மழைக் காலத்தில் ஆடுகள் பராமரிப்பு!

ஆடு

செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர்.

ட்டினங்கள் வானிலை மாற்றப் பாதிப்புகளுக்குப் பெரிதும் உள்ளாகின்றன. எனவே, ஆடு வளர்ப்பில், பருவ நிலைக்கு ஏற்ற முறைகளைக் கையாண்டால் ஆடுகளில் உற்பத்தித் திறன் குறையாமல் பார்த்துக் கொள்ளலாம்.

ஆடு வளர்ப்பில் இரண்டு வகைகள் உண்டு. புற்கள் வளர்ந்து கிடக்கும் நிலங்களுக்கு ஆடுகளை ஓட்டிச் சென்று மேய்ச்சலுக்கு விடும் முறை. இது, தமிழ்நாட்டில் பரவலாக உள்ளது. அடுத்து, பசுந்தீவனத்தை வளர்த்து அதை மட்டும் ஆடுகளுக்கு அளித்து வளர்க்கும் முறை.

இவற்றில், மேய்ச்சல் முறையில் வளரும் ஆடுகள் மழைக் காலத்தில் நிறையப் புல்லைச் சாப்பிட்டு விடும். இதனால் கழிச்சல் உண்டாகும். நீண்ட வறட்சிக்குப் பின், முளைத்த புல்லை உண்டால், வயிற்று உப்புசம், செரிமானச் சிக்கல் உண்டாகும்.

எனவே, மழைக் காலத்தில், அதிகாலை மேய்ச்சலைத் தவிர்க்க வேண்டும். முற்பகலில் மேய்க்கலாம். பனிக்காலத்தில் மாலை மேய்ச்சலையும் தவிர்க்க வேண்டும். அதாவது காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டும் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட வேண்டும்.

பண்ணையில் வைத்து வளர்ப்பவர்கள், இந்தக் காலத்தில் கிடைக்கும் சோளத்தட்டை, கடலைக்கொடி, பொட்டு போன்றவற்றை, குளிர்காலம் மற்றும் கோடைக் காலத்திலும் ஆடுகளுக்குத் தரலாம். இதனால், தீவனச்செலவு குறையும். ஆடுகளுக்குச் சத்துள்ள உணவு கிடைக்கும்.

இருப்பிடப் பராமரிப்பு

மழைக் காலத்தில் கொட்டகையில் நீர்த் தேங்கக் கூடாது. தரைப்பகுதி ஈரமாக இருந்தால், ஆடுகள் வழுக்கி விழும் ஆபத்து உள்ளது. தரையில் நீர்த் தேங்கினால், ஆடுகளுக்குக் குளம்பு அழுகல் நோய் வர நேரிடும். தரை மேடு பள்ளமாக இருக்கக் கூடாது. தரையின் ஈரத்தை உறிஞ்ச, சுட்ட சுண்ணாம்புத் தூளை, தரையில் தெளிக்க வேண்டும்.

கொட்டகையில் மழைநீர் வராமல் இருக்க, கூரை விளிம்பு 75-90 செ.மீ. வெளியே நீண்டிருக்க வேண்டும். தேவைப்பட்டால் பிளாஸ்டிக் திரைச் சீலைகளை, பக்கவாட்டில் கட்டி விடலாம்.

கூரை ஓட்டைகளை மழைக்கு முன்பே சரி செய்து விட வேண்டும். கொட்டிலைச் சுற்றி மழைநீர்த் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீர் தேங்கினால் கொசுக்கள், ஒட்டுண்ணிகள் பெருகி ஆடுகளைப் பாதிக்கும்.

தீவன மேலாண்மை

தொடர்ந்து மழை பெய்தால், மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகள் மேயாது. மழைக்கு ஒதுங்க இடம் தேடும். வயிற்றுக்கு மேயவில்லை என்றால், உற்பத்திக் குறையும். எனவே, மழை பெய்தால் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பாமல் அடர் தீவனத்தைச் சற்று கூடுதலாகக் கொடுக்க வேண்டும்.

இத்துடன் கொட்டிலில் வைத்து, புல், தழை, சோளத்தட்டை, கடலைக்கொடி, பொட்டு போன்றவற்றைக் கொடுத்து, ஆடுகளின் சத்துத் தேவையை நிறைவு செய்ய வேண்டும்.

மழைக் காலத்தில் இருப்பில் உள்ள தீவனப் பொருள்களை நனைய விடக் கூடாது. தீவனம் நனைந்தால் பூஞ்சைக் காளான் படர்ந்து நச்சு நோயை ஏற்படுத்தும். தீவனத்தைத் தரையிலிருந்து சற்று உயரமான இடத்தில் ஈரம் படாமல் வைக்க வேண்டும்.

ஏனைய புல் உள்ளிட்ட தீவனங்கள் மீது, நெகிழி விரிப்புகளைப் போர்த்தி விடலாம். மழைக் காலத்தில் அடர் தீவனத்தை 15 நாட்களுக்கு ஒருமுறை தயாரித்துக் கொள்வது நல்லது. இந்தப் பொருள்களை நன்கு காயவிட்டு அரைத்துச் சேமிக்க வேண்டும்.

மழையில் புதுப் புற்கள் துளிர்க்கத் தொடங்கும். இந்த இளம் புற்களை மேயும் ஆடுகள் போடும் சாணம் இளக்கமாக இருக்கும். இதைக் கழிச்சல் என்று நினைக்கக் கூடாது. மேய்ச்சலுடன், காய்ந்த தட்டையைக் கொடுத்தால் சாணம் இயல்பான நிலையில் வரும்.

குட்டிகள் பராமரிப்பு

மழைக் காலத்தில் பிறக்கும் குட்டிகள், ஈரப்பதம் மற்றும் குளிரால் வெகுவாகப் பாதிக்கப்படும். எனவே, குட்டிகளை நனைய விடக் கூடாது. இரவில் குட்டிகள் கதகதப்பான சூழலில் இருக்க வேண்டும்.

தரையில் வைக்கோலைப் பரப்புதல், பக்கவாட்டில் கோணிப் பைகளைக் கட்டுதல், குட்டிகள் இருப்பிடத்தில் குண்டு வடிவ மின்சார விளக்குகளை எரிய விடுதல், குட்டிகளுக்குச் சாம்பிராணி புகைமூட்டம் போடுதல் போன்றவை, குட்டிகளுக்கு நன்மை பயக்கும். சத்தான தீவனத்தைத் தர வேண்டும். இரத்தக் கழிச்சல் தடுப்பு மருந்தை, கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி கொடுக்க வேண்டும்.

நோய்த்தடுப்பு முறைகள்

கால்நடைகளைத் தாக்கும் பெரும்பாலான நோய்கள், மழைக் காலத்தில் தான் மிகுதியாக வரும். கோமாரி, நீலநாக்கு, ஆட்டம்மை, துள்ளுமாரி போன்ற நோய்களுக்கு, மழைக்காலம் தொடங்கும் முன்பே கால்நடை மருத்துவரை அணுகித் தடுப்பூசிகளைப் போட்டுவிட வேண்டும்.

ஏரி, குளம், குட்டைகளில் உள்ள நீரைக் குடிக்கும் ஆடுகளுக்கும், இவற்றைச் சுற்றி மேயும் ஆடுகளுக்கும், தட்டைப்புழு நீக்க மருந்தை, பருவமழைக்கு முன்பே கொடுக்க வேண்டும்.

ஆடுகளைப் பாதுகாத்தல்

மழைக் காலத்தில், இடி மற்றும் மின்னலால் மனிதர்களும் கால்நடைகளும் இறக்க நேரிடுகிறது. எனவே, இத்தகைய சூழலில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லக் கூடாது. இடியுடன் கூடிய மழையின் போது, மரத்துக்குக் கீழே ஆடுகளை நிறுத்தக் கூடாது.

பனைமரம், தென்னை மரத்துக்கு அடியில் செல்வது ஆபத்தைக் கூட்டும். இடி மின்னலின் போது, செல்போன் கோபுரங்கள், உயரழுத்த மின் கோபுரங்கள் மற்றும் மின் தடத்துக்குக் கீழே ஆடுகளை விடக்கூடாது.

இடி மின்னலின் போது, மரங்களுக்கு பத்தடிக்கு அப்பால் தான் கால்நடைகள் இருக்க வேண்டும். இடி மின்னல் மிகுதியாக ஏற்படும் பகுதிகளில், கொட்டிலைச் சுற்றி, பத்தடிக்கு அப்பால் தான் மரங்களை வளர்க்க வேண்டும்.


PB_Dr.Usha Kattuppakkam

முனைவர் எஸ்.உஷா, முனைவர் கே.செந்தில்குமார், முனைவர் எச்.கோபி, கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் – 603 203.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading