உருளைக் கிழங்கைத் தாக்கும் நோய்கள்!

Pachai Boomi - Potatoes 1

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2018

க்களால் மிகவும் விரும்பி உண்ணப்படுவது உருளைக் கிழங்கு. இந்தியாவில் சுமார் இருபது இலட்சம் எக்டரில் சாகுபடி செய்யப்படும் இப்பயிர் மூலம், 46 மில்லியன் டன் உருளைக்கிழங்கு விளைகிறது. தமிழ்நாட்டில், நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பெருமளவில் சாகுபடியில் உள்ளது. தற்போது அனைத்துப் பகுதிகளிலும் மாடித் தோட்டங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. நோய்கள் தாக்கினால் உருளைக்கிழங்கு உற்பத்தி வெகுவாகக் குறையவோ அல்லது முழுமையாகப் பாதிக்கவோ வாய்ப்புள்ளது. எனவே, இந்தப் பயிரைத் தாக்கும் நோய்களைத் தடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

பின் கருகல் நோய்: பைட்டோப்தோரா இன்பேஸ்டன்ஸ்

இந்நோய், தண்டு, இலை, கிழங்கு எனப் பயிரின் அனைத்துப் பகுதிகளையும் தாக்கி மகசூல் இழப்பை ஏற்படுத்தும். தொடக்கத்தில் இலையில் நீர்க்கசிவுடன் தோன்றும் அடர் புழுப்புப் புள்ளி, பிறகு இலை முழுதும் பரவிக் கறுப்பாக மாறும். நோயுற்ற இலையின் பின்புறத்தில் வெண்மைப் பூசண வளர்ச்சி இருக்கும். இப்பூசணம் தண்டு மற்றும் கிழங்கில் பரவும். இதனால் தண்டு வலுவிழந்து உடைந்து விடும். அடர் பழுப்புப் புள்ளிகள் கிழங்கின் மேற்பரப்பில் பரவுவதால், கிழங்கின் நடுப்பகுதி வரையில் துருப் பிடித்ததைப் போல் காணப்படும். இந்நோய் அயர்லாந்தில் 1845இல் மிகப்பெரிய பஞ்சத்தை ஏற்படுத்தியது. இந்நோய், பாதிக்கப்பட்ட கிழங்கு, மண், காற்று மூலம் பரவும்.

சாதக நிலை: ஈரப்பதம் 90%க்கு மேல் இருத்தல், வெப்பநிலை 10-25 டிகிரி செல்சியல் மற்றும் இரவு வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ்க்குக் கீழே இருத்தல்.

கட்டுப்படுத்தும் முறைகள்: குப்ரி நவீன், குப்ரி ஜீவன், குப்ரி அலன்கார், குப்ரி காசி, குப்ரி மேடி போன்ற நோயெதிர்ப்புள்ள இரகங்களைச் சாகுபடி செய்தல். விதைக் கிழங்குகள் எவ்வித நோய்த் தொற்றோ காயமோ இல்லாமல் இருத்தல். நடவு செய்து ஒரு மாதத்திற்குப் பின் கீழ்க்காணும் பூசணக்கொல்லி மருந்துகளை 10-15 நாட்கள் இடைவெளியில் தெளித்தல். முதல் தெளிப்பு: பாஸிடைல் அலுமினியம் 0.1 சதவீத அளவில், அதாவது, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் வீதம் கலந்து தெளித்தல்.

இரண்டாம் தெளிப்பு: காப்பர் ஆக்ஸி குளோரைடு 0.3 சதவீதம் தெளித்தல். மூன்றாம் தெளிப்பு: பாஸிடைல் அலுமினியம் 0.1 சதவீதம் தெளித்தல். நான்காம் தெளிப்பு: மேங்கோசிப் 0.2 சதவீதம். அறுவடைக்குச் சில நாட்களுக்கு முன்பு நோயுற்ற இலைகளைச் சேகரித்துக் களைக்கொல்லியைத் தெளிப்பதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

கருந்திரள் நோய்: ரைசோக்டோனியா சொலானி

இந்நோய், கிழங்கு, வளரும் மொட்டு, ஓடுதண்டு மற்றும் பயிரின் அடிப்பகுதியைத் தாக்கும். நோயுற்ற கிழங்குகளின் மேற்பரப்பில் கறுப்புப் புள்ளி, கருமை அல்லது பழுப்புப் பொக்குகள் தோன்றும். நோய் தீவிரமானால், பழுப்பு நிறமானது கறுப்புத் திரளாக மாறும். பாதிக்கப்பட்ட பகுதியில் திசுக்கள் அழுகி உலர்ந்து கடினமாகி விடும். இந்நோய் விதைக் கிழங்குகள் மூலம் பரவுகிறது.  மிதமான குளிர், ஈர வானிலை மற்றும் 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை, நோய் வளர்ச்சிக்குச் சாதகமாக அமைகின்றன.

கட்டுப்படுத்தும் முறைகள்: நோயற்ற விதைக் கிழங்குகளை மட்டுமே நடவு செய்தல். நன்கு முளைப்பு வந்த கிழங்குகளை மேலோட்டமாக நடவு செய்தல். பாதிக்கப்பட்ட நிலத்தில் தொடர்ந்து உருளை சாகுபடியைத் தவிர்த்தல். விதைக் கிழங்குகளை, 0.1 சத பாதரச குளோரைடு கரைசலில், அதாவது, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி வீதம் கலந்த கலவையில், அல்லது ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் கார்பன்டசிம் வீதம் கலந்த கலவையில், ஒன்றரை மணி நேரம் வைத்திருந்து நடுதல்.

முன் இலைக்கருகல் நோய்: அல்டர்னேரியா சொலானி

இந்நோய், மலை மற்றும் சமவெளியில் மிகுந்த சேதத்தை ஏற்படுத்தும்.  ஆரம்பத்தில் இலைகளின் மீது வெளிர் பழுப்பு நிறத்தில் ஒழுங்கற்ற புள்ளிகள் தோன்றும். நோய் தீவிரமானால் இலை முழுதும் பரவும். அதனால் இலை காய்ந்து உதிர்ந்து விடும். புள்ளிகளில் வட்ட வளையங்கள் காணப்படும். சில சமயங்களில் கிழங்கில் ஓட்டைகள் காணப்படும். இந்நோய் முதலில் இலைகளின் மூலம் பரவும். அடுத்த நிலையில், காற்றின் மூலம் அடுத்தடுத்த பயிருக்குப் பரவும்.

சாதக நிலை: விட்டு விட்டுப் பெய்யும் மழைக்குப் பின் உலர்ந்த சூடான வானிலை. வெப்பநிலை 25-30 டிகிரி செல்சியஸ் இருத்தல். பயிருக்குத் தேவையான உரம் இல்லாதிருத்தல்.

கட்டுப்படுத்தும் முறைகள்: நோயற்ற கிழங்குகளை நடுதல். நோய் எதிர்ப்புத் தன்மையுள்ள குப்ரி சிந்தூரி இரகத்தைப் பயிரிடுதல். நோயுற்ற பயிரிலிருந்து விழும் இலைகளை அகற்றி அழித்தல். ஏனெனில் இதன் மூலமே முதன்மைத் தொற்று ஏற்படுகிறது. ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் மேங்கோசிப் அல்லது சினப் வீதம் கலந்து தெளித்தல். பின்பு 15-20 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை தெளித்தல். நோய் தீவிரமானால், ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் அஸாக்சிஸ்ட்ரோபின் வீதம் கலந்த கலவையைத் தெளித்தல்.

தக்கை போன்ற பொருக்கு: ஸ்ட்ரெப்டோமைசிஸ் ஸ்காபீஸ்

கிழங்கின் மேல் ¼ அங்குல அளவில் துருவைப் போன்ற புள்ளிகள் இருக்கும். இதன் மேற்புறம் கடினமாகவும் சொரசொரப்பாகவும் இருக்கும். நோயுற்ற  திசுக்கள் பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும். நோய்க்காரணி நிலத்தில் நிலைத்திருந்து ஒவ்வொரு ஆண்டும் நோயை ஏற்படுத்தும். நோயுற்ற கிழங்கு மற்றும் மட்கிய தொழுவுரத்தின் மூலம் இந்நோய் பரவும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: நோயற்ற கிழங்குகளை நடுதல். நடவுக்கு முன் நிலத்தில் இயற்கை உரம் மற்றும் எக்டருக்கு 32 கிலோ பிசிஎன்பியை இடுதல். விதைக் கிழங்குகளில் உள்ள நோய்க் காரணியை அழிக்க, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி பாதரச குளோரைடு வீதம் கலந்த கரைசலில் விதைக் கிழங்குகளை ஒன்றரை மணி நேரம் வைத்திருந்து நடுதல். குறைந்த உவர் மண்ணில் அதிகப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், காரத்தன்மையைக் குறைக்க, ஜிப்சத்தை ஒரு மாதத்திற்குப் பின் இடுதல். நோயுற்ற சமயத்தில் ஒரு லிட்டர் நீருக்கு மூன்று மில்லி காப்பர் ஹைட்ராக்ஸைடு வீதம் கலந்த கலவையைத் தெளித்தல்.

பழுப்பு மோதிர அழுகல் நோய்: பர்கோல்டெரியா சொலனேசியாரம்

இந்நோய், கிழங்கு உருவாகும் சமயத்தில் தீவிரமாக இருக்கும். நோயுற்ற செடிகள் வளர்ச்சிக் குன்றி இருக்கும். திடீரெனத் தாக்கிச் செடிகளை இறக்கச் செய்வது இதன் முக்கியக் குணமாகும். இலைகள் முதலில் வாடி பின் மஞ்சளாகிக் காய்ந்து விடும். கிழங்கில் நீர்க்கசிவுடன் கூடிய வட்ட வளையங்கள் தென்படும். இதிலிருந்து பாக்டீரியா வெளியேறுவதால் கெட்ட நாற்றம் அடிக்கும். நோயானது மண் மற்றும் காற்று மூலம் பரவும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: நோயற்ற கிழங்குகளை நடுதல். கோதுமை, உருளை என, பயிர்ச் சுழற்சி முறையைக் கடைப்பிடித்தல். நடவுக்கு முன் எக்டருக்கு 15-20 கிலோ பிளீச்சிங் பொடியைத் தூவுதல். ஒரு லிட்டர் நீருக்கு 3 மில்லி காப்பர் ஹைட்ராக்ஸைடு வீதம் கலந்த கலவையைத் தெளித்தல். நோயெதிர்ப்புள்ள சொலனம் புரோஜா என்னும் சிற்றினத்தைப் பயன்படுத்துதல்.

மெல்லழுகல்: எர்வினியா கரடோவோரா

இந்நோய், கறுப்பழுகல், மெல்லழுகல் என இரண்டு விதங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். கறுப்பழுகல் செடியின் அடிப்பகுதியில் உள்ள தண்டில் நீர்க்கசிவுடன் ஏற்படும். பின்பு அடிப்பகுதி முழுவதும் அழுகி அடர் பழுப்பு நிறமாகி விடும். இறுதியில் செடி முழுமையாகக் காய்ந்து விடும். மெல்லழுகல், கிழங்கில் மென்மையான சிவப்பு அல்லது கறுப்பு நீர்க்கசிவுடன் வளையமாகத் தோன்றி, பின்பு கிழங்கு முழுதும் பரவும். இதனால் கிழங்கு முழுவதும் பாதிக்கப்பட்டு, பெரியளவில் மகசூல் இழப்பு ஏற்படும். அதிக ஈரப்பதம் நோய்க்குச் சாதகமான நிலையாகும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: நோயற்ற கிழங்குகளைப் பயன்படுத்தினால் நோய்த் தாக்கத்தைக் குறைக்கலாம். ஒரு லிட்டர் நீருக்கு 30 மில்லி போரிக் அமிலம் வீதம் கலந்த கலவையில், விதைக் கிழங்குகளை அரை மணி நேரம் ஊற வைத்து நிழலில் உலர்த்தி நட வேண்டும். நடவு நேரத்தில் எக்டருக்கு பிசிஎன்பி 30 கிலோ வீதம் நிலத்தில் தூவ வேண்டும். நோயுற்ற செடிகளின் அருகிலுள்ள செடிகளின் வேர்ப் பகுதியில், ஒரு லிட்டர் நீருக்கு 3 மில்லி காப்பர் ஆக்ஸி குளோரைடு வீதம் கலந்த கரைசலை ஊற்ற வேண்டும்.

உருளைக்கிழங்கு தேமல் நோய்: உருளைக்கிழங்கு வைரஸ் ஒய்

இந்த நச்சுயிரி தாக்கிய செடிகள் வளர்ச்சிக் குன்றியிருக்கும். இலைகள் இளம் வெளிர் பச்சையாக மாறி விடுவதால் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்படும். கிழங்குகள் உருமாறியும், இலைகள் ஒழுங்கற்றுச் சிறுத்தும் காணப்படும். இலை நரம்புகள், கிளை நரம்புகள் கடினமாகவும், மடிந்தும், இலையோரம் சுருண்டும் காணப்படும். இந்நோயை அசுவினிகள் மற்ற செடிகளுக்குப் பரப்பும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: நோயற்ற கிழங்குகளை நடுதல். அசுவினியைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 80 மில்லி இமிடாகுளோபிரிட் அல்லது 80 கிராம் தையோமிதக்சாம் மருந்தைத் தெளித்தல். நோயுற்ற செடிகளை அகற்றி அழித்தல்.


உருளைக் கிழங்கை Narayanan e1645014878842

.நாராயணன்,

தொழில் நுட்ப வல்லுநர், வேளாண்மை அறிவியல் நிலையம்,

கீழ்நெல்லி-604410, திருவண்ணாமலை மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!