 டன் பசுந்தீவனம் கிடைக்கும். இறவையில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். ஊடுபயிராக 1:3 என்னும் விகிதத்தில், பருத்தியையும், தட்டைப் பயறையும் சாகுபடி செய்ததில், 9.2 டன் விளைச்சல் கிடைத்தது.

நரிப்பயறு – கல்லுப்பயறு (65-70 நாட்கள்)

இரபி பருவமான நவம்பர், டிசம்பரில் மானாவாரியில் பயிரிடப்படும் நரிப்பயறு, கடும் வறட்சியைத் தாங்கி வளரும் பயிர்களில் முக்கியமானது. கலப்பு மற்றும் ஊடுபயிராகச் செஞ்சோளத்துடன் கலந்து விதைக்க ஏற்றது. புரதம் மிகுந்த இப்பயிர், பயறு அறுவடைக்குப் பிறகு உலர் தீவனமாகப் பயன்படுகிறது.

டி.எம்.வி (எம்பி)1 என்னும் இரகம், அதிகளவில் பசுந்தீவனத்தைக் கொடுக்கும். மழைக் காலத்தில் சோளத்துடன் விதைத்து, தட்டையுடன் சேர்த்து அறுத்து, உலர் தீவனமாக இடலாம். இந்தப் பசுந்தீவனத்தில், 6-10 சதம் புரதம், 6-8 சதம் நார்ச்சத்து, 1-2 சதம் கொழுப்புச் சத்து ஆகியன உள்ளன.

கொள்ளு (100-105 நாட்கள்)

குறைந்த நீரில் நன்கு வளரும் பயறுவகைப் பயிர்களில் கொள்ளும் அடங்கும். 60-65 நாட்களில் பசுந்தீவனமாக அறுவடை செய்யும் போது, எக்டருக்கு ஒரு டன் கிடைக்கும். மானாவாரியில் எக்டருக்கு 800 கிலோ வரை மகசூல் கிடைக்கும். தனிப்பயிராக மட்டுமின்றி, நிலக்கடலை- கொள்ளு, எள்- கொள்ளு என்னும் தொடர் பயிர் முறையிலும் மானாவாரியில் பயிரிடலாம்.

பையூர் 2 என்னும் இரகமானது, மற்ற இரகங்களைக் காட்டிலும் அதிக விளைச்சலைத் தரும். இந்தப் பசுந்தீவனத்தில், 4-5 சதம் புரதம், 6 சதம் நார்ச்சத்து, 0.87 சதம் கொழுப்பு ஆகிய சத்துகள் உள்ளன.

பில்லிபெசரா (70 நாட்கள்)

இது, ஆந்திராவில் அதிகமாகப் பயிராகிறது. அனைத்து வகை மண்ணுக்கும் ஏற்ற இது, குறுகியகாலப் பயிராகும். வறட்சியைத் தாங்கி வளரும். அடர் பச்சை நிறத்தில் சிறிதாக இருக்கும் இந்தப் பயறு, சுவை மிகுந்தும் இருப்பதால், நமக்கும் உணவாகப் பயன்படுகிறது.

விதைத்த 6-8 நாட்களில் முளைத்து விடும். தொடக்கத்தில் மெதுவாக வளரும். தனிப் பயிராக விதைத்தால், ஏக்கருக்கு 1.2 டன் பசுந்தீவனம் கிடைக்கும். இதில், 4-8 சதம் புரதம், 3-6 சதம் நார்ச்சத்து, 0.5-1.5 சதம் கொழுப்பு ஆகிய சத்துகள் உள்ளன.

பயறுவகைத் தீவனங்களின் நன்மைகள்

அதிகக் கலோரி மற்றும் கால்சியம், கந்தகம், காப்பர் உள்ளதால், இவற்றைப் பசுந்தீவனமாக அளிக்கும் போது, கால்நடைகளின் உடல் எடை, உற்பத்தித் திறன் மேம்படும். அதிகளவில் புரதத்தையும், அமினோ அமிலங்களையும் கொண்ட சிறந்த பசுந்தீவனம். முக்கிய வைட்டமின்களான பி, சி, டி, இ, கே ஆகியன உள்ளன. எளிதில் செரிக்கும்.

எனவே, கால்நடைகளை வளர்ப்போர், பசுந்தீவனத்தை உற்பத்தி செய்யும் போது, ஒரு ஏக்கர் பரப்பில், சுமார் 30 சென்ட்டில் பயறுவகைத் தீவனப் பயிர்களை வளர்த்து, மற்ற தீவனங்களில் கலந்து சரிவிகிதத் தீவனமாக அளிக்கலாம். இதன் மூலம், பால் உற்பத்தியைப் பெருக்கி, நல்ல இலாபத்தை அடைய முடியும்.


DAISY

மா.டெய்சி, ந.அகிலா, வேளாண்மை அறிவியல் நிலையம், நாமக்கல், கி.செந்தில்குமார், மண்டல ஆராய்ச்சி நிலையம், புதுக்கோட்டை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!