செம்மறியாடு வளர்ப்பு, கிராமப் பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
குறிப்பாக, நீர்ப் பற்றாக் குறையால் விவசாயம் செய்ய முடியாத இடங்களில் மற்றும் இயற்கைத் தீவன வளங்கள் குறைவாக உள்ள பகுதிகளில் செம்மறியாடு வளர்ப்பு முக்கிய இடத்தில் உள்ளது.
பசுமாடு மற்றும் எருமை மாடுகளின் வளர்ச்சி விகிதத்தை ஒப்பிடும் போது, செம்மறி ஆடுகளில் 2 சதவீத வளர்ச்சி அதிகமாக உள்ளது.
வெள்ளாடும் செம்மறியாடும் ஒரே மாதிரியான செரிமான உறுப்புகளைப் பெற்றிருந்தாலும், தீவனப் பழக்கத்திலும், தேவையிலும் அவை தம்முள் மாறுபட்டே உள்ளன.
முதலில், வயிறு நிறைவதற்காக உண்ணும் தீவன அளவு, காய்ந்த தீவன அடிப்படையில், செம்மறி ஆடுகளின் உடல் எடையில் 2.5-3 சதம் தேவை. ஆனால், வெள்ளாட்டின் உடல் எடையில் 6-8 சதம் தேவை.
பொதுவாக, ஆடுகள் தங்களின் தீவனத் தேவையில் பாதியை, கலப்புத் தீவனத்தில் இருந்தும், அடுத்த பாதியை, பசும்புல் வகையில் இருந்தும் பெறுதல் வேண்டும்.
செம்மறி ஆடுகள் சிறிது தூரம் மட்டுமே நடந்து மேயும். வெள்ளாடுகள் அதிக தூரம் நடந்து மேயும்.
செம்மறி ஆடுகள் புல் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் மேயும் தன்மை மிக்கவை.
வெள்ளாடுகளைப் போல் மரத்தழைகளை அதிகமாக விரும்பாது. ஆனால், செம்மறி ஆடுகளுக்குக் குடிநீர் அதிகமாகத் தேவைப்படும்.
நன்கு வளர்ந்த இந்திய செம்மறி ஆடுகள் சராசரியாக, 30-40 கிலோ இருக்கும். அயல்நாட்டுச் செம்மறி ஆடுகள் 70 கிலோ இருக்கும்.
இந்த வளர்ச்சி மாற்றத்துக்கு முக்கியக் காரணம், செம்மறி ஆடுகளுக்குத் தேவையான அளவில் சத்துமிகு தீவனம் கிடைக்காதது தான்.
கிராமங்களில் செம்மறி ஆடுகளுக்கு அடர் தீவனம் என்னும் கலப்புத் தீவனம் தரப்படுவது சிறிதளவு தான். அல்லது இல்லை என்றே கூறலாம்.
ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு வளர்த்தாலே போதும் என்னும் பொதுவான கருத்து கால்நடை வளர்ப்போரிடம் நிலவுகிறது.
இதனால், தேவையான சத்துகளைப் பெறாத ஆடுகள், விற்பனை வயதில் எடை குறைந்து குறைவான விலைக்கே விற்கப்படும்.
எனவே, நெடுநாட்கள் வளர்த்தாலும், அதற்கான வளர்ச்சியோ விலையோ ஆடுகள் மூலம் கிடைப்பதில்லை.
எனவே, செம்மறி ஆடுகளுக்கு, பருவத்துக்கு ஏற்ப, கலப்புத் தீவனம், பசுந்தீவனம், உலர் தீவனம் அளிக்கப்பட வேண்டும்.
இளம் குட்டிகள் பராமரிப்பு
இளம் செம்மறி ஆட்டுக் குட்டிகள், முதல் மூன்று மாதங்கள் வரை தாயிடம் பால் குடிக்கும். ஆனாலும், பிறந்த மூன்றாம் வாரம் முதல் புல்லை உண்ணத் தொடங்கும்.
செம்மறிக் குட்டிகளின் வளர்ச்சி, வெள்ளாடுகளை விட அதிகமாக இருக்கும். இளங்குட்டிப் பருவத்தில் முதல் 48 மணி நேரம் மிகவும் முக்கியமாகும்.
எனவே, குட்டிப் பிறந்து அரை மணி நேரத்தில் சீம்பாலைத் தர வேண்டும். 15-90 நாட்கள் வரை இளம் குட்டிக்கான தீவனத்தைத் தர வேண்டும்.
குட்டிகளுக்கான தீவனக் கலவை (நூறு கிலோ)
மக்காச்சோளம்: 60 கிலோ,
புண்ணாக்கு: கடலை/ சோயா: 20 கிலோ,
கோதுமைத் தவிடு: 12 கிலோ,
உளுத்தம் பொட்டு: 5 கிலோ,
தாதுப்பு : 2 கிலோ,
உப்பு: 1 கிலோ
குட்டிகளுக்கு முதல் எட்டு வாரம் வரை, 50-100 கிராம் அடர் தீவனம், 0.5-1 கிலோ பசுந் தீவனம் தரப்பட வேண்டும்.
எட்டு வாரங்களுக்கு மேல், 100-150 கிராம் அடர் தீவனம், 1-1.5 கிலோ பசுந் தீவனம் தரப்பட வேண்டும்.
இளம் குட்டிகள் மற்றும் வளரும் குட்டிகள் உள்ள கொட்டிலில், தாதுப்புக் கட்டிகளைத் தொங்க விட வேண்டும்.
தாதுப்புக் குறையுள்ள குட்டிகள், தாதுப்புக் கட்டியை நக்கி, தமது தாதுப்புத் தேவையைச் சரி செய்து கொள்ளும்.
வளர்ந்த ஆடுகளுக்கான தீவனக் கலவை (நூறு கிலோ)
மக்காச் சோளம்/ கம்பு: 30-50 கிலோ,
புண்ணாக்கு: கடலை/ சோயா/ பருத்தி: 20-50 கிலோ,
தவிடு: அரிசி/ கோதுமை: 25-35 கிலோ,
தாதுப்பு: 2 கிலோ,
உப்பு: 1 கிலோ.
ஆறு முதல் 12 மாதம் வரையான ஆடுகளுக்கு, 200-250 கிராம் அடர் தீவனம், 4-5 கிலோ பசுந்தீவனம் தரப்பட வேண்டும்.
சினை ஆடுகளுக்கு, 250-300 கிராம் அடர் தீவனம், 4-5 கிலோ பசுந்தீவனம் தரப்பட வேண்டும்.
பால் வற்றிய ஆடுகளுக்கு 150-200 கிராம் அடர் தீவனம், 4-5 கிலோ பசுந்தீவனம் தரப்பட வேண்டும்.
பால் தரும் ஆடுகள் மற்றும் கிடாக்களுக்கு, 300-350 கிராம் அடர் தீவனம், 4-5 கிலோ பசுந்தீவனம் தரப்பட வேண்டும்.
செழுமைப்படுத்துதல்
பெட்டையாடுகளைக் கிடாவுடன் இனச் சேர்க்கைக்கு விடுமுன், அவற்றுக்கான சத்துகளை வழங்குவதில் மற்றும் உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும்.
பெட்டையாடுகள் பருவத்துக்கு வருவதற்கு 3-4 வாரங்களுக்கு முன், தாதுப்புகள் கலந்த 200-250 கிராம் கலப்புத் தீவனத்தை, தினமும் அளித்து வந்தால், நல்ல முறையில் சினைக்கு வரும்.
சிறந்த கரு முட்டைகள் அதிகமாக உற்பத்தியாகி, அதிகக் குட்டிகளை ஈனும் வாய்ப்பு உண்டாகும். இந்த முறையைச் செழுமைப்படுத்துதல் என்பர்.
தாதுப்புக் கலவையின் அவசியம்
செம்மறிகளின் உடல் வளர்ச்சி, இனப் பெருக்கம் மற்றும் பால் உற்பத்திக்கு, எரிசக்தி மற்றும் புரதம் தேவைப் படுவதைப் போல, தாதுப்புகளும் மிகவும் அவசியமாகும்.
தாதுப்புகளின் தேவை மிகக் குறைவு தான் என்றாலும், அதைச் சரி செய்யா விட்டால் சத்துக்குறை நோய்கள் ஏற்படும்.
சினைக் காலத்தில் தரப்படும் தாதுப்புகளில், தேவைக்குப் போக மீதமுள்ளவை, செம்மறி ஆடுகளின் உடலில் சேமித்து வைக்கப்பட்டு, குட்டிகள் பிறந்த பின் பால் உற்பத்திக்குப் பயன்படும்.
எனவே, பால் வற்றிய ஆடுகள், சினையாடுகளுக்குத் தாதுப்புக் கலவையை அவசியம் அளிக்க வேண்டும்.
கலப்புத் தீவனத் தயாரிப்பில் தாதுப்புகள் சேர்வதால், செம்மறிகளுக்கு அடர் தீவனம் அளிக்கும் விவசாயிகள், தனியாகத் தாதுப்புக் கலவையைத் தரத் தேவையில்லை.
ஆனால், கலப்புத் தீவனத்தைத தராமல், தவிடு, புண்ணாக்கு, பொட்டு, மற்றும் தானியங்களைச் சொந்தமாகக் கலந்து கொடுக்கும் கால்நடை வளர்ப்போர், தினமும் 5-10 கிராம் தாதுப்புக் கலவையைக் கொடுக்க வேண்டும்.
அதாவது, குட்டிகளுக்குத் தினமும் 2-5 கிராம், பால் வற்றிய ஆடுகளுக்கு 5-10 கிராம், பால் தரும் ஆடுகள் மற்றும் கிடாக்களுக்கு 5-10 கிராம் வீதம் தாதுப்புக் கலவையைத் தர வேண்டும்.
கால்நடை வளர்ப்போர் நலன் கருதி, தரமான தாதுப்புக் கலவையை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் தயாரித்து உள்ளது.
இது, பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள், உழவர் பயிற்சி நிலையங்கள், வேளாண்மை அறிவியல் நிலையங்கள் மற்றும் இதர விரிவாக்க நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப் படுகிறது.
தாதுப்புக் கலவையின் நன்மைகள்
உடல் வளர்ச்சி மற்றும் பால் உற்பத்திக் கூடுகிறது. பாலில் கொழுப்பற்ற திடப் பொருள்களின் அளவும் கூடுகிறது. வளரும் செம்மறிகள் வேகமாக வளர்ந்து பருவத்துக்கு வர ஏதுவாகிறது.
கால்நடைகளின் உடல் நலம் மேம்படுகிறது. இதனால், நோய்த் தாக்கம் குறைவதால், பொருளாதார இழப்புத் தவிர்க்கப் படுகிறது.
தீவனத்தில் உள்ள சத்துகள் நல்ல முறையில் செரிக்கும். சினைப் பருவமின்மை, கருத் தங்காமை, கருச்சிதைவு, நஞ்சுக்கொடி விழாமை போன்ற, இனப்பெருக்கக் கோளாறுகள் ஏற்படுவது பெருமளவில் தவிர்க்கப் படுகிறது.
செம்மறிக் கிடாயில் விந்தணு உற்பத்தியும், அதன் தரமும் உயரும். ஆகவே, கால்நடைகளின் உற்பத்தித் திறன் மற்றும் இனப்பெருக்கத் திறனைக் கூட்ட, தாதுப்புக் கலவையை எல்லாக் கால்நடைகளுக்கும் அளிக்க வேண்டும்.
தீவனப் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகள்
செம்மறி ஆடுகளில் எரிசக்தி மற்றும் புரதக் குறை இருந்தால், பசியின்மை, குறைவாக உண்பது, வளர்ச்சியின்மை, எடைக்குறைவு, சினைத் தங்காமை, பாலுற்பத்திக் குறைதல்,
உரோமங்கள் சிலிர்த்துக் காணப்படுதல், குடற் புழுக்கள் எளிதில் பெருகுதல் மற்றும் முற்றிய நிலையில் இறப்பு ஏற்படுதல் போன்றவை நிகழும்.
சினைப்பருவ இரத்த நச்சேற்றம்: இது, செம்மறி ஆடுகள் ஈனும் பருவத்தில் ஏற்படும் நோயாகும்.
சினையின் போது அடர் தீவனம் தரப்படாத நிலையில் ஏற்படும் எரிசக்திக் குறையால் இந்நோய் உண்டாகும்.
இதனால், ஆடுகள் உண்ணாமல் இருத்தல், கழுத்து ஒரு பக்கம் திருப்பிக் கொள்தல், நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு இறந்து போதல் ஆகியன நிகழலாம்.
கருவின் சரியான வளர்ச்சி மற்றும் அதிகப் பால் உற்பத்தியை உறுதி செய்ய, கர்ப்பத்தின் பிற்பகுதியில், சத்துகளின் அளவு, குறிப்பாக எரிசக்தியின் அளவைக் கூட்ட வேண்டும்.
வயிற்று உப்புசம்: ஆடுகளுக்குத் தானியங்கள், புரதமுள்ள மர இலைகள் மற்றும் காய்கறிகளை அதிகமாகத் தரும் போது, அவை செரிக்காமல், அதிக வாயு உருவாகி, வயிற்று உப்புசம் ஏற்படும்.
இதனால் மூச்சு விட முடியாமல் திணறும் ஆடுகள் இறக்கவும் நேரிடும். எனவே, அளவுக்கு மேல் தானியங்களைத் தரக் கூடாது. நிழலில் காய வைத்த மரத்தழைகளைத் தான் தர வேண்டும்.
மரு.பி.முரளி, மரு.ப.சிலம்பரசன், கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கடலூர்.
சந்தேகமா? கேளுங்கள்!