பன்றிக் கொட்டில் அமைப்பும் பராமரிப்பும்!

பன்றி HEADING PIC b9c5af5cbbc843a786631c2b938d0ad5

பன்றிகள் தங்கும் இடத்துக்கு வெளிப்பக்கம் வடிகால் அமைய வேண்டும். இது, 4 அங்குல ஆழம் 6 அங்குல அகலம் இருந்தால் போதும். வடிகாலை மூடி வைக்கக் கூடாது.

செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர்.

ன்றிப் பண்ணை, மக்கள் வாழுமிடம், பால் பண்ணை மற்றும் மற்ற கால்நடைப் பண்ணைக்கு அப்பால் 30 மீட்டர் தூரம் விலகியிருக்க வேண்டும். போக்குவரத்து மற்றும் விற்பனை வாய்ப்புள்ள இடத்துக்கு அருகில் இருக்க வேண்டும்.

எந்த நேரமும் தரமான குடிநீர் மற்றும் மின்சார வசதி இருக்க வேண்டும். தீவனப்புல் மற்றும் மரங்களை வளர்க்கத் தேவையான இட வசதி இருக்க வேண்டும்.

தட்பவெப்ப நிலையில் இருந்தும், நோய்களில் இருந்தும், ஒட்டுண்ணிகள் தாக்கத்தில் இருந்தும் பன்றிகளைக் காப்பதற்கு ஏற்றவாறு கொட்டிலை அமைத்தல் அவசியம். நல்ல காற்றோட்டம், மேடான, மழையால் பாதிக்கப்படாத, வடிகால் வசதியுள்ள இடத்தில் பண்ணையை அமைக்க வேண்டும்.

முடிந்த வரை, குறைந்த செலவில், திடமான கொட்டிலை, பன்றிகளின் நலனைக் காக்கும் வகையில் அமைக்க வேண்டும். முக்கியமாக வடிகால் வசதி சரியாக இருக்க வேண்டும்.

கொட்டில் தரை, அடிக்கு அடி கால் அங்குலம் சரிவாக இருக்க வேண்டும். இது, கொட்டிலை அலசும் போது, நீர் சுத்தமாக வெளியேற உதவும்.

பன்றிகள் தங்கும் இடத்துக்கு வெளிப்பக்கம் வடிகால் அமைய வேண்டும். இது, 4 அங்குல ஆழம் 6 அங்குல அகலம் இருந்தால் போதும். வடிகாலை மூடி வைக்கக் கூடாது.

தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட குட்டிகள் அறை, வளரும் பன்றிகள் அறை, கிடாப் பன்றிகள் அறை, ஈனும் அறை என்னும் வரிசையில், தனித்தனி அறைகள் இருக்க வேண்டும்.

திறந்தவெளி வளர்ப்பு முறை

பன்றிகளை இயற்கையான சூழ்நிலையில் திறந்த வெளிகளில் வளர்க்கலாம். இடம் விட்டு இடம் நகர்த்தக் கூடிய சிறிய கொட்டில்கள் மட்டும் இருந்தால் போதும். இதில் செலவும் மிகவும் குறைவு.

இம்முறையில் நோய்ப் பரவலைத் தடுப்பது சிறிது சிரமம். உண்ணும் உணவுக்கு நிகரான உடல் எடை கிடைக்காமல் போகலாம். ஆனால், தட்ப வெப்பம் சீராக உள்ள இடம் மற்றும் வேலையாட்கள் கிடைக்காத இடங்களில் இம்முறை சிறந்ததாகும்.

சாதாரண இடத்தில் ஏக்கருக்கு 8-10 பன்றிகளை, நல்ல புல் வசதியுள்ள இடத்தில் ஏக்கருக்கு 10-20 பன்றிகளை வளர்க்கலாம். களிமண் நிலம் இம்முறை வளர்ப்புக்கு உதவாது. பன்றிகள் தங்குமிடம் அடிக்கடி மாற்றப்பட வேண்டும்.

பன்றி வளரும் இடத்தைச் சுற்றிலும் வேலி இருக்க வேண்டும். இந்த வேலி, அவ்வப்போது மாற்றும் வகையில் இருக்க வேண்டும். மழை அல்லது அதிக வெய்யில் காலத்தில் பன்றிகள் தங்க, சிறிய மரக் குடிசையை அமைக்கலாம்.

பன்றிகள் ஈனுவதற்கு வசதியாக, 10×10 அடி கூரையுடன், 10×10 அடி வேலியிட்ட திறந்தவெளி கொட்டில் தேவை. ஈனுவதற்கு ஒரு வாரம் முன்பே சினைப் பன்றியை இங்கு விட்டுவிட வேண்டும். ஈன்று 40 நாட்கள் கழித்து இடமாற்றம் செய்து விடலாம்.

கொட்டில் மற்றும் திறந்தவெளி வளர்ப்பு முறை

இந்த முறையில் சற்று விலை உயர்ந்த கட்டடங்கள் அமைக்கப்படும். தீவனம் அளித்தல், எடை போடுதல் முதலியன எளிதில் நடக்கும். நோய்ப் பரவல் கட்டுக்குள் இருக்கும்.

மழையும் வெப்பமும் நிறைந்த பகுதிகளுக்கு இம்முறை சிறந்தது. இந்த முறையில், கொட்டிலின் ஒரு பகுதி கூரையுடனும், அதையொட்டித் திறந்த வெளியும் அமைக்கப்படும்.

கொட்டில் அமைத்தல்

கொட்டிலின் நீளவாட்டம் கிழக்கு மேற்கில் அமைய வேண்டும். இதனால், சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பும் நல்ல காற்றோட்ட வசதியும் கிடைக்கும். பன்றிகளின் உடலில் வியர்வைச் சுரப்பிகள் இல்லாததால், உடல் வெப்பத்தின் சமநிலையைப் பராமரிக்க வேண்டும்.

மேலும், சுற்றுப்புற வெப்பநிலை 36 டிகிரி செல்சியசுக்கு மேல் கூடினால், பன்றிகளின் உண்ணும் திறன், தீவன மாற்றுத் திறன் மற்றும் உடல் வளர்ச்சி பாதிக்கப்படும்.

எனவே, பண்ணையைச் சுற்றி, தீவனப் புல்வெளி மற்றும் நிழல் தரும் மரங்களை வளர்த்தால், வெய்யில் தாக்கத்தில் இருந்து பன்றிகளைக் காக்கலாம்.

நாட்டு ஓடு, மங்களூர் ஓடு, கல்நார் தகடு, தென்னங் கீற்று, சிமெண்ட் ஆகியவற்றில் ஒன்றைக் கொண்டு கூரையை அமைக்கலாம். கூரை உயரம் 12-15 அடியிலும், பக்கவாட்டு உயரம் 6-9 அடியிலும் அமைய வேண்டும்.

பக்கச் சுவர் 6-8 அடியில் இருக்க வேண்டும். அல்லது 2 அடி உயரம் சுற்றுச் சுவரையும், அதற்கு மேல் 9 அங்குல இடைவெளியில் இரும்புக் குழாய்களையும் அமைக்கலாம். இதனால், நல்ல காற்றோட்டம் கிடைக்கும்.

கொட்டிலின் ஒவ்வொரு அறையிலும் உள்ளறை, அதைத் தொடர்ந்து திறந்தவெளி அறை இருப்பது அவசியம்.

இட வசதி

தாயிடமிருந்து பிரிந்த குட்டிக்கு: உள்ளறையில் 10-15 சதுரடி, 15-20 சதுரடி தேவை.

வளரும் குட்டிக்கு: உள்ளறையில் 12-20 சதுரடி, 20-30 சதுரடி தேவை.

கிடாப்பன்றிக்கு: உள்ளறையில் 60-70 சதுரடி, 80-100 சதுரடி தேவை.

பால் கொடுக்கும் பன்றிக்கு: உள்ளறையில் 70-100 சதுரடி, 70-100 சதுரடி தேவை.

சினைப் பன்றிக்கு: உள்ளறையில் 70-100 சதுரடி, 70-100 சதுரடி தேவை.

சினையற்ற பன்றிக்கு: உள்ளறையில் 20-30 சதுரடி, 30-50 சதுரடி தேவை.

தீவனத்தொட்டி உள்ளறையில், நீர்த்தொட்டி திறந்த வெளியில் இருக்க வேண்டும். வளரும் பன்றிகளுக்கு 100 செ.மீ. நீளம், 30 செ.மீ. அகலம், 16 செ.மீ. ஆழத்தில் தீவனத் தொட்டிகள் இருக்க வேண்டும்.

பெரிய பன்றிகளுக்கு 150 செ.மீ. நீளம், 30 செ.மீ. அகலம், 18 செ.மீ. ஆழத்தில் தீவனத் தொட்டிகள் இருக்க வேண்டும். அதைப் போல, இதே அளவுகளில் நீர்த் தொட்டிகளும் இருக்க வேண்டும்.

ஈனும் அறையில், தாய்ப்பன்றி நசுக்குவதால் குட்டிகள் இறக்க வாய்ப்புண்டு. எனவே, குட்டிகளைப் பாதுகாக்க, 2 இரும்புக் குழாய்களைப் பொருத்தி ஓர் உள்ளமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

இது, 20-25 செ.மீ. உயரத்தில், சுவரிலிருந்து 30-35 செ.மீ. உள்நோக்கி இருக்க வேண்டும். பன்றிகளுக்கு வியர்வைச் சுரப்பிகள் கிடையாது. எனவே, அவற்றால் அதிக வெப்பத்தைத் தாங்க முடியாது.

ஆகவே, வெப்பக் காலத்தில், திறந்தவெளி அறையில் பன்றிகள் படுக்க ஏதுவாக, நீர்த் தொட்டியை அமைக்கலாம். அல்லது தெளிப்பான் மூலம் நீரைத் தெளித்து விடலாம்.

பண்ணையைச் சுற்றி மரங்களை வளர்த்து நிழலைத் தரலாம். மேலும், கொட்டிலை ஒட்டி, தீவன அறை, மருந்து மற்றும் இதர பொருள்கள் வைப்பறை இருக்க வேண்டும்.


த.பாலசுப்பிரமணியம், இரா.இளவரசி, கு.மஞ்சு, ஹ.கோபி, பன்றி இனவிருத்திப் பிரிவு, கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் – 603 203.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading