வாழையைத் தாக்கும் நோய்களும் தீர்வுகளும்!

PB_Banana Trees

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021

மிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வாழை பயிரிடப்படுகிறது. இதைப் பல்வேறு நோய்கள் தாக்கிச் சேதத்தை ஏற்படுத்துகின்றன. அந்த நோய்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளை இங்கே பார்க்கலாம்.

பனாமா வாடல் நோய்

அறிகுறிகள்: இந்நோய் தாக்கிய வாழையில் தொடக்கத்தில் அடியிலைகளின் காம்புகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். பிறகு, இந்நிறம் இலை முழுவதும் பரவுவதால் அந்த இலை ஒடிந்து தொங்கும். மேலும், மற்ற இலைகளும் மஞ்சளாக மாறிக் காம்புகள் ஒடிவதால் தொங்கி விடும். குருத்து மட்டும் மேல்நோக்கி நீண்டிருக்கும். வாழைக் கன்றுகளில் குருத்து விரியாமல் மஞ்சளாக மாறி வாடி விடும். வாழைத்தண்டின் அடியிலிருந்து நீளவாக்கில் வெடிப்புகள் இருக்கும்.

வாழைக் கிழங்கைக் குறுக்கே வெட்டிப் பார்த்தால், சாற்றுக்குழாய்த் திசுக்கள் கறுப்பாக மாறியிருக்கும். இத்திசுக்கள் வளர்ந்து குழாயில் அடைத்துக் கொள்வதால், நீரும் சத்துகளும் வேரிலிருந்து மேலேயுள்ள பாகங்களுக்குச் செல்வது தடைபட்டு, வாழைமரம் வாடிக் காயத் தொடங்கும். இதனால், இந்நோய் வாடல் நோய் எனப்படுகிறது. இந்நோய் தாக்கிய வாழைகளில் குலைகள் வருவதில்லை. ஒருவேளை தார்கள் வந்தாலும் காய்கள் குறைவாகவும் சிறுத்தும் சீரற்றும் இருக்கும். சீராகவும் பழுக்காது.

பரவும் முறைகள்: இந்நோய், மண், வேர், வாழைக்கிழங்கு, காய்ந்த வாழைச்சருகு, நூற்புழுக்கள் மற்றும் பூச்சிகளால் வேரில் ஏற்படும் காயங்கள் மூலம் பரவும். மேலும், நோயுற்ற கன்றுகளை நடுவதாலும், நோயுற்ற வாழையின் வேருடன், பக்கத்து வாழைகளின் வேர்கள் பின்னி வளர்வதாலும் பரவும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: நோயற்ற கன்றுகளை எடுத்து, 0.1% அதாவது, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் கார்பன்டசிம் வீதம் கலந்த கலவையில் அரைமணி நேரம் ஊற வைத்து நிழலில் உலர்த்தி நட வேண்டும். நடவுக்குப் பிறகு ஒன்றிரண்டு வாழைகளில் அறிகுறி தெரிந்தால், ஒரு வார இடைவெளியில், வாழைக்கு இரண்டு லிட்டர் வீதம், வாழையைச் சுற்றிலும் 2-3 முறை ஊற்ற வேண்டும்.

அல்லது 100 மில்லி நீருக்கு 2 கிராம் கார்பன்டசிம் வீதம் கலந்து, மூன்று மில்லி வீதம், வாழைக்கிழங்கில் 45 டிகிரி கோணத்தில் 10 செ.மீ. ஆழத்தில் ஊசி மூலம், 3, 5 மற்றும் 7 மாதத்தில் செலுத்த வேண்டும். ஒரு நிலத்தில் வாழையைத் தொடர்ந்து பயிரிடாமல், வாழை, நெல் என மாற்றி மாற்றிப் பயிரிடலாம்.

இந்நோய், மண் மற்றும் நோயுற்ற வாழையின் சருகுகளால் பரவுவதால், வாழைத் தோட்டம் சுத்தமாக இருக்க வேண்டும். நோய் முற்றிய மரத்தைக் கிழங்குடன் தோண்டி எரித்து விட வேண்டும். மேலும், அந்தக் குழியில் 1.2 கிலோ சுண்ணாம்பைத் தூவிவிட வேண்டும்.

மோக்கோ வாடல் நோய்

அறிகுறிகள்: தொடக்க நிலையில் வாழை மரத்தின் நடுப்பகுதியில் உள்ள இலைகளின் அடிப்பாகம் மஞ்சளாக மாறி நாளடைவில் காய்ந்து விடும். சில நேரங்களில் குருத்து மட்டும் தாக்கப்படாமல் இருக்கும். கேவென்டிஷ் வகையில் சற்று மாற்றமுள்ள அறிகுறியைக் காணலாம். இவ்வகையில், நீர்ப் பற்றாக்குறையால் ஏற்படும் மஞ்சள் நிறத்தைப் போல அடியிலைகள் மாறிவிடும். நாளடைவில் வெளிர் மஞ்சளாக மாறிக் காம்புகள் ஒடிந்து மரத்தைச் சுற்றிலும் தொங்கும்.

நோயுற்ற வாழை மரங்களைச் சுற்றியுள்ள கன்றுகளை நட்டால், முதலில் குருத்துகளும் அடுத்துக் கன்றுகளும் காய்ந்து விடும். இந்நோய் சாற்றுக் குழாயைச் சார்ந்ததாகும். நோயுற்ற வாழையின் தண்டை வெட்டிப் பார்த்தால், சாற்றுக் குழாய்த் திசுக்கள், வெளிர் மஞ்சள் அல்லது கரும்பழுப்பு அல்லது கருநீல நிறத்தில் இருக்கும்.

வாழைக் கிழங்கை வெட்டிப் பார்த்தால், சாற்றுக் குழாயில் செம்பழுப்பு நிறத்தில் வளையம் இருப்பதுடன், அப்பகுதியில் இருந்து பாக்டீரியா கலந்த வெண்பழுப்பு நீர் கசியும். மேலும், தண்டும் கிழங்கும் அழுகியிருக்கும். பெரிய வாழைகளில் இலை வெளுத்தல், காம்புகள் ஒடிந்து தொங்குதல் போன்ற வெளிப்படையான அறிகுறிகள் தெரிவதில்லை என்றாலும், வாழைக் காய்களில் நோயின் அறிகுறியைக் காணலாம்.

அதாவது, காய்கள் சிறுத்து விடும். அவற்றைக் குறுக்காக வெட்டிப் பார்த்தால் உள்ளே கரும்பழுப்பு நிறமாக இருக்கும். நாளடைவில் இது கறுப்பாக மாறி விடும். வெட்டிய பகுதியில் இருந்து பாக்டீரியக் கசிவு ஏற்படும்.

பரவும் முறைகள்: மரங்களில் ஏற்படும் காயங்கள், வாழை சாகுபடியில் பயன்படும் கருவிகள், வாழைப் பூக்களை நாடிச் செல்லும் பூச்சிகள், நோயுற்ற மரங்களின் வேர்களுடன் அடுத்த மரங்களின் வேர்கள் பின்னுதல் மற்றும் நோயுற்ற வாழைத் தோட்டக் கன்றுகளை நடுதல் மூலம் இந்நோய் பரவும். மேலும், நீர்த் தேங்கியுள்ள இடங்களில் உள்ள வாழைகளை இந்நோய் எளிதில் தாக்கும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: நோயுற்ற வாழைத்தோட்டக் கன்றுகளை நடக்கூடாது. தோட்டத்தில் நீர்த் தேங்கக் கூடாது. கோடையில் நிலத்தை அடிக்கடி உழுதால், மண்ணிலுள்ள பாக்டீரியாக்கள் அழிந்து போகும். நோயுள்ள வாழைத் தோட்டத்தில் பயன்படுத்திய கருவிகளை, நோயில்லா வாழை மரங்களில் பயன்படுத்தக் கூடாது. கருவிகளை, 10% பார்மலின் கரைசலில் 10 நிமிடம் அல்லது 5% பீனால் கரைசலில் 30 நிமிடம் நனைய வைத்தால், கருவிகளில் உள்ள கிருமிகள் அழிந்து போகும்.

நோயுற்ற மரங்களை அகற்றி எரித்து விட வேண்டும். மரங்களை அகற்றிய குழிகளில் 10% பார்மலின் கரைசல் அல்லது 5% பீனால் கரைசலை ஊற்ற வேண்டும். வாழைக்காய்கள் வந்ததும் பூக்களை ஒடித்து விட்டுப் பூச்சிகளின் வருகையைத் தடுக்க வேண்டும். தொடர்ந்து வாழையை மட்டுமே ஒரு நிலத்தில் நடுவதைத் தவிர்த்து, சோளம் போன்றவற்றை மாற்றுப் பயிராக இட்டு, நிலத்திலுள்ள நோய்க்கிருமிகளின் பெருக்கத்தைத் தடுக்க வேண்டும்.

எர்வினியா அழுகல் நோய்

அறிகுறிகள்: இளம் கன்றுகளைத் தாக்கும். அதாவது, கன்றுகளின் வேர்கள் அழுகிக் கெட்ட வாடை வீசும். குருத்து அழுகிக் காய்ந்து விடும். பொதுவாக இது, ரொபஸ்டா, கிரான்ட் நைன், தெல்லசக்கரகெலி ஆகியவற்றில் அதிகச் சேதத்தை ஏற்படுத்தும். அடித்தண்டில் ஏற்படும் அழுகல் இலைகளிலும் பரவுவதால் திடீரெனக் காய்ந்து விடும். இந்தக் கன்றுகளைப் பிடுங்கினால், அழுகிய தண்டானது கையோடு வந்து விடும்.

நோயின் தொடக்க நிலையில், கரும்பழுப்பு அல்லது மஞ்சள் நீருள்ள பகுதி அடித்தண்டில் காணப்படும். நோய் முற்றி விட்டால் தண்டின் உட்பகுதி அழுகி விடும். அவ்விடத்தில் கரும்பஞ்சைப் போன்ற திசுக்கள் உருவாகும். இந்த அழுகல் குருத்து வரை பரவியிருக்கும். மேலும், அழுகிய கிழங்கில் இருந்து கெட்ட வாடை வீசும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: நல்ல வடிகால் வசதியும் வளமான மண்ணும் இருந்தால் இந்நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தலாம். நோயற்ற கன்றுகளை நட வேண்டும். நோயுள்ள தோட்டத்தில் குலைகளை வெட்டியதும் எஞ்சிய பாகங்களை அகற்றி விட வேண்டும். மழைக் காலத்தில் வாழை நடவைத் தவிர்க்க வேண்டும். வாழைக்கன்றின் கிழங்கு 500 கிராமுக்கு மேல் இருக்க வேண்டும்.

இந்நோய் தாக்காத சோயா மொச்சை, தீவனப் பயிர்கள், வெங்காயம் மற்றும் காய்கறிப் பயிர்களைச் சுழற்சி முறையில் பயிரிட வேண்டும். நோய்க்காரணி மற்றும் நோயைப் பரப்பும் பூச்சிகள், நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த, 2% பிளீச்சிங் பொடிக் கரைசலை, நோயுற்ற மரங்களைச் சுற்றிலும் ஊற்ற வேண்டும். அல்லது பிளீச்சிங் பொடியை மரங்களைச் சுற்றித் தூவ வேண்டும்.

பறவைக் கண் நோய்

அறிகுறிகள்: தொடக்க நிலையில் இப்பூசணம் வாழைப் பிஞ்சுகளின் பூக்காம்பைத் தாக்கும். முதலில் வட்டமாகத் தோன்றும் சிறு கரும் புள்ளிகள் அடுத்துப் பெரிய பழுப்புப் புள்ளிகளாக மாறும். பழங்கள் கறுப்பு நிறத்தில் இருந்து பழுப்பாக மாறியும் அழுகியும் இருக்கும். நன்கு முதிர்ந்த பழங்களில் கரும் புள்ளிகளுடன் சுருக்கங்களும் ஏற்பட்டு, பழுப்பு மற்றும் கரும் பழுப்பு நிறமாக இருக்கும்.

தாரிலுள்ள மற்ற காய்கள் முன்கூட்டியே பழுத்தும் சுருங்கியும் இருக்கும். பழங்களின் மேல் இளஞ்சிவப்பு நிறத்தில் பூசண வித்துகள் இருக்கும். இறுதியில் தார் முழுவதும் பரவிச் சேதத்தை ஏற்படுத்தும். பழங்களை நேரடியாகத் தாக்கிச் சேதத்தை உண்டாக்கும். அடுத்து, காய்களைத் தாக்கி, அவை பழுத்த பிறகு அறிகுறிகளை வெளிப்படுத்தும். இந்நோய், காற்று மற்றும் பூக்களை நாடி வரும் பூச்சிகள் மூலம் பரவும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: காய்கள் சிறிதாக இருக்கும் போது, மழைக்கு முன், ஒரு சத போர்டோ கலவையைத் தெளிக்க வேண்டும். தார்களைச் சரியான பருவத்தில் அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்த பழங்களில் சேதம் ஏற்படாமல் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு அனுப்ப வேண்டும். நோயுற்ற பாகங்களை எரித்து அழிக்க வேண்டும். தாரின் அடிப்பகுதியில் இருக்கும் பூக்களை அகற்ற வேண்டும். இதனால், பழங்களில் ஏற்படும் அறிகுறிகளைத் தவிர்க்கலாம்.

மஞ்சள் இலைப்புள்ளி நோய்

அறிகுறிகள்: தொடக்கத்தில் இலையின் மேல் சிறியளவில் வெளிர் மஞ்சள் அல்லது பழுப்புக் கலந்த பச்சைப் புள்ளிகள் சிறு கோடுகளாகத் தோன்றும். பிறகு, நீளவாக்கில் பெரிதாகி அடர் பழுப்பு மற்றும் கரும் புள்ளிகளாக மாறும். அடுத்து, இப்புள்ளிகளின் மையப்பகுதி வெளிர் சாம்பல் நிறத்திலும், அதைச் சுற்றி அடர் பழுப்பு நிறத்தில் மஞ்சள் நிறமும் காணப்படும்.

அடுத்து, இப்புள்ளிகள் ஒன்று சேர்ந்து ஒழுங்கற்ற திட்டுகளாக இலை முழுதும் பரவுவதால், இலை வாடிக் காய்ந்து தொங்கும். இதனால், ஒளிச்சேர்க்கை தடைபடுவதால் வளர்ச்சி இருக்காது. நெருக்கி நடுதல், களைகள், வடிகாலற்ற நிலம் ஆகியன இந்நோய் தீவிரமாக வழிவகுக்கும். மேலும், காற்று மூலமும் இந்நோய் பரவும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: நோயுற்ற இலைகளை அகற்ற வேண்டும். இடைக் கன்றுகள், களைகளை நீக்கி நிலத்தைச் சுத்தமாக வைக்க வேண்டும். நெருக்கி நடுவதைத் தவிர்க்க வேண்டும். முதல் அறிகுறி இலையில் தெரிந்த நாளிலிருந்து 10-15 நாட்கள் இடைவெளியில், ஒரு சத பெட்ரோலிய மினரல் எண்ணெய்க் கலவை ஒரு லிட்டருக்கு ஒரு கிராம் கார்பன்டாசிம் அல்லது ஒரு கிராம் புரபிகோனோசோல் அல்லது 2 கிராம் மேங்கோசெப் வீதம் எடுத்து மூன்று முறை தெளிக்க வேண்டும். மருந்துக் கலவையில், ஒரு லிட்டருக்கு ஒரு மில்லி வீதம் ஒட்டும் திரவத்தைச் சேர்க்க வேண்டும்.

வெள்ளரித் தேமல் நச்சுயிரி நோய்

தாக்குதல் அறிகுறிகள்: இலை நரம்புகளுக்கு இடையில் தொடர்ச்சியான அல்லது தொடர்ச்சியற்ற மஞ்சள் கோடுகள் இலை விளிம்பிலிருந்து இருக்கும். இளம் கன்றுகளின் இலைகளிலும் இத்தகைய வெளிர் மஞ்சள் கோடுகள் ஆங்காங்கே இருக்கும். நடுஇலை கறுத்தும், சுருண்டும், விளிம்பு மடிந்தும், கொத்தாகவும், நடுப்பகுதி நிமிர்ந்தும் இருக்கும். இலைகள் கருகிச் சிறுத்தும், மரங்கள் வளராமல் குட்டையாகவும் இருக்கும். நோய் முற்றிய மரங்களில் குலைகள் வராது.

மேலும், இந்த நச்சுயிரியானது பாக்டீரியாவுடன் சேர்ந்து வாழைக் கிழங்கில் அழுகலை உண்டாக்குவதால், தண்டும் இலையும் அழுகியிருக்கும். அசுவினி மற்றும் நோயுற்ற மரங்களின் பக்கக் கன்றுகளை நடுவதால், இந்நோய் இடம் விட்டு இடம் பரவும்.

பூவிதழ்த் தேமல் நோய்

தாக்குதல் அறிகுறிகள்: தொடக்கத்தில் இலைக்காம்பு மற்றும் தண்டுப் பகுதியில், இளஞ்சிவப்பு, சிவப்புக் கோடுகள் மற்றும் காம்பில் கரும் புள்ளிகள் ஏற்படும். மேலும், தேமல் நோய்க்கான அறிகுறி, கண் வடிவத் தேமல் நோய்க் கோடுகள், பூவிதழ், மடல், பூக்காம்பு மற்றும் காய்களில் காணப்படும்.

புதிதாகத் தோன்றும் குருத்திலையில், சிவப்பும் பழுப்பும் கலந்த கோடுகள் ஒழுங்கற்ற நிலையில் இருக்கும். அவை தண்டுப் பகுதியில் இருந்து மடல்களைப் பிரித்துக் காட்டும். நடுப்பகுதி இலைகள் கொத்தாக மாறி, பனைமரம் போலத் தோன்றும். பூக்காம்புகள் நீண்டிருக்கும். தார்களில் காய்கள் முழுமையாக இராது. இந்நோய், பூசணி வகைப் பயிர்களில் உள்ள அசுவினி, நோயுற்ற கிழங்கின் மூலம் இடம் விட்டு இடம் பரவும்.

வெள்ளரித் தேமல், பூவிதழ்த் தேமலைக் கட்டுப்படுத்துதல்

நோயுற்ற மரங்களின் பக்கக் கன்றுகளை நடக் கூடாது. பூசணி மற்றும் பூசணி வகைப் பயிர்களை வாழைத் தோட்டத்தில் ஊடுபயிராக இடக்கூடாது. களைகளில் நச்சுயிரிகளும் அவற்றைப் பரப்பும் பூச்சிகளும் தங்கியிருக்கும். எனவே, வாழைத் தோட்டத்தில் களைகள் இருக்கக் கூடாது. நோயுற்ற மரங்களை உடனே அகற்றி விட வேண்டும்.

இந்நோயைப் பரப்பும் அசுவினியைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி பாஸ்போமிடான் அல்லது 2 மில்லி டெமட்டான் வீதம் கலந்து, மூன்று வார இடைவெளியில் தெளிக்க வேண்டும். நடவுக்கு முன் வாழைக் கன்றுகளை 40 டிகிரி வெப்பநிலையில் உலர்த்தினால், அவற்றிலுள்ள நச்சுயிரிகளைச் செயலிழக்கச் செய்யலாம்.

முடிக்கொத்து நோய்

தாக்குதல் அறிகுறிகள்: தொடக்கத்தில் இலையின் நடுநரம்பு, இலைத்தண்டு நரம்புகளில் கரும் பச்சைக் கோடுகள் தோன்றும். தொடர்ந்து இலைகளில் தோன்றும் கரும் பச்சைப் புள்ளிகள், கரும் பச்சைக் கோடுகளாக மாறி, அடுத்தடுத்த இலைகளுக்குப் பரவும். மேலும், இலைகள் இலேசாக மடங்கியும், உடையும் வகையிலும், விரியாமலும் இருக்கும். மேலேயுள்ள இலைகள் சிறுத்தும், ரோசாப்பூ இதழ் அடுக்குகளைப் போன்றும் காணப்படும். இதனால், வாழைமரம் குட்டையாக இருக்கும்.

தார்கள் சிறியளவில் இருக்கும். காய்கள் பழுக்காது. பழுத்தாலும் ஒழுங்கற்ற வடிவில் இருக்கும். அடிப்பழங்கள் கறுப்பாக இருக்கும். இதனால், நல்ல விலை கிடைக்காது. நோயின் தொடக்க நிலை அறிகுறிகள், முதலில் தோன்றும் இலைகளில் தெரியும். இந்நோய் அசுவினி மூலம் பரவும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

நோயற்ற மரங்களின் கன்றுகளை நட வேண்டும். நோயுற்ற வாழைகளை உடனே அகற்றி விட வேண்டும். கன்றுக்கு 40 கிராம் கார்போபியுரான் குருணை வீதம் எடுத்து, நீர் மற்றும் களிமண்ணில் பிசைந்து, வாழைக் கிழங்கில் நன்றாகத் தோய்த்து நட வேண்டும்.

நோயுள்ள நிலத்தில், நட்ட மூன்றாம் மாதத்தில் இருந்து பூக்கும் வரை, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி டைமெத்தயேட் அல்லது 2 மில்லி மீத்தைல் டெமட்டான் வீதம் கலந்து, 21 நாட்கள் இடைவெளியில், மரங்களின் மேலிருந்து கீழ்நோக்கித் தெளித்தால், இந்நோயைப் பரப்பும் அசுவினியை அழிக்கலாம்.

முடிக்கொத்து நோய் தாக்கிய மரங்களை அழிக்க, 2, 4, டி என்னும் பெர்னாக்சோன் 200 மில்லி மாத்திரையை வாழைக் கிழங்கில் 7 செ.மீ. ஆழத்தில் வைக்கலாம். அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 125 கிராம் பெர்னாக்சோன் வீதம் கலந்து ஊசி மூலம் அல்லது குப்பி வடிவில் தண்டுக்குள் வைத்து விட்டால், அந்த மரம் 3-5 நாட்களில் சிதைந்து விடும்.


வாழை RAM JEGATHEESH 2

முனைவர் இரா.இராம்ஜெகதீஸ்,

முனைவர் ச.ஆறுமுகச்சாமி, நெல் ஆராய்ச்சி நிலையம், அம்பாசமுத்திரம்,

மூ.பரமசிவன், வேளாண்மைக் கல்லூரி, கிள்ளிக்குளம்,

இ.ஜான்சன், வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!