வான்கோழி, இறைச்சிக்காக மட்டுமே வளர்க்கப்படுகிறது. வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா மற்றும் பல நாடுகளில் வான்கோழி வளர்ப்பு, பெரிய தொழிலாக உருவெடுத்து வருகிறது.
இது, ஏழை விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் சிறந்த தொழிலாகும்.
குறிப்பாக, சிறு குறு விவசாயிகள் சிறிய முதலீட்டில் வான்கோழிகளை வளர்க்கலாம்.
பண்டிகை மற்றும் விழாக்காலத் தேவைகளுக்கு மட்டுமே வான்கோழிகளை வளர்த்து வந்த நிலை மாறி, இப்போது ஆண்டு முழுவதும் வான்கோழி வளர்ப்பு நடந்து வருகிறது.
இதனால், கோழி வளர்ப்புக்கு இணையான தொழிலாக வான்கோழி வளர்ப்பு உருவாகி வருகிறது.
இப்போது, உலகளவில் வான்கோழி வளர்ப்பு, இறைச்சி மற்றும் முட்டைக்கோழி வளர்ப்புக்கு அடுத்த இடத்தைப் பெற்றுள்ளது.
மற்ற இறைச்சிகளைக் காட்டிலும் வான்கோழி இறைச்சி, மென்மையானது; சுவையானது; குறைந்த கொழுப்பைக் கொண்டது.
இறைச்சிக்கு வளர்க்கும் வான்கோழிகள் 16 வாரங்களில் விற்பனைக்குத் தயாராகும்.
ஒரு வான்கோழி ஓராண்டில் 100-120 முட்டைகளை இடும். அவற்றில் இருந்து 60-80 வான்கோழிக் குஞ்சுகள் கிடைக்கும்.
கோழிகளை விட, வான்கோழிகளுக்கு நோயெதிர்ப்புத் திறன் அதிகம். எனவே, மருத்துவச் செலவு குறைவு.
மேய்ச்சல் முறையில் வளர்த்தால், தீவனச் செலவைக் குறைக்கலாம்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான வான்கோழிகள் வீட்டுக் கொல்லைகளில் தான் வளர்க்கப் படுகின்றன.
பண்ணை அமைப்பு
வான்கோழிப் பண்ணை, மேடான, மழைக் காலத்தில் நீர்த் தேங்காத இடத்தில் அமைய வேண்டும்.
சுத்தமான குடிநீர், மின்சாரம், சாலை மற்றும் பண்ணைக்கு அருகிலேயே வான்கோழி விற்பனை வசதி இருக்க வேண்டும்.
பண்ணையை விரிவாக்கப் போதிய இடம் இருக்க வேண்டும். பண்ணையின் நீளவாட்டம் கிழக்கு மேற்காக அமைய வேண்டும்.
இது, வெய்யில் நேரடியாகக் கோழிகளைத் தாக்காமல் இருக்க உதவும்.
இரண்டு கோழி வீடுகளுக்கான இடைவெளி குறைந்தது 20 அடி இருக்க வேண்டும்.
ஒரு வீட்டின் நீளம் 100 அடி வரை இருக்கலாம். ஆனால், அகலம் 25 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. இது, காற்றோட்டம் சீராகக் கிடைக்க ஏதுவாக இருக்கும்.
வீட்டின் உச்சி உயரம் 16 அடியும், பக்கவாட்டு உயரம் 8 அடியும் இருக்க வேண்டும்.
தரையில் இருந்து ஓரடி உயரத்தில் பக்கச் சுவரும், அதன் மேல் ஏழடி உயரத்தில் கம்பி வலையும் இருக்க வேண்டும்.
வான்கோழி இனங்கள்
அறிவியல் முறையில், வான்கோழிக்கான இடவசதி, தீவன மேலாண்மை மற்றும் நோய்த் தடுப்பில், சிறந்த முறைகளை,
நந்தனம் வான்கோழி 1, வான்கோழி 2 என்னும் புதிய இனங்களை, தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவப் பல்கலைக் கழகம் வெளியிட்டு உள்ளது.
நந்தனம் வான்கோழி 1, 2 இனங்களின் உற்பத்தித் திறன்
8 வார உடல் எடை: நந்தனம் 1 வான்கோழி: 1.150 கிலோ, நந்தனம் 2 வான்கோழி: 1.250 கிலோ.
12 வார உடல் எடை: நந்தனம் 1 வான்கோழி: 1.750 கிலோ, நந்தனம் 2 வான்கோழி: 2.100 கிலோ.
16 வார சேவல் எடை: நந்தனம் 1 வான்கோழி: 3.000 கிலோ, நந்தனம் 2 வான்கோழி: 3.500 கிலோ.
16 வார பெட்டை எடை: நந்தனம் 1 வான்கோழி: 2.250 கிலோ, நந்தனம் 2 வான்கோழி: 2.500 கிலோ.
24 வார சேவல் எடை: நந்தனம் 1 வான்கோழி: 5.00 கிலோ, நந்தனம் 2 வான்கோழி: 5.250 கிலோ.
24 வார பெட்டை எடை: நந்தனம் 1 வான்கோழி: 3.500 கிலோ, நந்தனம் 2 வான்கோழி: 3.750 கிலோ.
உயிர்வாழும் திறன் (20 வாரம்): நந்தனம் 1 வான்கோழி: 80 சதம், நந்தனம் 2 வான்கோழி: 92 சதம்.
விற்பனை வயது
இந்த இனங்களின் சேவல்களை 16-18 வாரங்களில் விற்கலாம். கோழிகளை 18-20 வாரங்களில் விற்கலாம்.
இந்த விற்பனைக் காலம் வரையில், சேவல் 12.25 கிலோ தீவனத்தையும், பெட்டைக்கோழி 8.75 கிலோ தீவனத்தையும் உணவாகக் கொள்ளும்.
24 வாரங்களில் கிடைக்கும் தீவன மாற்றுத் திறன் 3.5 கிலோவாகும்.
இதர இனங்கள்
அகன்ற மார்புள்ள பிரான்ஸ்: இதன் இறகுகள் வெண்கல நிறத்தில் இருக்கும். சேவல்கள் அகன்ற மார்புடன் இருப்பதால், இயற்கை இனப் பெருக்கத்துக்கு ஏதுவாக அமைவதில்லை.
ஆகவே, இவ்வினப் பெட்டைகளுக்குச் செயற்கை முறையில் கருவூட்டல் செய்யப்படுகிறது. சேவல் 16 கிலோவும், பெட்டை 9 கிலோவும் இருக்கும்.
அகன்ற மர்புள்ள வெள்ளை: இது, தூய வெள்ளை நிறத்தில் இருக்கும். இது, அகன்ற மார்புள்ள பிரான்ஸ் மற்றும் வெள்ளை ஹாலந்து வான்கோழி மூலம் உருவாக்கப்பட்ட கலப்பினமாகும்.
இவ்வினம், வணிக நோக்கில் அதிகமாக வளர்க்கப்படுகிறது. சேவல் 15 கிலோவும், பெட்டை 8 கிலோவும் இருக்கும்.
பெல்ட்ஸ்வில்லி சிறிய வெள்ளை: இது, அமெரிக்காவில் உள்ள பெல்ட்சவிவல்லி விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் உருவாக்கப்பட்டது. அகன்ற மார்புள்ள வெள்ளை இனத்தைப் போன்ற நிறத்திலும் அமைப்பிலும் இருக்கும். ஆனால், அவ்வினத்தை விடச் சிறியது. சேவல் 5-6.5 கிலோவும், பெட்டை 3.5-4 கிலோவும் இருக்கும்.
வெள்ளை ஹாலந்து: இந்த வான்கோழி பிரான்ஸ் இனம் மூலம் உருவாக்கப்பட்டது. இதன் இறகுகள் தூய வெண்மையாக இருக்கும். சேவல் 15 கிலோவும், பெட்டை 8 கிலோவும் இருக்கும்.
வளர்ப்பு முறைகள்
மேய்ச்சல் தரை – புறக்கடை வளர்ப்பு முறை: கிராமங்களில் வான்கோழிகளைப் புறக்கடையில் வளர்க்கின்றனர்.
இம்முறையில் இரவில் மட்டும் கோழிகள் அடைத்து வைக்கப்படும். பகலில் திறந்த வெளியில் புல் பூண்டுகளை மேய்ந்து திரியும்.
இதற்கு மேய்ச்சல் முறை என்று பெயர். இம்முறையில் தீவனச் செலவு அதிகமாக இருக்காது.
மேய்ச்சல் தரையுடன் கூடிய கொட்டகை வளர்ப்பு முறை: இம்முறையில், பகலில் 5-6 மணி நேரம் திறந்த வெளியில் கிடைக்கும் புல் பூண்டுகளைத் தின்று வளரும்.
மீதி நேரங்களில் பாதியளவு அடர் தீவனம் கொடுத்து வளர்க்கலாம். இரவில் கொட்டகையில் அடைத்து வைக்கப்படும்.
ஆழ்கூள வளர்ப்பு முறை: இம்முறையில், தென்னங்கீற்று அல்லது ஓடுகளால் கொட்டகையை அமைக்கலாம்.
சிமெண்ட் தரையில் ஆறு அங்குல உயரத்தில் நெல் உமி அல்லது கடலைத் தோலைப் பரப்ப வேண்டும்.
24 வாரம் வரை ஒரு வான்கோழிக்கு 4 சதுரடி இடமும், அதற்கு மேற்பட்ட கோழிகளுக்கு 5 சதுரடி இடமும் தேவைப்படும்.
வான்கோழிக் குஞ்சு வளர்ப்பு
ஒருநாள் முதல் எட்டு வாரம் வரையுள்ள வான்கோழிகள், குஞ்சுகள் எனப்படும்.
குஞ்சுகள் வருமுன் பண்ணை வீட்டைச் சுத்தம் செய்து வைக்க வேண்டும். ஒரு குஞ்சுக்கு 1-1.5 சதுரடி இடம் தேவை.
தீவனக்கலனுக்கு 2.5 செ.மீ., குடிநீர்க் கலனுக்கு 1.25 செ.மீ. இடவசதி தேவை.
இந்தக் கலன்களை, குஞ்சுத் தடுப்பானுக்குள், வண்டிச் சக்கரத்தில் உள்ள கட்டைகளின் அமைப்பைப் போல மாற்றி மாற்றி வைத்தால்,
தீவனம் மற்றும் நீருக்காக, குஞ்சுகள் அலைய வேண்டிய அவசியம் இருக்காது.
குஞ்சுகளுக்கான தீவனத் துகள்கள் 2 மி.மீ. அளவில் இருக்க வேண்டும்.
முதல் இரண்டு நாட்களுக்குப் பழைய செய்தித்தாள் மீது தீவனத்தைத் தூவி வைத்து அல்லது
தீவனத் தட்டில் நிறைத்து வைத்து, தீவனத்தை உண்ணச் செய்ய வேண்டும்.
குஞ்சுகள் வந்ததும் ஒரு வாரம் வரை 5 சத குளுக்கோஸ், நுண்ணுயிரித் தடுப்பு மருந்து மற்றும்பி காம்ப்ளக்சை, குடிநீரில் கலந்து தர வேண்டும்.
குஞ்சுகளை வட்டமான குஞ்சுத் தடுப்பானில், மின் விளக்கின் அடியில் விட வேண்டும்.
ஐந்தாம் நாளில், தடுப்பான் தரையிலுள்ள உமியில் விரித்து வைத்துள்ள செய்தித்தாளை எடுத்துவிட வேண்டும்.
இரண்டாம் வாரத்தில் தடுப்பானை எடுத்து விட்டு, பெரிய நீர்க்கலனை, தீவனக் கலனை வைக்க வேண்டும்.
இந்த முறைகளைப் பின்பற்றினால், வான்கோழிக் குஞ்சுகளை இறப்பிலிருந்து காத்து நன்கு வளர்க்கலாம்.
குஞ்சுகளுக்குச் செயற்கை வெப்பமளித்தல்: சரியான வெப்ப நிலையை அடைக் காப்பானில் கொடுத்தால் குஞ்சுகள் இறப்பைத் தடுக்கலாம்.
குஞ்சுகள் பிறந்த நாளிலிருந்து 10-14 நாட்கள் வரை, சரியான அளவில் செயற்கை வெப்பமளித்து வளர்க்க வேண்டும்.
குஞ்சுத் தடுப்பானில் முதல் வாரத்தில் 95 டிகிரி வெப்ப நிலை இருக்க வேண்டும்.
பிறகு, ஒவ்வொரு வாரமும் 5 டிகிரி வீதம் வெப்ப நிலையைக் குறைத்து, ஐந்தாம் வாரத்தில் 75 டிகிரி வெப்பநிலை இருக்க வேண்டும்.
அடைக் காப்பானில் வெப்பம் சரியாக இருக்கும் போது, வான்கோழிக் குஞ்சுகள், குஞ்சுத் தடுப்பானில் ஒரே சீராகப் பரவியிருக்கும்.
வெப்பம் அதிகமாக இருந்தால், தடுப்பானின் விளிம்புப் பகுதியில் குஞ்சுகள் குவிந்திருக்கும்.
வெப்பம் குறைவாக இருந்தால், ஒன்றையொன்று நெருக்கிக் கொண்டு வெப்பமுள்ள இடத்தில் கூட்டமாக இருக்கும்.
தீவனப் பராமரிப்பு: வான்கோழிகளுக்குத் தேவையான சத்துகள்
இளங்குஞ்சு: எரிசக்தி 2,800 கி – கலோரி, புரதம் 28 சதம், கால்சியம் 1.27 சதம், பாஸ்பரஸ் 0.6 சதம், லைசின் 1.72 சதம், மெத்தியோனின் 0.5 சதம்.
4-8 வார வான்கோழி: எரிசக்தி 2,900 கி – கலோரி, புரதம் 26 சதம், கால்சியம் 1.11 சதம், பாஸ்பரஸ் 0.45 சதம், லைசின் 1.54 சதம், மெத்தியோனின் 0.46 சதம்.
9-24 வார வான்கோழி: எரிசக்தி 2,700 கி – கலோரி, புரதம் 21 சதம், கால்சியம் 0.99 சதம், பாஸ்பரஸ் 0.43 சதம், லைசின் 1.15 சதம், மெத்தியோனின் 0.41 சதம்.
24 வாரம் கடந்த கோழி: எரிசக்தி 2,900 கி – கலோரி, புரதம் 12 சதம், கால்சியம் 2.28 சதம், பாஸ்பரஸ் 0.39 சதம், லைசின் 1.02 சதம், மெத்தியோனின் 0.38 சதம்.
தீவனக் கலவைப் பட்டியல்
4 வாரம் வரை: மக்காச்சோளம் 44 சதம், சோயா 45 சதம், கருவாடு 9.5 சதம், தாதுப்புக் கலவை 0.5 சதம், டைகால்சியம் பாஸ்பேட் 1.0 சதம்.
4-8 வாரம் வரை: மக்காச்சோளம் 47 சதம், சோயா 36 சதம், சூரியகாந்தி புண்ணாக்கு 7 சதம், கருவாடு 9 சதம், தாதுப்புக் கலவை 0.5 சதம், டைகால்சியம் பாஸ்பேட் 0.5 சதம்.
9-24 வாரம் வரை: மக்காச்சோளம் 43 சதம், எண்ணையற்ற அரிசித் தவிடு 22 சதம், சோயா 14.5 சதம், சூரியகாந்தி புண்ணாக்கு 11.5 சதம், கருவாடு 8 சதம், தாதுப்புக் கலவை 0.5 சதம், டைகால்சிய பாஸ்பேட் 0.5 சதம்.
25 வாரத்துக்கு மேல்: மக்காச்சோளம் 41 சதம், எண்ணையற்ற அரிசித் தவிடு 24 சதம், சோயா 13.5 சதம், சூரியகாந்தி புண்ணாக்கு 9 சதம், கருவாடு 8 சதம், கிளிஞ்சல் 3 சதம்.
வான்கோழி முட்டையிலுள்ள சத்துகள்
வான்கோழி முட்டையில், நீர் 66.5 சதம், புரதம் 11.8 சதம், கொழுப்பு 11 சதம், சாம்பல் சத்து 11.7 சதம் இருக்கும்.
ஒரு கிராம் மஞ்சள் கருவில் 15.67 முதல் 23.97 மி.கி. வரை கொலஸ்ட்ரால் இருக்கும்.
வான்கோழி இறைச்சி
இறைச்சிக் கோழியைப் போலவே, வான்கோழியின் மொத்த உடல் எடையில் 72 சதம் இறைச்சியாகக் கிடைக்கும்.
நெஞ்சுப் பகுதியில் 32 சதம், தொடை மற்றும் காலில் 32 சதம், இறக்கைப் பகுதியில் 15 சதம், முதுகுப் பகுதியில் 21 சதம் இறைச்சி இருக்கும்.
இந்த இறைச்சியில், நீர் 58.7 சதம், புரதம் 20.1 சதம், கொழுப்பு 20.2 சதம், சாம்பல் 1 சதம் இருக்கும்.
நூறு கிராம் இறைச்சியில், 268 கிலோ – கலோரி எரிசக்தி கிடைக்கும்.
ஆட்டிறைச்சியும் மாட்டிறைச்சியும் சிவப்பு இறைச்சி எனப்படும். வான்கோழி இறைச்சி வெள்ளை இறைச்சி எனப்படும்.
வான்கோழி இறைச்சியில், கொழுப்பு மற்றும் கொலஸ்டிரால் குறைந்தும், புரதம் மிகுந்தும் இருக்கும்.
முனைவர் க.பிரேமவல்லி, இணைப் பேராசிரியை, கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம் – 603 203, செங்கல்பட்டு மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!