தென்னையில் சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

சுருள் வெள்ளை ஈ CoconutTree

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021

காமதேனு என்றும் கற்பக விருட்சம் என்றும் போற்றப்படும் தென்னையை 800 க்கும் மேற்பட்ட பூச்சிகள் தாக்குகின்றன. அவற்றுள் ஒன்று ரூகோஸ் (Aleurodicus rugioperculates) என்னும் சுருள் வெள்ளை ஈயாகும். சாற்றை உறிஞ்சும் இப்பூச்சி தென்னையைப் பெருமளவில் தாக்குகிறது.

இதன் தாக்குதல் முதன் முதலாக 2004 இல் மத்திய அமெரிக்காவில் காணப்பட்டது. அடுத்து 2009 இல் தெற்கு புளோரிடாவில் காணப்பட்டது. இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் 2016 இல், பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் உள்ள தென்னை மரங்களை அதிகமாகத் தாக்கியது தெரிய வந்தது.

தாக்குதல் அறிகுறிகள்

தென்னை ஓலைகளின் அடிப்பகுதியில் சுருள் சுருளாக நீள்வட்ட முட்டைகள் இருக்கும். இந்த முட்டைகள் மெழுகைப் போன்ற வெண் துகள்களால் மூடப்பட்டிருக்கும். குஞ்சுகள் மற்றும் முதிர்ந்த வெள்ளை ஈக்கள், ஓலைகளின் உட்புறத்தில் கூட்டமாக இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் தென்னையின் வளர்ச்சிப் பாதிக்கப்படும்.

இந்த ஈக்கள் வெளியேற்றும் தேன் போன்ற இனிப்பான திரவம் கீழடுக்கு ஓலைகளில் விழுந்து பரவும். இதன் மீது கேப்னோடியம் (capnodium sp) என்னும் கரும் பூசணம் வளர்வதால், ஓலைகள் தற்காலிகமாகக் கறுப்பாக மாறி விடும். இதனால் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு, தென்னை மரங்களின் வளர்ச்சிக் குன்றி விடும். இந்தத் திரவம் உள்ள ஓலைகளில் எறும்புகள் கூடுவதைப் பார்க்கலாம். இதனால் பெரியளவில் இழப்பு ஏதும் நிகழ்வதில்லை.

மாற்று உணவுப் பயிர்கள்

சுருள் வெள்ளை ஈக்கள் சுமார் 140 வகைத் தாவரங்களைத் தாக்கிச் சேதத்தை ஏற்படுத்தும். கொய்யா, கொக்கோ, எலுமிச்சை, சப்போட்டா, வாழை, வெண்டை, செம்பருத்தி, ஜாதிக்காய், சீத்தாப்பழம், பலா, காட்டாமணக்கு, பப்பாளி, மா, கறிப்பலா, சோம்பு, அழகுப்பனை, அரளி, மரவள்ளி, களைச்செடியான பார்த்தீனியம் போன்றவை, இந்த ஈக்களின் மாற்று உணவுப் பயிர்களாக விளங்குகின்றன.

Surul vellai EE

வாழ்க்கைப் பருவங்கள்

முட்டை: வளர்ந்த பெண் ஈக்கள் தென்னை மரங்களின் கீழடுக்கு ஓலைகளின் உள்பகுதியில் சுருள் சுருளாக நீளவட்ட வடிவில் மஞ்சள் நிற முட்டைகளை இடும். இந்த முட்டைகள் மீது வெண்ணிற மெழுகுப் பூச்சுப் படிந்திருக்கும்.

இளங்குஞ்சு: 2-3 நாட்களில் முட்டைகளில் இருந்து வெளிவரும் குஞ்சுகள் முதலில், வட்ட வடிவில், தட்டை ஊசியைப் போன்ற வாயுடன் நகரும் தன்மையில் இருக்கும்.

கூட்டுப்புழு: அடுத்து, நகரா நிலையான கூட்டுப்புழு, சற்று உருண்டையாக  15 மி.மீ. நீளத்தில் வெளிர் மஞ்சளாக இருக்கும். மேலும், வெண் பஞ்சைப் போன்ற இழைகளை உருவாக்கும்.

வளர்ந்த ஈ: அடுத்து, நன்கு வளர்ந்த ஈயாக வெளிவரும். முட்டை முதல் முழு ஈயாக வளர்வதற்கு 25-30 நாட்களாகும். வளர்ந்த ஈக்கள் கூட்டம் கூட்டமாக ஓலைகளின் அடியில் இருக்கும். ஆண் ஈக்களின் பின்புற நுனியில் இடுக்கியைப் போன்ற அமைப்பு இருக்கும். இந்தச் சுருள் வெள்ளை ஈக்கள், பருத்தியைத் தாக்கும் வெள்ளை ஈக்களை விட 3 மடங்கு பெரிதாக இருக்கும். சுறுசுறுப்பாக இருக்காது.

தென்னை வகைகளில் இதன் தாக்கம்

அனைத்துக் குட்டை இரகங்களும் எளிதில் அதிகளவில் தாக்குதலுக்கு உள்ளாகும். குறிப்பாக, சௌகாட் ஆரஞ்சு, மலேசிய மஞ்சள் குட்டை, மலேசிய ஆரஞ்சுக் குட்டை, சௌகாட் பச்சைக்குட்டை ஆகிய இரகங்களை அதிகமாகத் தாக்கும். இதற்கடுத்த நிலையில், குட்டை நெட்டை, நெட்டை குட்டை ஆகிய கலப்பு மரங்களில் இதன் தாக்கம் மிதமாகவும், நெட்டை வகைகளில் குறைவாகவும், நெட்டை நெட்டைக் கலப்பு மரங்களில் மிகக் குறைவாகவும் இருக்கும்.

தடுப்பு முறைகள்

தென்னந் தோப்பில் ஏக்கருக்கு 2 விளக்குப்பொறி வீதம், இரவு 7-11 மணி வரையில் வைத்து இந்த ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம். இருபுறமும் கிரீஸ் அல்லது விளக்கெண்ணெய் தடவப்பட்ட, 3×1 மீட்டர் அளவுள்ள மஞ்சள் அட்டை ஒட்டும் பொறிகளை, ஏக்கருக்கு 10 வீதம் எடுத்து, ஆறடி உயரத்தில் மரங்களில் கட்டி விட்டு ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம்.

பாதிப்புக்கு உள்ளான மரங்களின் கீழடுக்கு ஓலைகளின் உட்புறம் விசைத் தெளிப்பான் மூலம் மிக வேகமாக நீரைப் பீய்ச்சியடித்து, இந்த ஈக்களைக் கட்டுப்படுத்தலாம். இந்த ஈக்களின் இளங் குஞ்சுகளைக் கட்டுப்படுத்த, பத்து மர இடைவெளியில், கூட்டுப்புழுப் பருவத்தை உள்ளடக்கிய தென்னை ஓலைகளில், என்கார்சியா ஒட்டுண்ணிக் குளவிகளை (Encarsia guadeloupae) விடலாம்.

கிரைசோபிட் (Chrysopid) என்னும் பச்சைக் கண்ணாடி இறக்கைப் பூச்சி முட்டைகளை ஏக்கருக்கு 300 வீதம் மரங்களில் வைக்கலாம். இந்த ஈக்களால் உண்டாகும் கரும் பூசணத்தைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 25 கிராம் மைதா மாவு வீதம் கலந்த கலவையை, ஒரு மில்லி ஒட்டும் திரவத்துடன் கலந்து, ஓலைகளில் படிந்திருக்கும் கரும் பூசணம் மீது தெளிக்க வேண்டும். இதனால், 3-5 நாட்களில் இப்பூசணம் காய்ந்து உதிர்ந்து விடும்.

சுருள் வெள்ளை ஈக்களின் எதிரிகளான, என்கார்சியா ஒட்டுண்ணிக் குளவிகள், கிரைசோபிட் இரை விழுங்கிகள், கைலோகுரோசிஸ் பொறி வண்டுகள் இயல்பாகப் பெருக ஏதுவாக, சாமந்தி, சூரியகாந்தி, தட்டைப்பயறு ஆகியவற்றைத் தென்னந் தோப்புகளில் வளர்க்க வேண்டும். விவசாயிகளுக்கு நன்மை செய்யும் பூச்சிகளை, இரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகள் அழித்து விடும் என்பதால், அவற்றைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

தாக்குதல் அதிகமாகவும், என்கார்சியா, கிரைசோபா போன்றவற்றுக்குக் கட்டுப்படாமலும் போகும் நிலையில், ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி அசாடிராக்டின் அல்லது 5 மில்லி வேப்ப எண்ணெய் மற்றும் ஒரு மில்லி ஒட்டும் திரவம் வீதம் கலந்து, தென்னை ஓலைகளின் அடிப்புறம் ஒருமுறை மட்டும் தெளிக்க வேண்டும்.

மரத்துக்கு 1.3 கிலோ யூரியா, 2 கிலோ சூப்பர் பாஸ்பேட், 3.5 கிலோ பொட்டாசு, ஒரு கிலோ தென்னை நுண்ணூட்டம், 50 கிலோ தொழுவுரம் வீதம் ஆண்டுதோறும் இட்டுத் தேவையான அளவில் பாசனம் செய்ய வேண்டும்.


Alagar

மு.அழகர்,

சி.சுதாலட்சுமி, வி.சிவக்குமார், ஆ.கௌசல்யா, சு.பிரனீதா, மா.தமிழ்ச்செல்வன், பா.மீனா,

தென்னை ஆராய்ச்சி நிலையம், ஆழியார் நகர், கோயம்புத்தூர்-642101.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!