My page - topic 1, topic 2, topic 3

பழைமை மாறாத நாட்டுக் கோழிகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஏப்ரல்.

நாம் காலம் காலமாக வளர்த்து வரும் வீட்டுக் கோழிகளை, இன்று நாட்டுக் கோழிகள் என்று கூறுகிறார்கள். முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தியை அதிகப்படுத்தும் நோக்கத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழிகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டவே, நம் கோழிகளுக்கு இப்பெயர் இடப்பட்டுள்ளது என்று சொல்லலாம். கூரைகளில் அமர்ந்து அதிகாலையில் கூவி, அயர்ந்து தூங்கும் மக்களை எழுப்பி விடும் நமது கோழிகள், நம் வாழ்க்கையின் ஓர் அங்கம் என்று சொன்னால் அது மிகையில்லை.

பிள்ளையில்லாத வீடிருக்கும். ஆனால், கோழியில்லாத வீடிருக்காது. ஒரு குடும்பத்துக்குத் தேவைப்படும் முட்டை மற்றும் இறைச்சிக்கு ஏற்ப, அந்தக் குடும்பத்தில் கோழிகள் வளர்ந்து கொண்டிருக்கும். இந்தக் கோழிகளை வளர்ப்பதற்கு என எந்த மெனக்கெடுதலும் இல்லை. மிஞ்சும் உணவுகள், தானியக் கழிவுகள், பூச்சிகள், புழுக்கள் தான் நம் நாட்டுக் கோழிகளின் உணவுகள். தெருவிலும் வீட்டுக் கொல்லையிலும் கிடைப்பதை உண்டு, முட்டைகளையும் இறைச்சியையும் கொடுப்பவை நமது வீட்டுக் கோழிகள்.

வீட்டையே சுற்றி வரும் கோழிகளும் உண்டு; தெருக்களுக்கு ஓடிவிடும் கோழிகளும் உண்டு; காலையில் வீட்டை விட்டுக் கிளம்பினால் மாலையில் அடைவதற்கு மட்டுமே வரும் ஊர்ச்சுற்றிக் கோழிகளும் உண்டு. இதைப்போல, கூடி மேயும் பாசக்காரக் கோழிகளும் உண்டு; இரையின் பக்கத்தில் மற்ற கோழிகளை விடாமல் கொத்தித் துரத்தும் கோபக்காரக் கோழிகளும் உண்டு.

கிடக்கும் தீனியை, தான் உண்ணாமல், கொத்திக் கொத்திக் காட்டித் தன் குஞ்சுகளை உண்ண வைக்கும் தாய்க்கோழியின் பாசம், எதிரியென்று தெரிந்தால் பறந்து பறந்து துரத்தி, எச்சரிக்கைக் குரல் எழுப்பி, குஞ்சுகளைத் தன் சிறகுகளில் பொத்திக் காக்கும் நேசம், நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் இந்த மண்ணின் அடையாளம்.

இப்படிக் குடும்ப உறவுகளுடன் கூடித் திரிந்த நம் கோழிகள், மேலைநாட்டுக் கோழிகளின் மேல் நாம் கொண்ட மோகத்தால், கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கின. அந்தக் கோழிகள் ஐம்பது நாள் வளர்ப்பில் அதிகளவு எடையை அடைவதும், ஆண்டு முழுவதும் முட்டைகளை இடுவதும் நமக்கு நன்மையாய்த் தெரிந்தன.

ஆனால், கால ஓட்டத்தில் கண்ட அனுபவத்தில், நம் வீட்டுக் கோழிகளின் இறைச்சிக்கும் முட்டைக்கும் அவையெல்லாம் ஈடில்லை என்பதை உணர்ந்த மக்கள், மீண்டும் நாட்டுக்கோழி இறைச்சியையும், முட்டையையும் தேடி வருகின்றனர். அதனால், அவரவர் குடும்பத் தேவைக்காக மட்டுமே வளர்க்கப்பட்ட நாட்டுக்கோழி வளர்ப்பு, இன்று பொருளாதார வளத்தைத் தரும் தனித் தொழிலாக உருவெடுத்து வருகிறது.

அந்த வகையில், எம்.காம்., எம்.பில்., பி.எல். படித்துள்ள, ஏ.சக்திபிரபு, காஞ்சிபுர மாவட்டம், திருக்கழுக்குன்றம், மாம்பாக்கம் ஊராட்சியில் உள்ள முடையூரில் நாட்டுக் கோழிகளை வளர்த்து வருகிறார். அவருடைய நாட்டுக்கோழி வளர்ப்பு அனுபவங்கள் குறித்துக் கேட்டோம். அப்போது அவர் கூறியதாவது:

“நான் நாட்டுக்கோழி வளர்ப்பில் பதின்மூன்று ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறேன். என் மனைவி வினோதினியும் எனக்குப் பக்கபலமாக இருந்து வருகிறார். வீட்டு வேலைகளை முடித்ததும் அவர் கோழிகளைக் கவனிப்பதில் ஈடுபட்டு விடுவார். கோழிக் கொட்டகையைச் சுத்தம் செய்தல், தீனியிடுதல், குடிநீர் கொடுத்தல், முட்டைகளைச் சேகரித்தல் என, எனக்கு எல்லா விதத்திலும் உதவியாக இருப்பார். கோழி வளர்ப்பில் அவர் காட்டும் ஆர்வமும் ஒத்துழைப்பும் தான் எனக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இருக்கிறது. அதனால், நாட்டுக்கோழி வளர்ப்பை என்னால் நல்ல முறையில் செய்ய முடிகிறது.

ஒருங்கிணைந்த பண்ணையம்

இப்போது எங்களிடம் இருநூறு கோழிகள் உள்ளன. எல்லாமே பழைமை மாறாத, மரபு மாறாத நமது நாட்டுக் கோழிகள். வனராஜா, கிரிராஜா, மொட்டைக் கழுத்துக் கோழிகள், பெருஞ்சாதிக் கோழிகள், சிலுவைக் கோழிகள் ஆகியவற்றுடன், வான்கோழிகள், வாத்துகள், முயல்கள், வெள்ளாடுகள், உணவு மற்றும் அலங்கார மீன் வளர்ப்பு ஆகியவற்றையும் ஒருங்கிணைத்துச் செய்து வருகிறோம். கோழியெச்சம், முயல் எச்சம் ஆகியன மீன்களுக்கு உணவாக அமைகிறது. வாத்துகளின் எச்சமும் மீன்களுக்கு உணவாக அமைவதுடன், அந்த வாத்துகளுக்கான உணவு மையமாக மீன்குட்டை உள்ளது. காலையில் கொட்டகையில் இருந்து திறந்து விட்டதுமே இந்த வாத்துகள் மீன் குட்டைக்குச் சென்று விடும்.

பணச்செலவு இல்லை

மீன் குட்டையைச் சுற்றி சீமை அகத்தி, முள் முருங்கை, சூபாபுல், கொடுக்காய்ப்புளி மரங்கள் உள்ளன. இந்தத் தழைகளை ஆடுகளுக்கும், முயல்களுக்கும் தீவனமாகத் தருகிறோம். வான்கோழிகள் காட்டுவெளியில் கிடைக்கும் புழு பூச்சிகள், புல் போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்ளும். இங்கே நாங்கள் வளர்க்கும் எந்த உயிருக்கும் தீனிக்காகப் பெரியளவில் பணத்தைச் செலவு செய்வதில்லை. அதனால், எங்களால் இவற்றை வளர்க்க முடிகிறது.

நாட்டுக்கோழி வளர்ப்பு

நாங்கள் கோழிகளை அடைத்து வைத்து வளர்ப்பதில்லை. இரவில் மட்டுமே பாதுகாப்புக்காகக் கொட்டகையில் அடைத்து வைப்போம். காலையில் திறந்து வெளியேற்றி விட்டு, அரிசி, கம்பு, சோளம் போன்றவற்றைத் தரையில் போட்டு விடுவோம். அதைக் கொத்திப் பொறுக்கி விட்டு இயற்கை மேய்ச்சலுக்குக் கிளம்பி விடுவார்கள்.

இதுபோக, முட்டைக்கோஸ், காளிஃபிளவர் தழை, கழிவுத் தக்காளி, முருங்கைக் கீரை, அகத்திக்கீரை, வீட்டில் மிஞ்சும் உணவுகளையும் தீனியாகக் கொடுப்போம். கோழிகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்பதால், அன்றாடம் வெங்காயத்தைச் சீவி வைப்போம்.

கோழிகளை வெளியே அனுப்பியதும் கொட்டகையைச் சுத்தப்படுத்தி விடுவோம். பரந்து திரிந்து மேய்ந்து விட்டு வெய்யில் அதிகமானதும் மரநிழலுக்கு வந்து விடுவார்கள். காலையிலும் மாலையிலும் உணவை விரும்புவார்கள். வெய்யில் தகிக்கும் நேரத்தில் உணவை விரும்புவதில்லை.

இந்த இரண்டு ஏக்கர் நிலத்தில் முளைத்துள்ள கோரைப்புல், அறுகம்புல், புழு, பூச்சிகள் போன்றவை எங்கள் கோழிகளுக்கான இயற்கை உணவுகள். அலங்கார மீன் வளர்ப்புத் தொட்டியில் உருவாகும் பாசி, கோழிகளுக்குப் பிடித்த உணவு. இவர்களுக்கு மீன் குட்டை நீர்தான் குடிநீர்.

மூலிகைக் குடிநீர்

மேலும், முதல்நாளே துளசியிலை, வேப்பிலையைப் போட்டு ஊற வைத்த நீரில், மஞ்சள் தூளையும் கலந்து குடிநீராகக் கொடுப்போம். இது கோழிகளின் உடம்புக்குள் உள்ள குடல் புழுக்களை அழிக்க உதவும். இதைப்போல, மிளகு, துளசியிலை, வேப்பிலை, மஞ்சளை உணவுடன் கலந்து கொடுப்போம். இது நோயெதிர்ப்பு சக்தியைக் கோழிகளுக்குக் கொடுக்கும். அம்மை நோய் வந்தால், வேப்பிலையையும் மஞ்சளையும் அரைத்துப் பூசுவோம்.

புயலையும் தாங்கும் கோழிகள்

சில கோழிகள் கொட்டகைக்கு வராமல் இங்குள்ள மரங்களில் ஏறி அமர்ந்து கொள்ளும். அந்தக் கோழிகளுக்கு நோயே வருவதில்லை. கொட்டகை அமையும் இடம் ஈரக்கசிவு இல்லாத இடமாக இருக்க வேண்டும். ஈரம் இருந்தால் கோழிகளுக்கு நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

நமது நாட்டுக் கோழிகள் எத்தனை புயலடித்தாலும் மழையடித்தாலும் தாங்கும். அசைந்து கொடுக்காமல் உட்கார்ந்து கொண்டே இருக்கும். வார்தா புயலையே வந்து பார் என்று சொன்னவர்கள் இவர்கள். பழகி விட்டால் இந்தக் கோழிகள் நம்மிடம் பாசமாக இருக்கும். தங்களின் எதிர்பார்ப்பை இவர்கள் தங்களின் பாசையில் எங்களிடம் சொல்லுவார்கள். அந்த மொழி, இவர்களுடன் பழகும் எங்களுக்கு மட்டுமே தெரியும்.

முட்டையிடும் காலம்

நாட்டுக்கோழிகள் நன்கு வளர்ந்து முட்டையிட எட்டு முதல் ஒன்பது மாதமாகி விடும். அன்றாடம் முட்டையிடும் கோழிகளும் உண்டு, ஒருநாள் விட்டு ஒருநாள் முட்டையிடும் கோழிகளும் உண்டு, வாரத்துக்கு ஒருமுறை முட்டையிடும் கோழிகளும் எங்களிடம் உள்ளன. சித்துக் கோழிகள் வாரத்துக்கு ஒரு முட்டை தான் இடும். மொட்டைக் கழுத்துக் கோழிகள் அதிகளவில் முட்டைகளை இடும். அதிக முட்டைகளை அடை காக்கும் திறமையும் இந்தக் கோழிகளுக்கு உண்டு.

தாய்க்கோழிகள்

எங்களுக்குத் தேவையான குஞ்சுகளை நாங்களே தாய்க்கோழிகள் மூலம் உற்பத்தி செய்து கொள்கிறோம். அதனால், ஒன்றிரண்டு குஞ்சுகள் இறந்தாலும் பாதிப்பு உண்டாவதில்லை. குஞ்சுகளை வெளியிலிருந்து இறக்குமதி செய்தால் அதற்காக நாம் பெரிய தொகையைச் செலவழிக்க வேண்டும்.

இப்படிச் செய்தால் நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு வருமானம் கிடைக்காது. அதனால், இந்தச் சிக்கலைத் தவிர்க்க, குறைந்தது பத்துத் தாய்க்கோழிகளை வைத்திருக்கிறோம். பதினைந்து முட்டைகள் வரையில் அடை காக்கும். மாறி மாறி இரண்டு மூன்று கோழிகள் அடையில் இருந்து கொண்டே இருக்கும்.

குஞ்சு வளர்ப்பு

இப்படி உற்பத்தி செய்யும் குஞ்சுகளுக்கு மட்டும் ஒரு பத்து நாளைக்குக் கோழித் தீவனத்தைக் கொடுப்போம். இதனால், இந்தக் குஞ்சுகள் கொஞ்சம் விரைவாக வளரும். ஒருமாதம் வரையில் காக்கை, பருந்துகளிடம் இருந்து காப்பாற்றி விட்டால் பிறகு கவலையே இல்லை.

அடையின் மூலம் உற்பத்தி செய்யும் குஞ்சுகள் அறிவுள்ள குஞ்சுகளாக இருக்கும். முட்டைப் பொரிப்பான் மூலம் உற்பத்தி செய்யப்படும் குஞ்சுகளுக்கு எச்சரிக்கை உணர்வோ சூழல் புரிதலோ இருப்பதில்லை. மக்காக இருக்கும். தாயின் மூலம் உற்பத்தி செய்யப்படும் குஞ்சுகள் குட்டையில் நீரைக் குடித்து விட்டுத் திரும்பி விடும்.

ஆனால், இங்குபேட்டரில் உற்பத்தியான குஞ்சுகள் நீரைக் குடித்து விட்டு அந்த நீருக்குள்ளேயே போகும். நாம் கவனிக்க இயலாத நிலையில் இந்தக் குஞ்சுகள் இறந்து போவதைத் தவிர வேறு வழியில்லை. இதனால் நமக்குத் தான் இழப்பு உண்டாகும்.

விற்பனை

இயற்கையான சூழலில் வளரும் எங்கள் கோழிகளையும் முட்டைகளையும் விரும்பி வாங்கும் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இவர்களைத் தவிர, திருவிழா போன்ற முக்கியக் காலங்களில் நிறையக் கோழிகள் விற்பனையாகும். இறைச்சிக் கடைகளிலும் கொடுத்து விற்போம்.

முட்டைகளை வீட்டுக்கே வந்து வாங்கிச் சென்று விடுவார்கள். சூப்பர் மார்க்கெட் போன்ற பெரிய கடைகளிலும் முட்டைகளை விற்று விடுவோம். கோழியை உயிருடன் கிலோ 260 ரூபாய்க்குக் கொடுக்கிறோம். முட்டை ஒன்றைப் பத்து ரூபாய்க்குக் கொடுக்கிறோம்.

நோக்கம்

நாங்கள் வாழ வேண்டும். அதற்குப் பணம் வேண்டும். அந்தப் பணம் நல்ல வழியில் வந்ததாக இருக்க வேண்டும். இதையே எங்கள் இலட்சியமாக வைத்திருக்கிறோம். அந்த வகையில், நல்ல உணவாக அமையும் பாரம்பரியம் மாறாத நாட்டுக் கோழிகளை உற்பத்தி செய்து கொடுக்கிறோம். யாரையும் ஏமாற்றாமல் நியாயமான வழியில் வாழ்கிறோம் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது; மனதுக்கு இதமாக இருக்கிறது’’ என்றார்.


பசுமை

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks