My page - topic 1, topic 2, topic 3

இளம் பன்றிக் குட்டிகள் பராமரிப்பு!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச்.

வெண்பன்றி இறைச்சியை உண்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், கால்நடை வளர்ப்பில் வெண்பன்றிகள் முக்கிய இடத்தைப் பெற்று வருகின்றன. ஒரு தாய்ப்பன்றி ஓர் ஈற்றில் 8 முதல் 12 குட்டிகள் வரையில் ஈனும். பிறந்த பன்றிக் குட்டியின் எடை 1 முதல் 1.5 கிலோ இருக்கும்.

ஒரு பண்ணையில் 10 வெண்பன்றிகள் ஈன்றால் சுமார் 100 குட்டிகள் ஒரே சமயத்தில் வளர்ந்து வரும். இதனால், வெண்பன்றிகளை வளர்ப்போர் ஒரே நேரத்தில் அதிக இலாபத்தை ஈட்ட முடியும். இவற்றைப் பராமரிப்பதில் குறைகள் இருந்தால், 10 முதல் 50 சதவீதம் வரையில் இழப்பு உண்டாகும். எனவே, இறப்பு விகிதத்தைக் குறைக்க, இளம் பன்றிக் குட்டிகளைப் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும்.

குட்டிகள் பிறந்ததும் செய்ய வேண்டியவை

குட்டிகள் பிறந்ததும் தாய்க்குத் தொல்லை தராமல், குட்டிகளின் மூக்கில் படர்ந்துள்ள சளியைப் போன்ற கோழையை அகற்றி, அவற்றின் சுவாசத்துக்கு உதவ வேண்டும். தொப்புள் கொடியின் மீது டிங்சர் அயோடினைத் தடவி விட்டு, நோய்கள் வராமல் தடுக்க வேண்டும். பால் குடிக்கும் நேரம் போக, மற்ற நேரங்களில் குட்டிகளைத் தனிக் கூண்டில் வைத்து வளர்க்க வேண்டும்.

பால் பற்களை வெட்டுதல்

பன்றிக் குட்டிகள் பிறக்கும் போது, மேல் தாடையில் நான்கு பற்களும், கீழ்த்தாடையில் நான்கு பற்களும் இருக்கும். இந்தப் பற்களை வெட்டாமல் விட்டால், தாயிடம் பாலைக் குடிக்கும் போது, காம்புகளில் காயங்கள் உண்டாகும். எனவே, பற்களை வெட்டும் கருவியால் 23 பங்கு பற்களை வெட்டி விடலாம்.

பற்களை வெட்டுவதற்குப் பதிலாக, பற்களின் கூர்மையை மலித்தும் விடலாம். இதனால், தேய்ந்த பற்கள் பொடியாகிப் போகும். ஆனால், இப்பற்களைக் குட்டிகள் விழுங்கும் ஆபத்து ஏற்படலாம். எனவே, பற்களை வெட்டுவதன் மூலம் இச்சிக்கல் தவிர்க்கப்படுகிறது.

இரும்புச்சத்து ஊசி

குட்டிகளின் விரைவான வளர்ச்சிக்கு இரும்புச்சத்து அவசியம். பொதுவாகக் குட்டிகளுக்குத் தேவையான இரும்புச் சத்தானது குறைந்தளவே இருப்பதாலும், ஒரு ஈற்றில் அதிகக் குட்டிகள் இருப்பதாலும் இரும்புச்சத்துக் குறை ஏற்படுகிறது. மேலும், பிறக்கும் போது, குட்டிகளின் ஈரலில் சுமார் 60 மி.கி. அளவே இரும்புச்சத்து இருக்கும். இது, ஒரு குட்டியின் ஏழுநாள் வளர்ச்சிக்கு மட்டுமே போதுமானது.

எனவே, பிறந்த பன்றிக் குட்டிகளுக்கு 5-7 நாட்களில், 100 மி.கி. அளவில், அயர்ன் டெக்ஸ்ட்ரான் எனப்படும் இரும்புச் சத்தை, கால்நடை மருத்துவரைக் கொண்டு ஊசி மூலம் செலுத்தினால், இரத்தச் சோகையின்றிக் குட்டிகள் விரைவாக வளரும். தேவைப்பட்டால், 21 ஆம் நாளில் மீண்டும் ஒருமுறை செலுத்தலாம்.

வெப்பமளித்தல்

அதிகக் குளிரைத் தாங்கும் சக்தி, பிறந்த குட்டிகளுக்குக் கிடையாது. எனவே, அதிகமான குளிரின் போது ஒன்றையொன்று நெருக்குவதால், குட்டிகள் இறப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க, ஈனும் அறையின் பக்கச் சுவர்களில் கோணிப் பைகளைத் தொங்க விட்டுக் குளிரைக் கட்டுப்படுத்தலாம். 60 வாட்ஸ் மின்விளக்கின் மூலமும் முதல் பத்து நாட்களுக்கு வெப்பத்தை அளிக்கலாம்.

இரும்புக் குழாய்த் தடுப்பை அமைத்தல்

குட்டிகளை ஈனும் அறையின் உட்புறச் சுவரிலிருந்து ஓரடி தள்ளியும், தரையிலிருந்து ஓரடி உயரத்திலும் இரும்புக் குழாய்களைப் பொருத்தினால், குட்டிகள் தாயினால் நசுக்கப்படுவதைத் தவிர்க்க முடியும். பால் குடிக்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில், இரும்புக் குழாய்க்கும், சுவருக்கும் இடையே குட்டிகள் பாதுகாப்பாக இருக்கும்.

ஆண்மை நீக்கம் செய்தல்

குட்டிகள் பிறந்ததும் அவற்றின் பாலினத்தை அறிய வேண்டும். ஆண் குட்டிகளில் பிற்காலத்தில் இனப்பெருக்கத்துக்குத் தேவையானவற்றை மட்டும் பிரித்து விட்டு, மற்ற ஆண் குட்டிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும். குட்டிகள் பிறந்து இரண்டு வாரத்துக்குள் இதைச் செய்துவிட வேண்டும். இதனால், குட்டிகள் உண்பதில் கவனத்தைச் செலுத்தி, விரைவாக வளர்ந்து அதிக எடையை அடையும்.

வாலை வெட்டுதல்

குட்டிகளின் உடம்பில் இருந்து 2 செ.மீ. இடைவெளி விட்டுவிட்டு, இதற்கான கருவியைக் கொண்டு வாலை வெட்டி விட வேண்டும். குட்டிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டு, வால் பகுதியைக் கடித்துக் கொள்வதும், புண்கள் உண்டாவதும் இதனால் தவிர்க்கப்படும். வால் நீளமாக உள்ள பெண் பன்றிகளுடன் ஆண் பன்றிகள் இனப்பெருக்கம் செய்ய முடியாமல் போகலாம். எனவே, வாலை வெட்டுவதன் மூலம் இச்சிக்கலைத் தவிர்க்கலாம்.

குட்டிகளுக்கான தீவனத்தொட்டியை அமைத்தல்

ஈனும் அறையின் உள்ளே குட்டிகள் மட்டும் சென்று தீவனத்தை உண்டு விட்டுத் தாயிடம் வந்து பாலைக் குடிக்கும் வகையில், சிறு தடுப்புடன் கூடிய தீவனத் தொட்டியை அமைக்க வேண்டும். இதனால், பால் குடியைத் தவிர்க்கும் நேரத்தில், அடர் தீவனத்தையும் 15ஆம் நாளில் இருந்து உட்கொண்டு விரைவாக வளரும்.

நுண் சத்துகளை அளித்தல்

பெரும்பாலான பன்றிப் பண்ணைகளில், உணவகக் கழிவுகளை மட்டுமே தீவனமாக அளிக்கின்றனர். இதனால், சத்துப் பற்றாக்குறை நோய்கள் உண்டாவதுடன், உற்பத்திக் குறைவும் காணப்படுகிறது. எனவே, வைட்டமின், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகளைத் தீவனத்தில் அல்லது குடிநீரில் கலந்து அளிக்க வேண்டும். மேலும், தாதுப்புக் கட்டிகள் மூலமும் நுண் சத்துகளைப் பெறச் செய்யலாம்.

அனாதைக் குட்டிகள் பராமரிப்பு

மாற்றுத் தாயின் மூலம் அனாதைக் குட்டிகளைப் பராமரிக்கலாம். மாற்றுத் தாய் பாலைக் கொடுக்க ஏதுவாக, அத்தாயின் நஞ்சுக்கொடி அல்லது சிறுநீரை, குட்டிகளின் மேல் தடவ வேண்டும். மாற்றுத்தாய் கிடைக்காத நிலையில், நன்கு கொதித்து ஆறிய பசும்பாலை, நேரத்துக்கு 50 மில்லி வீதம் ஒரு நாளைக்கு 5-6 தடவை கொடுக்க வேண்டும்.


முனைவர் கா.இரவிக்குமார், மருத்துவர் சு.அழகர், மருத்துவர் சு.பிரகாஷ், மருத்துவர் சி.மணிவண்ணன், முனைவர் சா.மனோகரன், முனைவர் ம.செல்வராஜ், கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல் – 637 002.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks