My page - topic 1, topic 2, topic 3

வெள்ளாடுகளை வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்!

இக்கட்டுரை வெளியான இதழ்: 2014 ஜூலை.

ம் இந்தியாவில் மட்டும் அங்கீகரிக்கப்பட்ட வெள்ளாட்டு இனங்கள் இருபது உள்ளன. இருந்தாலும் நம் தேவைக்கேற்ப இனங்களைத் தேர்ந்தெடுத்து வளர்ப்பது அவசியம்.

எடுத்துக்காட்டாக, இமயமலைப் பகுதியில் உள்ள ஆடுகள், மென்மையான உரோமத்துக்காகவும், இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஆடுகள் கம்பள உரோமத்துக்காகவும் வளர்க்கப்படுகின்றன. நம் தமிழ்நாட்டில் வெள்ளாடுகள் பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன.

இந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள முக்கிய வெள்ளாட்டினங்களாகக் கருதப்படுபவை, கன்னி ஆடுகள், கொடி ஆடுகள், சேலம் கறுப்பு ஆடுகளாகும். இம்மூன்று இனங்களும் இறைச்சி மற்றும் தோலுக்காக வளர்க்கப்படும் சிறந்த இனங்கள்.

இவற்றில் கன்னி ஆடுகள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவை. முகத்திலும், காதுகளிலும், கழுத்திலும் இரு வெள்ளைக் கோடுகளுடன் அடிவயிற்றுப் பகுதி வால் வரை வெள்ளையாகக் காணப்படும்.

இவ்வகை ஆடுகளைப் பால்கன்னி என்றும், வெள்ளைக்குப் பதிலாகச் சிவப்பாக இருந்தால் செங்கன்னி என்றும் கூறுவர். இந்த ஆடுகள் 2-3 குட்டிகளை ஈனும். நன்கு வளர்ந்த கிடா ஆடுகள் 60-70 கிலோ எடையும், பெட்டை ஆடுகள் 40-50 கிலோ எடையும் இருக்கும்.

கொடி ஆடுகள் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவை. இவ்வகை ஆடுகள் மிக உயரமாக இருக்கும். நீண்ட கழுத்து மற்றும் உடலைக் கொண்டிருக்கும். வெள்ளையில் கருநிறம் சிதறியதைப் போலிருக்கும் ஆடுகளைப் கரும்போரை என்றும், வெள்ளையில் செம்பழுப்பு நிறம் கொண்ட ஆடுகளைச் செம்போரை என்றும் அழைப்பார்கள்.

சேலம் கறுப்பு ஆடுகள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவை. இவ்வாடுகள் பெயருக்கேற்ற மாதிரி முற்றிலும் கருமை நிறத்துடன் காணப்படும். உயரமாகவும் மற்றும் மெலிந்த உடலமைப்புடனும் இருக்கும். இம்மூன்று தமிழ்நாட்டு இனங்களையும் இறைச்சி மற்றும் தோலுக்காக வளர்க்கலாம்.

இதைப்போல, நம் அண்டை மாநிலமான கேரளத்தைச் சார்ந்த தலைச்சேரி இன ஆடுகளையும், உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சார்ந்த ஜமுனாபாரி, டெல்லி மற்றும் அரியானா மாநிலத்தைச் சார்ந்த பார்பாரி ஆடுகளையும், இராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிரோகி ஆடுகளையும் வளர்க்கலாம்.

வெளிநாட்டு ஆடுகளான போயர், சாணன் அல்பைன், நுடியன் போன்ற ஆடுகளை நாட்டு ஆட்டினங்களுடன் இனவிருத்திக்கு உட்படுத்தி, உயர்திறன் கொண்ட ஆடுகளாக, இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன.

வெள்ளாடுகளை வளர்ப்பதால் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. முதலில் ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்புக் கிடைக்கிறது. அடுத்து, ஒன்றுக்கும் மேற்பட்ட குட்டிளை ஒரே நேரத்தில் ஈனுவதால் அதிக இலாபம் கிடைக்கிறது. மூன்றாவதாக, மதிப்புமிக்க பால், இறைச்சி, தோல், உரோமம், உரம் ஆகியன கிடைக்கின்றன.

முதலில் ஆட்டுப்பாலை எடுத்துக் கொள்வோம். இந்தியாவில் 4 மில்லியன் மெட்ரிக் டன் பால் ஆட்டிலிருந்து கிடைக்கிறது. வெள்ளாட்டுப் பால், சிறு குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் உடல் நலம் குன்றியவர்களுக்கு மிகச்சிறந்த உணவாகும்.

இப்பாலில் உள்ள கொழுப்புச் சத்தும் புரதச்சத்தும் எளிதில் செரிக்கக் கூடியவை. மேலும், இதில் அதிகமாக இருக்கும் பி உயிர்ச்சத்து, அயர்ச்சி மற்றும் மலச்சிக்கலை நீக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

வெள்ளாட்டுப் பாலில் 87 சதம் நீர், 4.25 சதம் கொழுப்பு, 3.52 சதம் புரதம், 4.27 சதம் மாவுச்சத்து மற்றும் 0.86 சதம் தாதுப்புகளும், உயிர்ச் சத்துகளும் உள்ளன.

வெள்ளாட்டு இறைச்சியை உண்பதில் மதக்கட்டுப்பாடு கிடையாது. தற்பொழுது மக்கள் ஆட்டிறைச்சி மூலம் தயாரிக்கப்படும் மதிப்பூட்டிய பொருள்களை விரும்பி உண்பதால், விற்பனை வாய்ப்பும், இலாபமும் அதிகமாகக் கிடைக்கும் சூழல் உள்ளது.

நம் நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதில் முக்கியப் பங்கு வகிப்பது வெள்ளாட்டுத் தோல். தோல் மூலம் மட்டுமே நமக்கு ஆண்டுக்கு ரூ.656.64 கோடி வருவாய் கிடைக்கிறது. உரோமத்துக்காக வளர்க்கப்படும் ஆடுகளிலிருந்து தரமான ஆடைகள் நெய்யப்படுகின்றன.

ஒரு வெள்ளாட்டிலிருந்து ஓராண்டில் கிடைக்கும் சாணமும் சிறுநீரும் அரை ஏக்கர் நிலத்தை உரமாக்கப் போதுமானது. நம் நாட்டிலிருந்து ஆண்டுக்குக் கிடைக்கும் வெள்ளாட்டு எருவின் மதிப்பு 183.5 கோடி ரூபாயாகும்.

அடுத்து, வெள்ளாடுகளுக்கு இயற்கையாகவே நோயெதிர்ப்புத் திறன் அதிகம் என்பதால் நோய்ப் பாதிப்புக் குறைவு. பசுக்களையும் எருமைகளையும் ஒப்பிடும் போது, வெள்ளாடுகளின் தீவனத் தேவை குறைவு.

அதாவது, ஒரு பசு ஒருநாளில் உண்பதில் ஐந்தில் ஒரு பாகமும், ஒரு எருமை ஒருநாளில் உண்பதில் எட்டில் ஒரு பாகமும் ஓர் ஆட்டுக்குப் போதுமானது.

தமிழ்நாட்டில் வெள்ளாட்டினம், 1997லிருந்து 2007ஆம் ஆண்டு வரை, 13.43 சதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவில் 8 விழுக்காடும், உலகளவில் 2.2 விழுக்காடும் அதிகரித்துள்ளது. இந்தியாவின் 2007 ஆண்டில் எடுக்கப்பட்ட 18 ஆவது கால்நடைக் கணக்கின்படி, இந்தியாவில் 14 கோடி, தமிழ்நாட்டில் 92.73 இலட்சம் வெள்ளாடுகள் உள்ளன.

ஊரக வேலைவாய்ப்பை உருவாக்கி வறுமை ஒழிப்புக்கு உறுதுணையாக விளங்குவதில் வெள்ளாடு வளர்ப்புச் சிறந்து விளங்குகிறது.

கிராமங்களில் குறு, சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் ஒன்றிரண்டு ஆடுகளை வளர்த்து வந்த நிலை மாறி, பண்ணைகளில் வைத்து வளர்க்கும் அளவுக்கு இலாபமுள்ள தொழிலாக உருவெடுத்துள்ளது.

ஆடுகளின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக, வெள்ளாடுகளின் எண்ணிக்கை, செம்மறியாடுகளின் எண்ணிக்கையை விட மிக அதிகம்.


மரு.அ.யசோதா, மரு.மு.மலர்மதி, சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks