My page - topic 1, topic 2, topic 3

நீதியரசருக்குப் பிடித்த சிறைக்காடு!

சிறைக்காடு

“வாசிமலையான் பூமி வறட்சியாகிப் போச்சே!”

ழுமலை. மதுரை மாவட்டம், பேரையூர் வட்டத்தில் அமைந்துள்ள பேரூர். கிணற்றுப் பாசனம் நிறைந்த பகுதி. முப்பதாண்டுகளுக்கு முன்பு வரை, நெல், கரும்பு, கடலை, கம்பு, சோளம், பருத்தி, பயறு, மிளகாய் என, அனைத்துப் பயிர்களையும் பஞ்சமில்லாமல் விளைவித்துத் தள்ளிய பச்சை பூமி. இதையும் இதைச் சார்ந்த பதினெட்டுப் பட்டிகளையும் வாசிமலையான் பூமி என்றும் சொல்வதுண்டு. யார் இந்த வாசிமலையான்?

வாழ்த்தித் துதிப்போரை வாழ வைக்கும் தெய்வம். ஊருக்கு வடக்கே உயர்ந்த மலைமுகட்டில் கோயில் கொண்ட கடவுள். தன்னைக் குளிர்விக்கும் அமுத மழைநீரை, அரிவாள்பிடி ஓடை, பாலாந்தள்ளி ஓடை, பலசுனைப்பாறை ஓடை, கத்திப்பாறை ஓடை போன்றவற்றின் மூலம் புரண்டோடச் செய்து, எழுமலை பெரிய கண்மாய், கணக்கன் குளம் ஆகியவற்றை நிறைப்பதுடன், உத்தப்புரம் கண்மாய், திருமாணிக்கம் கண்மாய் என வரிசையாய் நிறைத்து, பச்சைப் பயிர்களை விளைய வைத்து, வாழ்வாங்கு வாழச் செய்யும் சாமி. அவரவர்க்குத் தனித் தனியாகக் குல தெய்வங்கள் இருந்தாலும், இந்தப் பகுதி மக்கள் அனைவருக்கும் ஒட்டுமொத்தக் குல தெய்வமாக விளங்குபவர் வாசிமலையான்.

புரட்டாசி பிறந்து விட்டால் முப்பது நாளும் விரதம் தான். மாதம் முடியும் வரையில் இங்குள்ள எந்த வீட்டிலும் அசைவப் புழக்கத்தைப் பார்க்க முடியாது. குறிப்பாகச் சனிதோறும் விரதமிருந்து மாலையில் பொங்கலிட்டு, கோயில் தீபத்தைக் கண்ட பின்தான் உணவுண்டு விரதத்தை முடிப்பார்கள். மலையேறும் ஆற்றல் மிக்க அனைவரும் மிகவும் புனிதத்துடன் கோயிலுக்குச் சென்று ஒருநாள் தங்கியிருந்து விட்டுத் திரும்புவார்கள். இந்தப் பூமியில் ஆட்டம் போட்டவர்கள் நெடுநாட்கள் நிலைத்ததில்லை. “இது வாசிமலையான் பூமி.. பார்த்து நட..’’ என்று சொன்னால் போதும், எப்படிப்பட்ட ஆட்டக்காரனும் அடங்கிப் போவான். அத்தகைய நீதி தெய்வம் வாசிமலை.

இப்படி, நீதி நெறியைப் புகட்டும் பூமியிலும் இன்று வறட்சிதான் நிலவுகிறது. ஆனாலும், அந்த மண்ணோடு பழகி உறவாடிப் போனவர்கள், அந்த மண் கொடுத்த சோற்றைத் தின்று வளர்ந்தவர்கள், அதை விட்டு விலக முடியாமல் அன்றாடம் அந்த மண்ணை நோக்கி நடந்துகொண்டே இருக்கிறார்கள் என்பதை, அந்தக் காட்டுப்பாதையில் பதிந்திருக்கும் தடங்கள் மூலம் நாம் அறிய முடிகிறது. அப்படி நடப்பவர்களில் ஒருவர் மேனாள் மாவட்ட நீதியரசர் இரா.சடையாண்டி.

ஒவ்வொரு ஊரிலும் குறிப்பிட்ட சில குடும்பங்களுக்கு எனச் சில சிறப்புகள் இருக்கும். அவ்வகையில், எழுமலைப் பகுதியில் பண்ணையார் குடும்பம் என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. பெயருக்கு ஏற்றபடி நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இவர்களிடம் இருந்தன. மேலும், நீதியரசரின் பெரியப்பா அருணாசலம் சேர்வை, அந்தக் காலத்தில் ஜில்லா போர்டு என அழைக்கப்பட்ட, மாவட்ட நிர்வாகக் குழுவில் துணைத் தலைவராக இருந்தவர். அதனால், இவரால் பயனடைந்தவர்களைப் பட்டியலே இடலாம். தனக்கிருந்த அதிகாரத்தை, வாய்ப்பை, கிஞ்சித்தும் சொந்த நலனுக்காகப் பயன்படுத்தாதவர். பொது வாழ்க்கையில் அப்பழுக்கற்று வாழ்ந்து போன மனிதர்களில் ஒருவர். இதனாலும் இந்தக் குடும்பத்துக்குப் பெருமை.

அத்தகைய குடும்ப வழியில் வந்த நீதியரசர், தன்னுடைய சின்ன வயதில், ஊர்ந்த மண்ணுடன், தவழ்ந்த மண்ணுடன், ஓடியாடித் திரிந்த மண்ணுடன், அலையடித்துக் கிடந்த நீர் நிலைகளுடன் கொண்டிருந்த நேசமானது, படிப்பு, பணி போன்றவற்றால் தடைபட்டுப் போனது. இந்நிலையில், பணிக்காலம் முடிந்ததும் அந்தத் தடையை உடைத்து, தன் சொந்த மண்ணுடன் கொண்டிருந்த நெருக்கத்தைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார். பழைய நேசம், மண்வாசம் இன்னும் கூடியிருப்பதை நாம் அவரைச் சந்தித்த போது அறிய முடிந்தது. இனி அவர் பேசுவார்.

“எங்கள் குடும்பத்துக்குச் சொந்தமான நிலம், வாசிமலையான் காலடியில் விரிந்து கிடக்கிறது. இந்த இடத்தில் 125 ஏக்கர் நிலம் எங்கள் முன்னோர்களால் 18.1.1913 அன்று 18,300 ரூபாய்க்கு வாங்கப்பட்டது. ஆனால், இப்போது எங்கள் கைவசம் 70 ஏக்கர் நிலம் தான் உள்ளது. இதைச் சிறைக்காடு என்று சொல்வார்கள். சிறை என்று சொன்னாலே யாருக்கும் பயம் வரும். அதைப் போல, ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு, மலையை ஒட்டிய காடுகள் பார்த்தாலே பயப்படும் அளவுக்கு மரம் செடி கொடிகளுடன், அடர்ந்து கிடந்திருக்கின்றன. அந்தக் காடுகள் எங்கள் நிலம் வரையில் இருந்துள்ளன. அதனால் இதைச் சிறைக்காடு என்கிறார்கள்.

இந்தச் சிறைக்காட்டுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. இங்கே அழகியநல்லூர் என்னும் பெயரில் ஓர் ஊரும் இருந்திருக்கிறது. பிறகு, இந்த ஊர் புதுப் பெயருடன் இடமாறி இருக்கிறது. அதுதான் எழுமலை. அழகியநல்லூர் இருந்த இடத்தில் மல்லாண்ட ஈசுவரர் கோயில் மட்டும் இப்போது உள்ளது. அது இன்று வரையிலும் போற்றி வணங்கப்படுகிறது. “எங்களைக் காப்பாத்த சிறைக்காட்டுப் புல் இருக்கு.. அதை அறுத்து வித்துப் பொழச்சுக்கிருவோம்..’’ என்று சொல்லுமளவுக்கு, இந்தப் பகுதியில் புல் ஏகமாய் விளைந்திருக்கிறது. எனக்கு விவரம் தெரிய, ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான புல் கட்டுகள் இங்கிருந்து வெளியேறுவதைப் பார்த்திருக்கிறேன். அந்தளவுக்குப் பஞ்சம் தாங்கும் பூமியாக இந்தச் சிறைக்காடு இருந்திருக்கிறது.

வாசிமலையான் பூமியை, வாழ வைக்கும் பூமி என்று சொல்வார்கள். வாசிமலைச் சாமி தன் மக்களைப் பாசத்துடன் காப்பவர் என்றும், அதற்காக அவர் வெள்ளைக் குதிரையில் அன்றாடம் ஊரைச் சுற்றி வருவார் என்றும் எங்கள் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அவருக்குக் குதிரை தான் வாகனம் என்பதை நிரூபிக்கும் வகையில், மொட்டூத்துப் பாறைக்கு மேலேயுள்ள மீனாட்சிப் பட்டணம் தொம்பரைக் கல்லில் குதிரையின் தடம் இருப்பதாகச் சொல்கிறார்கள். அந்தளவுக்கு எழுமலை மற்றும் பதினெட்டுப் பட்டி மக்களால் போற்றி வணங்கப்படும் தெய்வமாக வாசிமலையான் இருக்கிறார்.

கிழக்கே சன்னாசி கோயிலுக்கும் மேற்கே மாட்டுக்காரன் கல்லுக்கும் இடைப்பட்ட பகுதியில் பெய்யும் மழைநீர் முழுவதும், தாழையூத்து ஓடை, உப்பாத்தா ஓடை, சிறைக்காட்டு ஓடை, பெரிய ஓடை, வாசிமலையான் ஓடை வழியாக ஓடி வந்து எழுமலைப் பெரிய கண்மாயில் நிறையும். இந்தக் கண்மாய் நிறைந்தால் கடலைப் போல நீர் அலையடித்துக் கிடக்கும். இதை வேடிக்கை பார்ப்பதே பெரிய பொழுது போக்காக இருக்கும். இந்தக் கண்மாய் நிறைந்தது போக மிச்சமாக இருக்கும் நீர், கலிங்கு வழியாக, கணக்கன் குளத்துக்குப் போகும். இப்படி, எழுமலைக்கு வடக்கு, தெற்கில் இருக்கும் இந்த இரண்டு கண்மாய்களின் நீரால், கண்ணுக்கு எட்டிய தொலைவு வரையில் விளைந்து கிடந்த நெல் வயல்களை, இப்போது நினைத்தாலும் அது என் மனத்திரையில் படமாக ஓடத் தொடங்கி விடும்.

சிறைக்காடு

நிறைய மழை பெய்து விட்டால், வெள்ளியை உருக்கி ஊற்றியதைப் போல, மலை மேலுள்ள அரிவாள்பிடி ஓடையிலும், கத்திக்கல் பாறை ஓடையிலும் நீர் வருவது, இங்கிருந்து பார்த்தாலே தெரியும். அப்படித் தெரிந்து விட்டால் எழுமலை பூமி செழித்து விட்டது என்று தெரிந்து கொள்ளலாம். பயிர் பச்சைகள் விளைவதில் எந்தக் குறையும் இருக்காது. இந்த ஓடைகளில் வரும் ஊற்று நீரையே மாதக் கணக்கில் விவசாயத்துக்குப் பயன்படுத்துவோம். மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானை கட்டிப் போரடித்த அழகான தென்மதுரை என்னும் தமிழ்க் கவிதை எங்கள் ஊருக்கும் பொருந்தும். அந்தளவுக்கு ஓங்கிச் செழித்த பூமியின் இப்போதைய நிலையை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

1980 ஆம் ஆண்டில் எங்கள் தோட்டத்தில் 500 மூட்டை நெல் விளைந்தது. இப்படி வயலுக்கொரு களமும், களமெல்லாம் ஆட்களும், நெல் அம்பாரங்களும் நிறைந்திருப்பதைப் பார்க்கலாம். வியாழக்கிழமை தேனிச் சந்தை, பருத்திக்குப் பெயர் பெற்றது. அங்கே எழுமலைப் பருத்தி என்றாலே தனி மதிப்புத்தான். அந்தளவுக்கு நூல் கட்டுள்ள பருத்தி இங்கே விளையும். ஒவ்வொரு புதன்கிழமை இரவிலும் பருத்தித் தாட்டுகளை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்குக் கணக்கிருக்காது. தினைக்காட்டில் குருவியோட்டிய வள்ளிமயிலைப் போல, சோளக்காட்டிலும் கம்மங்காட்டிலும் கடலைக்காட்டிலும், காக்கை குருவிகளை விரட்டித் திரிந்த சின்னப் பிள்ளைகளின் தகர டப்பா ஓசை இசையாக ஒலிக்கும். எதைச் சொல்வது எதை விடுவது?

இப்படி, முழுமையான விவசாயப் பூமியாக எழுமலை இருந்தது. ஆனால், இப்போது செங்கல் சூளைகளால் நிறைந்து எப்போதும் புகைந்து கொண்டே இருப்பதைப் பார்க்கப் பார்க்க வேதனையாக இருக்கிறது. ஏனெனில், நுண்ணுயிர்கள் நிறைந்த மண்ணைச் சுடுவது உயிரைக் கொல்வதற்குச் சமம். இந்த நிலை மாற வேண்டுமானால் எல்லோரும் இயற்கையை நேசிக்க வேண்டும். அது மரங்களை வளர்ப்பதாக இருக்கலாம்; மண்ணைக் காப்பதாக இருக்கலாம்; நீரைச் சிக்கனமாகச் செலவழிப்பதாக இருக்கலாம். எல்லோருக்குமான இந்தச் சமூகக் கடமைகளைச் செய்வதிலிருந்து யாரும் பின்வாங்கக் கூடாது. இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான், எப்போதோ விட்டுப்போன விவசாயத்தை நான் மீண்டும் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கிறேன்.

எங்கள் நிலத்துக்குள் மூன்று தெப்பம், மூன்று கண்மாய் உண்டு. இந்த மூன்று தெப்பத்திலும் ஆர்ட்டீசியன் ஊற்றைப் போல நீர் கொப்பளிக்கும். அந்த நீர் இந்த மூன்று கண்மாய்களில் வந்து பெருகும். இது போக, மலையிலிருந்து வரும் மழைநீரும் இந்தக் கண்மாய்களில் வந்து நிறையும். மேலும், மூன்று பூர்விகக் கிணறுகளும் உண்டு. இப்போது ஐந்து கிணறுகள் உள்ளன. அதனால், எங்கள் நிலத்துக்குப் பாசனப் பற்றாக்குறையே இருக்காது. ஆனால், பல ஆண்டுகளாகவே எழுமலைப் பகுதி மழைமறைவுப் பகுதியைப் போல மாறி விட்டதால், பருவ மழையும் பெய்யாமல் புயல் மழையும் இல்லாமல் பாசனத் தட்டுப்பாடு வந்து விட்டது.

இன்னொரு முக்கியச் செய்தி. இங்கே நிலத்தடி நீரையெல்லாம் எடுத்து விட்டோம். இதுகூட மழையில்லாச் சூழலுக்கான காரணமாக இருக்கலாம். இன்னொன்றையும் சொல்ல வேண்டும். நிறைய நீர்நிலைகளைக் காணவில்லை. பெரிய பெரிய கண்மாய்களைத் தவிர ஆங்காங்கே சின்னச் சின்ன ஊருணிகள் இருந்தன. இதுவும்கூட நிலத்தடி நீரைத் தக்க வைக்கவும், புவி வெப்பத்தைத் தடுக்கவும் உதவும் முயற்சி தான். இந்த ஊருணிகள் ஆடு மாடுகளின் குடிநீர் ஆதாரமாகவும் இருக்கும். இப்போது அவற்றையெல்லாம் காணவில்லை.

இந்தப் பகுதியில் இருந்த செட்டியூருணி, எர்ரக்கா ஊருணி, நாயக்கர் ஊருணி, கொக்காணி ஊருணி, கருவேல மரத்து ஊருணி, வண்ணான் ஊருணி, சடையாண்டி கோயில் ஊருணி, சின்னக் கிழவர் ஊருணி ஆகியவற்றைக் காணவில்லை. மாடு மேய்ந்த காட்டை நோங்கும்; மழை பெய்த காட்டை நோங்கும் என்பார்கள். அதாவது, குளிர்ச்சியான இடத்தில் மழை பெய்யும் என்பது சூழலியல் விதி. அப்படிப் பார்த்தால், நிலத்தில் நீருமில்லை மரமுமில்லை என்னும் நிலையில், வெப்பம் மட்டுமே கூடுதலாக இருக்கிறது. இதற்குத் தீர்வு மரங்களை ஏராளமாக வளர்ப்பது மட்டுமே.

மரங்களை வளர்த்தால் புவிவெப்பம் மட்டுப்படும்; உழவடைச் செலவு, இடுபொருள் செலவு குறையும்; நிலத்தடி நீரெடுப்புக் குறையும்; நிலம் வளமாகும்; கால்நடை வளர்ப்புக்கு ஏதுவாகும்; வருமானம் உறுதியாகும்; எல்லாவற்றுக்கும் மேலாக மழைக்கான சூழல் உருவாகும். அதனால் தான், எங்கள் நிலத்தில் இப்போது மரப்பயிர்களுக்கும் இயற்கை விவசாயத்துக்கும் முதலிடம் கொடுத்து வருகிறோம். 60 மாமரங்கள், 110 எலுமிச்சை மரங்கள் எங்கள் நிலத்தில் உள்ளன. இன்னும் மரங்களை வளர்க்க உள்ளோம்.

இந்த நிலம் தான் நம் அப்பா அம்மாவுக்குச் சோறு போட்டது. இப்போது நமக்கும் சோறு போடுகிறது. அப்படியானால் இந்த நிலம் நமக்குப் பாட்டி தாத்தா போலத்தானே? இந்தத் தாத்தா பாட்டியை மறக்கலாமா? மறந்து விட்டுப் போகலாமா? இன்றுள்ள சூழ்நிலையில் நமது தாத்தா பாட்டி போன்ற நிலத்தை மறக்காமல் இருக்க வேண்டுமானால், நாம் தற்சார்பு வேளாண்மையை உருவாக்க வேண்டும். நமது விவசாயத்துக்குத் தேவையான பொருள்களை நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும். அந்த விவசாயத்தின் மூலம் நம் வாழ்க்கைக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்து கொள்ள வேண்டும்.

அதனால் தான் நாங்கள் நாட்டு மாடுகளை, ஜல்லிக்கட்டுக் காளைகளை, வெள்ளாடுகளை, நாட்டுக் கோழிகளை வளர்க்கிறோம். ஒரு ஏக்கரில் 1,200 முதல் 1,400 கிலோ நிலக்கடலை தான் விளையும் என்கிறார்கள். ஆனால், நாங்கள் இயற்கை விவசாய முறையில் ஒரு ஏக்கரில் 2,300 கிலோ நிலக்கடலையை மகசூலாக எடுத்திருக்கிறோம். எங்கள் நிலத்தில் முழுமையாக இயற்கை விவசாயமே நடந்து வருகிறது.

இந்த நேரத்தில் எனது துணைவியார் சுசீலாவுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். ஏனெனில், இந்தக் கடினமான விவசாயத்தை விட்டு, சுகமான நிழல் வாழ்க்கைக்கு நாங்கள் சென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மீண்டும் இங்கே வந்து இந்த மண்ணில் புரண்டு தான் வாழ வேண்டும் என்னும் நிலை எங்களுக்கு இல்லை. ஆனால், என் சிறைக்காட்டு விவசாய நேசிப்பைச் சொன்னதும் அவர் ஒத்துக் கொண்டதும், இந்தக் காட்டுக்கும் வீட்டுக்கும் அலைவதும் எனக்காகத் தான்.

அவருக்குள்ளும் இந்த மண் மீதான பாசப் பிணைப்பு இருக்கத்தான் செய்கிறது. அதனால் தான், நான் பணியில் இருந்த காலத்திலேயே, நம்மாழ்வார் ஐயா நடத்திய இயற்கை விவசாயம் சார்ந்த பல்வேறு பயிற்சிப் பட்டறைகளில் கலந்து கொண்டிருக்கிறார். பயிற்சிகளில் படித்ததை, வீட்டுத் தோட்டத்தில் செயல்படுத்தி இன்று வரையில் சாதித்துக் கொண்டிருக்கிறார். எங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஏராளமான மூலிகைகள், காய்கறிச் செடிகளை வளர்த்து வருகிறார்.

இந்த ஒத்துழைப்பு இருப்பதால் தான், எனக்குப் பிடித்த சிறைக்காட்டு விவசாயம் என்னும் ஒய்யாரக் கூட்டு வண்டியைத் தடம் புரளாமல் இழுத்துச் செல்ல முடிகிறது’’ என்று முத்தாய்ப்பாய்ச் சொல்லி முடிக்க, அவருக்கு நன்றி சொல்லி விடை பெற்றோம்.


பசுமை

படங்கள்: எழுமலை கு.சுப்பிரமணியம்

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks