பால் பண்ணைத் தொழில் சிறக்க, தரமான கறவை மாடுகள் இருக்க வேண்டும். ஜெர்சி, பிரிசியன் போன்ற கலப்பின மாடுகளாகவும், 1-2 ஈற்று மாடுகளாகவும் பார்த்து வாங்க வேண்டும். ஏனெனில், கறவை மாடுகளில் பால் உற்பத்தி, இரண்டாம் ஈத்திலிருந்து நான்காம் ஈற்று வரை அதிகமாக இருக்கும். அதற்கடுத்த ஈற்றுகளில் பாலின் அளவு குறையும். மேலும், 5-6 ஈற்றுகளைக் கொண்ட மாடுகளின் வயது எட்டுக்கு மேலிருக்கும் என்பதால், அவற்றைப் பரமரிப்பது இலாபகரமாக இருக்காது.
கன்றை ஈன்ற 15 நாட்களில் மாட்டை வாங்கிவிட வேண்டும். மாட்டின் கண்கள் பளிச்சென இருக்க வேண்டும். மாடு சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். வெளி உறுப்புகளிலிருந்து எவ்விதத் திரவமும் வரக்கூடாது. புண்கள், காயங்கள் இருக்கக் கூடாது. கால்கள் நன்றாக, வலுவாக இருக்க வேண்டும். மேல் உதடு ஈரமாக வியர்வையுடன் இருக்க வேண்டும். அசை போட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
பால்மடி நான்றாக விரிந்து உடலோடு ஒட்டியிருக்க வேண்டும். பாலைக் கறந்ததும் மடி சுத்தமாகச் சுருங்கிவிட வேண்டும். நான்கு காம்புகளும் சம அளவு, சம இடைவெளியில் இருக்க வேண்டும். பால் மடி நரம்புகள், நன்றாகத் தடித்தும் வளைந்தும் நல்ல இரத்த ஓட்டத்துடன் இருக்க வேண்டும்.
சந்தேகமா? கேளுங்கள்!