நெற்பயிரைத் தாக்கும் புகையான்!

paddy field

செய்தி வெளியான இதழ்: 2017 ஜனவரி.

நெற்பயிரைத் தாக்கிச் சேதத்தை உண்டாக்குவதில் இலைச்சுருட்டுப் புழு, குருத்துப்பூச்சி, புகையான், ஆனைக்கொம்பன், பச்சைத் தத்துப்பூச்சி உள்ளிட்டவை முக்கியப் பங்கை வகிக்கின்றன. இவற்றில் புகையான், நெற்பயிரை அதிகளவில் தாக்குவதால், 10 முதல் 70 சதம் வரையில் மகசூல் இழப்பு ஏற்படும்.

புகையானின் வரலாறு: முட்டை

பெண் பூச்சியானது, வெண்மையான, நீண்டு உருண்ட, நுனியில் சிறிது பெருத்த, 9-33 முட்டைகளைக் குவியலாக, இலையின் நடுநரம்பின் இருபுறம் அல்லது இலையுறையில் இடும். இப்படி ஒரு பெண் பூச்சி, தன் வாழ்நாளில் 200-300 முட்டைகள் வரை இடும்.

இளம் குஞ்சுகள்

முட்டையில் இருந்து 5-9 நாட்களில் குஞ்சுகள் வெளிவரும். முதல்நிலைக் குஞ்சுகள் வெள்ளையாகவும், பிறகு பழுப்பாகவும் மாறும். ஐந்து வளர்ச்சி நிலைகளை உடைய (instsr) இக்குஞ்சுகள், 13-15 நாட்களில் முழுப் பூச்சிகளாக மாறும்.

பூச்சிகள்

முழுமையாக வளர்ந்த பழுப்பு நிறப் புகையான்கள், நெல்பயிர்த் தூர்களின் அடிப்பகுதியில் காணப்படும். ஒவ்வொரு பயிர்க் காலத்திலும் 3-4 தலைமுறைகள் தோன்றும் வகையில், புகையானின் வாழ்க்கைச் சுழற்சி இருக்கும். புகையானின் வளர்ச்சிப் பருவம் 10 முதல் 20 நாட்களைக் கொண்டது.

புகையான் தாக்குதலுக்குச் சாதகமான நிலை

அதிகமான தழைச்சத்து உரம் இடப்படும் வயல்கள். வயலில் நீர் தேங்கியிருத்தல். நெருக்கி நடப்பட்ட வயல்களில், போதுமான சூரிய ஒளியானது தூர்களில் படாமல் போதல் மற்றும் போதிய காற்றோட்டம் பயிருக்குக் கிடைக்காத சூழல். விட்டு விட்டுப் பெய்யும் மழைத்தூறல், குறைந்த வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருத்தல். மேலும், கார் மற்றும் சம்பா பருவத்தில் புகையானின் தாக்குதல் அதிகமாக இருக்கும்.

சேத அறிகுறிகள்

புகையானின் தாக்குதல் பயிரின் தொடக்கம் முதல் அறுவடை வரையில் நீடிக்கும். இளம் குஞ்சுகள் மற்றும் வளர்ந்த பூச்சிகள், கூட்டம் கூட்டமாகத் தூர்களிலும், குத்துகளின் அடியிலும் இருக்கும். தூரைத் தட்டினால், புகையான் பூச்சிகள் பக்கவாட்டில் நகர்ந்து செல்வதைக் காணலாம்.

குஞ்சுகளும், தாய்ப் பூச்சிகளும் தரையில் இருந்து சற்று மேலேயுள்ள தண்டில் இருந்து கொண்டு, அடிப்பாகத்தைத் தாக்கிச் சாற்றை உறிஞ்சுவதால், ஃபுளோயம் செல்கள் மூலம் சத்துகள் செல்வது தடைபடும்.

இதனால், நெற்பயிர் முழுவதும் பழுப்பாக அல்லது மஞ்சளாக மாறிக் காய்ந்து விடும். தாக்குதல் அதிகமாக இருந்தால், தண்டுப் பகுதி, செயலிழந்து ஒடிந்து, வலுவிழந்து, இறுதியாக மடிந்து விடும். அப்போது தண்டுப் பகுதியில் துர்நாற்றம் வீசும்.

மேலும், புகையான் சாற்றை உறிஞ்சும் போது அதன் நஞ்சுள்ள உமிழ்நீரானது பயிருக்குள் செல்வதாலும் இலைகள் காய்ந்து விடும். இதன் தாக்குதல் அதிகமாகும் வயல்களில், அரைவட்ட வடிவமாக, ஆங்காங்கே, பயிர்கள் புகைந்ததைப் (hopperbum) போலக் காணப்படும்.

பால் பிடிப்பதற்கு முன்பே கதிர்கள் காய்ந்து விடுவதால், மணிகள் உருவாவது தடைபடும் அல்லது கதிர் மணிகள் பதராகி விடும். செப்டம்பர், அக்டோபர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் புகையானின் தாக்குதல் அதிகமாக இருக்கும்.

புகையானால் பரவும் நோய்கள்

நெற்பயிரில், புல் குட்டை (grassy stunt), வாடல் குட்டை (wilted stunt), கிழிந்த குட்டை (ragged stunt) ஆகிய நச்சுயிரி நோய்களைப் புகையான் பரப்பும். தூருக்கு ஒரு பூச்சி அல்லது ஒரு குத்துக்கு ஒரு சிலந்தி காணப்படும் இடங்களில், தூருக்கு 2 பூச்சிகள் தென்பட்டால், பயிரானது பொருளாதாரச் சேதநிலையில் உள்ளது என்று அறியலாம்.

கட்டுப்பாடு

புகையானுக்கு எதிர்ப்புத் திறனுள்ள குறுகிய கால இரகங்களான ஏ.டி.ட்டி. 36, 37, ஐ.ஆர்.36, 64, ஏ.எஸ்.டி.16, கோ. (ஆர்.எச்.) 1, 3 அல்லது மத்திய மற்றும் நீண்டகால இரகங்களான ஐ.ஆர்.36, கோ.42, 46, மதுரை3, ஏ.எஸ்.டி.19, ஏ.டி.ட்டி.44, திருச்சி 3, சி.ஆர். 1009 ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். எட்டடிக்கு ஓரடி இடைவெளி விட்டுப் பத்தி நடவு செய்ய வேண்டும். தண்ணீர் தேங்கி நிற்காத வகையில் வயலைச் சமப்படுத்த வேண்டும்.

வயலில் காணப்படும் ஒட்டுண்ணிக் குளவிகள், நீள்கொம்பு வெட்டுக் கிளிகள், தட்டான்கள் ஆகிய நன்மை செய்யும் பூச்சிகளையும், சிலந்திகளையும் பாதுகாத்துப் பெருக்க வேண்டும். புகையானின் தாக்குதல் அறிகுறி தெரிந்ததும், வயிலில் தேங்கியுள்ள நீரைச் சுத்தமாக வடித்துவிட வேண்டும். இப்படி 3, 4 நாட்களுக்கு வடித்து விடுவதால், புகையானின் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியும்.

தழைச்சத்தை அதிகமாக இடக்கூடாது. மேலும், தழைச்சத்தை மேலுரமாக 3-4 தடவையாகப் பிரித்து இட வேண்டும். வயலில் களைகள் இருக்கக் கூடாது. நெற்பயிர் பூப்பதற்கு முன், 5 சத வேப்பங் கொட்டைக் கரைசலைத் தெளித்தும் புகையானைக் கட்டுப்படுத்தலாம்.

புகையானுக்கு எதிர்ப்பாற்றலை (resistance) உருவாக்கும் மற்றும் மறு உற்பத்தித் திறனை (resurgence) உண்டாக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளான செயற்கை பைரித்திராய்டுகள், மீத்தைல் பாரத்தியான், குயினால்பாஸ் போன்ற மருந்துகளைத் தெளிக்கக்
கூடாது.

ஏக்கருக்கு, தயோமீதாக்சம் 25 wg 40 கிராம், இமிடாகுளோபிரிட் 17.8 sl 40 மில்லி, கார்போசல்பான் 25 ec 400 மில்லி, பிப்ரோனில் 5 sc 500 கிராம், டைகுளோர்வாஸ் 75 wsc 250 மில்லி ஆகியவற்றில் ஒன்றை, 200 லிட்டர் நீரில் கலந்து, கைத்தெளிப்பான் மூலம், தூர்களின் அடியில் படும்படி தெளிக்க வேண்டும்.


நெற்பயிரை RAJA RAMESH N e1716525803386

முனைவர் இராஜா.ரமேஷ், வேளாண்மை அறிவியல் நிலையம், நீடாமங்கலம், திருவாரூர் -614404.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!