மனிதனின் அறிவியல் வளர்ச்சியுடன் மக்கள் தொகையும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், அதிகரித்து வரும் மக்களுக்குத் தேவையான விளைபொருள்களும், கால்நடை சார்ந்த பொருள்களும் பற்றாக்குறையாகவே உள்ளன. அதனால், இவற்றைத் தேவையான அளவுக்கு உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், விவசாயத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், போதுமான மழையின்மை காரணமாகக் கால்நடை வளர்ப்பில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். கால்நடைகளில் கறவை மாடுகள் வளர்ப்பு முக்கியமான இடத்தைப் பெறுகிறது. எனவே, வாழ்க்கை ஆதாரமாக விளங்கும் கறவை மாடுகளைப் பாதுகாப்பாக வளர்க்க வேண்டியது அவசியமாகிறது.
பால் மாடுகளுக்குத் தொற்று நோய் மட்டுமின்றி, மற்ற நோய்களும் அவ்வப்போது வரும். இவற்றில் மிகுதியாகக் காணப்படுவன, சளி, காய்ச்சல், கழிச்சல், மடிவீக்கம் போன்றவை. மேலும், கால்நடைகளைப் பல்வேறு வகையான குடற் புழுக்களும் தாக்குகின்றன. குடல் மற்றும் வயிற்றுப் பகுதிகளைத் தாக்கும் இந்தப் புழுக்களின் வளர்ச்சிக்குப் பின்வரும் காரணிகள் சாதகமாக அமைகின்றன.
சுற்றியுள்ள தட்பவெப்ப நிலை, காற்றின் ஈரப்பதம் மற்றும் சூரிய ஒளியானது குடற்புழு முட்டைகளின் முதிர்ச்சிக்கு உதவுகின்றன. கால்நடைகளின் சத்துக் குறைபாடு குடற்புழுத் தாக்குதலுக்கு மிகவும் சாதகமாக அமைகிறது. மேய்ச்சல் நிலத்தின் தன்மை, அதாவது, ஈரமான மேய்ச்சல் நிலம் குடற்புழுத் தாக்குதல் அதிகமாகக் காரணமாகிறது. பண்ணையில் நிலவும் இடப்பற்றாக் குறையும், தூய்மையற்ற நிலையும் இந்தப் புழுக்களின் தாக்குதலுக்கு வாய்ப்பாக உள்ளன. கால்நடைகளை மூன்று விதமான குடற் புழுக்கள் தாக்குகின்றன. அவையாவன: தட்டைப் புழுக்கள், உருண்டைப் புழுக்கள், நாடாப்புழுக்கள்.
தட்டைப் புழுக்கள்
தட்டைப் புழுக்கள் அனைத்துக் கால்நடைகளையும், குறிப்பாக அசைபோடும் விலங்கினங்களில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும். தட்டைப் புழுக்களில் பல வகைகள் இருப்பினும், ஒருசில வகைகளால் அதிகளவில் பாதிப்பு ஏற்படும். இந்தப் புழுக்கள், வற்றிய குளங்களில் உள்ள நத்தைகள் மூலம் பல வளர்ச்சி மாற்றங்களை, அதாவது, மிரசிடியம், ரீடியா, செர்கேரியா ஆகிய மாற்றங்களை அடையும்.
பிறகு, இப்புழுக்கள் நத்தைகளில் இருந்து வெளியேறி, மெட்டாசெர்கேரியா என்னும் நிலையில், புற்களில் ஒட்டிக் கொள்ளும். இவை, மாடுகள் உண்ணும் புல்லுடன் சேர்ந்து வயிற்றுக்குள் சென்று தட்டைப் புழுக்களாக வளரும். பிறகு இப்புழுக்கள் இடும் முட்டைகள் சாணத்தின் வழியாக வெளியேறும்.
தட்டைப் புழுக்களில் ஒருவகையான ஆம்பிஸ்டோம் (amphistome) புழுக்கள், மாடுகள் மற்றும் ஆடுகளின் பெருவயிற்றில் உருண்டையாக இளஞ் சிவப்பு நிறத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும். இவற்றின் இளம் புழுக்களால் பாதிக்கப்படும் மாடுகளுக்குக் கழிச்சல் உண்டாகும். முதிர்ந்த புழுக்களால் உண்டாகும் பாதிப்புக் குறைவாகவே இருக்கும். மற்றொரு வகையான பேசியோலா (fasciolla) புழுக்கள், ஈரலைத் தாக்கி நோய்களை உண்டாக்கும்.
இவ்வகை இளம் புழுக்கள் ஈரலில் நுழைந்து ஈரல் செல்களைப் பாதிக்கச் செய்யும். இதனால், ஈரல் கல்லைப் போல மாறும். மேலும், பித்த நாளத்திலும் பாதிப்பை ஏற்படுத்திக் காமாலை நோயை உண்டாக்கும். புரதத்தின் அளவிலும் மாற்றத்தை உண்டாக்குவதால், கால்நடைகளின் தாடையில் வீக்கம் ஏற்படும்.
சிஸ்டோசோமியாசிஸ் என்னும் குறட்டை நோய்
சிஸ்டோசோமா நேசேல் (schistosomanasale) என்னும் தட்டைப் புழுக்கள், மாடுகளின் மூக்குப் பகுதியில் உள்ள இரத்தக் குழாயில் இருந்து கொண்டு தாக்குவதால் குறட்டை நோய் ஏற்படும். இந்தப் புழுக்கள் இடும் முட்டைகள் மூக்குத் தசையில் ஒவ்வாமையை உண்டு பண்ணும். இதனால் மூக்கில் காளிப்பிளவர் (cauliflower) போன்ற கட்டிகள் உருவாகும். எனவே, மாடுகள் மூச்சுவிட முடியாமல் தவித்துக் குறட்டை விடும். அப்போது சளியுடன் முட்டைகள் வெளியேறும்.
இந்நிலையில், நீர் நிலைகளில் மாடுகள் நீரைக் குடிக்கும் போது முட்டைகள் நீர்ப்பகுதியை அடையும். இந்தப் புழுக்களுக்கும் மற்ற புழுக்களைப் போலவே வளர்ச்சி நிலைகள் உண்டு. இம்முட்டைகள் நத்தைகளால் செர்கேரியா என்னும் நிலையில் வெளியேறும். இவை, நீரைப் பருக வரும் மற்ற மாடுகளின் தோலைத் துளைத்து உடலில் சென்று வளர்ந்து பிறகு மூக்கின் இரத்தக் குழாயை அடையும்.
நாடாப் புழுக்கள்
நாடாப் புழுக்கள் பல மீட்டர் நீளத்தில் நாடாவைப் போன்று காணப்படும். இப்புழுக்கள் மாடுகள் மற்றும் கன்றுகளின் குடற் பகுதியைத் தாக்கி வளரும். நாடாப் புழுக்களின் முட்டைகள் புல்லிலுள்ள பூச்சிகள் (grass mites) மூலம் வளர்ச்சி மாற்றத்தை அடையும். கால்நடைகள் புல்லை உண்ணும் போது அத்துடன் சேர்ந்து உடலுக்குள் செல்லும் நாடாப் புழுக்கள் அங்கே முழு வளர்ச்சியை அடையும். பிறகு, சாணத்தின் வழியாக ஓரிரு துண்டுகளாக முட்டைகளுடன் வெளியேறும். சில வேளைகளில் சாணத் துளையிலும் நாடாப் புழுக்களின் துண்டுகள் ஒட்டிக் கொண்டிருக்கும்.
உருண்டைப் புழுக்கள்
உருண்டைப் புழுக்களில் கீரிப்புழுக்கள், சிறிய புழுக்கள் என இரண்டு வகைகள் உண்டு. கீரிப்புழுக்கள் எனப்படும் பெரிய உருண்டைப் புழுக்கள், கன்றுகளை மிகப்பெரிய அளவில் தாக்கும். எருமைக் கன்றுகள் இப்புழுக்களால் மிக அதிகமாகப் பாதிக்கப்படும். சில வேளைகளில் தாய் வயிற்றில் இருக்கும் போதே கன்றுகள், உருண்டைப் புழுக்களால் தாக்கப்படும். நீண்ட பெரிய குடற் புழுக்கள், சிறுகுடலில் இருந்து கொண்டு, கன்றின் உணவைப் போட்டிப் போட்டு உண்ணும்.
இதனால், சத்துகள் குறைந்து கன்றுகள் சோகையால் பாதிக்கப்படும். குடற் புழுக்கள் இரத்தத்தை உறிஞ்சாது. ஆனாலும், குடலின் உட்பகுதியைக் கடித்துச் சிக்கலை உண்டாக்கும். சில வேளைகளில் குடலை முழுவதுமாக அடைத்து கன்றுகளில் இறப்பை ஏற்படுத்தும்.
சிறிய புழுக்கள் கன்றுகளையும் பெரிய பசுக்களையும் தாக்கும். பலவகை இனத்தைச் சேர்ந்த இப்புழுக்கள், இரைப்பை மற்றும் சிறுகுடலில் இருந்து இரத்தத்தை உறிஞ்சும். இதனால், கன்றுகள் இரத்தச் சோகையால் இறந்து விடும். பெரிய பசுக்களும் பாதிக்கப்படும். இரத்தத்தை உறிஞ்சும் இந்தப் புழுக்களின் முட்டைகள் சாணத்தின் வழியாக வெளியேறும். பிறகு முழு வளர்ச்சியை அடைந்து மாடுகளின் தோலைத் துளைத்து உடம்புக்குள் சென்று, இரத்தத்தின் வழியாகக் குடலை அடையும்.
தாக்கும் முறை
இப்புழுக்கள் கால்நடைகள் உண்ணும் தீவனத்தின் சத்தை 30 முதல் 40% வரை தின்று கால்நடைகளை பலவீனப்படுத்தும். மேலும், இவ்வேளையில் ஈரல், குடல், நுரையீரல், கல்லீரல், தசைகள் மற்றும் தோல் பகுதியைச் சேதப்படுத்தும். முதிர்ந்த சில உருண்டை மற்றும் நாடாப் புழுக்கள் குடலின் உணவோட்டப் பகுதிகளையும் அடைத்துக் கொள்ளும். சில நேரங்களில் பாதிப்பு அதிகமாகும் போது மாடுகள் இறக்க நேரிடும்.
நோய் அறிகுறிகள்: உணவு கொள்ளாமை
குடற்புழுத் தாக்கம் உள்ள கால்நடைகளில் பசியின்மை ஏற்படும். குடற் புழுக்கள் கோலிசிஸ்டோ கைனின் என்னும் ஒருவகைச் சுரப்புநீரை அதிகளவில் குடலில் சுரக்கச் செய்யும். இந்த நீரானது, மூளையில் உள்ள பசியைத் தூண்டும் செல்களை முடக்கிப் பசித் தூண்டலைக் குறைக்கும். குடற் புழுக்களால் தாக்கப்பட்ட கால்நடைகள் குறைந்தளவே தீனியை எடுப்பதால், அவற்றின் எடை குறைவதுடன் உற்பத்தித் திறனும் குறையும். மாடுகளின் தோல் பளபளப்புக் குறைந்து சொரசொரப்பாகக் காணப்படும். சில நேரங்களில் நீண்ட முடிகள் முளைத்திருக்கும்.
துர்நாற்றத்துடன் பேதி
குடற்புழுத் தாக்கத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கானது கரும்பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் அதிகமான நாற்றத்துடன் காணப்படும். மேலும், கழிவானது ஆசனவாய், வால் ஆகியவற்றைச் சுற்றி ஒட்டிக் கொண்டிருக்கும். அதிக வயிற்றுப் போக்கின் காரணமாக மாடுகளின் உடலில் நீரின் அளவு குறைந்து தோலானது மடிப்புடன் உலர்ந்து காணப்படும். குடற் புழுக்களால் தாக்கப்பட்ட குட்டிகளின் வயிறு பெருத்து நன்கு இறங்கிப் பானையைப் போலப் பெரிதாக இருக்கும்.
இரத்தச்சோகை
குடற்புழுக்கள் குடலின் பல இடங்களில் ஒட்டிக் கொண்டு தங்களின் வளர்ச்சிக்காக இரத்தத்தை உறிஞ்சும். சில உருண்டைப் புழுக்கள் ஒரு நாளைக்கு 0.5 மில்லி வீதம் இரத்தத்தை உறிஞ்சும். இதனால் மாடுகளுக்கு இரத்தச்சோகை ஏற்படும். மேலும், இதனால் செரிமானமும் குறையும்.
குடற் புழுக்கள் குடற் சுவரில் ஒட்டிக் கொண்டு அதன் முதிர்ந்த எபித்தீலியல் செல்களைப் பாதிக்கச் செய்யும். இந்தச் செல்கள் பாதிப்பதால் ஏற்படும் இடைவெளிகளில் புரத மூலக்கூறுகள் மற்றும் பிற பொருள்கள் ஊடுருவி வெளியே செல்வதால், இந்தப் பொருள்களின் அளவானது இரத்தத்தில் குறையும். இதனால், புரதச் செரிமானம் பாதிக்கப்படும். இதனால், முகம், கழுத்து, தாடைகளில் வீக்கம் காணப்படும்.
தடுப்பு முறைகள்
சாணத்தை முறையாக அவ்வப்போது கொட்டகையில் இருந்து நீக்க வேண்டும். தீவனத்தில் சாணம் கலப்பதைத் தவிர்க்க வேண்டும். ஈரமற்ற இடங்களில் கால்நடைகளை வளர்க்க வேண்டும். வற்றிய குளங்களில் கொஞ்சம் போல நீர் இருக்கும் போது மாடுகளை அங்கே மேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். குடற்புழு நீக்க மருந்துகளை அட்டவணைப்படி தவறாமல் அனைத்துக் கால்நடைகளுக்கும் சரியான நேரத்தில் கொடுக்க வேண்டும். தீவனம் மற்றும் தண்ணீர்த் தொட்டிகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மாட்டுக் கொட்டகை போதுமான இடவசதி மற்றும் காற்றோட்ட வசதி உள்ளதாக இருக்க வேண்டும்.
புதிதாக வாங்கும் மாடுகளை உடனடியாக பண்ணையில் உள்ள மாடுகளுடன் சேர்க்கக் கூடாது. அவற்றை ஒரு மாதம் வரையில் தனியாகக் கட்டி வைத்து, நோய்த்தாக்கம் ஏதும் உள்ளதா எனக் கண்காணிக்க வேண்டும். பிறகு, தடுப்பூசியைப் போட்டுப் பண்ணை மாடுகளுடன் சேர்க்க வேண்டும்.
சிகிச்சை முறை
குடற்புழு நீக்கத்தைக் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி கால்நடை வளர்ப்போரே செய்யலாம். குடற்புழு நீக்க மருந்துகள் மருந்தகங்களில் கிடைக்கும். அவற்றில் சில மருந்துகள்: அல்பென்டசோல், பென்பென்டசோல், தையபென்டசோல், டெட்ராமிசோல், மெபன்டசோல் மற்றும் உருண்டைப் புழுக்கள் மற்றும் நாடாப்புழுக்களைக் கட்டுப்படுத்த ஒரே வகையான மருந்துகள் கிடைக்கும். தட்டைப் புழுக்களைக் கட்டுப்படுத்த, கால்நடை மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற வேண்டும்.
மருத்துவர் வ.பா.இராகவேந்திரன்,
வேளாண்மைக் கல்லூரி, கிள்ளிக்குளம், திருநெல்வேலி மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!