வனங்கள் நேரடியாக, மறைமுகமாக, பல வழிகளில் மனிதனுக்கு உதவுகின்றன.
இன்றைய சூழலில், வனங்களின் நேரடிப் பயன்களை விட மறைமுகப் பயன்களே மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளன.
குடிக்கும் நீரையும், குளிர்ந்த சூழலையும், நல்ல காற்றையும் இன்று நாம் விலை கொடுத்து வாங்குகிறோம்.
இத்தகைய நெருக்கடியால், இன்று உலக வனநாள், உலகச் சுற்றுச்சூழல் நாள், உலக நீர்நாள் எனக் கொண்டாடும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளோம். இந்த நிலைக்கு நாமே காரணம்.
1900களில் 100 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை இன்று 700 கோடிக்கு மேல் பெருகி வருகிறது. இயற்கைச் சீற்றங்களிடம் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கி நிற்கிறோம்.
மக்கள் பெருக்கமே வனப்பரப்புக் குறைவுக்கும், சூழல் பாதிப்புக்கும் காரணமாக உள்ளது.
உச்சநிலை வெப்பத்தையும் குளிரையும் கட்டுப்படுத்தி, நாம் மட்டுமல்ல, எல்லா உயிரினங்களும் வாழ்வதற்கு ஏற்ற சூழலை வனங்கள் தான் உருவாக்குகின்றன.
காற்றின் ஈரப்பதத்தை அதிகரித்து மழைப்பொழிவை உண்டாக்கும் காடுகள், மழை நாட்களையும் அதிகமாக்குகின்றன.
காற்று வெளியிலுள்ள கரியமில வாயுவின் அளவைக் குறைத்து, இந்த பூமி வெப்பமாவதில் இருந்து தடுக்கும் ஆற்றல், பச்சை மரங்கள், செடி கொடிகள் நிறைந்த வனங்களுக்கு மட்டுமே உண்டு.
மண்ணரிப்பு, நிலச்சரிவு, வெள்ள ஆபத்துகளில் இருந்து, மக்களை, மற்ற உயிரினங்களைக் காப்பதில் காடுகளுக்கு முக்கியப் பங்குண்டு.
மேலும், வனங்கள் தாவரங்கள் நிறைந்து, விலங்குகளின் உறைவிடமாகத் திகழ்வதால், உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த நிலையில் உள்ளன.
இப்படி மறைமுகப் பயன்களைத் தரும் மரங்கள், தொழிற் சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருள்களையும்,
தேன், பஞ்சு, பைபர், பசை, பழங்கள், விறகு, தீவனம், எண்ணெய், மருந்துகள் போன்ற பொருள்களையும் வழங்குகின்றன.
வன அழிவால் ஏற்படும் பாதிப்புகள்: ஒரு நாட்டில் ஏற்படும் வன அழிவு, அந்த நாட்டையும் அந்நாட்டு மக்களையும் மட்டும் பாதிப்பதில்லை.
மாறாக, ஒட்டு மொத்த உலகத்தை, உலக மக்களை, உயிரினங்களைப் பாதிக்கிறது.
வனப்பரப்புக் குறைவதால், வளி மண்டலத்தில் கரியமில வாயுவின் அளவு கூடுகிறது.
இதனால், புவிப்பரப்பின் வெப்பநிலை அதிகமாகி, ஓசோனில் ஓட்டை விழுகிறது.
அதிக வெப்பத்தால், பனிப் பாறைகள் உருகிக் கடல்நீர் உயர்கிறது.
இயல்பற்ற சூழலால், சூறாவளி, சுனாமி, புயல், நிலநடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுகின்றன.
மேலும், மழைக்குறைவு ஏற்பட்டு நாம் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் நிலை உண்டாகிறது.
எனவே, காடுகளைக் காப்பதில் நாம் எல்லோரும் கவனம் செலுத்த வேண்டும்.
முனைவர் இரா.இரவி.
சந்தேகமா? கேளுங்கள்!