கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2018
பன்றிப் பண்ணையானது, மக்கள் வாழுமிடம், பால் பண்ணை மற்றும் மற்ற கால்நடைப் பண்ணையிலிருந்து 30 மீட்டர் தூரம் விலகியிருக்க வேண்டும். போக்குவரத்து மற்றும் விற்பனை வாய்ப்புள்ள இடத்துக்கு அருகில் இருக்க வேண்டும். 24 மணி நேரமும் தரமான குடிநீர் மற்றும் மின்சார வசதி இருக்க வேண்டும். தீவனப்புல் மற்றும் மரங்களை வளர்ப்பதற்குத் தேவையான இட வசதிகள் இருக்க வேண்டும்.
தட்பவெப்ப நிலைகளில் இருந்தும், நோய்களில் இருந்தும், ஒட்டுண்ணிகளின் தாக்கத்திலிருந்தும் பன்றிகளைக் காப்பதற்கு ஏற்றவாறு கொட்டகையை அமைத்தல் அவசியம். நல்ல காற்றோட்டம், மேடான, மழையால் பாதிக்கப்படாத, வடிகால் வசதியுள்ள இடத்தில் பண்ணையை அமைக்க வேண்டும்.
முடிந்த வரையில் செலவைக் குறைத்துத் திடமான கொட்டகையை, பன்றிகளின் நலத்தைப் பாதுகாக்கும் வகையில் அமைக்க வேண்டும். முக்கியமாக வடிகால் வசதி சரியாக இருக்க வேண்டும். தரையானது அடிக்கு அடி கால் அங்குலம் சரிவாக இருக்க வேண்டும். இது, கொட்டகையை அலசும் நீர் சுத்தமாக வெளியேற உதவும்.
பன்றிகள் தங்கும் இடத்துக்கு வெளிப்பக்கமாக வடிகால் அமைய வேண்டும். இது 4 அங்குல ஆழம் 6 அங்குல அகலம் இருந்தால் போதும். வடிகாலை மூடி வைக்கக் கூடாது. தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட குட்டிகள் அறை, வளரும் பன்றிகள் அறை, கிடா பன்றிகள் அறை, ஈனும் அறை என்னும் வரிசையில் தனித்தனி அறைகள் இருக்க வேண்டும்.
திறந்தவெளி வளர்ப்பு முறை
பன்றிகளை இயற்கையான சூழ்நிலையில் திறந்த வெளிகளில் வளர்க்கலாம். இடம் விட்டு இடம் நகர்த்தக் கூடிய சிறிய கொட்டில்கள் மட்டும் இருந்தால் போதும். இதில் செலவும் மிகவும் குறைவு. இம்முறை வளர்ப்பில் நோய்ப் பரவலைத் தடுப்பது சிறிது சிரமம். உண்ணும் உணவுக்கு நிகரான உடல் எடை கிடைக்காமல் போகலாம். ஆனால், தட்ப வெப்பம் சீராக உள்ள இடங்களிலும், வேலையாட்கள் கிடைக்காத இடங்களிலும் இம்முறை சிறந்ததாகும். சாதாரண இடங்களில் ஏக்கருக்கு 8-10 பன்றிகளையும், நல்ல புல் வசதியுள்ள இடங்களில் ஏக்கருக்கு 10-20 பன்றிகளையும் வளர்க்கலாம். களிமண் நிலம் இம்முறை வளர்ப்புக்கு உதவாது. பன்றிகள் தங்குமிடம் அடிக்கடி மாற்றப்பட வேண்டும்.
பன்றி வளரும் இடத்தைச் சுற்றிலும் வேலி அமைக்க வேண்டும். இந்த வேலியானது, அவ்வப்போது மாற்றும் வகையில் இருக்க வேண்டும். மழை அல்லது அதிக வெய்யில் காலத்தில் பன்றிகள் தங்கிக்கொள்ள, மரத்திலான சிறிய குடிசையை அமைக்கலாம். பன்றிகள் ஈனுவதற்கு வசதியாக, 10க்கு 10அடி கூரையுடன், 10க்கு10 அடி வேலியிட்ட திறந்தவெளி கொட்டகை தேவை. ஈனுவதற்கு ஒரு வாரம் முன்பே சினைப் பன்றியை இங்கு விட்டுவிட வேண்டும். ஈன்ற பின் 40 நாட்கள் கழித்து இடமாற்றம் செய்து விடலாம்.
கொட்டகை மற்றும் திறந்தவெளி வளர்ப்பு முறை
இந்த முறையில் சற்று விலையுயர்ந்த கட்டடங்கள் அமைக்கப்படும். தீவனம் அளித்தல், எடை போடுதல் முதலியன எளிதில் நடக்கும். நோய்ப் பரவல் கட்டுப்படுத்தப்படும். மழையும் வெப்பமும் நிறைந்த பகுதிகளுக்கு இம்முறை சிறந்தது. இந்த முறையில் கொட்டிலின் ஒரு பகுதி கூரையுடனும், அதையொட்டித் திறந்த வெளியும் அமைக்கப்படும்.
கொட்டகை அமைத்தல்
கொட்டகையின் நீளவாட்டம் கிழக்கு மேற்கில் அமைய வேண்டும். இதனால், சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பும் நல்ல காற்றோட்ட வசதியும் கிடைக்கும். பன்றிகளின் உடலில் வியர்வைச் சுரப்பிகள் இல்லாததால், உடல் வெப்பத்தின் சமநிலையைப் பராமரிக்க வேண்டும். மேலும், சுற்றுப்புறத்தின் வெப்பநிலை 36 டிகிரி செல்சியசுக்கு மேல் கூடினால், பன்றிகளின் உண்ணும் திறன், தீவன மாற்றுத் திறன் மற்றும் உடல் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே, பண்ணையைச் சுற்றிலும் தீவனப் புல்வெளி மற்றும் நிழல் தரும் மரங்களை வளர்த்தால் வெய்யில் தாக்கத்தில் இருந்து பன்றிகளைக் காக்கலாம்.
நாட்டு ஓடு, மங்களூர் ஓடு, கல்நார் தகடு, தென்னங்கீற்று, சிமெண்ட் ஆகியவற்றில் ஒன்றைக் கொண்டு கூரையை அமைக்கலாம். கூரையின் உயரம் 12-15 அடியிலும், பக்கவாட்டு உயரம் 6-9 அடியிலும் அமைய வேண்டும். பக்கச் சுவர் 6-8 அடியில் இருக்க வேண்டும். அல்லது 2 அடி உயரம் சுற்றுச் சுவரையும் அதற்கு மேல் 9 அங்குல இடைவெளியில் இரும்புக் குழாய்களையும் அமைக்கலாம். இதனால் நல்ல காற்றோட்டம் கிடைக்கும். கொட்டகையில் ஒவ்வொரு அறைக்கும் உள் அறை, அதைத் தொடர்ந்து திறந்தவெளி அறை இருப்பது அவசியமாகும்.
இடவசதி
தீவனத்தொட்டி உள் அறையிலும் நீர்த்தொட்டி திறந்த வெளியிலும் அமைக்கப்பட வேண்டும். வளரும் பன்றிகளுக்கு 100 செ.மீ. நீளம், 30 செ.மீ. அகலம், 16 செ.மீ. ஆழத்திலும், பெரிய பன்றிகளுக்கு 150 செ.மீ. நீளம், 30 செ.மீ. அகலம், 18 செ.மீ. ஆழத்திலும் தீவனத் தொட்டிகளை அமைக்க வேண்டும். அதைப் போல, இதே அளவுகளில் நீர்த் தொட்டிகளையும் அமைக்க வேண்டும்.
ஈனும் அறையில், தாய்ப்பன்றி நசுக்குவதால் குட்டிகள் இறக்க வாய்ப்புண்டு. எனவே, குட்டிகளைப் பாதுகாப்பதற்கென 2 இரும்புக் குழாய்களைப் பொருத்தி ஓர் உள்ளமைப்பை ஏற்படுத்த வேண்டும். இவ்வமைப்பு 20-25 செ.மீ. உயரத்திலும், சுவரிலிருந்து 30-35 செ.மீ. உள்நோக்கியும் இருக்க வேண்டும். பன்றிகளுக்கு வியர்வைச் சுரப்பிகள் கிடையாது. வெண்பன்றிகளால் அதிக வெப்ப நிலையைத் தாங்க முடியாது.
எனவே, வெப்பக் காலத்தில் திறந்தவெளி அறையில் பன்றிகள் படுப்பதற்கு ஏதுவாகத் தண்ணீர்த் தொட்டியை அமைக்கலாம். அல்லது தெளிப்பான்கள் மூலம் நீரைத் தெளித்து விடலாம். மேலும், பண்ணையைச் சுற்றி மரங்களை வளர்த்து நிழலை ஏற்படுத்தலாம். இவற்றைத் தவிர, கொட்டகையை ஒட்டித் தீவன அறை, மருந்து மற்றும் இதர பொருள்கள் வைப்பறை அமைக்கப்பட வேண்டும்.
முனைவர் த.பாலசுப்பிரமணியம்,
இரா.இளவரசி, கு.மஞ்சு, ஹ.கோபி, பன்றி இனவிருத்திப் பிரிவு, கால்நடை அறிவியல்
முதுகலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம் 603203, காஞ்சிபுரம் மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!