அதிக வருமானத்தைத் தரும் நிலக்கடலை விதை உற்பத்தி!

நிலக்கடலை Groundnut 2 2

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2015

மிழ்நாட்டில் நிலக்கடலை சுமார் 22.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 6 லட்சம் டன்கள் உற்பத்தியாகிறது. திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. நிலக்கடலை சாகுபடிக்குத் தேவையான தரமான விதைகள் உரிய காலத்தில் கிடைப்பது என்பது இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை. ஆகையால், நிலக்கடலை விதைகளை உற்பத்திச் செய்வதன் மூலம் அதிக வருமானத்தைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், தரமான நிலக்கடலை விதைகள் உரிய காலத்தில் வேளாண் பெருமக்களுக்குக் கிடைக்கவும் வழிவகை செய்யலாம். தானிய உற்பத்தியில் பசுமைப் புரட்சியின் மூலம் தன்னிறைவைக் கண்டது போல், எண்ணெய் உற்பத்தியில் தரமான விதை உற்பத்தியின் மூலம் மஞ்சள் புரட்சியைச் செய்து தன்னிறைவையும், அதிக இலாபத்தையும் பெறலாம்.

விதைப்பு, விளைநிலத் தேர்வு

விதை உற்பத்திக்குச் சரியான பருவத்தில் விதைப்பது மிகச்சிறந்தது.  பூச்சி நோய்த் தாக்குதலைத் தவிர்க்க, வறட்சியைத் தவிர்த்திட, அதிக மழைநீரினால் பயிர்கள் பாதிக்காமலிருக்க, பூக்காமல் இருப்பதைத் தவிர்க்க, அறுவடை சமயத்தில் அதிக மழையைத் தவிர்த்திட மற்றும் மகசூலை அதிகரிக்கத் தகுந்த பருவம் மிகவும் அவசியம். நிலக்கடலை விதைப்புக்குச் சிறந்த பருவம் ஜுன்-ஜுலை மற்றும் டிசம்பர்-ஜனவரி மாதங்களே ஆகும். நல்ல வளமான செம்மண்பாங்கான காற்றோட்டமும், வடிகால் வசதியும் உடைய நிலமாக இருக்கவேண்டும். போரான் மற்றும் கால்சியக் குறைபாடு இல்லாமல் இருக்க வேண்டும். அப்போது தான் தரமான நல்ல விதைகளைப் பெற முடியும். 

இரகம் மற்றும் விதைத் தேர்வு

சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய இரகங்கள் அல்லது பிரபலமாக உள்ள இரகங்களை விதை உற்பத்திக்குத் தேர்வு செய்ய வேண்டும். எடுத்துக்காட்டு: டி.எம்.வி.-7, வி.ஆர்.ஐ.-2, டி.எம்.வி.-13, கோ-6. விதைகளை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களான வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள், மாநில விதை நிறுவனங்கள், மத்திய விதை நிறுவனங்கள், வேளாண்துறை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றிலிருந்து பெற வேண்டும். விதைப்பதற்கு வெகுநாள் முன்னதாகவே விதைக்கடலையை தோலுரித்து வைக்கக்கூடாது.  

மேலும், கைளினால் தோலுரிப்பது நல்லது. விதை பருப்புகளில், உடைந்த, நிறமாறிய, சுருங்கிய, சிறிய பருப்புகளைப் பிரித்து எடுத்து விட்டுத் தரமான விதைகளையே விதைக்கப் பயன்படுத்த வேண்டும். விதைப்பதற்கு முன் முளைப்புத்திறனைச் சோதிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்குச் சிறிய விதைகளை உடைய டி.எம்.வி.2, டி.எம்.வி.7 மற்றும் டி.எம்.வி.13 போன்ற இரகங்கள் என்றால் 50-55 கிலோ விதைகளும், பெரிய விதைகளை உடைய வி.ஆர்.ஐ.-2, ஜே.எல்.24, கோ-6 போன்ற இரகங்கள் என்றால் 55-60 கிலோ விதைகளும் தேவைப்படும்.

விதை முளைக்கட்டுதல்

இரண்டு கிலோ விதைக்கு 5 கிராம் கால்சியம் குளோரைடை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்துக்கொள்ள வேண்டும்.  அதுபோல 28 லிட்டர் கரைசலைத் தயார் செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட கரைசலில் விதையை ஆறுமணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு விதைகளை எடுத்து ஈரச்சாக்கின் மீது பரப்ப வேண்டும். அதனை மற்றொரு ஈரச்சாக்குக் கொண்டு 12 மணி நேரம் மூடி வைக்க வேண்டும். இதற்குப் பிறகு விதைகளில் கருமுளை வெளிவந்திருக்கும். இவ்வாறு முளை கண்ட விதைகளைப் பிரித்தெடுத்து நிழலில் உலர்த்த வேண்டும்.

மிக நீளமாக முளைக்கரு வெளிவந்த விதைகளையும் இறந்த விதைகளையும் தனித்தனியாகப் பிரித்தெடுக்க வேண்டும். இவ்வாறு நல்ல தரமான முளைப்புத் திறனுள்ள விதைகளைத் தேர்வு செய்து விதைப்புக்குப் பயன்படுத்துதல் அவசியம். மீதமுள்ள விதைகளை ஈரச்சாக்கால் மறுபடியும் மூடி 2 மணி நேரத்திற்கு ஒரு தடவை கருமுளை வந்த விதைகளைச் சேகரிக்க வேண்டும். முளை விட்ட விதைகளை நிழலில் நன்கு உலர்த்தி விதைப்புக்குப் பயன்படுத்தலாம். 

விதை நேர்த்தி

நிலக்கடலையில் விதை மூலமும் மண் மூலமும் பரவும் வேர் அழுகல், தண்டழுகல் மற்றும் இலைப்புள்ளி நோய்களைக் கட்டுப்படுத்தவும், பயிர் எண்ணிக்கையைச் சீராகப் பராமரிக்கவும் உயிரியல் பூஞ்சாணக் கொல்லி டிரைக்கோடெர்மா விரிடியை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் எடுத்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். காற்றில் கரைந்துள்ள நைட்ரஜன் சத்தைப் பயிருக்கு அளிக்க, டி.என்.ஏ.யூ.14 ரைசோபியம் (3 பாக்கெட்-200 கிராம்) என்ற நுண்ணுயிரைக் கொண்டும் விதை நேர்த்தி செய்து பின்னர் விதைக்க வேண்டும்.

நிலம் மற்றும் பயிர் விலகு தூரம்

விதை உற்பத்திக்குத் தேர்ந்தெடுத்த நிலத்தை 4-5 முறை நன்கு உழவு செய்து புழுதியாக்கிக்கொள்ள வேண்டும்.  கடைசி உழவிற்கு முன் ஒரு ஏக்கருக்கு 5 டன் மக்கிய தொழுவுரத்தை இடவேண்டும். மண்ணின் தன்மை மற்றும் நீர் பிடிப்பு ஆகியவற்றைப் பொறுத்து பாத்திகளை அமைத்துக்கொள்ள வேண்டும். நிலக்கடலை தன் மகரந்தச் சேர்க்கைப் பயிராகும். ஆகையால், இரண்டு நிலக்கடலை இரகங்களைப் பயிரிடும்போது, ஒரு இரகத்திற்கும் மற்றொரு இரகத்திற்குமான இடைவெளி குறைந்தது 3 மீட்டர் இருக்கவேண்டும்.

பயிர் இடைவெளி

வரிசைக்கு வரிசை 30 செ.மீ. செடிக்குச் செடி 10 செ.மீ. இடைவெளி இருக்குமாறு விதைக்க வேண்டும். விதைக்கப்படும் விதைகள் 4 செ.மீ. ஆழத்திற்குக் கீழே சென்றுவிடக் கூடாது. ஒரு சதுர அடிக்கு 33 செடிகள் இருக்குமாறு பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும்.

உர நிர்வாகம்

பயிர்கள் செழித்து வளர்வதற்கும், அதிக மகசூல் பெறுவதற்கும் ஒருங்கிணைந்த உர நிர்வாகம் மிகவும் அவசியமாகும்.  ஒரு ஏக்கருக்கு ஜிப்சம் 80 கிலோ, தொழுவுரம் 5 டன் மற்றும் அடியுரமாக 10 கிலோ தழைச்சத்து, 20 கிலோ மணிச்சத்து, 30 கிலோ சாம்பல் சத்து ஆகிய உரங்களை இடவேண்டும். இத்துடன் போராக்ஸ் 4 கிலோ மற்றும் நுண்ணூட்டக் கலவை 5 கிலோவை, விதைப்பு முடிந்தவுடன் நிலத்தின் மேல் இடவேண்டும். செடிகள் நன்கு வளர்ந்து அதிகக் காய்கள் பிடித்து மகசூல் அதிகரிக்க, விதைத்த 25 மற்றும் 35 ஆம் நாட்களில் பூக்கும் தருணத்தில் TNAU நிலக்கடலை ரிச் (2.2 கிலோ/200 லிட்டர் நீர்) ஊட்டச்சத்தைத் தெளிக்க வேண்டும்.

களை நிர்வாகம்

நிலத்தில் உள்ள பயிர்ச்சத்து வீணாவதைத் தவிர்த்திடவும், களைகள் மூலம் மண், ஈரம் விரயமாவதைத் தவிர்த்திடவும், பயிர்களுக்குப் போதிய சூரிய ஒளி கிடைத்திட மற்றும் பூச்சி நோய்கள் பரவாமல் தடுத்து அதிக விளைச்சலைப் பெறுவதற்கு ஒரு ஏக்கருக்கு புளுகுளோரலின் களைக்கொல்லியை 800 மில்லி என்ற அளவில் விதைத்த 3 நாட்களுக்குள் நிலத்தில் தெளித்துக் களைகளைக் கட்டுப்படுத்தலாம். விதைத்த 45ஆம் நாள் மண்ணை அணைக்க வேண்டும். மண்ணை அணைப்பதால் விழுதுகள் எளிதில் மண்ணில் இறங்குவதற்கு ஏதுவாகி, செடியில் அதிக எண்ணிக்கையில் காய்கள் பிடிக்கும்.

ஜிப்சம் இடுதல்

ஒரு ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சத்தை, விதைத்த 40-45ஆம் நாள் இட்டுச் செடிகளைச் சுற்றி மண்ணை அணைக்க வேண்டும். ஜிப்சத்தில் சுண்ணாம்புச் சத்தும், கந்தகச்சத்தும் அடங்கி உள்ளன. சுண்ணாம்புச்சத்து காய்கள் திரட்சியாகவும், அதிக எடை உடையதாகவும் உருவாக வழி செய்கிறது.  கந்தகச்சத்து நிலக்கடலையில் எண்ணெய்ச்சத்தை அதிகரிக்கிறது.

நீர் நிர்வாகம்

வயலில் களைகள் பெருகுவதைத் தடுக்கவும், பூச்சி நோய்க் கட்டுப்பாட்டிற்கும் செடிகள் நன்கு வேரூன்றி காய்கள் பிடிக்கவும் சிறந்த நீர் நிர்வாகம் மிக முக்கியமாகும். நிலக்கடலை விதை உற்பத்தியில், விதைக்கும் சமயம், விதைத்த 4-5ஆவது நாளில் உயிர்த் தண்ணீர், விதைத்த 20-22ஆம் நாள், விழுது இறங்கும் சமயம், காய்ப்பிடிப்பு மற்றும் முதிர்ச்சியடையும் தருணத்தில் நீர் பாய்ச்ச வேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பு

பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல் தென்பட்டவுடன், பரிந்துரைக்கப்படும் பூச்சி மற்றும் பூஞ்சாணக் கொல்லி மருந்துகளைத் தெளித்துக் கட்டுப்படுத்துவதன் மூலம் மகசூல் இழப்பைத் தவிர்க்கலாம்.

கலவன் நீக்குதல்

இரண்டு அல்லது மூன்றுமுறை கலவன் பயிர்களை நீக்க வேண்டும். மெலிந்த, நோய்கள் தாக்கிய, மாறுபட்ட குணாதிசயங்களைக் கொண்ட மற்றும் வரிசையிலிருந்து தள்ளி முளைத்த  செடிகளை அகற்ற வேண்டும். பூக்கும் தருணத்தில், மாறுபட்ட செடி அமைப்பு, மாறுபட்ட பூவிதழ்கள் மற்றும் மாறுபட்ட கிளை அமைப்பைக் கொண்ட செடிகளை அகற்ற வேண்டும். காலதாமதமாக பூக்கும் செடிகளையும் அகற்ற வேண்டும். அறுவடை செய்யும்போது, நோய்களினால் பாதிக்கப்பட்ட காய்கள் உள்ள செடிகள் மற்றும் மாறுபட்ட காய் அமைப்பைக் கொண்ட செடிகளையும் அகற்ற வேண்டும்.

விதை அறுவடை மற்றும் சேமிப்பு

சரியான தருணத்தில் அறுவடை செய்வது தரமான விதை உற்பத்தியில் மிக முக்கியப் பகுதியாகும். உரிய காலத்தில் திட்டமிட்டு அறுவடை செய்வதனால் நிலக்கடலையில் சேதாரத்தைக் கட்டுப்படுத்தலாம். நுனி இலை மஞ்சளாக மாறுதல் மற்றும் அடி இலைகள் காய்ந்து உதிர்வது பயிர் முதிர்ச்சி அடைந்ததற்கு அறிகுறியாகும். சில செடிகளைப் பிடுங்கிக் காய்களை உடைத்துப் பார்க்கும்போது தோலின் உட்பாகம் கரும்பழுப்பு நிறமாக இருந்தால் அறுவடைக்குத் தயார் என்று கொள்ளலாம். இந்த நிலையில், செடிகளைப் பிடுங்கிக் காய்களைப் பிரித்தெடுக்க வேண்டும்.

அறுவடையின்போது காய்களில் கிட்டத்தட்ட 35-40 சதவிகித ஈரப்பதம் இருக்கும். அதனால், காய்களை இரண்டு மூன்று நாட்கள் நன்கு வெய்யிலில் உலர்த்த வேண்டும். 12 சத ஈரப்பதம் வரும் வரை காய வைத்துப் பின்னர்க் காய்களை நல்ல கோணிப்பைகளில் சேமித்து வைக்கவேண்டும். பாசன சாகுபடியில் ஒரு ஏக்கருக்கு 900-1100 கிலோ மகசூல் கிடைக்கும்.


நிலக்கடலை DR.P.MURUGAN

முனைவர் பெ.முருகன்,

பா.குமாரவேல், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம்

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!