இலவங்கப் பட்டை மரம் எங்கு வளரும்? எப்படி வளர்க்கலாம்?

இலவங்கப் பட்டை மரம்

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020

லவங்கப் பட்டை நறுமணப் பயிராகும். இதிலிருந்து பட்டை, இலை மற்றும் எண்ணெய் ஆகிய நறுமணப் பொருள்கள் கிடைப்பதால், இது நறுமணப் பயிர்களில் தனியிடத்தைப் பெற்றுள்ளது. கேரளம், கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் இது பயிரிடப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இப்பயிர் அதிகமாகக் காணப்படுகிறது.

தட்பவெப்பம் மற்றும் மண்

இலவங்கப்பட்டை மரம் நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் கலந்த களிமண்ணில் நன்கு வளரும். கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரம் வரை பயிரிடலாம். மேலும் 20-30 டிகிரி சென்டிகிரேட் வெப்பமுள்ள பகுதி மற்றும் ஆண்டுக்கு 200-250 செ.மீ. மழையுள்ள பகுதியில் இம்மரம் நன்கு வளரும்.

இரகங்கள் 

பி.பி.ஐ. 1: இந்த இரகம் பேச்சிப்பாறைத் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள இனங்களிலிருந்து திறந்தவழித் தேர்வு முறையில் உருவாக்கப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து 100-500 மீட்டர் உயரம் மற்றும் அதிகளவில் மழையுள்ள இடங்களில் நன்கு வளரும். முப்பது ஆண்டுகள் வரை நல்ல உற்பத்தியைக் கொடுக்கும். ஜூன், ஜூலையில் அதிக மகசூலைத் தரும் இந்த இரகம், எக்டருக்குச் சுமார் 980 கிலோ கிராம் பட்டையைத் தரும்.

ஏற்காடு 1: இந்த இரகம் ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் உருவாக்கப்பட்டது. எக்டருக்கு 360 கிலோ உலர் பட்டை கிடைக்கும். பட்டையில் 2.8%, இலையில் 3% எண்ணெய்யும் கிடைக்கும். இது மிதமான காரத்துடன் இருக்கும்.

இனப்பெருக்கம்

இலவங்கப் பட்டை மரம், விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. பதியன் மற்றும் குச்சிகள் மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. விதைகளை நன்கு முதிர்ந்த பழங்களிலிருந்து எடுத்து, நன்றாகக் கழுவி உலர வைத்து விதைக்க வேண்டும். நெடுநாட்கள் வைத்திராமல் நடவு செய்தால் நல்ல முளைப்புத்திறன் கிடைக்கும். விதைத்து 10-20 நாட்களில் முளைக்கும். மேட்டுப்பாத்திகளில் அல்லது நெகிழிப் பைகளில் விதைக்கலாம். பைகளில், 3:3:1 என்னுமளவில் மண்: மணல்: தூளாக்கப்பட்ட நன்கு மட்கிய சாணம் ஆகியவற்றை நிரப்ப வேண்டும்.

பருவம் மற்றும் நடவு

ஓராண்டு நாற்றுகளை ஜூன், ஜூலையில் நட்டால் மழையீரத்தில் நாற்றுகள் நன்கு வேரூன்றி வளரும். ஒரு குழியில் ஐந்து நாற்றுகள் வரை நடலாம். மூன்று மீட்டர் இடைவெளியில் 50x50x50 செ.மீ. அளவுள்ள குழிகளில் இயற்கை உரங்களை நிரப்பி நட வேண்டும்.

பின்செய் நேர்த்தி

பருவமழை முடிந்ததும் களைகளை அகற்ற வேண்டும். மேல்மண்ணைக் கொத்திவிட்டு வேருக்குக் காற்றோட்டத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். 20 கிராம் தழைச்சத்து, 18 கிராம் மணிச்சத்து, 25 கிராம் சாம்பல் சத்தை முதலாண்டில் இட வேண்டும். அடுத்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டி, பத்தாம் ஆண்டில் குழிக்கு 200 கிராம் தழைச்சத்து, 180 கிராம் மணிச்சத்து, 200 கிராம் சாம்பல் சத்தை வேண்டும். இந்த உரத்தை இரு பாகமாகப் பிரித்து வடகிழக்கு மற்றும் தென்மேற்குப் பருவமழை முடிந்ததும் இட வேண்டும். முதல் மூன்று ஆண்டுகளுக்குக் கோடையில் பாசனம் அவசியமாகும். அதன் பிறகு தேவையைப் பொறுத்துப் பாசனம் செய்யலாம்.

பயிர்ப் பாதுகாப்பு

இலைப்புள்ளி நோய்: இது, கொலிட்டோட்ரைக்கம் என்னும் பூசணத்தால் ஏற்படும். இலைகளில் சிறு பழுப்புப் புள்ளிகள் தோன்றி, ஒன்றுடன் ஒன்று இணைவதால் இலைகள் காய்ந்து விடும். இதைக் கட்டுப்படுத்த, நோயுற்ற கிளைகள் முழுவதையும் வெட்டி எடுத்து விட வேண்டும். பின்னர் ஒரு சத போர்டோ கலவையைத் தெளிக்க வேண்டும்.

நாற்றுக்கருகல் நோய்: நாற்றங்காலில் உள்ள நாற்றுகள் திடீரெனக் கருகி மடிந்து விடும். உடனே காய்ந்த செடிகளை அகற்றிவிட்டு ஒரு சத போர்டோ கலவையைத் தெளிக்க வேண்டும்.

ஊதா நோய்: மழைக்காலத்தில் ஊதா நிறப் பூசணம் படர்ந்து கிளைகளை மடியச் செய்யும். இதைக் கட்டுப்படுத்த, ஒரு சத போர்டோ கலவையை, பருவமழை தொடங்குவதற்கு முன் தெளிக்க வேண்டும்.

அறுவடை

10-15 மீட்டர் உயரம் வளரும் இம்மரங்களை இரண்டு ஆண்டுக்குப் பிறகு, நில மட்டத்திலிருந்து 15 செ.மீ. விட்டுவிட்டு வெட்ட வேண்டும். இதனால், அதிகக் கிளைகள் உற்பத்தியாகும். நான்காம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை கிளைகளை வெட்டிப் பட்டையை எடுக்கலாம். அதாவது, 5-10 செ.மீ. விட்டமுள்ள கிளைகள் மரநிறத்துக்கு வந்ததும் 1-1.5 மீட்டர் நீளமுள்ள குச்சிகளாக வெட்ட வேண்டும். பிறகு மேல்தோலைச் சுரண்டி விட்டுப் பட்டையை உரித்தெடுத்து 4-5 நாட்கள் நிழலில் உலர்த்தித் தரம் பிரித்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.

மகசூல்

ஒரு மரத்தில் இருந்து 100 கிலோ கிராம் உலர் பட்டை கிடைக்கும். ஒரு எக்டரில் இருந்து ஆண்டுக்கு 35 கிலோ இலவங்க எண்ணெய் கிடைக்கும்.


மரம் M.ANAND e1629384041160

முனைவர் மா.ஆனந்த்,

முனைவர் பி.ஆர்.கமல்குமரன், முனைவர் அ.சங்கரி, முனைவர் எஸ்.நந்தக்குமார்,

தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், ஏற்காடு-636602.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!