பந்தல் முறையில் பாகல் சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச்.

சிறு குறு விவசாயிகள் மற்றும் குறைந்தளவில் பாசன வசதியுள்ள விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தைத் தரக்கூடியவை காய்கறிப் பயிர்கள். அன்றாட வருமானம், ஒருநாள் விட்டு ஒருநாள் வருமானம் எனக் காய்கறிகள் மூலம் பணம் கிடைப்பதால், இந்தப் பயிர்களை விவசாயிகள் விருப்பத்துடன் சாகுபடி செய்கின்றனர்.

மேலும், நுகர்வோரைத் தேடிச் சென்று விற்பனையையும் அவர்களே மேற்கொண்டால், வருமானத்தின் அளவு மேலும் கூடும். ஒரு நேரத்தில் விலை குறைந்தாலும், இந்த இழப்பை ஈடுகட்டும் வகையில், அதிக விலை கிடைக்கும் வாய்ப்பும் காய்கறிப் பயிர்களில் உள்ளது.

இவ்வகையில், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், அத்திப்பாக்கம் விவசாயி பெ.சண்முகம், இருபது சென்ட் நிலத்தில் பாகற்காய் சாகுபடியை, பந்தல் முறையில் செய்து வருகிறார். இவரைச் சந்தித்துப் பாகல் சாகுபடி குறித்துக் கேட்டோம். அப்போது அவர் கூறியதாவது:

“இந்தாண்டுல மழை இல்லாததுனால வறட்சி கடுமையா இருக்கு. கிணத்துல தண்ணி ரொம்பக் குறஞ்சு போச்சு. இந்தத் தண்ணியைக் கொண்டு ஏக்கர் கணக்குல விவசாயம் செய்ய முடியாது. அதனால, இந்தத் தண்ணியில மகசூல் எடுக்கக் கூடிய பயிரா பாகல் சாகுபடி இருக்கும்ன்னு முடிவு பண்ணி, பந்தல் முறையில பாகலைப் போட்டுருக்கேன். அதுவும் இருபது சென்ட் நிலத்துல தான் சாகுபடி செஞ்சிருக்கேன்.

இந்த நெலத்த நல்லா உழுது அடியுரமா தொழுவுரத்தைப் போட்டேன். அதோட, டிஏபி, பொட்டாசையும் போட்டேன். வேர்ப்பூச்சித் தாக்குதல் வராம இருக்குறதுக்காக, போரட், பியூரிடான் மருந்துகளையும் அடியுரமா போட்டேன். இப்பிடி நெலத்தைத் தயார் செஞ்ச பிறகு, எட்டடி இடைவெளியில பாத்திகளைப் போட்டு, மூனடி இடைவெளியில குழிக்கு மூனு பாகல் விதைகளை நட்டேன்.

இந்த இருபது சென்ட்டுல நடுறதுக்கு 200 கிராம் விதைகள் தேவைப்பட்டுச்சு. அபிசேக்குன்னு பேரு. வீரிய ஒட்டு விதை. கிலோ மூவாயிரம் ரூபா. எனக்கு விதைக்கு மட்டும் அறுநூறு ரூபா செலவாச்சு.

இப்பிடி நட்டு முடிச்சதும் தண்ணியைப் பாய்ச்சுனோம். சொட்டுநீர்ப் பாசன வசதி செஞ்சிருக்கோம். அதனால தான் சமாளிக்க முடியுது. அடுத்து விதைகள் நல்லா முளைக்கிறதுக்காக மூனு நாள்ல உயிர்த் தண்ணி குடுத்தோம். விதைகள் முளச்சு செடிகள் நல்லா வளர்ந்துச்சு.

இதையடுத்து, மூங்கில் கொம்புகள், கம்பி, கயிறெல்லாம் வாங்கிப் பந்தலைப் போட்டோம். இதுக்கு ஒரு இருபதாயிரம் ரூபா செலவாச்சு. செடிகள் வளர்ந்து கொடியோட ஆரம்பிச்சது. அப்பிடியே கொடிகளைப் பந்தல்ல ஏத்தி விட்டோம். குழிக்கு ஒரு கொடியைத் தான் பந்தல்ல ஏத்தி விடணும். அதைப்போல, பந்தலுக்குக் கீழே காய்ப்புக்கு விடக்கூடாது.

இதுக்கு இடையில வாரம் ஒரு பாசனம் செய்யணும். அதோட மேலுரமா டிஏபி உரத்தைக் குடுத்தேன். இப்பிடிச் செஞ்சா மூனு மாசத்துல காய்ப்புக்கு வந்துரும். ஒருநாள் விட்டு ஒருநாள் காய்களைப் பறிக்கணும். இந்த நெலத்துல ஒரு பறிப்புக்கு முப்பது கிலோ காய்கள் கிடைக்கும்.

பாகல் காய்க்கு எப்பவுமே மதிப்பு அதிகம் தான். அதனால மற்ற காய்களை விட ஓரளவுக்கு நல்ல விலை கிடைக்கும். இந்தக் கொடிகளை நல்லா பராமரிச்சா ஓராண்டு வரைக்கும் பலன் குடுக்கும். குறஞ்சது 150 தடவை காய்களைப் பறிக்கலாம்.

குறஞ்சது கிலோ பத்து ரூபான்னாலும் முப்பது கிலோவோட விலை 300 ரூபா. 150 தடவை பறிச்சா 4,500 கிலோ காய்கள் கிடைக்கும். இந்தக் காய்களோட விலை 45,000 ரூபா. இதுல செலவுன்னு ஒரு 20,000 ரூபா போனாலும் நிகர இலாபமா 25,000 ரூபா கிடைக்கும். இதுல அஞ்சு வருசத்துக்குப் பந்தல் செலவே கிடையாது. இந்தப் பொருள்களையே அடுத்தடுத்துப் பந்தலைப் போடப் பயன்படுத்தலாம்.

குறஞ்ச தண்ணியில, குறஞ்சளவு நெலத்துல, வேலையாள் தேவையே இல்லாம, இந்த வறட்சியில, வேற எந்தப் பயிரைப் போட்டாலும் இந்தளவு வருமானத்தை எடுக்க முடியாது. அதனால, வறட்சியா இருந்தாலும், செழிப்பா இருந்தாலும் எங்க தோட்டத்துல காய்கறி சாகுபடி, அதுலயும் குறிப்பா பாகல் சாகுபடி இல்லாம இருக்காது. இந்தக் காய்கறி சாகுபடி, குடும்பச் செலவுக்குப் பணம் இல்லையேங்கிற கவலையை மாத்தி நிம்மதியைக் குடுக்கும்’’ என்றார்.


பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!