நிலைத்த வருவாயைத் தரும் வேளாண் காடுகள்!

வேளாண் காடு HP c482e9e4940ecef66f195c6604a383f2

மது சங்க இலக்கியங்களிலேயே காடுகளின் அவசியத்தை நம் முன்னோர்கள் நமக்கு விளக்கி யுள்ளனர். நம் நாட்டின் மொத்தப் பரப்பில் 33% காடுகள் இருக்க வேண்டும்.

ஆனால், இப்போது 29.39% அளவில் மட்டுமே காடுகள் உள்ளன. வளர்ந்து வரும் நகரமயமாதல் மற்றும் தொழிற்சாலைப் பெருக்கம் காரணமாக, காடுகள் அழிந்து கொண்டே உள்ளன.

இந்நிலையில், காடுகள் வளர்ப்பை ஊக்குவிக்கவும், அவற்றின் மூலம் நிலையான வருவாயைப் பெறவும் உதவுவது தான் வேளாண் காடுகள் வளர்ப்புத் தொழில் நுட்பம்.

வேளாண் காடு என்பது, நமக்குத் தேவையான உணவுப் பயிர்கள் மற்றும் கால்நடைகளுக்குத் தேவையான தீவனப் பயிர்களுடன், மரங்களையும் வளர்ப்பதாகும்.

வேளாண் காடுகள் நம் நாட்டின் எரிபொருள் தேவையில் பாதியைச் சரி செய்கின்றன.

அதைப் போல, மரத்தேவையில் 66%, ஒட்டுப்பலகை தேவையில் 70-80%, காகிதக்கூழ் தேவையில் 6%, தீவனப் பயிர்கள் தேவையில் 9-11% அளவில் நிறைவு செய்கின்றன.

இப்போது வளர்ந்து வரும் நகரமயமாதல், குறைவாகக் கிடைக்கும் பாசனநீர், விவசாய வேலையாட்கள் பற்றாக்குறை, அளவற்ற இடுபொருள்கள் பயன்பாடு போன்றவற்றால் விவசாயச் செலவினங்கள் கூடுகின்றன.

மேலும், இயற்கைச் சீற்றங்களான வறட்சி, புயல், மழை, பெருவெள்ளம் ஆகியவற்றால் பயிர்கள் சேதமாகி மகசூல் குறைகிறது. இதனால், விவசாயிகளுக்குக் குறைந்தளவு வருமானமே கிடைக்கிறது.

இந்த இடர்களைக் குறைத்து அதிக வருமானம் பெற, வேளாண் காடுகளை உருவாக்கலாம்.

செழிப்பான பகுதிகளில் மட்டுமின்றி, சிக்கல் மிகுந்த வறண்ட பகுதிகள், மண் சரிவுள்ள பகுதிகள், அமிலத் தன்மை மற்றும் உப்புத் தன்மை மிகுந்த பகுதிகள் மற்றும் குறைந்த மண்வளம் உள்ள பகுதிகளிலும் வேளாண் காடுகளை வளர்த்துப் பயன் பெறலாம்.

வேளாண் காடுகளின் வகைகள்

வேளாண் மரங்கள் வளர்ப்பு: வேளாண் மரங்கள் வளர்ப்புத் திட்டம் என்பது, மரங்களுக்கு இடையில், சோளம், கம்பு, பருத்தி போன்ற பயிர்கள் அல்லது நிலக்கடலை, பயறுவகைப் பயிர்களை, இறவை அல்லது மானாவாரியில் சாகுபடி செய்வதாகும்.

மரங்களுக்கு ஊடே பயிர்களை சாகுபடி செய்தால் ஆண்டு முழுவதும் நமக்கு வருவாய் கிடைக்கும்.

இதில் பயிரிடப்படும் பயிர்கள் நிழல் விரும்பிகளாக இருக்க வேண்டும். சல்லி வேர்களைக் கொண்ட பயிர்களைத் தான் ஊடுபயிராக இட வேண்டும்.

ஏனெனில், மரங்களின் தொடக்கக்கால வளர்ச்சிக்கு ஊடுபயிர்களால் இடையூறு இருக்கக் கூடாது. இதில் தீவனப் பயிர்களை வளர்த்தால், வருமானம் கிடைக்கும், தீவனச் செலவும் குறையும்.

பாசன வசதி ஓரளவு இருக்கும் நல்ல நிலங்களில் தோட்டக்கலைப் பயிர்களை ஊடுபயிராக இட்டு நல்ல வருமானம் பெறலாம்.

முக்கியமாக, தைலமரம், மலை வேம்பு, தேக்கு போன்ற மரங்களை வளர்க்கும் நிலங்களில், தக்காளி, வெண்டை, கத்தரி போன்றவற்றை ஊடுபயிராக இட்டுக் கூடுதல் வருமானம் பெறலாம்.

கொய்யா, நெல்லி, நாவல், கொடுக்காய்ப் புளி போன்ற பழ மரங்களை வளர்த்து நல்ல வருவாயை ஈட்டலாம்.

பூக்கள் அதிகமாகத் தேவைப்படும் விழாக் காலங்களில், செண்டுமல்லி போன்ற பூச்செடிகளை இட்டுக் கூடுதல் வருமானம் பெறலாம்.

மர வளர்ப்பின் தொடக்கத்தில் பாசன வசதியைப் பொறுத்து, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர்களைப் பயிரிட்டால், ஆண்டு முழுவதும் வருமானம் கிடைப்பது உறுதி.

முல்லைப்புல் பரப்புத் திட்டம்: பாசனம் மற்றும் மண்வளம் குறைந்த பகுதிகளில் பழம் மற்றும் விறகுக்குப் பயன்படும் புளி, வேம்பு, வேலமரம் போன்ற மரங்களை வளர்ப்பது, தீவனப் புற்களைப் பயிரிடும் நுட்பமாகும்.

இதில், கோ.4 கம்பு நேப்பியர் புல், தீவனச் சோளம், தீவனத் தட்டைப் பயறு போன்ற தீவனப் பயிர்களை வளர்த்தால், ஏக்கருக்கு 80 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் ஈட்ட முடியும்.

புரதம் நிறைந்த தீவனப் பயிர்களை ஊடுபயிராக இட்டால், கால்நடைத் தீவனச் செலவைப் பெருமளவில் குறைக்கலாம்.

இதைப் போல மரங்களுக்கு இடையே சோளம், நிலக்கடலை, தட்டைப்பயறு போன்ற இருவழி வருமானம் தரும் பயிர்களை வளர்க்கலாம். இதனால், தானியமும் தீவனமும் கிடைக்கும்.

தேனீ வளர்ப்பு: வேளாண் காடுகளில் பல்வேறு மரங்கள் மற்றும் பயிர்கள் இருப்பதால், தேனீக்களை நன்றாக வளர்க்க முடியும். ஒரு ஏக்கர் வேளாண் காட்டில் சுமார் பத்துத் தேனீப் பெட்டிகளை வைக்கலாம்.

ஒரு பெட்டியில் ஆண்டுக்கு 5 முதல் 8 கிலோ வரை தேன் கிடைக்கும். இதனால், ஆண்டுக்கு 50 ஆயிரம் வரை கூடுதல் வருவாய் கிடைக்கும்.

வேளாண் காடுகளின் பயன்கள்

இயற்கைக் காடுகள் அழிவது தடுக்கப் படுகிறது. இவற்றின் இலை தழைகளால் மண் வளமாகிறது. மண்ணரிப்புத் தடுக்கப் படுவதால் இயல்பான சூழல் காக்கப் படுகிறது.

தாவரங்களுக்கு உகந்த காலநிலை மேம்படுகிறது. மண்ணின் மேற்பரப்பு வெப்பநிலை குறைகிறது. மண்ணின் ஈரப்பதம் ஆவியாதல் தடுக்கப்படுகிறது.

அங்ககப் பொருள்கள் அதிகரிப்பால் மண்ணின் அமைப்பு மேம்படுகிறது. நல்ல நீர் வசதி உள்ள இடங்களில், தேக்கு, குமிழ் தேக்கு, மலை வேம்பு, சவுக்கு, அயிலை போன்ற மரங்களுடன்,

தக்காளி, கத்தரி, வெண்டை போன்ற காய்கறிப் பயிர்கள், சோளம், கம்பு போன்ற தானியப் பயிர்கள், நிலக்கடலை மற்றும் பயறுவகைப் பயிர்களைப் பயிரிட்டுக் கூடுதல் மகசூலைப் பெறலாம்.

காற்றுத் தடுப்புக்கு ஜிங்குனியானா சவுக்கு

புயல் மற்றும் காற்று அதிகமாக வீசும் காலங்களில், வாழை, முருங்கை, கொட்டை முந்திரி, தென்னை போன்றவை பெருமளவில் பாதிக்கப்படும்.

இதைச் சரி செய்ய, சாகுபடி நிலத்தைச் சுற்றி மூன்று வரிசைகளில் ஜிங்குனியானா சவுக்கை, வரிசைக்கு வரிசை 1 மீட்டர், மரத்துக்கு மரம் 2 மீட்டர் இடைவெளியில் வளர்க்க வேண்டும்.

மூன்று வரிசைகளும் ஒரே நேர்க்கோட்டில் இல்லாமல் ஆங்கில எழுத்து Z வடிவில் இருக்க வேண்டும்.

இதனால் காற்றின் வேகத்தைக் குறைக்கலாம். இவ்வகையில் ஒரு ஏக்கர் நிலத்தைச் சுற்றி 240 மரங்களை வளர்க்கலாம்.

இவற்றால் நான்கு ஆண்டுகளில் 13 டன் வரை சவுக்கு மரங்கள் கிடைக்கும். இதன் மூலம் 69 ஆயிரம் ரூபாய் கூடுதல் வருவாயாகக் கிடைக்கும்.


வேளாண் காடு MAGESHWARAN e1709465520407

பொ.மகேஸ்வரன், திட்ட ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு, எம். அருண்ராஜ், சி.சபரிநாதன், தொழில் நுட்ப வல்லுநர்கள், வேளாண்மை அறிவியல் நிலையம், தேனி.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading