கட்டுரை வெளியான இதழ்: மே 2021
தமிழகத்தில் செயற்கை முறைக் கருவூட்டல் காரணமாக, அதிகப் பாலைத் தரும் ஜெர்சி மற்றும் ஹோல்ஸ்டின், பிரிசியன் கலப்பினப் பசுக்கள் அதிகமாக உள்ளன. இதனால், பால் உற்பத்தியில் பெருத்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கலப்பினக் கறவை மாடுகளில் நோயெதிர்ப்புத் திறன் குறைவாக இருப்பதால், அவை தொற்று நோய்களால் பாதிக்கப்படுகின்றன.
இதனால் கறவை மாடுகள் வளர்ப்பில் ஆண்டுதோறும் தமிழக விவசாயிகளுக்கு ரூ.500 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. நோய்கள் வராமல் இருக்க, நோய்த் தடுப்புப் பராமரிப்பு, தீவனப் பராமரிப்பு, இனவிருத்திப் பராமரிப்பு போன்றவற்றில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்தப் பராமரிப்பு முறைகளில் கவனக்குறைவு ஏற்பட்டாலும் கறவை மாடுகளின் உடல் நலம் கெட்டு, தொற்று நோய்கள் தாக்க வாய்ப்புள்ளது.
மாடுகள் நோயுறுவதற்கு முக்கியக் காரணம் நுண்ணுயிரிகள், நச்சுயிரிகள் மற்றும் ஒட்டுண்ணிகளாகும். இவை உடலினுள் சென்று உறுப்புகளைப் பாதிக்கச் செய்வதால் நோய் உண்டாகிறது. இந்தக் கிருமிகள் மேய்ச்சல் நிலங்களில் பல ஆண்டுகள் உயிருடன் இருக்கும். மாசடைந்த மேய்ச்சல் நிலங்களில் மாடுகள் மேயும் போது இக்கிருமிகள் உடலினுள் செல்லும். மேலும் சில கிருமிகள் தீவனம், குடிநீர், சுவாசிக்கும் காற்று மூலம் உடலினுள் செல்லும்.
சில சமயங்களில் மனிதர்கள் மூலமும் நோய் பரவும். அதாவது, நோயுற்ற மாடுகளைத் தொட்டு விட்டு நல்ல மாடுகளைத் தொடும் போது இக்கிருமிகள் அவற்றைச் சென்றடையும். மாடுகள் மிக நெருக்கமாக இருக்கும் போதும் நோயுற்ற மாடுகளில் இருந்து மற்ற மாடுகளுக்கு நோய் தொற்றிக் கொள்ளும். அதனால், நோயுற்ற மாடுகளைத் தனியாகப் பிரித்து வைக்க வேண்டும்.
மேலும், புதிதாகப் பண்ணைக்கு வரும் மாடுகளில் நோய்க் கிருமிகள் இருக்கலாம். இவை ஏற்கெனவே பண்ணையில் உள்ள மாடுகளில் பரவி விடாமல் இருக்க, இந்த மாடுகளை 3-4 வாரம் வரையில் தனியாக வைத்திருக்க வேண்டும்.
அடைப்பான் நோய்
இது, பாசில்லஸ் ஆந்த்ராசிஸ் என்னும் நுண்கிருமியால் ஏற்படுவது. இந்நோய், மாடுகளை மட்டுமின்றி, மனிதர்களையும் தாக்கும். இந்நோய்க் கிருமிகள் உடலில் இருந்து வெளியேறியதும் காற்றுடன் சேர்ந்து விரைவில் அழிக்க முடியாத ஸ்போர்களாக மாறி விடும். இக்கிருமிகள் தம்மைச் சுற்றி, கெட்டியான கவசத்தை ஏற்படுத்திக் கொள்ளும்.
கிருமிநாசினியால் எளிதில் இந்தக் கவசத்தினுள் சென்று இந்தக் கிருமிகளை அழிக்க முடியாது. இந்த ஸ்போர்கள் நிலத்தில் தங்கி அவ்வப்போது மாடுகளைத் தாக்கி, பெருத்த பொருள் சேதத்தை ஏற்படுத்தும். இத்துடன் நீரில் கலந்து நெடுந்தூரம் சென்று பிற மாடுகளுக்கும் நோயை ஏற்படுத்தும்.
நோய் அறிகுறிகள்
மிக வீரிய தாக்கம்: இந்த நிலையில், மாடுகளில் எந்தவொரு நோய் அறிகுறியும் தெரிவதற்கு முன்பே அவை திடீரென்று இறந்து விடும். இறந்ததும், மூக்கு, வாய், ஆசனம் மற்றும் பிறப்புறுப்பில் இருந்து கரும் இரத்தம் வெளியேறும். இந்த இரத்தம் உறையாது. நோயுற்ற மாடுகள் அதிகக் காய்ச்சலுடன் அமைதியின்றி, அதிர்ச்சியடைந்த நிலையில் இருக்கும்.
வீரிய தாக்கம்: இந்த நிலையில், மாடுகளில் காய்ச்சல் அதிகமாகும். தீவனத்தை உண்ணாமல் இருக்கும். கருச்சிதைவு ஏற்படும். பால் உற்பத்திக் குறையும். பாலில் மஞ்சள் நிறம் அல்லது இரத்தம் கலந்திருக்கும்.
தடுப்பு முறைகள்: நோய்த் தாக்கம் ஏற்படும் பகுதிகளில், நோய் வருவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே மாடுகளுக்கு அடைப்பான் தடுப்பூசியைப் போட வேண்டும். நோயில்லாப் பகுதிகளில் தடுப்பூசியைப் போடத் தேவையில்லை.
இந்நோயால் மாடுகள் இறந்தால், இரத்தப் பரிசோதனை செய்து நுண்ணுயிரிகள் இருப்பதை உறுதி செய்த பின்பு சுகாதார முறைப்படி, இரண்டு மீட்டர் ஆழமுள்ள குழியில் புதைக்க வேண்டும். அல்லது எரித்து விட வேண்டும். மாட்டின் தோலை உரிக்கவோ அல்லது பிரேதப் பரிசோதனை செய்யவோ கூடாது.
இரத்தக் கசிவுடன் உள்ள பொருள்கள் அனைத்தையும் எரித்துவிட வேண்டும். அந்த இடத்தை 3% பினாயில் கரைசலால் சுத்தம் செய்ய வேண்டும். இந்நோய்க் கிருமிகள் ஸ்போர்களாக மாறி விட்டால், 15% லைசால் அல்லது 5-10% பார்மலின் சோடியம் ஹைட்ராக்சைடு போன்ற, அதிகத் திறனுள்ள கிருமிநாசினிகளைப் பயன்படுத்த வேண்டும்.
முனைவர் க.தேவகி,
வேளாண்மை அறிவியல் நிலையம், முனைவர் கா.செந்தில் குமார்,
கால்நடை முதுகலை அறிவியல் ஆராய்ச்சி நிலையம்,
முனைவர் ப.இரா.நிஷா, வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம்.