செய்தி வெளியான இதழ்: 2018 டிசம்பர்.
இந்தியாவில் வரையறைக்கு உட்பட்டு 13 எருமை இனங்கள் உள்ளன. அவற்றில், முர்ரா, சுருத்தி, நீலிராவி, ஜாப்ராபாடி முக்கியமானவை. முர்ரா உலகிலேயே சிறந்த எருமையினம். இதை டெல்லி எருமை எனவும் அழைப்பர்.
பல நாடுகளில் முர்ரா மூலம் அவர்களின் எருமைகளைத் தரம் உயர்த்துகின்றனர். முர்ராவின் பிறப்பிடம் அரியானா, பஞ்சாப். இது, அன்றாடம் 14-15 லிட்டர் பாலைத் தரும். ஒரு கறவைக் காலத்தில் 3,000 முதல் 4,000 லிட்டர் வரை பால் கிடைக்கும்.
இந்த எருமை கறுப்பாக, உடல் நீண்டு பெரிதாக இருக்கும். கொம்புகள் குட்டையாகத் திருகியிருக்கும். வால் நுனி வெள்ளையாக இருக்கும். நமது தட்பவெட்ப நிலையைத் தாங்கி வளரும்.
நோயெதிர்ப்புத் திறன், அதிகப் பாலுற்பத்தி, சிறந்த இனப்பெருக்கத் திறன், சிறந்த மரபியல் அமைப்புடன் இருப்பதால், உலகிலேயே சிறந்த எருமை இனமாக முர்ரா விளங்குகிறது.
தமிழ்நாட்டு எருமையினம் தோடா. இது, நீலகிரி மாவட்டத்தில் மட்டும் உள்ளது. அங்குள்ள பழங்குடி மக்கள் வளர்க்கின்றனர். இந்த எருமை வெளிர் கறுப்பாக இருக்கும். மற்ற இனங்களில் இருந்து வேறுபட்டுக் காணப்படும். நீண்ட உடல், அகன்ற மார்பு, குட்டையான, உறுதியான கால்களுடன் இருக்கும்.
பெரிய தலை, நன்கு வளர்ந்த கொம்புகள், உடலில் அடர்ந்த முடி இருக்கும். ஒரு நாளில் 4 லிட்டர் பால் கொடுக்கும். இந்தப் பாலில் சுமார் 10 சதம் கொழுப்பு, 11.69 சதம் கொழுப்பற்ற திடப்பொருள், 5.6 சதம் லாக்டோஸ், 4 சதம் புரதம் இருக்கும்.
இனவிருத்தி முறைகள்
தமிழகத்தில் உள்ள எருமைகளை, தோடா, வரையறையற்ற நாட்டினம், தரம் உயர்த்தப்பட்ட முர்ரா என மூன்றாகப் பிரிக்கலாம். இவற்றில் முறையான இனவிருத்தி முறையைக் கையாள வேண்டும்.
தோடா எருமைகளில் அதே இனத்தைச் சேர்ந்த காளைகளைக் கொண்டு இனச்சேர்க்கை செய்ய வேண்டும். வேற்றினக் காளைகளைப் பயன்படுத்தினால் இனத்தூய்மை கெட்டு விடும்.
இதைத் தவிர பெரும்பாலானவை, வரையறுக்கு உட்பட்ட எந்த இனத்தையும் சேராத நாட்டு மாடுகளாகும். இவை குறைவான பாலையே தரும். அதனால், இவற்றின் மரபியல் கட்டமைப்பை மேம்படுத்தி, பால் உற்பத்தியைக் கூட்ட, முர்ராவின் விந்தணுக்கள், இவற்றின் இனவிருத்தியில் பயன்படுகின்றன.
இப்படி, 5-6 தலைமுறை வரை தொடர்ந்து இனச்சேர்க்கை செய்தால், முர்ராவை ஒத்த மரபியல், நாட்டு எருமைகளில் உண்டாக, பால் மிகுதியாகக் கிடைக்கும். இந்த எருமைகள் தரம் உயர்த்தப்பட்ட முர்ரா எனப்படும். தரம் உயர்த்தப்பட்ட முர்ரா எருமைகளுக்கு, முர்ரா காளைகளைக் கொண்டு தான் இனச்சேர்க்கை செய்ய வேண்டும். இனச்சேர்க்கைக் காளை ஒரே பரம்பரையைச் சேர்ந்ததாக இருக்கக் கூடாது.
சீரான இனவிருத்திப் பண்புகளைக் கொண்ட எருமை, 13-14 மாதங்களில் ஒரு கன்று வீதம் தொடர்ந்து 6 ஈற்றுகள் வரை, அதாவது, அதன் 10 வயது வரை பாலைத் தரும். ஒரு எருமை 3-3.5 வயதில் முதல் கன்றை ஈன்றிருக்க வேண்டும். ஈன்ற 25-30 நாட்களில் கருப்பை சுருங்கி, சினைப்பருவச் சுழற்சி ஆரம்பித்திருக்க வேண்டும். பின் கருவுற்றுச் சினைப் பிடிப்பது அவசியம். இப்படி இல்லையெனில் பொருளாதார இழப்பு ஏற்படும்.
இன்றைய கன்று நாளைய எருமை. அதனால், கன்றுகளைக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். பால் உற்பத்திக்கு வளர்க்கப்படும் கன்றுகளின் தாய், சிறந்த மரபைக் கொண்டிருக்க வேண்டும்.
அதாவது, எளிதில் சினைப் பிடித்தல், நெடுநாட்கள் கறத்தல், குறைந்தளவில் உண்ணுதல் போன்ற சிறப்புகளைக் கொண்டிருக்க வேண்டும். முர்ரா கன்றுகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இத்தகைய கன்றுகளை நன்கு பராமரித்தால், எருமைப் பண்ணை பயனுள்ளதாக அமையும்.
மரு.மு.மலர்மதி, முனைவர் நா.முரளி, மரு.ம.ஜெயக்குமார், முனைவர் இரா.சரவணன், மரு.பெ.கோபு, கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல் – 637 002.
சந்தேகமா? கேளுங்கள்!