கால்நடைக் கழிவுகள் தரும் மதிப்புமிகு பொருள்கள்!

கால்நடை HP 6e8890478e5bdbd2d4c74f6976e715fa

ந்தியப் பண்பாட்டில் பசுக்கள் மிகவும் உயர்வாகப் போற்றப் படுகின்றன. இவை விவசாயிகளின் செல்வமாகப் பார்க்கப் படுகின்றன. இத்தகைய பசுக்களின் சாணம், கோமியம் ஆகியன, மிகச் சிறந்த இயற்கை உரமாகக் காலங் காலமாகப் பயன்படு கின்றன.

இந்தச் சாணம், கோமியத்தைக் கொண்டு பயனுள்ள வகையில், பஞ்சகவ்யம் என்னும் திரவத்தைத் தயாரித்து, உரமாக, இயற்கைப் பூச்சி மற்றும் நோய்த் தடுப்பானாகப் பயன்படுத்தி வருகிறோம்.

இப்படி, மதிப்புமிக்க இன்னொரு பொருள் மீத்தேன் வாயு எனப்படும் சாண எரிவாயு. கால்நடைக் கழிவுகளை நொதிக்கச் செய்வதன் மூலம் இது கிடைக்கிறது.

எனவே, கால்நடைக் கழிவுகளை மதிப்புமிக்க பொருள்களாக மாற்றுவதன் மூலம், வேளாண்மையில் நல்ல வருவாயை அடைய முடியும்.

பஞ்சகவ்யா தயாரிப்பு

சுமார் 20 லிட்டர் பஞ்சகவ்யா தயாரிப்புக்கான செய்முறையைப் பார்ப்போம்.

தேவையான பொருள்கள்: பசுவின் சாணம் 5 கிலோ,

கோமியம் 3 லிட்டர்,

பால் 2 லிட்டர்,

தயிர் 2 லிட்டர்,

நெய் 500 கிராம்,

கரும்புச்சாறு 3 லிட்டர்,

இளநீர் 3 லிட்டர்,

வாழைப்பழம் 12,

கள் 2 லிட்டர்.

செய்முறை: சாணத்துடன் நெய்யைச் சேர்த்து ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் போட்டு நன்கு பிசைந்து அதை மூன்று நாட்களுக்கு மூடி வைக்க வேண்டும்.

இதற்கு, மண்பானை, சிமெண்ட் தொட்டியையும் பயன்படுத்தலாம். உலோகப் பாத்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது.

இதைத் தினமும் காலை, மாலையில் பிசைந்து வைப்பது அவசியம். தொட்டியைக் கொசுவலை அல்லது மெல்லிய துணியால் மூடி நிழலுள்ள இடத்தில் வைக்க வேண்டும்.

மூடாமல் விட்டால், ஈக்கள் முட்டையிட்டுப் புழுக்களை உண்டாக்கி, பஞ்சகவ்யாவைப் பயனற்றதாக்கி விடும்.

நான்காம் நாள், மீதமுள்ள ஏழு பொருள்களையும் போட்டு, தினமும் காலை மாலையில் நன்கு கலக்கிவிட வேண்டும்.

இப்படிச் செய்தால் 18 நாட்களில் பஞ்சகவ்யா தயாராகி விடும். 19 ஆம் நாளில் இருந்து பயன்படுத்தலாம்.

இந்தக் கரைசலைத் தினமும் இருவேளை கலக்கிக் கொண்டே வந்தால், ஆறு மாதங்கள் வரையில் கெடாமல் இருக்கும்.

தினமும் கலக்குவதால், கலவையில் காற்றோட்டம் ஏற்பட்டு நுண்ணுயிர்கள் பெருகும்.

நெடுநாட்கள் வைத்திருந்தால், நீர் ஆவியாகிக் கலவை சுண்டி விடும். அப்போது தேவையான இளநீர் அல்லது கரும்புச்சாறு அல்லது வெல்லம், கருப்பட்டிக் கலந்த நீரை ஊற்றிக் கலக்கி விடலாம்.

கரும்புச்சாறு கிடைக்காத இடங்களில், 500 கிராம் வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரையில் 3 லிட்டர் நீரைச் சேர்த்துப் பயன் படுத்தலாம்.

கள் கிடைக்காத இடங்களில், 2 லிட்டர் இளநீரை பிளாஸ்டிக் புட்டியில் ஊற்றி வைத்தால் ஒரு வாரத்தில் கள்ளாக மாறி விடும்.

இதுவும் கிடைக்காத இடங்களில், 2 லிட்டர் திராட்சைச் சாற்றை ஒரு வாரத்துக்குப் பிறகு பயன் படுத்தலாம்.

இப்படி, நொதிக்க வைத்தால் கிடைப்பது தான் பஞ்சகவ்யா. இந்தக் கரைசலை வடித்து எடுத்து, அனைத்துப் பயிர்களுக்கும் தெளிக்கலாம். இது, உரமாக, பூச்சி விரட்டியாகப் பயன்படும்.

பொதுவாக, நீருடன் மூன்று சத பஞ்சகவ்யா, அதாவது, ஒரு லிட்டர் நீருக்கு 30 மில்லி பஞ்சகவ்யா வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

சாண எரிவாயு உற்பத்தி

கால்நடைக் கழிவிலிருந்து கிடைக்கும் இன்னொரு முக்கியப் பொருள் சாண எரிவாயு. அதாவது, சாணத்தில் உள்ள மீத்தேன் என்னும் எரிபொருளை நொதித்தல் மூலம் தனியாகப் பிரித்தெடுத்து, சமைக்க அல்லது விளக்கெரிக்க அல்லது இயந்திரங்களை இயக்கப் பயன்படுத்தலாம்.

ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிலோ சாணம் வீதம் கலந்து, சாண எரிவாயுக் கலனில் ஊற்றி நொதிக்கச் செய்தால், அதிலிருந்து 40 லிட்டர் மீத்தேன் எரிவாயு கிடைக்கும்.

இந்த முறையில், ஒரு வீட்டுக்கு அல்லது ஓர் ஊருக்குத் தேவைப்படும் எரிவாயுவைப் பெறும் வகையில், கொள்கலனை அமைப்பது, கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கலன்களை அமைப்பது சாத்தியம்.

இப்படி, சாணத்தில் இருந்து எரிவாயுவைத் தயாரிப்பதற்கு என இரண்டு முறைகள் உள்ளன. அவையாவன: தீனபந்து சாண எரிவாயுக் கலன், சமுதாயச் சாண எரிவாயுக் கலன்.

தீனபந்து சாண எரிவாயுக் கலன்: இதன் மூலம் கிடைக்கும் எரிவாயுவைச் சமைக்க, விளக்குகளை எரிக்க, இயந்திரங்களை இயக்கப் பயன்படுத்தலாம்.

இந்தக் கலனில், டோம், செரிமானி எரிவாயு சேமிப்பு, எரிவாயுவை வெளியேற்றும் குழாய், நுழைவாயிலை அடைக்கும் குழாய் ஆகிய பாகங்கள் உள்ளன.

இந்தக் கலனில், மாட்டுச் சாணம், பன்றிக்கழிவு, கோழிக்கழிவு ஆகியவற்றைக் கொட்டி எரிவாயுவை எடுக்கலாம்.

பொதுத் தகவல்கள்: மூடப்படும் அமைப்பு ஏதும் தேவையில்லாத காரணத்தால், ஜனதா உயிர்வாயு ஆலையைப் போலில்லாமல், இதன் கட்டுமானச் செலவைக் குறைக்கலாம்.

டைஜஸ்டரின் எரிவாயுச் சேமிப்பு அறைக்கு மேலே ஓர் அரைக்கோள எரிவாயு அறை அமைக்கப்படும். ஒரு குழாய் வடிவில், நுழைவாயிலில் குழம்பைக் கலக்கும் தொட்டியைச் செரிமானி இணைக்கிறது.

இம்முறையைச் சமவெளியில் அமைத்தால் எரிவாயு உற்பத்தியாக 40 நாட்களும், மலைப் பகுதியில் 50 நாட்கள் வரையும் ஆகும்.

சமுதாயச் சாண எரிவாயுக் கலன்: இதிலிருந்து கிடைக்கும் எரிவாயு, சமைக்க, விளக்குகளை எரிக்க, இயந்திரங்களை இயக்கப் பயன்படும். ஒரு மணி நேரத்தில் 1.5 கன மீட்டர் எரிவாயு உற்பத்தி ஆகும். இதற்கு ஒரு இலட்சம் ரூபாய் வரை செலவாகும்.

அமைப்பு

சமுதாயச் சாண எரிவாயுக் கலன் பொதுவான இடத்தில் அமைக்கப்படும். கலனுக்குத் தேவையான இடுபொருள்கள் அப்பகுதி வீடுகளில் இருந்து பெறப்பட்டு, உற்பத்தியாகும் வாயு அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.

35 கன மீட்டர் கொள்ளளவுக் கலனின் இடுபொருள் மற்றும் வெளிவிடு தொட்டிகளின் அளவு 2.0×1.2 மீட்டராகும். இந்தக் கலன் இயங்க, தினமும் 600- 700 கிலோ சாணம் தேவைப்படும்.

இந்தளவு சாணத்தைப் பெறுவதற்கு 60-70 மாடுகள் இருக்க வேண்டும். இடுபொருளின் இருப்பைப் பொறுத்து, சாண எரிவாயுவின் பயனைப் பொறுத்து, கலனின் கொள்ளளவை முடிவு செய்யலாம்.

இதிலிருந்து உற்பத்தியாகும் வாயு மூலம், ஐந்து குதிரைத் திறன் எந்திரத்தை, 14 மணி நேரம் இயக்கலாம். 50 kwh மின்னுற்பத்தி இருக்கும். 40-50 குடும்பங்கள் பயனடைய முடியும்.


Velmurugan

முனைவர் க.வேல்முருகன், பேராசிரியர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், சென்னை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading