பயிர்களைப் பாதுகாக்கும் பொறி வண்டுகள்!

பொறி வண்டு Ladybird beetle pori vandu

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021

பார்ப்பதற்கு அரைப் பட்டாணி வடிவிலுள்ள பொறி வண்டுகள் பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கொல்லும் சிறந்த இரை விழுங்கிகள் ஆகும். உயிரியல் முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பொறி வண்டுகளின் பங்கு அதிகமாகும். காக்சிநெல்லிடே குடும்பத்தைச் சார்ந்த இந்த வண்டுகள் கண்ணைக் கவரும் அழகிய வண்ணங்களில் இருக்கும்.

இளம் வண்டுகளும் வளர்ந்த வண்டுகளும் மெல்லுடல் பூச்சிகளை விரும்பி உண்ணும். எ.கா: அசுவினி, மாவுப்பூச்சி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈக்கள், சிலந்திப்பேன் மற்றும் செதில் பூச்சி போன்ற சாற்றை உறிஞ்சும் பூச்சிகள். சில நேரங்களில் பெரிய வண்டுகள் செடிகளின் மகரந்தத்தை உண்ணும்.

பொறி வண்டுகள் வசந்த காலம் மற்றும் கோடைக் காலத்தில் அதிகமாக இனப்பெருக்கத்தில் ஈடுபடும். அதைத் தொடர்ந்து பெண் பொறி வண்டுகள், முட்டைகளில் இருந்து வெளிவரும் இளம் குஞ்சுகளுக்கு உடனடி உணவு கிடைக்க ஏதுவாக, தமது முட்டைகளை உணவுப் பூச்சிகள் அதிகளவில் குழுமியிருக்கும் இடத்திலேயே இடும்.

முட்டைகளின் எண்ணிக்கை பொறி வண்டுகளின் இனங்களைப் பொறுத்து வேறுபடும். முட்டைகள் மஞ்சள் நிறத்தில் சிறிய வாழைப்பழக் கொத்துகளைப் போல இருக்கும். முட்டையிலிருந்து வெளிவரும் ஓர் இளம் வண்டு ஒரு நாளில் குறைந்தது பன்னிரண்டு அசுவினிகளைத் தின்னும். கூட்டுப்புழுப் பருவத்தை அடைவதற்கு முன், மூன்று முறை தன் தோலைப் புதுப்பித்துக் கொள்ளும். இறுதியாக, கூட்டுப் புழுவிலிருந்து தாய் வண்டு வெளிவந்து இணை சேர்ந்து முட்டையிடத் தொடங்கும்.

இப்படித் தொடரும் இதன் வாழ்க்கைச் சுழற்சி முடிவடைய, நான்கு முதல் ஏழு வாரங்கள் ஆகும். இப்பொறி வண்டுகள் இயல்பாகவே வயல்களில் இருந்தாலும், செயற்கையாக இவற்றைப் பெருக்கி வயலில் விடுவது மற்றும் பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்காமல், ஏற்கெனவே வயலிலுள்ள வண்டுகளின் மகரந்தத் தேவையைச் சரி செய்யும் தாவரங்களை நடுவதன் மூலம் பயிர்களைப் பாதுகாக்கலாம்.

வயல் வெளிகளில் பயிரைத் தாக்கும் பூச்சிகளின் ஆதிக்கம் அதிகளவில் இருக்கும் போது, பொறி வண்டுகளை உற்பத்தி செய்து வயலில் விட்டு அவற்றைக் கட்டுப்படுத்தலாம். இந்த வண்டுகளை உற்பத்தி செய்வதற்கான முதல் வேலை, அவற்றுக்கான உணவுப் பூச்சிகளை வளர்ப்பது தான். மாவுப் பூச்சிகளை உணவாகத் தந்து பொறி வண்டுகளை எளிதாக வளர்க்கலாம்.

காப்பிச் செடிகளில் காணப்படும் பச்சை நிறச் செதில் பூச்சியைக் கட்டுப்படுத்த, க்ரிப்டோலே மஸ்மான்ட்ருசரி என்னும் பொறிவண்டு ஆஸ்திரேலியாவில்  இருந்து தருவிக்கப்பட்டது. பிறகு, இந்த வண்டு இளஞ்சிவப்பு மாவுப்பூச்சிகளை நன்றாகத் தின்று அழிப்பது கண்டறியப்பட்டது. மேலும், இது, ஆரஞ்சு மரங்களில் இருக்கும் இரட்டைவால் மாவுப்பூச்சிகளை நன்கு கட்டுப்படுத்தும். பழங்கள் மற்றும் அழகுச் செடிகளில் காணப்படும் மாவுப்பூச்சிகளை விரும்பி உண்ணும். 

எனவே, இந்த வண்டுகள் மூலம் பலவகையான மாவுப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். செம்பருத்திச் செடியைத் தாக்கும் இளஞ்சிவப்பு மாவுப் பூச்சிகள், ஆஸ்திரேலியன் பொறிவண்டு வளர்ப்புக்கு ஏற்ற உணவுப்பூச்சி ஆகும். இப்பூச்சிகள் எளிதில் கிடைக்கும். எனவே, பொறி வண்டுகளைப் பெரியளவில் உற்பத்தி செய்வதற்கு, முதலில், மாவுப்பூச்சிகளை வளர்க்கும் முறையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நடுத்தரமான பூசணிக்காய் ஒன்றை 0.1% பெவிஸ்டின் கரைசலில் நன்கு கழுவ வேண்டும். இப்படிக் கழுவுவதன் மூலம் பூசணிக்காயில் ஏதேனும் அழுக்கு மற்றும் பூசணம் இருந்தால் நீங்கி விடும். பிறகு, அந்தப் பூசணிக்காயின் மீது குறுக்கு வாக்கில் நூலைச் சுற்றி, நைலான் வலைக் கூண்டுக்குள் வைக்க வேண்டும். இது, மாவுப்பூச்சிகள் அந்த நூலின் மீது நகர்ந்து செல்ல ஏதுவாக இருக்கும்.

மேக்கோ நெல்லிக்காக்கஸ் ஹிர்சூட்டஸ் என்னும் இளஞ்சிவப்பு மாவுப்பூச்சி முட்டைப் பையை, பூசணிக்காய் மீது வைக்க வேண்டும். அதிலிருந்து வெளிவரும் இளம் மாவுப்பூச்சிகள் பூசணிக்காயின் சாற்றை உறிஞ்சிப் பல்கிப் பெருகும். மிக முக்கியமாக இவற்றின் இளம் பருவம் மாவுப்பூச்சியின் உருவத்தை ஒத்திருக்கும். எனவே, இவற்றை அடையாளம் கண்டு கொள்வது, வயல்வெளிகளில் இவற்றைப் பாதுகாக்க ஏதுவாக இருக்கும்.

இதைத் தொடர்ந்து, மரவள்ளி, பப்பாளி, கொய்யா போன்ற தோட்டக்கலைப் பயிர்களில் இருந்து ஆஸ்திரேலியன் பொறி வண்டுகளைச் சேகரித்து, மாவுப்பூச்சிகள் மீது விட்டால், அவற்றை உண்டு, முட்டையிட்டுப் பல்கிப் பெருகும். இந்த இளம் மற்றும் முதிர் பொறி வண்டுகளை, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பூச்சித் தாக்கம் காணப்படும் நேரங்களில், ஒரு எக்டர் பழத் தோட்டத்துக்கு ஆயிரம் வீதம் விடலாம்.

பெரியளவில் இந்த இரை விழுங்கிகளை உற்பத்தி செய்து வயலில் விட்டால், பயிரைத் தாக்கும் பூச்சிகளைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தும். இவற்றை வயல் வெளிகளில் விட்டால், இரு வாரங்களுக்குப் பூச்சி மருந்தைத் தெளிக்கக் கூடாது. எனவே, சுற்றுச் சூழலுக்குத் தீங்கைத் தராமல், பயிரைத் தாக்கும் பூச்சிகளைச் சீரிய முறையில் கட்டுப்படுத்த உதவும் வரப்பிரசாதம் பொறி வண்டுகள் என்றால் அது மிகையாகாது.

மேலும், இயற்கையாகவே பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில், இரை விழுங்கிகள், ஒட்டுண்ணிகள், பூச்சியைக் கொல்லும் நோய்ப் பூசணங்கள் ஆகியன முக்கியப் பங்காற்றுகின்றன. ஆகவே, இவற்றை வயல் வெளிகளில் பாதுகாப்பதன் மூலமும், செயற்கையாகப் பெருக்கி வயலில் விடுவதன் மூலமும், பயிர்களைச் சேதப்படுத்தும் பூச்சிகளைக் கட்டுக்குள் வைத்து மகசூலைப் பெருக்க முடியும்.


Muruga Sridevi

முனைவர் கா.முருக ஸ்ரீதேவி,

உதவிப் பேராசிரியை, தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மைக் கல்லூரி, பெரம்பலூர்-621212.

ச.லேகா பிரியங்கா, ஆராய்ச்சி மாணவி, பூச்சியியல் துறை,

தமிழ்நாடு வேளாண்மைக் கல்லூரி, கோயம்பத்தூர்-641003.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!