சீட்ஸ் அறக்கட்டளையின் தேனீ வளர்ப்புத் திட்டம்!

தேனீ HP 5 scaled

ரசோ அல்லது தனியார் நிறுவனமோ ஒரு திட்டத்தை மக்களிடம் கொண்டு போகும் போது, அவர்களின் பங்களிப்பும் அதில் இருக்குமானால், அத்திட்டம் எதிர்பார்த்த இலக்கையும் கடந்து வெற்றியைப் பெறுகிறது.

மக்களின் ஆதரவு இல்லாத திட்டம் இலக்கை அடைய முடியாமல் முடங்கி விடுகிறது. அதனால் தான், அரசும் சரி, தனியார் நிறுவனங்களும் சரி, ஒவ்வொரு திட்டத்தையும் மக்களின் ஆதரவுடன் செயல்படுத்த விரும்புகின்றன.

இவ்வகையில், மக்கள் பங்கேற்பு முறையில் இயற்கையைப் பாதுகாத்தல், இயற்கை வளங்களை மேம்படுத்துதல், புதிய காடுகளை உருவாக்குதல்,

அந்தப் பகுதியில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துதல் ஆகிய பணிகளை, திண்டுக்கல் சீட்ஸ் அறக்கட்டளை, கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து செய்து வருகிறது.

இதையொட்டி, அய்யலூர் மற்றும் கடவூர் வனப்பகுதியில் உள்ள கிராமங்கள் மற்றும் அங்கே வாழும் மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் பணிகளைத் தொடங்கிய போது, அழிந்து வரும் அரிய உயிரினப் பட்டியலில் உள்ள தேவாங்குகள் இங்கே வாழ்வதை அறிந்த சீட்ஸ் அறக்கட்டளை, அந்த உயிரினத்தைக் காப்பதிலும், பெருக்குவதிலும் பெருமுயற்சி எடுத்து வந்தது.

ஏனைய சூழலியல் ஆர்வலர்களும் தேவாங்குகளைக் காப்பதற்கான கோரிக்கையை அரசுக்கு விடுத்து வந்தனர். அதன் பயனாக, தமிழக அரசு, அந்தப் பகுதியை, கடவூர் தேவாங்கு சரணாலயமாக அறிவித்துள்ளது.

இந்தப் பகுதி காப்புக்காடாக அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், இங்கே விளையும் கிழங்கு வகைகள், மூலிகை வகைகள், தேன், சுண்டைக்காய், களாக்காய் போன்ற வனப் பொருள்களைச் சேகரித்து விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து,

தங்களின் வாழ்க்கையை நகர்த்தி வந்த இப்பகுதி மக்களின் வாழ்க்கை ஆதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

தேனீ IMG 8426

இந்தச் சிக்கலில் இருந்து இங்குள்ள மலைவாழ் மக்களை விடுவித்து, இவர்களுக்கு வாழ்வாதாரத்தை அமைத்துத் தரும் வகையில், சீட்ஸ் அறக்கட்டளை, பெட்டி முறை தேனீ வளர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் குறித்து இதன் நிறுவனர் பி.முத்துசாமி நம்மிடம் கூறியதாவது:

“நீர், நிலம், வனம் போன்ற இயற்கை வளங்களைப் பாதுகாப்பது, அவற்றை மேலும் மேம்படுத்துவது, வறுமையில் வாழக்கூடிய மலைவாழ் மக்கள், மீனவர்கள், பட்டியலின மக்கள், பெண்கள் போன்றோரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது,

குழந்தைகளின் கல்வி வளர்ச்சி மற்றும் அவர்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது, சீட்ஸ் அறக்கட்டளையின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.

இவற்றின் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர், கரூர் மாவட்டம் கடவூர் வனப் பகுதிகளில் பணிகளைச் செய்யலாமென முடிவெடுத்தோம். அதற்காக, இங்கே உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வன கிராமங்களில் வாழும் மக்களைச் சந்தித்தோம்.

அப்போது தான் இங்கே அரிய உயிரினமான தேவாங்குகள் இருப்பதும், அவை, விளையாட்டுப் பொருளாக, அபசகுனமாகக் கருதப்பட்டு, பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வந்ததும், மூட நம்பிக்கையில் கொல்லப்படுவதும் தெரிய வந்தது.

இங்குள்ள மக்கள் தங்கள் உணவுக்காக, பணத்துக்காக, இந்தக் காடுகளில் கிடைக்கும் தேன், மூலிகைகள், கிழங்குகள், காய் கனிகள் போன்றவற்றைச் சேகரிக்கச் செல்லும் போதும், இந்தத் தேவாங்குகள் அஞ்சிப் பதுங்கும் நிலை ஏற்படுகிறது. அதனால், இவற்றைக் காப்பதும் எங்களின் முக்கியப் பணியாகி விட்டது.

தேனீ BOX NEWS 1

தேவாங்கினால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. அதனால் யாருக்கும் எந்தப் பாவமோ அபசகுனமோ ஏற்படப் போவதில்லை. அது மிகவும் பயந்த குணமுள்ள சின்னஞ்சிறிய உயிரினம். தேவாங்கு விளையாட்டுப் பொருளல்ல.

அதனால், அதை எல்லோரும் அரவணைத்துப் பாதுகாக்க வேண்டும் என்னும் விழிப்புணர்வை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரிடமும் கொண்டு சென்று அதில் வெற்றி பெற்றோம்.

அடுத்து, வனத்தில் கிடைக்கும் பொருள்கள் தான் இந்த மக்களின் வாழ்வாதாரமாக இருப்பதால், இந்த வனத்தை மட்டுமே நம்பி வாழாத சூழ்நிலையை உருவாக்க வேண்டுமென நினைத்து,

வருங்கால மக்களாகிய பள்ளிக் குழந்தைகளுக்கு வேண்டிய எழுது பொருள்கள், விளையாட்டுப் பொருள்கள் போன்றவற்றை வாங்கிக் கொடுத்து, அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவினோம். இன்றும் தொடர்ந்து செய்து வருகிறோம்.

பள்ளிக் கல்வியை முடித்த மாணவர்கள், கலைக் கல்லூரிகளில், தொழில் கல்லூரிகளில் படிப்பதற்கு உதவி செய்து வருகிறோம். இது மட்டுமல்ல, இப்படிப் படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கிக் கொடுத்து வருகிறோம்.

இந்த வனத்தில் இண்டம்பூ தேன், குறிஞ்சிப்பூ தேன், வெப்பாலைத் தேன், புளியம்பூ தேன், வேப்பம்பூ தேன், ஊனாங்கொடித் தேன் போன்ற தேன் வகைகள் கிடைக்கின்றன.

இந்தத் தேனை எடுப்பதற்காகச் செல்லும் மலை மக்கள், தீயைக் கொளுத்தி, தேனீக்களை விரட்டுகிறார்கள். இதனால் தேனீக்கள் அழிவதுடன், காடும், எண்ணற்ற உயிரினங்களும், அந்தத் தீயினால் எரிந்து அழியும் சூழ்நிலை உண்டாகிறது.

தேனீ BOX NEWS 3

ஏற்கெனவே, பயிர்களைக் காப்பதற்காகத் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளால், தேனீக்கள் அழிந்து வருவதை நாம் நன்றாக அறிவோம். மகரந்தச் சேர்க்கைக்குப் பெரியளவில் உதவி செய்யும் தேனீக்கள் அழிந்தால், உணவு உற்பத்திக் கடுமையாகப் பாதிக்கப்படும்; உணவுப் பற்றாக்குறை ஏற்படும்.

அதனால் தான், தேனீக்கள் அழியுமானால், மனித இனமும் அழிந்து விடும் என்று எச்சரிக்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள். மேலும், இப்போது இந்த மலைப்பகுதி தேவாங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டு விட்டதால், யாரும் விருப்பம் போல உள்ளே செல்லவும் முடியாது.

ஆனால், வனத்தில் கூடு கட்டும் தேனீக்களை, வனத்துக்கு வெளியே பாதுகாப்பாகப் பெட்டியில் வளர்த்தால், வனத்தைக் காக்கலாம், தேனீக்களைப் பாதுகாக்கலாம், தேனீக்களைத் திட்டமிட்டு வளர்த்து, சுகாதாரமான முறையில், தேனைச் சீராக அறுவடை செய்து கொண்டே இருக்கலாம்.

பல்லுயிர்ச் சூழலையும் பெருக்கலாம். எனவே, இந்த நன்மைகளை எல்லாம் கருத்தில் கொண்டு, அய்யலூர், கடவூர் மலைப் பகுதிகளில், தேன் வேட்டையைத் தொழிலாகக் கொண்டுள்ள மலை மக்களுக்கு, தேனீ வளர்ப்புப் பெட்டிகளை வழங்க முடிவு செய்தோம்.

இதன் முதற்கட்டமாக, ஓர் ஆய்வைச் செய்தோம். அதில், ஊருக்குப் பத்துக் குடும்பங்கள், மலைக்குள் சென்று தேன் எடுப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தது தெரிய வந்தது.

இவர்கள் தேனை எடுக்கும் விதம், தேனீ இனத்தையே அழிக்கும் வகையில் இருந்தது. அதாவது, நெருப்பை எரித்துத் தேனீக்களை விரட்டுவது, சுத்தமில்லாமல் தேனடையைக் கசக்கிப் பிழிந்து, தேனை எடுத்து விட்டு, அந்த அடையை அங்கே தூக்கிப் போட்டு விட்டு வந்து விடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். 

அதனால், முதலில் இந்த மலைப்பகுதி மக்களை அழைத்துக் கூட்டம் போட்டு, மலைக்குள் சென்று தேனீக்களைத் தீ வைத்து விரட்டி விட்டுத் தேனை எடுப்பதால் இராணித் தேனீ, தேனீக்கள், தேனீக் குஞ்சுகள் அழிவது,

இதனால், விவசாய மகசூல் பாதிக்கப்படுவது, தீ வைப்பதால் வனம் பாதிக்கப்படுவது, எடுக்கும் தேன் சுத்தமில்லாமல் இருப்பது போன்ற தீமைகளை எடுத்துக் கூறியதுடன், தேனீக்களைப் பெட்டிகளில் வளர்ப்பதால் கிடைக்கும் பயன்களையும் அவர்களுக்குப் புரிய வைத்தோம்.

 

நாங்கள் பல ஆண்டுகளாக இந்த மக்களுடன் பழகி வருவதாலும், பல்வேறு உதவிகளைச் செய்து வருவதாலும், எங்களின் சொல்லுக்கும் செயலுக்கும் மதிப்பளித்து, பெட்டித்தேனீ வளர்ப்பில் ஈடுபட விருப்பம் தெரிவித்தார்கள். 

இதைத் தொடர்ந்து, தேன் வேட்டையாளர்களையே, தேனீப் பராமரிப்போராக மாற்றினோம். மேலும் ஒவ்வொரு வீட்டிலுமுள்ள கணவன், மனைவி ஆகிய இருவரும் தெரிந்து கொள்ளும் வகையில், தேனீ வளர்ப்புப் பயிற்சியைக் கொடுத்தோம்.

அதற்குப் பிறகு, தேனீப் பெட்டிகளைக் கொடுத்தோம். அதாவது, 2017 ஆம் ஆண்டில் முப்பது பெட்டிகள், 2018 ஆம் ஆண்டில் முப்பது பெட்டிகளைக் கொடுத்தோம்.

ஆனாலும், 2020 ஆம் ஆண்டு வரையில், நாங்கள் எதிர்பார்த்த அளவில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆனால், அதற்காகச் சோர்ந்து விடாமல், நாங்கள் தொடர்ந்து இந்தப் பணியில் ஈடுபட்டு வந்தோம்.

2020 ஆம் ஆண்டில் நாற்பது பெட்டிகளைக் கொடுத்தோம். அதற்குப் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அய்யலூர் மற்றும் கரந்தமலைப் பகுதியில் 2021 ஆம் ஆண்டில் 200 பெட்டிகள், 2022 ஆம் ஆண்டில் 200 பெட்டிளைக் கொடுத்தோம்.

மேலும், கையுறை, தலைக்கவசம், முகக்கவசம், ஸ்மோக்கர், அடையிலிருந்து தேனைப் பிழியும் கருவி, வடிகட்டி போன்ற பொருள்களையும் கொடுத்துள்ளோம். தேனீக்கள் மிகவும் விரும்பும் மருதாணி, வாகை, எள், கம்பு போன்ற தாவரங்களை வளர்க்கும்படியும் ஊக்கப்படுத்தி வருகிறோம்.

உலகத்தேனீ வளர்ப்புத் திட்டம் மூலம், குடும்பத்துக்கு ஐந்து தேனீப் பெட்டிகள் வீதம் கொடுத்து வருகிறோம். இவற்றில் மூன்று பெட்டிகள் மார்த்தாண்டம் பகுதியிலுள்ள தேனீக்களுடன் இருக்கும்.

இரண்டு பெட்டிகள் காலிப் பெட்டிகளாக இருக்கும். இந்த இரண்டு பெட்டிகளில் மார்த்தாண்டம் மற்றும் உள்ளூர் தேனீக்களின் கலவையில், புதிய தேனீக் கூட்டத்தை, இவர்களே உருவாக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம்.

தேனீ IMG 8397

நாங்கள் செயல்படுத்தும் பெட்டி முறை தேனீ வளர்ப்பு, இருநூறு குடும்ப மக்களின் நான்கு மாத வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. இவர்களில் நாற்பது குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மிகச் சிறப்பாகத் தேனீ வளர்ப்பச் செய்து வருகிறார்கள்.

ஒரு பெட்டி மூலம் ஓராண்டில் சுமார் பத்து கிலோ தேனை அறுவடை செய்கிறார்கள். இந்தத் தேனை விலைக்கு விற்பது ஒருபுறம் இருந்தாலும், அவர்கள் இந்தத் தேனைச் சாப்பிட்டு உடம் நலம் பேண வேண்டுமென்று, குறிப்பாக, குழந்தைகள், கர்ப்பிணிகள் அவசியம் தேனைச் சாப்பிட வேண்டுமென்று வலியுறுத்துகிறோம்.  

எங்களின் இந்த முயற்சியால், தேவாங்கு சரணாலயப் பகுதிக்குள் தேன் வேட்டையாளர்கள் நுழையும் சூழல் மாறியிருக்கிறது; இதனால், தேனீக்களின் அழிவு தடுக்கப்பட்டுள்ளது; தேனீக்கள் பெருகி வருகின்றன; தேனீக்களால் விவசாய மகசூல் கூடி வருவதை விவசாயிகள் அனுபவித்து வருகின்றனர்.

எனவே, தேனீக்களைப் பாதுகாக்கும் விதமாக, பயிர்ப் பாதுகாப்புக்காக, இரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிப்பதைத் தவிர்த்து, இயற்கை விவசாய முறைக்கு விவசாயிகள் மாறி வருகின்றனர். இதனால், சூழல் மாசு குறையும் நிலை உருவாகியுள்ளது.

சுத்தமான, சுகாதாரமான தேன் சேகரிப்பு உறுதி செய்யப்படுகிறது; தேனீக்கள், தேவாங்குகள் மீதான அச்சுறுத்தல், அழிவு, வனத்தின் மீதான நெருக்கடி போன்றவற்றுக்குத் தீர்வு கிடைத்துள்ளது.

முன்பு, பிழைப்புத் தேடி இப்பகுதி மக்கள் இடம் விட்டு இடம் மாறும் சூழ்நிலை இருந்து வந்தது. அதனால், இங்குள்ள குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாக இருந்தது.

இப்போது அந்தக் குழந்தைகள் ஒரே இடத்தில் நிரந்தரமாக இருந்து கல்வி கற்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. இந்தக் கல்வி இவர்களின் வாழ்க்கை நிலையை மாற்றியமைக்கும் போது, இவர்கள் இந்த மலையை நம்பி இருக்கப் போவதில்லை. அதனால், இந்த மலைப் பகுதியின் பல்லுயிர்ச்சூழல் மேலும் மேலும் வளரும்.

தேனீ IMG 9856

அதனால் தான், பெட்டி முறை தேனீ வளர்ப்பை, ஒரு சமுதாயத் திட்டமாகச் செயல்படுத்தும் நோக்கில், எங்கள் நிறுவன ஒருங்கிணைப்பாளர்கள் திரு.அய்யப்பன், திரு.அருண், திரு.வெள்ளைச்சாமி, திரு.பொன்ராஜ் மற்றும் தேனீ வளர்ப்போர் ஒத்துழைப்புடன் முழு வீச்சில் இயங்கிக் கொண்டுள்ளோம்.

உலகத்தேனீ வளர்ப்புத் திட்டத்தில், இங்குள்ள இருநூறு மலைக் கிராமங்களில் ஊருக்கு ஐந்து குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து, குடும்பத்துக்குப் பத்துப் பெட்டிகள் வீதம் பத்தாயிரம் பெட்டிகளைக் கொடுத்துத் தேனீ வளர்ப்பை மேலும் ஊக்கப்படுத்த வேண்டும் என்பது எங்களின் அடுத்தநிலை இலக்காகும்.

ஆகையால், தேனீக்கள், தேனீப் பெட்டிகள், தேனீ வளர்ப்புப் பயிற்சி தேவைப்படுவோர் எங்களை நாடலாம்.  

இப்படி, எங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதுடன், அரசு உதவிகளைப் பெற்றுத் தரவும் முயற்சி செய்வோம். இந்த மக்கள் சேகரித்த, இண்டம்பூ தேன், குறிஞ்சிப்பூ தேன், வெப்பாலைத் தேன், புளியம்பூ தேன், வேப்பம்பூ தேன், ஊனாங்கொடித் தேன் போன்ற தேன் வகைகள், எங்களிடம் இருப்பில் உள்ளன.

தேன் மிகச் சிறந்த மருந்துப் பொருள். எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய பொருள். மலைவாழ் மக்களின் வாழ்க்கைக்கு உதவும் வகையில், பொது மக்கள் இந்தத் தேன் வகைகளை வாங்கிப் பயன்படுத்தலாம்.

மொத்தமாகவோ, சில்லறையாகவோ தேன் தேவைப்படுவோர் 99443 45060 என்னும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’’ என்றார்.


பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading