கால்நடைகளுக்கு அளிக்கப்படும் முதலுதவிகள்!

கால்நடை Livestock and drinking water

செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி.

கால்நடைகளில் எதிர்பாராத விதத்தில் பலவகை விபத்துகள் அல்லது சில உடல் கோளாறுகள் ஏற்படுகின்றன. சில விபத்துகள் சாதாரணச் சேதத்தை உண்டாக்கும். சில விபத்துகள் உயிருக்கோ உறுப்புக்கோ பெரும் சேதத்தை விளைவிக்கும். எல்லா விபத்துகளுக்கும், உடல் கோளாறுகளுக்கும் உடனடியாக மருத்துவ உதவிகள் கிடைப்பது கடினம்.

கால்நடை மருத்துவரை அணுகிச் சிகிச்சை அளிப்பதற்கு முன், அருகில் கிடைப்பதைக் கொண்டு செய்யக்கூடிய உதவி தான் முதலுதவி. பல சமயங்களில், கால்நடைகளில் முதலுதவி செய்வது உயிரிழப்பைத் தவிர்க்கவும் ஏதுவாகிறது. எனவே, அனைவரும் இத்தகைய முதலுதவிகளைப் பற்றித் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.

காயங்கள்

கால்நடைகளுக்குக் காயங்கள் ஏற்பட்டால் முதலில் செய்ய வேண்டியது, சுத்தமான நீரில் சிறிதளவு கிருமி நாசினியான பொட்டாசியம் பெர்மாங்கனேட் அல்லது டெட்டாலைக் கலந்து கழுவ வேண்டும். பிறகு, ஈரத்தைச் சுத்தமான துணியால் ஒற்றியெடுத்து விட்டு, டிங்சர் அயோடினைத் தடவ வேண்டும்.

காயத்தைச் சுற்றிலும் வேப்ப எண்ணெய்யைத் தடவ வேண்டும். இதனால், காயத்தில் ஈக்கள் மொய்த்துப் புழு வைத்த புண்ணாக மாறுவதைத் தடுக்க முடியும். துருப்பிடித்த ஆணி, லாடம் போன்றவற்றால் காயம் ஏற்பட்டால், கால்நடை மருத்துவரிடம், காயம் எதனால் உண்டானது என்பதைக் கூறி, வலிப்பு நோய்த் தடுப்பூசியைப் (டி.டி.)போட வேண்டும்.

காயங்களில் புழுக்கள்

தொழுவத்தில் ஈக்கள் இருந்தால் அவை, கால்நடைகளின் உடல் காயங்களில் முட்டைகளை இடும். அந்த முட்டைகள் பொரிந்து புழுக்களாகி, காயங்களைத் துளைத்து உள்ளே செல்லும். இப்படிப் புழுக்கள் நிறைந்த புண்ணாக இருந்தால், கால்நடை மருத்துவரை அணுகுமுன், முதலுதவியாகச் சிறிதளவு டர்பன்டைன் எண்ணெய்யைப் புண்ணில் ஊற்றலாம். இதனால், புழுக்கள் இறந்து விடும் அல்லது புண்ணிலிருந்து வெளியேறிக் கீழே விழுந்து விடும்.

பிறகு ஆறிய வெந்நீரில் சிறிதளவு உப்பைக் கலந்து, புண்ணைக் கழுவிவிட வேண்டும். அதன் பிறகு, லோரெக்சான் போன்ற ஆன்ட்டிசெப்டிக் மருந்தைப் புண்ணில் போட வேண்டும். இதனால், புழுக்கள் மீண்டும் வராது. புண்ணும் விரைவில் ஆறிவிடும்.

கொம்பு முறிவு

கொம்பு முறிந்தால் இரத்தக்கசிவு அதிகமாக இருக்கும். இதற்கு முதலில், நல்ல சுத்தமான நீரில் கிருமி நாசினியைக் கலந்து கழுவிக் கட்டுப்போட வேண்டும். அதன் மேல், டிங்சர் பென்சாயினை ஊற்ற வேண்டும். இது கிடைக்கா விட்டால், டிங்சர் அயோடினை ஊற்றலாம். இப்படி முதலுதவியைச் செய்வதால், கொம்பில் சீழ் பிடிப்பதைத் தவிர்க்கலாம்.

வயிறு உப்புசம்

வயிறு உப்புசத்துக்கு முதலுதவியாக, நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெய் 100-250 மில்லி எடுத்து வாயில் ஊற்ற வேண்டும். இந்த எண்ணெய், கால்நடைகளின் சுவாசப் பாதைக்குள் சென்று விடாமல் கவனமாக ஊற்ற வேண்டும். பிறகு, கால்நடை மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.

எலும்பு முறிவு

எதிர்பாராத விபத்தால் கால்நடைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டால், உடைந்த எலும்பை அதிகமான அசைவுகளில் இருந்து பாதுகாக்க வேண்டும். உடைந்த எலும்பை எக்காரணம் கொண்டும் நாமே சரிசெய்ய முயலக் கூடாது. ஏனெனில், வெளியில் உள்ள கிருமிகள் உள்ளே சென்று மிகுந்த பாதிப்பை உண்டாக்கி விடலாம். அதனால், எலும்புகள் முறிந்த நிலையிலேயே, அதிக அசைவு ஏற்படாமலும், தொந்தரவு செய்யாமலும், சுத்தமான மூங்கில் மற்றும் துணியைக் கொண்டு கட்டுப் போட்டு விட்டு, உடனே கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.

இரத்தக் கசிவு

சிறிதளவில் இரத்தக்கசிவு ஏற்பட்டால், கைகளைச் சுத்தமான நீரில் கழுவி விட்டு, இரத்தம் வரும் இடத்தில் விரல்களை வைத்துச் சிறிது நேரம் அழுத்திப் பிடிக்கலாம். அல்லது ஐஸ் கட்டியை வைக்கலாம். மிதமான இரத்தக்கசிவு இருந்தால், வெள்ளைப் படிகாரக் கல்லைப் பொடியாக்கி, இரத்தம் வரும் இடத்தில் தூவலாம். இரத்தக்கசிவு அதிகமாக இருந்தால், சுத்தமான துணியால் கட்டுப் போட்டு விட்டு, கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.

விஷத் தன்மை

சில சமயங்களில் கால்நடைகள், விஷச்செடிகளை அல்லது பூச்சிக்கொல்லி மருந்துகளை எதிர்பாராமல் உண்பது, பூவிடும் பருவத்தில் உள்ள சோளத் தட்டைகளை உண்பது, பெயிண்ட் டப்பா, பூச்சிக்கொல்லி மருந்து டப்பாவை நக்குவது போன்றவற்றால், உடம்பில் விஷத்தன்மை ஏற்படுகிறது. அந்தச் சமயத்தில், வயிறு உப்புசம், நுரையுடன் கூடிய உமிழ்நீர், மூச்சுத் திணறல், வலிப்பு, நினைவிழப்பு உண்டாகி, கால்நடைகள் இறந்து விடும்.

அதனால், விஷத்தன்மை அறிகுறிகள் லேசாகத் தெரியும் போதே முதலுதவியைச் செய்து விட்டு, உடனே கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். முதலில் கால்நடைகளைக் காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும். வயிற்றில் விஷம் தங்காமல் இருக்க, சோப்புக் கரைசல் அல்லது உப்புக் கரைசலை வாய் வழியே கொடுக்கலாம்.

சோப்புக் கரைசலானது கழிச்சல் மூலமும், உப்புக் கரைசலானது வாந்தி மூலமும், விஷத் தன்மையை வெளியேற்றும். இன்னும் மிக எளிமையான முதலுதவியாக அடுப்புக் கரியைப் பொடி செய்து நீரில் கலந்து வாயில் ஊற்றலாம். இதனால் விஷமானது இரத்தத்துடன் கலப்பது பெருமளவில் தடுக்கப்படும்.

பாம்புக்கடி

பாம்புக் கடித்ததும், கடிபட்ட இடத்துக்கு மேல் கயிற்றால் இறுக்கமாகக் கட்டுப்போட வேண்டும். இப்படிச் செய்யும் போது இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை கட்டை அவிழ்த்து விட வேண்டும். இது, விஷமானது மேலே ஏறி உடம்பில் பரவுவதைத் தடுக்கும். மேலும், பாம்பால் கடிபட்ட கால்நடையை நெடுந்தொலைவுக்கு வேகமாக இழுத்துச் செல்லக் கூடாது. விஷத்தன்மை, கால்நடைகளைப் பொறுத்தும், கடிபட்ட இடத்தைப் பொறுத்தும் வேறுபடும். கடித்த பாம்பைப் பற்றித் தெரிந்தால், கால்நடை மருத்துவரிடம் தெரிவிப்பது அவசியம்.

நாய்க்கடி

நாய்க் கடி பட்ட இடத்தை வெறுங்கையால் தொடக்கூடாது. கையுறை அல்லது நெகிழிப் பையைக் கைகளில் கையுறையைப் போலச் சுற்றிக்கொண்டு தொட வேண்டும். முதலில் சோப்பையும் நீரையும் கொண்டு, கடிபட்ட இடத்தை இரண்டு மூன்று நிமிடங்கள் கழுவ வேண்டும். பிறகு, காயத்தில் டிங்சர் அயோடினைத் தடவி விட்டு, உடனே கால்நடை மருத்துவரைப் பார்க்க வேண்டும்.

நாய்க்கடி காயத்துக்குக் கட்டுப் போடக்கூடாது. கடித்தது வெறிநாயா, வெறிநோய்த் தடுப்பூசி போடப்பட்டதா, எப்போது போடப்பட்டது போன்ற விவரங்களை அறிந்து, மருத்துவரிடம் சொல்ல வேண்டும். கடிபட்ட கால்நடைகளுக்கு வெறிநோய்க் கடிக்கான தடுப்பூசியைக் கால்நடை மருத்துவர் மூலம் போட வேண்டும்.

தீக்காயம்

கொட்டகை தீப்பிடித்தால் கால்நடைகளின் உடம்பில் தீக்காயம் ஏற்படும். உடம்பில் தீப்பிடித்து எரிந்தால், அடர்த்தியான போர்வையால் உடம்பைப் போர்த்த வேண்டும். பிறகு, குளிர்ந்த, சுத்தமான நீரை உடம்பில் ஊற்றலாம். தீயினால் உண்டாகும் கொப்புளங்களை ஊசியால் குத்தக் கூடாது. ஏனெனில், தீப்பிடிக்கும் போது, புகையினால் மூச்சுக்குழல் எரிச்சல், மூச்சுத் திணறல் உண்டாகும். காற்றோட்டமான இடத்துக்குக் கால்நடைகளை மாற்ற வேண்டும்.

இரசாயனத் திரவங்களால் வெந்து போதல்

இரசாயனத் திரவங்கள் உடம்பில் பட்டுக் கொப்புளங்கள் உண்டாகித் தோல், தசையெல்லாம் வெந்து விடும். அமிலவகைத் திரவங்கள் உடம்பில் பட்டால், சோப்பு நீரால் கழுவ வேண்டும். காரவகைத் திரவங்கள் உடம்பில் பட்டால், எலுமிச்சைச் சாறு கலந்த நீரால் கழுவ வேண்டும். எவ்வகைத் திரவம் எனத் தெரியாத நிலையில், சுத்தமான நீரால் கழுவ வேண்டும்.

கருப்பை வெளித்தள்ளுதல் (அடித்தள்ளுதல்)

கன்றை ஈனுவதற்கு முன் அல்லது ஈன்றபின், சில மாடுகளில் அடித்தள்ளுதல் அல்லது உறுப்பு வெளித் தள்ளுதல் உண்டாகும். இந்த நேரத்தில் உறுப்பை, மண், தூசி படாமலும், ஈக்கள் மொய்க்காமலும், காக்கைகள் கொத்தாமலும் இருக்க, ஈரத்துணியால் மூட வேண்டும். எக்காரணம் கொண்டும் நாமே சரிசெய்து விடலாம் என முயலக் கூடாது.

சுத்தமான நீரில் சிறிதளவு உப்பைக் கலந்து, மூடி வைத்த துணியின் மீது அவ்வப்போது ஊற்றிக்கொண்டே இருந்தால், வெளியான உறுப்பு வீங்காமல் இருக்கும். மேலும், மருத்துவர் சிகிச்சை செய்ய ஏதுவாக இருக்கும். உறுப்பின் மீது, மண், தூசி, சாணம் போன்றவை படாமலிருக்க, சுத்தமான சாக்கு அல்லது ரப்பர் விரிப்பைத் தரையில் விரிப்பது நல்லது.

அமில நோய்

அதிகமான அரிசி, மீதமான அரிசி சாதம், பொங்கல், அரிசி உப்புமா போன்றவற்றைக் கால்நடைகள் அதிகமாக உண்ணும் போது, அசிடோசிஸ் என்னும் அமிலநோய் பாதிப்பு ஏற்பட்டு, கால்நடைகள் இறந்து விடும். எனவே, அரிசி தொடர்பான உணவைச் சாப்பிட்டது ஆடு என்றால், 40 கிராம், மாடு என்றால் 150 கிராம் வீதம், ஆப்பசோடா என்னும் சமையல் சோடா மாவைச் சிறிது நீரில் கலந்து, சுவாசப் பாதைக்குள் சென்று விடாமல், வாயில் கவனமாக ஊற்ற வேண்டும்.

அல்லது இந்த மாவை வெல்லத்தில் கலந்தும் கொடுக்கலாம். இப்படி முதலுதவியைச் செய்து விட்டு, கால்நடை மருத்துவரை அணுகிச் சிகிச்சை செய்தால், கால்நடைகளை இறப்பில் இருந்து பாதுகாக்கலாம்.

மடிநோய்

மடிநோயால் பாதிக்கப்பட்ட பால்மடி, வீங்கியும், சிவந்தும், சூடாகவும், வலியுடனும் இருக்கும். இதற்கு முதலுதவியாகப் பெரிய சோற்றுக் கற்றாழை மடலை மிக்சியில் நன்கு அரைக்க வேண்டும். இத்துடன் 50 கிராம் மஞ்சள் தூள் மற்றும் 5 கிராம் சுண்ணாம்பைக் கலந்து, நோயால் பாதிக்கப்பட்ட மடியைச் சுற்றிலும் தடவ வேண்டும்.

ஒரு நாளைக்கு 5-6 முறை தடவினால், வீக்கம் குறையும்; மடிநோய் முற்றி விடாமல் பாதுகாக்கும். கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி இதைத் தொடர்ந்து தடவி வர, மடிநோய் விரைவில் குணமாகும்.

கால்நடைகளில் முதலுதவி என்பது, அவற்றுக்குத் தரப்படும் சிகிச்சை அல்ல. உடல் உபாதையின் தீவிரத்தை, கால்நடை மருத்துவரை அணுகும் வரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வழியேயாகும். எனவே, முதலுதவியைச் செய்ததும், உடனடியாகக் கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சையளிக்க வேண்டும்.


கால்நடை P.BALAMURUGAN e1716432233225

பா.பாலமுருகன், அ.செந்தில்குமார், சு.முருகேசன், உழவர் பயிற்சி மையம், தேனி.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!