My page - topic 1, topic 2, topic 3

காட்டுக்குள் சுற்றுலா!

சதி மிக்கவர்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்று வருகிறார்கள். தென்னாட்டு மக்கள் வடநாட்டுக்கும், வடநாட்டு மக்கள் தென்னாட்டுக்கும் சுற்றுலா சென்று வருவது வழக்கமாகி விட்டது.

தமிழர்கள் தமிழ்நாட்டில் கோயில்கள் நிறைந்த ஊர்களுக்கும், கேரளம், கர்நாடகம், திருப்பதி, கோவா என, சாதாரணமாகச் சுற்றுலா சென்று வருகிறார்கள்.

சுற்றுலா செல்வது பணச் செலவைத் தருவது. ஆனாலும் கூட, அதனால் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவு கிடையாது.

அதற்காகத் தான் சுற்றுலாவை, இன்பச் செலவுக்குள் அடக்கி வைத்து உள்ளனர்.

சுற்றுலா கொடுக்கும் மகிழ்ச்சியும் குதூகலமும் ஒருபுறம் இருந்தாலும், இன்றைய நிலையில் உடல் நலம் காக்க வழியுள்ளதா என்று ஆராய்ந்தால்,

இல்லையென்று தான் சொல்ல வேண்டும். உடல் நலம் காக்கும் சுற்றுலா வனச் சுற்றுலா தான்.

மரம் வளர்க்க இயக்கம் எடுத்து விட்டோம். அதுதான் நமக்கான உயிர்க் காற்றைக் கொடுக்கிறது.

மரம் தான் மண்ணுக்கான உணவைத் தருகிறது. மரம் இல்லையேல் மழையில்லை.

மரம் தான் சூரிய ஒளியைக் கிரகித்து. ஒளிச்சேர்க்கை மூலம் நமக்கான கீரை, இலைதழை, காய்கனிகள் மூலம் உணவைக் கொடுக்கிறது என, நாட்டு மக்களுக்குச் சொல்லிக் கொடுத்து விட்டோம்.

மரம் ஓரறிவு உயிர். மக்களுக்குள் அறிவு வேற்றுமை இருப்பதைப் போல, மரங்களுக்கும் வம்சாவளி வேற்றுமை மற்றும் குணங்கள் உண்டு.

ஒரு தோப்பிலுள்ள மாமரங்களில் சில, நன்றாக மழை பெய்த ஆண்டில் சிறப்பாகக் காய்க்கும். சில மரங்கள் காய்க்காது.

இந்த மரங்கள் வறட்சியாக இருக்கும் போது நன்றாகக் காய்த்துக் குலுங்கும்.

இந்த மரங்கள் வறட்சியைத் தாங்கி வளரும் வம்சாவளியைச் சேர்ந்தவை.

மரங்களுக்குக் காது உண்டு, கண்கள் உண்டு. காது கேளாதோர், கண் தெரியாதோர், பேச முடியாதோர் வாழ்வதைப் போலவே, மரங்களும் தொடு உணர்வால் அனைத்தையும் புரிந்து வாழ்க்கை நடத்துகின்றன.

காய்க்காத மரத்தடியில் நின்று கொண்டு, “ஏ மரமே உனக்கு என்ன குறை வைத்தேன்? நீர் தருகிறேன், உணவு தருகிறேன், மற்ற மரங்களைப் போலத்தான் உன்னையும் கவனித்துக் கொள்கிறேன். ஏன் காய்க்க மறுக்கிறாய்?’’ என்று,

மரத்துடன் மனம் விட்டுப் பேசினால் காய்த்து விடும். இப்படி வேளாண் பெரியார் நம்மாழ்வார் அடிக்கடி கூறுவார்.

ஒவ்வொரு மரத்துக்கும் தனித்தனி வாசமுண்டு. அடிமரத்தை, மரப்பட்டையை, இலையை நுகர்ந்து பார்த்தால், வேற்றுமையை அறிய முடியும்.

காடுகளில் பலதரப்பட்ட மரங்கள் ஆவி, வாசனை, பலவகை மருத்துவக் குணங்களுடன் இருப்பதை, அவற்றின் அடியில் நின்று, அமர்ந்து, படுத்துப் பார்த்தால்,

எந்த ஆவி எந்த நோய்க்கு மருந்தாகிறது என உணரும் முன்பே, உடல் நலமாகி விடும். நரம்பு மண்டலம், உள்ளுறுப்புகள் செவ்வனே இயங்கி, மக்கள் நெடுநாட்கள் வாழ முடிகிறது.

குற்றாலத்தில் விழும் மூலிகை நீரில் குளித்தால், பல்வேறு நோய்கள் நீங்கி விடுவதாகக் கூறுவதைப் போல,

காட்டு மரங்களின் காற்றலைகள், மக்களுக்கு நன்மையைத் தருமென, இதுவரை நாம் சிந்திக்கவில்லை.

இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறையேனும் கடல் நீரில் குளித்துப் புத்துணர்வைப் பெற வேண்டும் எனத் தெரிந்து வைத்துள்ளதைப் போல,

கடல் அலைகளின் மருத்துவத் தன்மையை அனுபவித்து அறிந்து வைத்துள்ளதைப் போல,

காட்டு மரங்களின் மருத்துவ ஆவியைப் பற்றி இன்னும் தெளிவடைய வில்லை.

மரத்தடியில் கட்டிலைப் போட்டுத் தூங்கிய அந்தக் காலத்தை எண்ணிப் பாருங்கள்.

மக்களைத் தவிர மற்ற உயிர்கள் அனைத்தும் மரத்தில், மரத்தடியில் தான் வாழ்கின்றன.

எல்லா உயிர்களும் எல்லா மரங்களிலும் கூடுகளைக் கட்டுவதில்லை. சிலவகை மரங்களை மட்டுமே அவை தெரிவு செய்கின்றன.

எல்லாப் பறவைகளும் எந்தெந்த மரங்களின் ஆவி சிறந்தது எனத் தெரிந்து வைத்துள்ளன.

மனிதன் மட்டும் தான் மனவளம் இல்லாதவனாகக் குறுகிப் போய் விட்டான்.

இவன் தான் ஆறறிவுப் புத்திசாலியாம். இவன் தான் மூளை வளர்ச்சியுடன் பிறந்த கடைசி உயிரி.

ஆனால், சிந்திக்கத் தெரியாதவனாக இருக்கிறான் என்பதை நினைக்கும் போது,

நவீன அறிவியல் படிப்பு முறை மீது கோபம் வருகிறது. இயற்கையைப் புரட்டிப் போட்டு விட்டானே?

பகலில் பலா மரத்தடியில் தூங்கு என்பது, தமிழ்நாட்டுப் பழமொழி. பலா இலைகளைக் கொடுத்தால், பசுக்களுக்கு வந்த மடிநோய் நீங்கி விடும்.

பலாப்பழம் சாப்பிட்டால் உடல் திறன் கூடும். நீண்ட ஆயுளுக்கு பலாப்பழம் பெருந்துணை செய்யும்.

இயற்கை மருத்துவ மனைகள் பெருகி இருப்பதைப் போல, மரங்கள் நிறைந்த காடுகளில் மருத்துவ மனைகள் இருக்கும் நிலை, தமிழ்நாட்டில் இதுவரையில் இல்லை.

எதிர் காலத்தில் மரங்கள் நிறைந்த காடுகளை வளர்த்து, சுற்றுலாத் தலங்களை உருவாக்கி,

அங்கே தங்கியுள்ள ஆர்வலர்களுக்குத் துணையாக இருந்து, நோய் நெருங்க முடியாத சூழலை, நல்வழி காட்டும் அற நிலையங்களை, அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்.

யானைகளுக்குப் புத்துணர்வு மையத்தை அமைப்பதைப் போல, மக்கள் வன வாழ்க்கை வாழ வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டியது அரசின் கடமை.

உலகத்தில் திரும்பும் பக்கமெல்லாம் நோய்களைப் பெருக்கும் சூழ்நிலை வளர்ந்து விட்ட நிலையில்,

காட்டுச் சுற்றுலா என்னும் பெயரில் நலவாழ்வு மையங்களை அமைத்து மக்களைக் காப்பது அரசின் கடமை என்பதை, அனைவரும் சிந்திக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

வீட்டுத் தோட்டத்தில் சீத்தாப்பழ மரம், மகா வில்வம், மகிழமரம் என வளர்த்துப் பாருங்கள்.

வேலியோரம் தாழம்பூ, பவளமல்லி, இலுப்பை மரம், பன்னீர் மரம், மஞ்சநத்தி மரம், புன்னை, வேம்பு, மூங்கிலை வைத்து, அங்கே இளைப்பாறிப் பார்த்தால் தெரியும், மரவாசத்தின் மகத்துவம்.

இதயநோய் நெருங்காது, உயர் இரத்தழுத்தம் சரியாகி விடும். குறைந்த இரத்தழுத்தம் சீராகி விடும்.

மூச்சிரைப்பு, நுரையீரல் நோய் வரவே வராது. உடல் சோம்பலின்றிச் சுறுசுறுப்பாக இருக்கும். நரம்பு மண்டலச் சிக்கல், பக்கவாதம் வரவே வராது.

மரங்களுடன் சில காலம் வாழுங்கள்; உறவு கொண்டாடுங்கள். தனிக் குடித்தனம் இல்லாதவர்கள், விழா நாட்களில் நண்பர்களின் வீடுகளுக்குச் செல்வதைப் போல,

வனச் சுற்றுலாத் தலங்களை, அரசாங்கம் அமைத்துத் தர வேண்டும் என்பதே நமது கோரிக்கை.


மருத்துவர் காசி பிச்சை, தலைவர், இயற்கை வாழ்வியல் இயக்கம், திருமானூர், அரியலூர் மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks