நெற்பயிரைத் தாக்கும் வெட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?

வெட்டுப் புழு Pachai boomi Cutwarm

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020

நெற்பயிரில் வெட்டுப் புழுக்களின் தாக்குதல் மதுரை மாவட்டத்தின் சில இடங்களில் உள்ளது. இவை திடீரெனத் தோன்றிப் பயிரைத் தாக்கி அதிகளவில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும். வயலில் நாற்றுகள் தூர்ப்பிடிக்கும் வரையிலும், நாற்றங்காலிலும் இப்புழுக்கள் தாக்கும். இதனால், 20% இழப்பு அல்லது 100% இழப்புக் கூட ஏற்படும். இவை, கோரைப்புல், முட்டைக்கோசு, காலிஃபிளவர், கடுகு, டர்னிப், ப்ரகோலி, கரும்பு, எருமைப்புல், மற்ற புல் வகைகள் மற்றும் களைச்செடிகளையும் உண்ணும்.

அடையாளம்

தாய்ப்பூச்சியின் முன் இறக்கைகள், அடர் பழுப்பு நிறத்தில் வளைந்த கோடுகள் மற்றும் முக்கோணக் கரும்புள்ளிகளுடன் இருக்கும். பின் இறக்கைகள் அடர் வெள்ளையாகவும், ஓரங்களில் கறுப்பாகவும் இருக்கும். கோளவடிவில் 5-6 முட்டைக் குவியல்களை இலையின் நுனியில் இட்டுச் செதிகளால் மூடிவிடும். ஒரு குவியலில் 150-200 முட்டைகள் இருக்கும். இவ்வகையில் ஒரு தாய்பூச்சி தன் வாழ்நாளில் 2,750 முட்டைகளை இடும். முட்டைப் பருவம் 3-9 நாட்களாகும்.

காலை நேரத்தில் முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும். கறுப்பாக இருக்கும் இக்குஞ்சுகள், இலை நுனியிலுள்ள பச்சையத்தைச் சுரண்டித் தின்னும். புழுப்பருவம் 17-32 நாட்களாகும். முதிர்ந்த புழு, 3.8-4.0 செ.மீ. நீளத்தில், மேலேயும் பக்கவாட்டிலும், பச்சை, பழுப்பு நிறங்களில் நீண்ட பட்டைகளுடன் இருக்கும். பட்டைகளின் மேல்பகுதி சிவப்பாக, இரு வரிசையில் சி வடிவக் கரும்புள்ளிகளுடன் இருக்கும். பிறகு, மண்ணில் கூட்டுப்புழுவாக மாறிக் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். கூட்டுப்புழுப் பருவம் 7-10 நாட்களாகும்.

தாக்குதல் அறிகுறிகள்

பகலில் மண்கட்டிகளின் இடைவெளி, மண் வெடிப்புகள், இடுக்குகள், களைச்செடிகள் போன்றவற்றில் மறைந்திருக்கும் இப்புழுக்கள், இரவில் நெற்பயிரின் நுனி, இலையோரங்களைக் கடித்தும், நாற்றுகளைத் துண்டித்தும் சேதத்தை விளைவிக்கும். இவை கூட்டமாகப் படையைப் போலக் கிளம்பித் தாக்குவதால், நாற்றங்கால், நேரடி நெல் விதைப்பு நிலங்கள், மாடு மேய்ந்ததைப் போல இருக்கும். பொதுவாக, நடவு வயலில் இவற்றின் தாக்கம் இருப்பதில்லை. 6-7 வாரத்துக்கு மேலான பயிர்களையும் அதிகமாகத் தாக்குவதில்லை.

பருவக்காலம் தொடங்கியதும் இவற்றின் தாக்கமும் தொடங்கி விடும். நீர் நன்கு வடிக்கப்படாத 2-20 நாள் வயதுள்ள நாற்றுகளை அதிகமாகத் தாக்கும். தொடக்க நிலைப் புழுக்களால் சேதம் வெளியே தெரிவதில்லை. ஆனால், மூன்றாம் நிலைப் புழுக்களாக இவை மாறியதும் சேத அறிகுறிகள் தெரியும். பயிர்களை முழுமையாகத் தாக்கி முடித்ததும், வயலில் நீரில்லா நிலையில், இரவு நேரத்தில் அருகிலுள்ள வயல் அல்லது புல்வெளிக்குக் கூட்டமாகச் சென்று விடும்.

அக்டோபர்-டிசம்பர் காலப் பயிரில் இவற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும். இப்புழுக்கள் முதிர்ந்து பூச்சியான பிறகு அதிகத் தொலைவுக்குப் பறந்து செல்லும். நெற்பயிர் இல்லாத போது களைச்செடிகளில் வாழும்.

கட்டுப்படுத்துதல்

மிகுதியாக இருக்கும் நாற்றுகளை, வரப்பிலுள்ள களைகளை அகற்ற வேண்டும். நாற்றங்காலில் நீரை வடித்து விட்டு, புழுக்களை வயலை விட்டு மேலே வரச் செய்து, பறவைகளுக்கு இரையாக்கலாம். வாத்துகளை நாற்றங்காலில் விட்டுப் புழுக்களை உண்ணச் செய்யலாம். வயலைச் சுற்றி அகழியை அமைத்து நீரைத் தேக்கி, அதில் சிறிதளவில் ம.எண்ணெய் அல்லது பூச்சிக்கொல்லி மருந்தைக் கலந்து விட்டால், இதில் விழும் புழுக்கள் அழியும்; அடுத்த வயலுக்குச் செல்வதும் தடுக்கப்படும்.

எக்டருக்கு 50 பறவைத் தாங்கிகளை வைத்துப் பறவைகளை அமர வைத்து அவற்றுக்குப் புழுக்களை இரையாக்கலாம். எக்டருக்கு ஒரு விளக்குப்பொறியை இரவு 7-10 மணி வரை எரிய விட்டு, அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். எக்டருக்கு 2 லிட்டர் வீதம் ம.எண்ணெய்யை ஊற்றி, ஒரு கயிறால் பயிர்களை அசைத்து விட்டால், தூரிலே ஒட்டிக்கொண்டிருக்கும் புழுக்கள், ம.எண்ணெய் கலந்த நீரில் விழுந்து சாகும்.

எக்டருக்கு 25 கிலோ வீதம் 2% மாலத்தியான் அல்லது 1.5% குளோரிபைரிபாஸ் நனையும் தூளை வரப்பு ஓரங்களில் இட்டால், இப்புழுக்கள் அழிந்து போவதுடன் இடம் பெயர்வதும் தடுக்கப்படும். ஒரு எக்டருக்கு, 2.5 லிட்டர் குளோரிபைரிபாஸ் 20 இ.சி. அல்லது ஒரு லிட்டர் ட்ரை அசோபாஸ் 40 இ.சி. மருந்தைக் கைத்தெளிப்பான் மூலம் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.


வெட்டுப் புழு USHA RANI.B rotated e1629486799751

முனைவர் பா.உஷாராணி,

முனைவர் கு.செல்வராணி, முனைவர் செல்வி ரமேஷ்,

வேளாண்மை அறிவியல் நிலையம், மதுரை-625104.

பகிருங்கள்:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!