அங்கக நெல் வயலில் வாத்து வளர்ப்பு!

PB-Vaaththu

கட்டுரை வெளியான இதழ்: மே 2021

லகளவில் மக்கள் பெருக்கம் என்பது மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். இந்தியா, வளர்ந்து வரும் நாடாக மட்டுமின்றி, சீனாவுக்கு அடுத்து அதிக மக்கள் நிறைந்த நாடாகவும் உள்ளது. எனவே, மக்கள் பெருக்கத்துக்கு இணையாக உணவு உற்பத்தியையும் அதிகரித்தால் மட்டுமே பட்டினிச் சாவுகளைக் குறைக்க முடியும்.

இந்தியாவில் 1960களில் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறையை, பசுமைப் புரட்சியின் மூலம் சரி செய்தனர். இரசாயன உரங்கள், இந்த உரங்கள் மூலம் குறுகிய காலத்தில் வளரும் பயிர் வகைகள், பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்தும் செயற்கை மருந்துகள், புதிய பாசன முறைகள் போன்றவற்றைப் பயன்படுத்தியதால், இந்தியா, உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடானது.

ஆனால், தொடர்ந்து பூச்சி, பூசண, களைக் கொல்லிகள் மற்றும் செயற்கை உரங்களைத் தேவைக்கு மேல் பயன்படுத்துதல், இயற்கை உரங்களை முற்றிலும் தவிர்த்தல் போன்ற செயல்களால், மண்ணும் சுற்றுச்சூழலும் மாசடைந்து வருகின்றன. எனவே, நாம் மீண்டும் அங்கக வேளாண்மையை நாடும் நிலையில் உள்ளோம்.

அங்கக வேளாண்மை என்பது, செயற்கை உரம் மற்றும் மருந்துகளைத் தவிர்த்து, அதிகளவில் இயற்கை உரம் மற்றும் பொருள்களைப் பயன்படுத்தி, மண் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாமல் விவசாயம் செய்யும் முறையாகும்.

அங்கக வேளாண்மையில் நெல்

தமிழகம், இந்தியா என்றில்லாமல், உலகளவில் சாகுபடிப் பரப்பிலும், மக்களின் உணவிலும் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது நெல். நெல்லை மக்களிடம் இருந்து பிரிக்க இயலாது. உணவுப் பொருளான நெல்லை, இரசாயன உரங்கள் மற்றும் மருந்துகளைத் தவிர்த்து, அங்கக வேளாண்மை முறையில் பயிரிட்டு உணவுக்குப் பயன்படுத்தினால், செயற்கை மருந்துகளால் ஏற்படும் உடல்நலச் சிக்கல்கள் குறையும்.

ஆனால், அங்கக வேளாண்மையில் நெல்லைப் பயிரிட்டால், பூச்சிகள், நோய்கள் மற்றும் களைகளைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும். அதிகளவில் வேலையாட்கள், அல்லது இயந்திர பயன்பாடு தேவைப்படும். இந்தச் சிக்கலில் இருந்து மீள்வதற்குத் தீர்வாக அமைவது தான், நெல் வயலில் வாத்து வளர்ப்பு.

நெல் வயலில் வாத்துகள்

அங்கக முறை நெல் வயலில் வாத்துகளை வளர்த்தால், விவசாயிகளின் வருமானம் உயர்வதுடன் சுற்றுச்சூழலும் காக்கப்படும். ஜப்பான், சீனா, இந்தோனேசியா, வியட்நாம், கொரியா, பிலிப்பைன்ஸ் போன்ற ஆசிய நாடுகளில், நெற்பயிரில் வாத்து வளர்ப்பு முறையால் வெற்றி கண்டுள்ளனர்.

ஒருங்கிணைந்த பண்ணையம்

தக்கைப்பூண்டு வளர்ப்பு: அங்கக முறை நெல் சாகுபடிக்கு இயற்கை உரங்களைப் போதுமான அளவில் இட வேண்டும். ஏக்கருக்கு 5-10 டன் மட்கிய எரு அல்லது 2-3 டன் மண்புழு உரத்தை அடியுரமாக இட வேண்டும். மேலும், நெல்லை நடப்போகும் நிலத்தில், ஏக்கருக்கு 16-20 கிலோ வீதம் தக்கைப்பூண்டை விதைத்து, அது பூக்கும் பருவத்தில் மடக்கி உழ வேண்டும்.

நன்கு வளர்ந்த தக்கைப்பூண்டு மூலம் ஏக்கருக்கு 10-12 டன் பசுந்தாள் உரம் கிடைக்கும். தக்கைப்பூண்டில் உள்ள 2.5-3.2% தழைச்சத்து மூலம், ஏக்கருக்கு 50-70 கிலோ தழைச்சத்துக் கிடைக்கும்.

நெல் வளர்ப்பு: தக்கைப்பூண்டை மடக்கிச் சேற்றுழவு செய்ய வேண்டும். சுமார் பத்து நாட்கள் கழித்து, தக்கைப்பூண்டு நன்கு மட்கிய பிறகு மீண்டும் சேற்றுழவு செய்ய வேண்டும். அடுத்து, வயலை சமப்படுத்தி, நாற்றுகளை நட வேண்டும். நெல் நடவு நாளைத் தோராயமாகக் கணித்து, அதற்கேற்ப நாற்றாங்காலைத் தயாரிக்க வேண்டும்.

120 நாட்களுக்குள் விளையும் குறுகிய கால நெல் இரகங்கள் எனில், 20 நாள் நாற்றுகளையும், 135 நாட்களில் விளையும் மத்திய மற்றும் நீண்ட கால இரகங்கள் எனில், 25 மற்றும் 35 நாள் நாற்றுகளையும் நட வேண்டும். நெல் வயலில் வாத்துகள் எளிதாக நடமாட, வரிசைக்கு வரிசை 20 செ.மீ., நாற்றுக்கு நாற்று 10-15 செ.மீ. இடைவெளியில் நட வேண்டும். அடுத்து, நெல் சாகுபடியில் வழக்கமான உத்திகளைப் பின்பற்ற வேண்டும்.

வாத்து வளர்ப்பு: நடவு நட்டுப் பத்து நாட்களில், சுமார் முப்பது நாள் வாத்துக் குஞ்சுகளை வயலில் விட வேண்டும். ஏக்கருக்கு 160 வாத்துக் குஞ்சுகள் வீதம் விட்டால் அதிக இலாபம் கிடைக்கும் என, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. வாத்துகளை எட்டு மணி நேரம் நெல் வயலில் மேயவிட வேண்டும். இதனால், வாத்துகளுக்கு வேறு தீவனம் எதையும் இடத் தேவையில்லை.

நெற்பயிர்கள் புடை கட்டும் பருவம் வரை, அதாவது, 60-90 நாட்கள் வரை, வாத்துகளை நெல் வயலில் மேய விடலாம். பூக்கும் பருவத்தில் வாத்துகளை வயலில் விட்டால், நெற்கதிர்களைச் சேதப்படுத்தும். எனவே, பயிரகள் புடை கட்டும் பருவத்தில் வாத்துகளை நெல் வயலில் மேய்வதை நிறுத்திவிட வேண்டும்.

வாத்துகளால் ஏற்படும் மாற்றங்கள்

களைக்கட்டுப்பாடு: நடவு முடிந்த பத்தாம் நாள், வாத்துக் குஞ்சுகளை நெல் வயலில் விடுவதன் மூலம், 1-2 இலைகளுடன் உள்ள சிறிய களைகள் வாத்துகளால் மிதிபட்டு, வேரூன்ற முடியாமல் அழியும். இதிலிருந்து தப்பி வளரும் களைகளை வாத்துகள் கொத்தித் தின்பதால் அழிந்து விடும் அல்லது மட்டுப்படுவதால், பயிருக்கான நீர், சத்துகள், வெய்யில் ஆகியவற்றை அவற்றால் அடைய முடியாது.

வாத்துகள் சேற்றை நீருடன் சேர்த்து அலசி விடுவதால் பயிருக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கும். இந்தக் காற்றோட்டம் நெற்பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூலை ஊக்குவிக்கும்.

பூச்சிக் கட்டுப்பாடு: பூச்சிகளைத் தான் வாத்துகள் விரும்பி உண்ணும். வாத்துகள் அவற்றின் மூக்கை மண்ணுக்குள் வைத்துக் கொண்டே தான் வயலில் நீந்திச் செல்லும் அல்லது நடந்து போகும். அப்போது கிடைக்கும் பூச்சிகள் உருவாகக் காரணமாக இருக்கும் புழுக்களை உண்பதால், பூச்சிகள் பெருக்கம் கட்டுப்படும்.

நெற்பயிர்களில் உள்ள பூச்சிகளின் புழுக்களை உண்பதால், சாதாரண சாகுபடி வயலிலுள்ள பயிர்களில் இருப்பதை விட, வாத்துகள் திரியும் நெல் வயலில் பூச்சிகளின் தாக்கம் குறைவாக இருக்கும் என்பது, ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது.

மண்வளம் கூடும்: வாத்துகள் தினமும் 8 மணி நேரம் வீதம் சுமார் 70 நாட்கள் நெல் வயலில் திரிவதால் அவற்றின் எச்சம் மண்ணில் சேர்ந்து உரமாகிச் சத்துகளாக மாறும். எனவே, பயிரின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

பயிர் வளர்ச்சி மற்றும் மகசூல்: வாத்துகள் வயலில் திரிவதால், களைகளும் பூச்சிகளும் கட்டுக்குள் இருக்கும்; மண்வளம் கூடுவதால் பயிர்கள் நன்கு வளரும். தூர்களின், கதிர்களின், கதிர்களில் உள்ள மணிகளின் எண்ணிக்கை, நெல் மகசூல், வைக்கோலின் எடை ஆகியன, சாதாரண சாகுபடி வயலில் இருப்பதைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

வாத்துகளால் வருமானம்: ஒரு மாதக் குஞ்சுகளை 60 ரூபாய் வீதம் வாங்கி 60-90 நாட்கள் நெல் வயலில் வளர்த்தால், அவை சுமார் 900 கிராம் அளவுக்கு வளரும். கிலோ 250 ரூபாய் விலையில், ஒவ்வொரு வாத்தையும் 200 ரூபாய்க்கு மேல் விற்கலாம்.

இவ்வகையில், ஒரு ஏக்கரில் வளர்க்கும் 160 வாத்துகள் மூலம் 32 ஆயிரம் ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். இதில், வாத்துக் குஞ்சுகள் வாங்குதல் மற்றும் இதர செலவாக 10 ஆயிரம் ரூபாயைக் கழித்தாலும், 22 ஆயிரம் ரூபாய் இலாபமாகக் கிடைக்கும்.

மொத்த வருமானம்

செலவில்லாமல் வாத்துகளை நெல் வயலில் வளர்ப்பதால் நெல் மகசூலும் நெல் வருமானமும் கூடும். அத்துடன் வாத்துகள் வருமானமும் இணைவதால் ஒரு ஏக்கரில் 30 ஆயிரம் ரூபாய் இலாபமாகக் கிடைக்கும். ஆனால், அங்கக முறையில் நெல்லை மட்டும் பயிரிட்டால், ஒரு ஏக்கரில் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே இலாபமாகக் கிடைக்கும்.

எனவே, அங்கக முறையில் நெல்லுடன் வாத்துகளைச் சேர்த்து வளர்த்தால், களைகள், பூச்சிகள் கட்டுப்படும்; மண்வளமும் மகசூலும் கூடும்; நிகர வருமானம் கூடும்; சுற்றுச்சூழல் மாசு குறையும். ஆகவே, அங்கக விவசாயிகள் நெல் வளர்ப்பில் வாத்துகளையும் வளர்க்கும் உத்தியைக் கையாண்டால் பொருளாதார வளர்ச்சியை அடையலாம்.


PB_DR.N.DHAVA PRAKASH

முனைவர் .தவப்பிரகாஷ்,

முனைவர் நா.மரகதம், முனைவர் ந.சக்திவேல், முனைவர் சி.இரா.சின்னமுத்து, உழவியல் துறை,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்தூர்-641003.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!